December 16, 2009

இறைத் தூதர்கள் மனிதர்களே!

நிச்சயமாக அவர்களுக்கு, அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்து கொண்டுதாமிருந்தனர், ஆனால் அப்போது அவர்களோ, (நம் போன்ற) ஒரு மனிதரா நமக்கு நேர்வழி காட்டுவார்?" என்று கூறி (அவர்களைப் பின்பற்றுவதை) நிராகரித்துப் பின் வாங்கிக் கொண்டார்கள், 64-6

நீங்களும் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறல்லர்; அர்ரஹ்மான் (உங்களுக்கு) எதனையும் இறக்கி வைக்கவில்லை. நீங்கள் பொய்யே கூறுகிறீர்களேயன்றி வேறில்லை" என்று கூறினார்கள். 36-15

(நூஹ் (அலை) அவர்களின்) சமூகத்தாரில் காஃபிர்களாய் இருந்த தலைவர்கள்; "இவர் உங்களைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லை இவர் உங்களை விட சிறப்புப் பெற விரும்புகிறார்; மேலும், அல்லாஹ் நாடியிருந்தால் அவன் மலக்குகளை(த் தூதர்களாக) அனுப்பியிருப்பான். முன்னிருந்த நம் மூதாதையரிடம் இ(த்தகைய விஷயத்)தை நாம் கேள்விப்பட்டதேயில்லை" என்று கூறினார்கள். 23-24

அவருடைய சமூகத்தாரில் காஃபிர்களாய் இருந்த தலைவர்களும் இன்னும் இறுதி தீர்ப்பு நாளை சந்திப்பதைப் பொய்ப்படுத்த முற்பட்டார்களே அவர்களும், நாம் அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் விசாலமான (சகானுபவங்களைக்) கொடுத்திருந்தோமே அவர்களும், (தம் சமூகத்தாரிடம்) "இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லை நீங்கள் உண்பதையே அவரும் உண்கிறார்; நீங்கள் குடிப்பதையே அவரும் குடிக்கிறார். எனவே உங்களைப் போன்ற ஒரு மனிதருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நிச்சயமாக நீங்கள் நஷ்டவாளிகளே! (என்று கூறினார்கள்.) 23-33,34

(ஸாலிஹ் (அலை) சமூகத்தவர்களின் கூற்று) நீரும் எங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி (வேறு) இல்லை எனவே, நீர் உண்மை சொல்பவராக இருந்தால் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வாரும்" (என்றனர்). 26-153

"நிச்சயமாக அவருக்கு கற்றுக் கொடுப்பவன் ஒரு மனிதனே, (இறைவனல்லன்)" என்று அவர்கள் கூறுவதை திடமாக நாம் அறிவோம்; 16-103

என் இறைவன் மிகத் தூயவன், நான் (இறைவனுடைய) தூதனாகிய ஒரு மனிதனே தவிர வேறெதுவுமாக இருக்கின்றேனா?" என்று (நபியே! நீர் பதில்) கூறுவீராக. 17-93

(நபியே!) நீர் சொல்வீராக "நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது. 18-110

thanks to read islam..

December 13, 2009

பிறர் நலம் பேணுதல்

உண்மை முஸ்லிம் அல்லாஹ்வுக்கும் அவனது வேதத்துக்கும் அவனது தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்மை நாடுபவராக இருப்பார்.

நபி (ஸல்) அவர்கள் "மார்க்கம் என்பது நன்மையை நாடுவது'' என்று கூறியபோது, நாங்கள் கேட்டோம்: "யாருக்கு?'' நபி(ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கும் அவனது வேதத்துக்கும் அவனது தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும்'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

பிறர் நலம் பேணுதல் என்பது இஸ்லாமின் அடிப்படைகளில் தலையாயதாகும். ஆரம்ப கால முஸ்லிம்கள் இறைத்தூதருடன் செய்து கொண்ட வாக்குப் பிரமாணங்களில் ஒன்றாக இது இருந்தது.

ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நான் நபி (ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலைநாட்டுவது, ஜகாத் கொடுப்பது, அனைத்து முஸ்லிம்களுக்கும் நன்மை நாடுவது ஆகியவற்றிற்கு உறுதிப் பிரமாணம் செய்துகொண்டேன்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்பாதவரை ஈமான் கொண்டவராக மாட்டார்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

பிறர் நலம் நாடுபவராக இருந்தால்தான், தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்புவார். ஆனால் இது மிகவும் சிரமமானது என்பதில் சந்தேகமில்லை. தான் விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்ப வேண்டுமென்பது ஈமானின் மிக முக்கியமான நிபந்தனைகளில் ஒன்றாகும். மார்க்கம் என்பதே "பிறர் நலன் பேணல்' என்ற அடிப்படை, முஸ்லிமின் உணர்வுடன் ஒன்றிவிட்டால் இதைச் செயல்படுத்துவது சிரமமல்ல.

இது முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமிடம் வெளிப்படுத்த வேண்டிய இயற்கைப் பண்பாகும். இதற்கு முரணாக ஒர் உண்மை முஸ்லிமால் செயல்பட இயலாது. இத்தகைய உயர்ந்த அந்தஸ்தில் வாழும் முஸ்லிம் சுயநலம், அகம்பாவம் போன்ற கீழ்த்தரமான காரியங்களில் இறங்க மாட்டார். ஆம்! பாத்திரத்தில் இருப்பதுதான் அகப்பையில் வரும்! மலர்கள் நறுமணத்தைத்தான் பரப்பும்! செழுமையான பூமி நல்ல மரங்களைத்தான் வளர்க்கும்!

உண்மை முஸ்லிம், நண்பர்களுக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதையும், உபகாரம் செய்வதையும் இயல்பாகக் கொண்டிருக்க வேண்டும். நட்பின் கயிறுகளைப் பலப்படுத்தும் விதமாக உபகாரத்தை தனது இயல்பாகக் கொண்டிருக்க வேண்டும். நமது முன்னோர்கள் தங்களது வாழ்வில் வெளிப்படுத்திய நற்பண்புகளே அவர்களை உலக மனிதர்களில் சிறந்தவர்களாக்கியது.

நபி (ஸல்) அவர்கள் வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் முஸ்லிம்களின் இதயங்களில் உபகாரம் செய்ய வேண்டுமென ஆர்வத்தை வளர்த்தார்கள். பனூ ஸலமாவைச் சேர்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! என் பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு நான் அவர்களுக்குச் செய்ய வேண்டிய உபகாரங்கள் எதேனும் இருக்கிறதா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் "ஆம்! அவ்விருவருக்காகவும் துஆச் செய்வது, அவர்களுக்குப் பின் அவர்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, அவர்களால் மட்டுமே உமக்கு எற்பட்ட இரத்த பந்துக்களிடம் இருந்திருப்பது, அவ்விருவரின் நண்பர்களுக்கு கண்ணியமளிப்பது'' என்று கூறினார்கள். (ஸன்னன் அபூ தாவூத்)

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறான நட்பை மதிப்பது பற்றி மிக அதிகமாக வலியுறுத்தினார்கள். அது சில வேளைகளில் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களுக்கு ரோஷத்தை எற்படுத்தியது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அன்னை கதீஜாவின் (ரழி) தோழியர்களுக்கு மிக அதிகமாக உபகாரம் செய்து வந்தார்கள்.

இதோ அன்னை ஆயிஷா (ரழி) அவர்களே கூறுகிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் கதீஜா (ரழி) அவர்கள் மீது ரோஷப்பட்டதுபோல வேறெந்த மனைவியர் மீதும் ரோஷப்படவில்லை. நான் அவரைப் பார்த்ததில்லை. எனினும் நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரழி) அவர்களை அடிக்கடி நினைவு கூர்வார்கள். சில வேளைகளில் நபி (ஸல்) அவர்கள் ஆட்டை அறுத்து இதை பல பங்குகளாகப் பிரித்து கதீஜா (ரழி) அவர்களின் தோழியருக்கு அனுப்பி வைப்பார்கள். நான் சில வேளைகளில் ""உலகத்தில் கதீஜாவைத் தவிர வேறெந்தப் பெண்ணும் இல்லையா?'' என்று கூறுவேன். நபி (ஸல்) அவர்கள், ""கதீஜா இப்படி இப்படியெல்லாம் இருந்தார்கள்; அவர் மூலமாக எனக்கு குழந்தைகள் இருக்கிறார்கள்'' என்று கூறுவார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இதோ இந்த இஸ்லாமிய நேர்மையை விட உயர்ந்த வேறு நேர்மை இருக்க முடியுமா? பெற்றோர்கள் அல்லது மனைவி இறந்துவிட்ட பின்னரும் அவர்களின் தூரமான தோழர், தோழியர்களுக்கும் உபகாரம் செய்யப் பணிக்கப்பட்டுள்ளோம். அப்படியிருக்க நாம் நமது வாழ்வில் நமது நெருங்கிய தோழர்களுடன் எவ்வாறு நடந்துகொள்கிறோம் என்பதைச் சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இஸ்லாம் கற்றுக் கொடுத்த நேர்மை, உபகாரம், பிறர் நலம் பேணுதல், நேசம் கொள்வது என்பது போன்ற பண்புகளின் நோக்கம் என்னவெனில் ஒருவர் தனது சகோதரருக்கு எல்லா நிலைகளிலும் உதவி செய்தாக வேண்டும். அதாவது தனது சகோதரர் சத்தியப் பாதையில் இருந்தால் அவருக்கு உதவி, ஒத்தாசை செய்து அவரைப் பலப்படுத்த வேண்டும். அவர் அசத்தியத்தில் இருந்தால் அவரைத் தடுத்து அவருக்கு நல்வழி காட்டி, வழிகேட்டிலிருந்து பாதுகாக்க வேண்டும். இதையே பின்வரும் நபிமொழி நமக்கு போதிக்கிறது:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு மனிதர் தனது சகோதரருக்கு உதவி செய்யட்டும்! அவர் அநீதியிழைப்பவராக, அல்லது அநீதியிழைக்கப்படுபவராக இருந்தாலும் சரியே. அவர் அநீதியிழைப்பவராக இருந்தால், அவரைத் தடுக்கட்டும். அது அவருக்கு உதவியாகும். அநீதியிழைக்கப்பட்டவராக இருந்தால் அவருக்கு உதவி செய்யட்டும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

முன்மாதிரியாகத் திகழும் உண்மை முஸ்லிம், தனது சகோதரர்களுடன் மென்மையாகவும், அவர்களை நேசிப்பவராகவும், அவர்களால் நேசிக்கப்படுபவராகவும் இருப்பார். இது விஷயத்தில் உயர் பண்புகளை வலியுறுத்தும் இஸ்லாமின் கண்ணோட்டத்தை ஆய்வு செய்வார்.

நபி (ஸல்) அவர்களுடனே இருந்து அவர்களுக்கு ஊழியம் செய்து வந்த அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஏசுபவராகவோ, கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ, சாபமிடுபவராகவோ இருக்கவில்லை. எங்களில் ஒருவரைக் கண்டிக்கும்போது கூட "அவருக்கென்ன நேர்ந்தது? அவருடைய நெற்றி மண்ணில் படட்டும்'' என்றே கூறுவார்கள். (ஸஹீஹுல் புகாரி) நெற்றி மண்ணில் படட்டும் என்பதற்கு பொருள் அதிகமாக ஸஜ்தா செய்ய வேண்டும் என்பதாகும்.

உண்மை முஸ்லிம் தனது சகோதரன் அநீதம் செய்பவனாக இருந்தாலும் அநீதி இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் அவனைப் பிரியமாட்டார். ஏனெனில் தான் விரும்புவதையே தமது சகோதரனுக்கும் விரும்ப வேண்டுமென்கிறது இஸ்லாம். எந்தவொரு முஸ்லிமும் தான் பிறருக்கு அநீதி இழைப்பதையோ பிறர் தனக்கு அநீதி இழைப்பதையோ விரும்பமாட்டார். அவ்வாறே தனது சகோதரருக்கும் இதை விரும்பமாட்டார். அதனால் சகோதரன் அநீதிக்குள்ளாக்கப்பட்டால் அவருடைய தோளோடு ஒட்டி நின்று அநியாயத்தைத் தடுத்து உதவி செய்வார். அநீதி செய்பவராக இருந்தாலும் தோளோடு ஒட்டி நின்று அவரை அநியாயம் செய்வதிலிருந்து தடுப்பார். இதுதான் உண்மையான உபகாரம். இதுதான் தூய்மையான பிறர் நலம் பேணுதலாகும். இதுதான் ஒரு முஸ்லிம் எங்கும், எப்போதும் மேற்கொள்ள வேண்டிய அழகிய பண்பாகும்.thanks to read islam.

December 1, 2009

அந்நாளிலே

அல்லாஹ்வை விட்டும் தப்பித்துச் செல்ல போக்கில்லாத (கியாம) நாள் வருவதற்கு முன், உங்கள் இறைவனுடைய (ஏவலுக்கு) பதிலளியுங்கள் - அந்நாளில் உங்களுக்கு ஒதுங்குமிடம் எதுவும் இராது (உங்கள் பாவங்களை) நீங்கள் மறுக்கவும் முடியாது. 42:47


(அந்த நாளின்) வேதனையைக் காணும்போது அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவும், அதனிடம் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாமே இருந்திருந்தாலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிட நாடும்; தன் கைசேதத்தையும் வெளிப்படுத்தும். 10:54

ஒவ்வோர் ஆத்மாவும் தனக்காக வாதாட முற்படும் அந்நாளில், ஒவ்வோர் ஆத்மாவும் அது செய்(து வந்)ததற்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும் அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள். 16:111

ஒரு நாள் நாம் மலைகளை பெயர்த்து விடுவோம்; அப்போது, பூமியை நீர் வெட்ட வெளியாகக் காண்பீர்; அவர்களை ஒன்று சேர்ப்போம், (அந்நாளில்) நாம் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம். 18:47

காஃபிர்களுக்கு அந்நாளில் நரகத்தை அவர்கள் முன் ஒரே பரபரப்பாக பரப்பி வைப்போம். 18:100

ஸூர் (எக்காளம்) ஊதப்படும் நாள் அது குற்றவாளிகளை, (பயத்தினால்) நீலம் பூத்த கண்ணுடையோராக் நாம் அந்நாளில் ஒன்று சேர்ப்போம். 20:102

ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையே பந்துத்துவங்கள் இருக்காது ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள். 23:101

அந்நாளில் அர்ரஹ்மான் எவரை அனுமதித்து, எவருடைய பேச்சை உவந்து கொள்கிறானோ, அவர்களைத் தவிர வேறு எவருடைய ஷஃபாஅத்தும் (பரிந்துரையும்) பலனளிக்காது. 20:109

எழுதப்பட்ட ஏடுகளைச் சருட்டுவதைப் போல் வானத்தை நாம் சுருட்டிவிடும் அந்நாளை (நபியே! நினைவூட்டுவீராக!) 21:104

அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர்். 22:2

அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததை பற்றி சாட்சியம் கூறும். 24:24

அந்நாளில் அநியாயக்காரன் தன்னிரு கைகளையும் கடித்துக்கொண்டு; "அத்தூதருடன் நானும் (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?" எனக் கூறுவான். 25:27

"அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா." 26:88

அந்நாளில், அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள். 30:14

அந்நாளில் குற்றவாளிகள் தாங்கள் (இவ்வுலகில்) ஒரு நாழிகையே அன்றி (அதிக நேரம்) தங்கி இருக்கவில்லை என்று சத்தியம் செய்வார்கள். 30:55

அந்நாளில், அநியாயம் செய்தவர்களுக்கு, அவர்கள் (கூறும்) காரணங்கள் ஒரு பயனும் தராது, அவர்கள் (அல்லாஹ்வைத்) திருப்தி செய்யவும் முடியாது. 30:57

நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், "ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!" என்று கூறுவார்கள். 33:66

(அந்நாளில்) அநியாயக்காரர்கள் தாங்கள் சம்பாதித்த (தீய)தைப் பற்றி பயந்து கொண்டிருப்பதை நீர் பார்ப்பீர். 42:22

ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நாள்; அன்றியும் (அந்நாளில்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். 44:41

(அந்நாளில்) எதை அவர்கள் கேலி செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். 45:33

அந்நாளில், உண்மையைக் கொண்டு ஒலிக்கும் பெரும் சப்தத்தை அவர்கள் கேட்பார்கள். அதுதான் (மரித்தோர்) வெளியேறும் நாளாகும். 50:42

அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் எதுவும் அவர்களுக்குப் பயன் அளிக்காது, அன்றியும் (எவராலும்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். 52:46

உங்கள் உறவினரும், உங்கள் மக்களும் கியாம நாளில் உங்களுக்கு எப்பயனும் அளிக்க மாட்டார்கள்; (அந்நாளில் அல்லாஹ்) உங்களிடையே தீர்ப்பளிப்பான், அன்றியும் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான். 60:3

அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது. 69:18

அந்நாளில் (தங்கள்) கப்றுகளிலிருந்து விரைவாக வெளியாவார்கள். 70:43

ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள். 78:18

அந்நாளில் பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள் சிதறி மணல் குவியல்களாகிவிடும். 73:14

அந்நாள் மிகக் கடினமான நாள் ஆகும். காஃபிர்களுக்கு (அந்நாள்) இலேசானதல்ல. அந்நாளில் "(தப்பிக்க) எங்கு விரண்டோடுவது?" என்று மனிதன் கேட்பான்.
அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு. அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான். 74:9,3

அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும். அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும். 75:22,24

அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன். 89:23

(அந்நாளில்) பயபக்தியுடையவர்களுக்கு சுவர்க்கம் தொலைவில்லாத நிலையில் மிகவும் சமீபமாக்கப்படும். 50:31