July 30, 2009

அச்சமும் துக்கமும் இல்லாதவர்கள் யார்?

(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். 10-62

எவர்கள் "எங்கள் இறைவன் அல்லாஹ்வே" என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். 46-13

யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்." 2-38

எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள். 7-35

நன்மாராயம் கூறுவோராகவும், (தீமையை விட்டு) எச்சரிக்கை செய்வோராகவுமேயன்றி நாம் தூதர்களை அனுப்பவில்லை எனவே எவர் நம்பி, சீர்திருந்தி நடந்தார்களோ, அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். 6-48

முஃமின்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். 5-69

எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கே (முழுமையாக) அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறானோ, அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உண்டு. இத்தகையோருக்கு அச்சமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். 2-112

யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். 2-274

இறை நம்பிக்கையும், நற்செயல்களும்

நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக! 2-25

நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப் பெரும் நற்கூலியுண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது. 17-9

எவர் முஃமினாக, நல்ல அமல்களை செய்கிறாரோ அவருடைய முயற்சி வீணாகி விடாது. நிச்சயமாக நாமே அதை (அவருக்காக)ப் பதிவு செய்து வைக்கிறோம். 21-94

நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான-) நல்ல செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு அர்ரஹ்மான் (யாவரின்) நேசத்தை ஏற்படுத்துவான். 19-96

எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு. 22-50

எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்கிறான். 65-11

ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்தவர்களுக்கே அவன் தன் அருளிலிருந்து (நற்)கூலி கொடுக்கிறான். 30-45

எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக. 18-110

எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியாவராவார். 25-71

எவர் தவ்பா செய்து நன்னம்பிக்கை கொண்டு, நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் வெற்றியடைந்தோரில் ஆவார்கள். 28-67

எவர் ஈமான் கொண்டு நற்கருமங்களும் செய்கிறார்களோ, அவர்களுக்கு நற்கூலிகளை (அல்லாஹ்) முழுமையாகக் கொடுப்பான். 3-57

நிச்சயமாக, எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்கள் தாம் படைப்புகளில் மிக மேலானவர்கள் ஆவார்கள். 98-7

July 28, 2009

நபிவழியே நம்வழி

அல்லாஹ்வின்மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)


உங்களிடத்தில் இரண்டை விட்டுச் செல்கிறேன். அதை பின்பற்றும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறமாட்டீர்கள்! ஒன்று அல்லாஹ்வின் வேதம். மற்றொன்று எனது வழிமுறை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: ஹாகிம்

நபி(ஸல்) அவர்கள் ஒரு நேரான கோடு கிழித்து இதுவே இறைவனின் நேரான ஒரே வழியாகும் என்றார்கள். பின்பு அக்கோட்டின் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் பல கோடுகள் கிழித்துவிட்டு "இவை பல வழிகளாகும். இவ்வனைத்து வழிகளிலும் ஷைத்தான் (இருந்து கொண்டு மக்களைத்) தன்பால் அழைப்பான்" என்று கூறிவிட்டு "நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்" ஆகவே இதனையே பின்பற்றுங்கள். இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம். அவை உங்களை அவனுடைய வழியை விட்டுப் பிரித்துவிடும். நீங்கள் நேர்வழியைப் பின்பற்றி பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்குப் போதிக்கிறான் என்று கூறி (6:153) என்ற வசனத்தையும் ஓதினார்கள்.


ஒருவன் நெருப்பு மூட்டுகிறான். அது சுற்றுப் புறங்களில் பிரகாசத்தை ஏற்படுத்துகிறது. ஈசல்களும் வண்டுகளும் அந்நெருப்பில் விழ முனைகின்றன. இவனோ அவற்றை (நெருப்பில் விழாமல்) தடுத்துக் கொண்டிருக்கின்றான். எனினும் அவை அவனையும் மீறி நெருப்பில் விழுகின்றன. இம்மனிதன் எனக்கு உவமையாவான். நான் உங்களின் மடியைப் பிடித்து உங்களை நரகிற்குச் செல்ல விடாமல் தடுக்கிறேன். எனினும் நீங்கள் (எனது கட்டளைகளை மீறி) அதன் பக்கம் விழப்பார்க்கிறீர்கள்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி

ஒரு நாள் நடுப்பகலில் நபி(ஸல்) அவர்களிடம் சென்றிருந்தேன். அப்போது இரு நபர்கள் ஓர் இறைவசனத்தின் கருத்து வேறுபாடு பற்றி மிகவும் சப்தமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கோபமுகத்தோடு வெளிப்பட்ட நபி(ஸல்) அவர்கள், "உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தினர் இறைவேதத்தில் கருத்து வேறுபாடு கொண்டதனால் தான் அழிக்கப்பட்டார்கள்" என்றார்கள். அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் ஒரு செயலைச் செய்து விட்டு அதைச் செய்யாமல் விட்டு விடவும் செய்யலாம் என அனுமதியும் அளித்தார்கள். ஒரு கூட்டத்தினர் அச்செயலை முழுமையாகவே விட்டு விட்டனர் என்ற செய்தி நபி(ஸல்) அவர்களுக்குக் கிடைத்ததும் பிரசங்கம் செய்யலானார்கள். அதில் இறைவனைப் புகழ்ந்து விட்டு "இந்தக் கூட்டத்தினருக்கு என்ன நிகழ்ந்து விட்டது! நான் செய்த செயலை விட்டும் முழுமையாகவே நீங்கி விட்டார்களே? அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக அவர்களைவிட நானே இறைவனைப் பற்றி அதிகம் அறிந்தவனும் அவனுக்கு மிகவும் பயப்படுபவனுமாவேன்" என்று கூறினார்கள். ஆயிஷா(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது நிலத்தில் விழுந்த பெரும் மழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்றுக் கொண்டு ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர். (தமது கால் நடைகளுக்கும்) புகட்டினர். விவசாயம் செய்தனர்.

அந்த பெருமழை இன்னொரு வகை நிலத்தில் விழுந்தது. அது(ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை. புற்பூண்டுகள் முளைக்கவிடவுமில்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று, நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டு வந்த தூதரை ஏறிட்டுப் பார்க்காமலும், நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர் வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவருக்கும் உவமையாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூமூஸா(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

நிச்சயமாக பேச்சுகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நோவழியில் சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களின் நேர்வழியாகும். நிச்சயமாக மார்க்க விஷயங்களில் தீமையானது அவற்றில் புதிது புதிதாக உண்டாக்கப்பட்ட நவீன அனுஷ்டானங்களாகும். ஒவ்வொரு நவீன அனுஷ்டானங்களும் "வழிகேடாகும்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம், நஸயீ

July 25, 2009

போற்றுதலுக்குரியவர்கள் யார்?

என் தோழர்களை ஏசாதீர்கள்! ஏனெனில், நிச்சயமாக யார் கைவசம் என் உயிர் இருக்கின்றதோ அவன்மீது ஆணையாக"உஹத் மலையளவு தங்கத்தை எவர் தர்மம் செய்தபோதும் என் தோழர்களின் நிலையை அடைய முடியாது, ஏன் அதில் பாதியளவு கூட அடையமுடியாது" என்று நபிகள் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
நூல்: முஸ்லிம்)

சோதனை
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் சத்திய இஸ்லாத்தை அரபுத் தீபகற்பத்தில் முழங்கியபோது, அவர்களுக்கு ஏற்ப்பட்ட இன்னல்களும், அவர்கள் மீது வீசப்பட்ட இழிசொற்களும் வசைமாரிகளும் கொஞ்ச நஞ்சமல்ல! அவர்கள் சத்தியத்தைச் சொன்னதற்காக அவர்களின் குடும்பத்தையே சமூகப் பரிகாசம் செய்தனர். பொருளாதாரத் தடை விதித்தனர். அவர்களின் உறவினர் கூட எவ்வித உதவியும் செய்யக்கூடது என்று கட்டுப்பாடு விதித்தனர். மண்ணை வாரி இறைத்தது ஒரு கூட்டம். பைத்தியம் என பட்டம் சூட்டி மகிழ்ந்தது ஒரு கூட்டம். அவர்கள் நடந்து செல்லும் பாதையில் முள்ளை பரப்பி வைத்து விட்டு மறைந்து நின்று ரசித்துக் கொண்டிருந்தது இன்னொருமொரு கூட்டம். இரத்தம் சிந்தும் அளவுக்கு கல்லால் எறிந்து, கடுமொழி கூறி நின்றது தாயிப் நகரில் ஒரு கூட்டம். அவர்களுக்கு ஏற்ப்பட்டது போன்ற ஒரு துன்பம் உலகில் எந்த மனிதனுக்கும் ஏற்பட்டதில்லை எனலாம். இதனால்தான் அண்ணல் நபி(ஸல்) அவர்கள்"எனக்கு ஏற்ப்பட்ட சோதனைகளும் துன்பங்களூம், துன்பத்தில் வீழ்ந்து கிடக்கின்ற இஸ்லாமியருக்கு ஆறுதல் அளிக்கட்டும் என்று கூறினார்கள்" (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் இப்னு காசிம்(ரழி) நூல்: மூஅத்தா)

தியாக பெருமக்கள்

இத்தைகைய இக்கட்டான சூல் நிலையில்தான் ஒரு கூட்டத்தினர் இஸ்லாத்தை ஏற்றனர். இஸ்லாத்தை ஏற்றால் தங்கள் உயிரே பறிக்கப்படலாம், தங்கள் குடும்பம் சின்னா பின்னப்படுத்தப் படலாம் சித்திரவதை செய்யப்படலாம் என்று தெரிந்திருந்தும், அவர்கள் இஸ்லாத்தை ஏற்றனர். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட காரணத்துக்காக இரு கால்களும் இரண்டு ஒட்ட்கங்களில் பிணைக்கப் பட்டு, இருவேறு திசைகளில் அந்த ஒட்டகங்கள் விரட்டப்பட்டு இருகூறாக கிழிக்கப் பட்டனர். கடும் மணலில் கிடத்தப் பட்டு, பெரும் பாறைகளை அவர்களின் நெஞ்சங்கள் மீது வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப் பட்டவர்களூம் உண்டு. பெண் என்று பாராமல், மர்ம ஸ்தானத்தில் அம்பெய்து படுகொலை செய்யப்பட்ட பெண்களும் இருந்தனர். தூக்கு மேடையில் ஏற்றப்பட்டனர் சவுக்கால் அடிக்கப்பட்டனர்.

சொந்த நாட்டிலிருந்து வெறுங்கையுடன் விரட்டி அடிக்கப்பட்டனர். அகதிகளாகச் சென்றவர்கள் மதினாவில் நிம்மதியாக இருப்பதைப் பொறுக்க முடியாமல் போர்க்களத்துக்கு அழைக்கப்பட்டனர். அல்லாஹ்வின் பாதையில் தங்கள் இன்னுயிரையும் அர்ப்பணிக்கத் தயங்கவில்லை. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இந்த மண்ணுலகை விட்டுப் பிரிந்தபோது, தீனுல் இஸ்லாம் இந்த உலக மக்களுக்கெல்லாம் சென்றடைய வேண்டும் என்பதற்காக,பயண வசதியற்ற காலத்திலேயே கடும் பயணம் மேற்கொண்டனர். மொழி தெரியாதநாடுகளுக்குச் சென்றனர். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் காட்டிய வழியில் நடந்து காட்டிஉலகில் இஸ்லாமிய பேரொளியை பாய்ச்சினர். அவர்களின் தியாகங்கள் சொல்லி முடியாது.

ஒவ்வொருவருடைய வரலாறும் ஒரு வீர காவியம். தியாகத்தின் வடிவமாகத் திகழ்ந்தவர்கள் அந்த நபித்தோழர்கள். சமீபகாலமாக இந்தத் தியாகத் தோழர்களின் வரலாறுகள் மறைக்கப்படுகின்றன. உஹது மலையளவு செலவு செய்தாலும், எவராலும் ஸஹாபக்களின் மதிப்பில் பாதியளவைக்கூட அடைய முடியாது என்று நபிகள்(ஸல்) அவர்கள் சொல்லியிருக்க அவர்களுக்கு பல நூற்றாண்டு களுக்குப் பின் தோன்றியவர்களுக்கு ஆலிம்களே அதிக முக்கியத்துவம் தருவது வியப்பாகவும் அதே சமயம் ஆச்சரியமாகவும் உள்ளது.

இந்த உம்மத்தில் (சமுதாயத்தில்) மிகச் சிறந்தவர்களாகிய ஸஹாபாக்களின் வரலாறுகள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதில் காட்டும் அக்கறையை விட, இறை நேசர்கள் என்று இவர்களாகவே முத்திரைக் குத்திகொண்ட சிலரின் வரலாறுகளை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் சில அறிஞர்கள் காட்டும் அக்கறை விந்தையாகவே உள்ளது.

ஒரு ஆலிம் தன்பயானை துவக்கும் முன் அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத் உரைத்து விட்டு"முஹ்யித்தீனே கைப்பிடியுங்கள்"என்று கூறி உரையைத் துவக்குகின்ற அவல நிலயைத் காண்கிறோம். "உலகத்து மாந்தரின் ஈமானை இன்னொரு தட்டிலும், அபூபக்கரின்(ரழி) அவர்களின் ஈமானை இன்னொரு தட்டிலும் வைத்து எடை போட்டால் அபூபக்கர் (ரழி) ஈமானே கனமுள்ளதாகும்" என்ற நபி மொழி கூட இவர்களுக்கு தெரியாமல் போனது ஏன்?

இறந்து போன யாரையும் அழைத்து உதவி தேடலாகாது என்பது ஒருபுறமிருக்க, அப்படி அழைத்துக் கையைக் பிடிக்கச் சொல்பவர்கள் மனதில் இப்றாஹீம் (அலை) போன்ற உயர்ந்த நபிமார்கள் நினைவுக்கு வராமல் போனது ஏன்? மார்க்கத்தை மக்களுக்குப் போதிக்க வேண்டியவர்கள் மக்களிடமிருந்து மார்க்கத்தைக் கற்றுக்கொள்கின்றனர். மக்கள் எந்த நம்பிக்கையில் உள்ளனரோ அதற்கொப்ப தங்கள் கருத்துக்களையும் அமைத்துக் கொள்கின்றனர். அந்தோ! பரிதாபம்!

அவ்லியாக்கள் என்று சிலரை அவர்கள் பெயரால் முனாஜாத்துகள்,கிஸ்ஸாக்கள், மவ்லிதுகள் எழுதி மக்களிடம் பரப்பி வருவதின் நோக்கம் என்ன? அவர்களின் மீது கொண்ட பற்றோ, பாசமோ அல்ல என்பதை தெரிந்து கொள்ளலாம். அப்படியானால் உண்மையான காரணம் என்ன?

தாங்கள் செய்கின்ற மார்க்கத்திற்கு முரணான காரியங்களுக்கு இவர்கள் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸையோ, ஸஹாபாக்களின் வாழ்க்கையையோ ஆதாரங்காட்ட முடியாது. ஏனெனில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடக்காத ஒன்றை இட்டுக்கட்டிக் கூற இயலாத அளவுக்கு அது அன்றைய நல்லவர்களால் பாதுகாக்கப்பட்டுவிட்டது. இல்லாததைச் சொல்லி எவரும் தப்பித்துக் கொள்ள முடியாது. அந்த வரலாறுகள் அல்லாஹ்வின் அருளால் இன்று வரை பாதுகாக்கப்பட்ட நிலையில் உள்ளன. கியாமத் நாள் வரைக்கும் அது பாதுகாக்கப்பட்டே இருக்கும்.

இதனால் தான், மார்க்கத்தை வியாபாரமாக ஆக்கிக்கொண்டே ஒரு சிலர் மீது தனி கவர்ச்சியை ஏற்படுத்தி அவர்கள் மீது மக்களை பக்தி கொள்ளச் செய்து, அவர்கள் பெயரால் இந்த வியாபாரத்தை நன்றாக நடத்திக்கொண்டுள்ளனர்.

இஸ்லாமிய ஷரீஅத்துக்கு புறம்பாக அந்த மகான்கள் நடந்ததாக எழுதப்பட்டுள்ளதே! பேசப்படுகின்றதே! அவர்கள் அவ்லியாக்களாக இருப்பின் அப்படி நடந்திருக்க மாட்டார்களே! என்றெல்லாம் மக்கள் கேள்வி கேட்பதில்லை. மக்களூக்குத் தெளிவுபடுத்தப்பட வேண்டியவைகளை குர்ஆனை, ஹதீஸை, சஹாபாக்களின் வரலாறுகளை தெளிவு படுத்தாத வரை இந்தநிலை நீடிக்கத்தான் செய்யும். அல்லாஹ் இந்த நிலையிலிருந்து நம்மை காப்பானாக! ஆமீன்.

July 18, 2009

விரும்புகிறீர்களா...!

உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?

தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

உங்களின் பாவங்கள் அதிகமாக இருந்தாலும், அது மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

யார் ஒரு நாளில் நூறு தடவை سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி' என ஓதுகின்றாரோ, அவரின் பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும், அது மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

அல்லாஹ் உங்கள் மீது, அருள்புரிய வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?

யார் என்மீது ஒரு தடவை ஸலவாத்து கூறுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் பத்து தடவை ஸலவாத்து கூறுகின்றான் (அருள் புரிகின்றான்); என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

அல்லாஹ் உங்களின் அந்தஸ்தை உயர்த்த வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

யார் அல்லாஹ்வுக்காக பணிந்து நடக்கின்றாரோ, நிச்சயமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்தை உயர்த்துகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

அல்லாஹ்விற்கு சமீபத்தில் இருக்க விரும்புகின்றீர்களா?

ஒரு அடியான் தன் இரட்சகனிடம் மிக சமீபமாக உள்ள நேரம், அவன் சுஜுது செய்யும் நேரமாகும். ஆகவே (அந்த நேரத்தில்) அதிகம் பிரார்த்தியுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

ஹஜ் செய்த நன்மையைபெற விரும்புகின்றீர்களா?

ரமளான் மாத்தில் உம்ரா செய்வது ஹஜ்ஜுக்கு சமமாகும் அல்லது என்னுடன் ஹஜ் செய்ததற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

சுவர்க்கத்தில் வீடு கிடைக்க வேண்டும் என விரும்புகின்றீர்களா?

அல்லாஹ்விற்காக யார் ஒரு பள்ளியை கட்டுகின்றாரோ, அல்லாஹ் அவருக்காக அதுபோன்ற (வீட்டை) சுவர்க்கத்தில் கட்டுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

அல்லாஹ்வின் திருப்தியை அடைய விரும்புகின்றீர்களா?

ஒரு கவள உணவை உண்டுவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும், ஒரு வாய் தண்ணீர் அருந்திவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும் நிச்சயமாக அல்லஹ் பொருந்திக் கொள்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

உங்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் பிரார்த்தனை தட்டப்படுவதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

ஒரு வருடம் முழுமையாக நோன்பு நோற்ற நன்மை கிடைக்க வேன்டுமென விரும்புகின்றீர்களா?

ஓவ்வொரு மாதமும் மூன்று நோன்பு நோற்பது, வருடமெல்லாம் நோன்பு நோற்பதற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

மலையளவு நன்மை கிடைக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

ஒரு ஜனாஸாவிற்கு தொழுகை நடத்தப்படும் வரை அந்த ஜனாஸாவில் யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு ஒரு கிராத்து நன்மையும், அந்த ஜனாஸா அடக்கம் செய்யப்படும் வரை யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரு கிராத்து நன்மையும் கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரு கிராத்து என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. இரு பெரும் மலை அளவு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

சுவர்க்கத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருக்க விரும்புகின்றீர்களா?

நானும் அனாதையை பொறுப்பெடுப்பவரும் இவ்வாறு சுவர்க்கத்தில் இருப்போம் என, நபி(ஸல்) அவர்கள் தனது நடு விரலையும் ஆள்க்காட்டி விரலையும் சுட்டிக்காட்டினார்கள். (புகாரி)

அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் போராளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா?

அல்லது விடாமல் தொடர்ந்து நோன்பு நோற்கும் நோன்பாளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? அல்லது இரவெல்லாம் நின்று வணங்கும் வணக்கதாரியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா?
விதவைக்கும் மிஸ்கீனுக்கும் உதவி செய்பவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவரைப் போன்றவராவார், இப்படியும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எண்ணுகின்றேன், அதாவது இரவெல்லாம் நின்று வணங்குபவரைப் போன்றும் விடாமல் நோன்பு நோற்பவரைப் போன்றும் என்று.(அறிவிப்பாளருக்கு ஏற்பட்ட சந்தேகம்) (புகாரி, முஸ்லிம்)


நபி(ஸல்) அவர்களே உங்களுக்கு சுவர்க்கத்தை பெற்றுத்தர விரும்புகின்றீர்களா?

யார் தன்னுடைய இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரு கால்களுக்கு மத்தியிலுள்ளதையும் (ஹராத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதாக) எனக்கு உத்தரவாதம் அளிக்கின்றாரோ, அவருக்கு சுவர்க்கத்தை வாங்கிக் கொடுப்பதற்கு நான் உத்தரவாதம் அளிப்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

மரணத்துக்குப் பின்னும், உங்களின் நன்மைத்தட்டில், நன்மை எழுதப்பட வேண்டுமா?

ஒரு மனிதன் மரணித்தால் மூன்றைத்தவிர மற்ற எல்லா அமல்களும் துண்டித்து விடும், நிரந்தர தர்மம், பிரயோஜனம் உள்ள அறிவு, தனக்காக பிரார்த்தனை செய்யும் ஸாலிஹான பிள்ளை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷம் உங்களுக்கு கிடைக்கவேண்டும் என விரும்புகின்றீர்களா?

لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِالله லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் என்று கூறுவது சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

முழு இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?

யார் இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு பாதி இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்கும், யார் சுப்ஹுத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு முழு இரவும் நின்று வணங்கிய நன்மை கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

ஒரு நிமிடத்தில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓதிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீகளா?

சூரத்துல் இக்லாஸை ஒரு தடவை ஓதுவது குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

உங்களின் நன்மைத் தராசு, அதிகம் இடையுள்ளதாக ஆக வேண்டும் என விரும்புகின்றிர்களா?

இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்கு இலகுவானது, தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை) سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

July 17, 2009

இஸ்லாத்தின் பார்வையில் திருமணம்

உங்களில் வாழ்க்கைத் துணையில்லாதவர் (ஆண், பெண்)களுக்குதிருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால், தன் நல்லருளைக் கொண்டு அல்லாஹ் அவர்களை சீமான்களாக்கி வைப்பான், மேலும் அல்லாஹ் (வாரி வழங்குவதில்) விசாலமானவன். (அல்குர்ஆன் 24:32)

இந்த வசனத்தில் இறைவன் 'திருமணம் செய்து வையுங்கள்' என்ற ஏவலை பயன்படுத்தியுள்ளதிலிருந்து தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பொறுப்பு பெற்றோர்களை சார்ந்தது என்பது விளங்குகிறது. குழந்தைகளை நல்லவிதமாக வளர்ப்பதும் அவர்களுக்கு சிறந்த வாழ்க்கைத் துணைகளை அமைத்துக் கொடுப்பதும் நல்லப் பெற்றோர்களின் அடையாளமாகும். திருமண வயதை அடைந்து விட்டப் பிறகும் ஏழ்மையைக் காரணம் காட்டி திருமணத்தைத் தள்ளிப் போட வேண்டாம் எனற வழிகாட்டலும் இங்கு கிடைத்துள்ளது.

திருமணம் எனது வழிமுறை ஆகும். இதனை எவரொருவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல என்பது நபிமொழி (அனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : புகாரி)

பெற்றோர்களுக்கு,

மார்க்கத்திலும், குணத்திலும் (சிறந்த) நீங்கள் விரும்பும் மனிதர் உங்களிடம் (மணப்பெண் கேட்டு) வந்தால் அவருக்கு திருமணம் செய்து வையுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால், பூமியில் கடுமையான குழப்பமும், ஒழுக்கமின்மையும், அமைதியின்மையும் ஏற்படும்.அபூஹூரைரா (ரலி), திர்மிதி

இந்த ஹதீஸை பெற்றோர்கள் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலான திருமணங்களில் மணமகனின் ஒருக்கத்தைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல் குடும்ப உறவு - குடும்ப பாரம்பரியம் - சொத்து போன்ற இரண்டாம்பட்ச தகுதிகள் முன்னிலைப்படுத்தப்பட்டு திருமணம் முடிக்கப்படுகிறது. ஒழுக்கமற்ற பையனால் பெண்ணின் வாழ்க்ககை சீரழிந்து விட்டால் என்ன செய்வது என்றக் கவலையெல்லாம் ஏற்படுவதேயில்லை.

பையனின் ஒழுங்கீனங்களைப் பற்றி யாராவது சுட்டிக் காட்டினால் கூட 'எல்லாம் கல்யாணத்திற்கு பிறகு சரியாகிவிடும்' என்ற பதிலே பெண்ணைப் பெற்றோர்களால் (குறிப்பாக பெண்களால்) முன்வைக்கப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு அவன் திருந்தா விட்டால் பெண்ணின் நிலை என்னாவது? என்ற கேள்வியெல்லாம் இங்கு எழுவதேயில்லை.அதே சமயம், மார்க்க அறிவும், சிறந்த குணமும் கொண்ட ஒருவன் அவனாக முன் வந்து உங்கள் பெண்ணைக் கட்டிக் கொள்கிறேன் என்று கேட்டால் ஏதோ தவறு நடந்து விட்டது போன்று அங்கு பிரச்சனைகள் வெடிக்கும். இதை இன்றைய நடைமுறையில் கண்டு வருகிறோம். ஆனால் மேற்கண்ட நபிமொழி 'நல்லொழுக்கம் உள்ளவர் பெண் கேட்டால் கொடுங்கள்' என்ற அறிவுரையை முன் மொழிகிறது.

மணமகனுக்கு,

எந்தப் பெண் கிடைத்தாலும் கட்டிக் கொள்ளலாம் என்ற இலக்கற்ற நிலையில் திருமணத்திற்கு தயாராகி விடாதீர்கள். உங்களுக்கு வாழ்க்த்துணையாக வருபவள் உங்களில் பாதியாக வாழப்போகிறவள் என்பதை கவனத்தில் வையுங்கள். திருமணத்திற்கு முன் மனைவியாக வருபவள் யார்? என்பதை கவனியுங்கள்.

அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;. (அல் குர்ஆன் 2:188)

கணவன் - மனைவியின் உறவை இதைவிட ரத்தினசுருக்கமாகவும், அழகாகவும், அழுத்தமாகவும் வேறு யாரும் சொல்லவே முடியாது என்ற அளவிற்கு இறைவன் 'நீங்கள் அவர்களுக்கும் அவர்கள் உங்களுக்குமாக நீங்கள் ஒருவருக்கொருவர் ஆடையாவீர்கள்' என்று விளக்குகிறான். நம் உடம்புடன் ஒட்டி உறவாடும் உடையை தேர்ந்தெடுப்பதற்கு நாம் எவ்வளவு கவனம் செலுத்துகின்றோமோ அதை விட கூடுதல் கவனம், வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் போது இருக்க வேண்டும்.

அந்த வகையில் வாழ்க்கைத் துணையாக வருபவள் யாராக இருக்க வேண்டும் என்பதை இஸ்லாம் விளக்குகிறது.

ஒரு பெண் அவளது அழகு, செல்வச்செழிப்பு, குடும்ப கௌரவம், மார்க்கப்பற்று என்ற நான்கு விஷயங்களுக்காக மணமுடிக்கப்படுகிறாள். மார்க்கப் பற்றுள்ள பெண்ணையே மணமுடித்து வெற்றி பெறுவீராக! என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். அபூஹூரைரா, அபூஸயீத் அல்-குத்ரி, ஜாபிர் போன்ற நபித்தோழர்கள், புகாரி, முஸலிம், அபூதாவுத், தாரமி, நஸயீ, இப்னுமாஜா

மனதிற்கு பிடித்த உடை உடலுக்கு சுகமளிப்பது போன்று மார்க்கப் பற்றுள்ளப் பெண் வாழ்க்கைக்கு சுமகளிப்பாள்.மார்க்கப் பற்று என்றவுடன் எல்லா வகையிலும் நூறு சதவிகிதம் மார்க்கப்பற்று உள்ளவளாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிடக் கூடாது. முதலாவதாக ஷிர்க் எனும் கொடிய இணைவைத்தல் என்ற மாபாவத்திலிருந்து அவள் விடுபட்டிருக்க வேண்டும்.


இணை வைக்கும் பெண்களை அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள். இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக் கூடியவளாக இருந்த போதிலும், அவளைவிட இறை நம்பிக்கையுடைய ஓர் அடிமைப்பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள். (அல் குர்ஆன் 2:221)

அழகு - அந்தஸ்து என்று அனைத்தும் இருந்தும் ஓரிறைக் கொள்கையே வாழ்க்கை என்ற உறுதிப்பாடு மட்டும் இல்லாமல் போய் விட்டால் முஸ்லிமான ஒரு ஆண்மகனுக்கு துணையாக வர அவள் தகுதியற்றவள் என்று இறைவன் பகிரங்கமாகவே கூறியுள்ளதால் முஸ்லிமல்லாத பெண்களிலிருந்து முஸ்லிம் என்ற பெயர் வைத்துக் கொண்டு இறை நம்பிக்கையில் கலப்படம் செய்து தர்கா போன்ற வழிபாடுகளை நடத்தும் பெண்கள் உட்பட இந்த வகையில் அடங்கி விடுவார்கள். அத்தகையப் பெண்களை புறந்தள்ளி வைக்கத்தான் வேண்டும்.

அன்பு செலுத்தும்; அதிகக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களை மணம் முடித்துக் கொள்ளுங்கள். உலக மக்களுக்கு மத்தியில் (நீங்கள் அதிகமாக இருப்பது கண்டு) நான் மகிழ்வேன் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (மஃகலு பின் யஸார் (ரலி), அனஸ் பின் மாலிக் (ரலி), அபூதாவூத், நஸயீ, முஸ்னத் அஹ்மத்.

இவ்வுலகம் இன்பகரமானது, உலக இன்பங்களில் மிகவும் சிறப்பானது நல்ல மனைவியை அடைவதாகும் என்பது நபிமொழி. முஸ்லிம்

மணமக்கள் திருமணத்திற்கு முன் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளுங்கள்.

நான் ஒரு பெண்ணை மணமுடித்துக்கொள்ள பேசியிருந்தேன். இதனை அறிந்த இறைத்தூதர் (ஸல்), நீர் அப்பெண்ணைப் பார்த்துக் கொள்ளும், ஏனெனில் அது உங்களிருவருக்கிடையில் உவப்பையும், நட்பையும், இணக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும் என் அறிவுரைப்பகன்றார்கள். நஸயீ, திர்மிதி, முஸ்னத் அஹ்மத்

இந்த சமுதாயத்தில் மூடத்தனமாக நீடித்து வரும் ஒரு கேவலத்தை இந்த ஹதீஸ் மறுக்கிறது. திருமண பேச்சு ஒரு குடும்பத்தில் துவங்கி தன் மகனுக்கு பெண் பார்க்க பெற்றோர்கள் துவங்கி விட்டால் பெற்றோர்கள் - குடும்பத்தார் உடன் பிறந்தவர்கள் (சில இடங்களில் மாமன் - மச்சான்கள் உட்பட) அந்தப் பெண்ணைப் பார்த்து விடுவார்கள். மாப்பிள்ளை மட்டும் திருமணம் முடிந்தப் பிறகே அந்தப் பெண்ணைப் பார்ப்பான். அவளும் கூட அப்படித்தான். இந்த எதிர்மறையான கலாச்சாரம் எங்கிருந்துதான் இந்த சமுதாயத்தில் புகுந்தது என்றுத் தெரியவில்லை. பிற அனைத்து சமூகங்களிலும் திருமணத்திற்கு முன் மாப்பிள்ளையும் பெண்ணும் ஒருவரையொருவர் பார்க்கிறார்கள். பிடித்திருக்கா இல்லையா என்பதை முடிவு செய்கிறார்கள். ஆனால் இங்கு நேர்மாற்றமாக நடக்கிறது. இதற்கு இஸ்லாமிய முத்திரை வேறு குத்தப்படுகிறது. தனக்கு வரப்போகும் துணைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். அதை நேரில் பார்ப்பதன் மூலமே உறுதிப்படுத்த முடியும். இதற்கு தடைப்போடுவது எந்த வகையிலும் நியாயமில்லை.

நபி(ஸல்) அவர்களின் செய்தியில் நபி(ஸல்) அவர்களாகவே முந்திக் 'பெண்ணைப் பார்த்துக் கொள்ளும்' என்கிறார்கள். பிரிதொரு நபித்தோழர் விஷயத்திலும் இதையே வலியுறுத்தியுள்ளார்கள்.ஒரு நபித்தோழர் நபி; (ஸல்) அவர்களிடம் வந்து, ஒரு மதீனத்து பெண்ணை மணமுடிக்க நிச்சயித்திருப்பதாகக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் நீர் அப்பெண்ணை நேரில் கண்டீரா? எனக் கேட்டார்கள். அதற்கு நபித் தோழர் இல்லை என்றார். நபி (ஸல்) அவர்கள் நீர் சென்று பார்த்துக் கொள்வீராக! எனக் கூறினார்கள். அபூஹூரைரா (ரலி) முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்

திருமண வாழ்க்கை என்பது சந்தை வாழ்க்கையல்ல கூடி களைவதற்கு. அது தலைமுறைகளை உருவாக்கக் கூடிய ஒரு ஒப்பந்தமாகும். அந்த ஒப்பந்தத்தில் மனதிற்கு பிடிக்காத பெண்ணோ - ஆணோ கையொப்பமிட்டு இணையும் போது வாழ்க்கை கசந்துப் போகும். சந்தோஷமாக இருப்பதற்காகத்தான் திருமண வாழ்க்கை. அங்கு மனம் பொருந்தியவர்கள் இணைவதுதான் முறை. அதற்கு வழி வகுக்கத்தான் 'பெண்ணைப் பார்த்துக் கொள்' என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். எனவே திருமணத்திற்கு முன் மணமுடிக்கப போகிறவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பெண்ணின் சம்மதம்.

இறை நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப்பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்குக் கூடாது.(அல்குர்ஆன் 4:19)

விதவை, விவாக முறிவுப் பெற்ற பெண்களை அவர்களது முழு சம்மதமின்றி திருமணம் செய்து வைக்காதீர்கள்,ரூ கன்னிப் பெண்களிடம் திருமணம் விஷயமாக அனுமதி பெற வேண்டும் என்று நபி(ஸல்) கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஒரு கன்னிப்பெண் (நாணத்தால் தன் எண்ணத்தைக்) தெளிவாகக் கூற வெட்கப்படுவாளே! என கேட்கப்பட்டது அதற்கு நபி 'அவளது மௌனமே சம்மதமாகும்' என்றார்கள்.(ஆயிஷா, இப்னு அப்பாஸ், அபூஹூரைரா (ரலி அன்ஹூம்), புகாரி, முஸ்லிம்திருமணத்திற்கு பெண்களின் முழு மன சம்மதம் பெறுவது அவசியமாகும்.

மஹர் (அன்பளிப்பான மணக்கொடை)

நீங்கள் (மணம் புரியும்) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை) மகிழ்வோடு கொடுத்துவிடுங்கள். அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால் அதை தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள். (அல்குர்ஆன் 4:4)

மணம் முடிக்கும் மணப்பெண்ணுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படி கொடுத்து விடுங்கள்(அல்குர்ஆன் 4:24,25)

மணம் முடிக்கும் பெண்ணுக்கு ஒரு பொற்குவியலையே (மஹராக) கொடுத்த போதிலும், அதிலிருந்து எதனையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள்.(அல்குர்ஆன் 4:20)

நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த போது, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) என்ற நபித்தோழர் பேரித்தம் பழமளவு தங்கத்தை மஹராகக் கொடுத்து ஒரு மதீனத்து பெண்ணை மண முடித்தார்கள்.; பின் மாலிக் (ரலி). புகாரி, முஸ்லிம்,

ஒரு இரும்பு மோதிரத்தையாவது மணப்பெண்ணுக்கு மஹராகக் கொடுத்து மணம் முடியுங்கள் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஆணையிட்டார்கள் (ஹதீஸின் சுருக்கம்)ஹல் பின் ஸஅத் (ரலி) புகாரி, முஸ்லிம்

ஒரு நபித் தோழரிடம் மஹராகக் கொடுக்க எந்த பொருளும் இல்லாததை அறிந்த நபி (ஸல்) அவர்கள்'உனக்கு எதாவது திருக்குர்ஆன் வசனங்கள் தெரியுமா? எனக் கேட்டார்கள். அந்நபித்தோழர், தனக்கு இன்னின்ன குர்ஆன் வசனங்கள் தெரியுமென விடையளித்தார்கள். உடனே அந்த வசனங்களை மணப்பெண்ணுக்கு கற்றுக் கொடுப்பாயாக! அது அப்பெண்ணுக்குரிய மஹராகும் என்றார்கள்.ஸஹல் பின் ஸஅத் (ரலி) புகாரி, முஸ்லிம்

நிக்காஹ் - குத்பா

இன்னல் ஹம்த லில்லாஹி நஸ்தயீனுஹூ வநஸ்தஃ பிருஹூ வனவூது பில்லாஹி மின்ஷூருரி, அன்புஸினா, வமின் மன்யஹ்தில்லாஹூ ஃபலாயுழ்லில் ஃபலா ஹாதியலஹ வ அஷ்ஹது அ;லாயிலாஹ இல்லல்;;லாஹூ வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹ யா அய்யுஹல்லதீன ஆமனூ இத்தகுல்லாஹ் ஹக்க துகாதிஹி வலா தமூதுன்ன இல்லா வ அன்தும் முஸ்லிமூன், யா அய்யுஹல்லதீன ஆமனூ இத்தகுல்லாஹ் ஹல்லதீ தஸா அலூன பிஹி வர்அர்ஹாம் இன்னல்லாஹ கான அலைக்கும் ரகீபா: யா அய்யுஹல்லதீன் ஆமனூ இத்தகுல்லாஹ் வகூலூ கவ்லன், ஸதீதா யுஸ்ஸிஹ் லகும் அஃமாலகும் வயஃபிர் லகும் துனூபக்கும் வமன்யுதியில்லாஹ வரசூலஹூ ஃபகத் ஃபான் அளீமா என்று நபி (ஸல்) கற்றுத் தந்ததாக இப்னு மஸ்வூது (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் திர்மிதி, அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது.

குத்பாவின் பொருள் :
நிச்சயமாக புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! அவனிடமே உதவி தேடுகிறோம். அவனிடமே பாவமன்னிப்பு தேடுகிறோம். எங்கள் உள்ளங்களின் தீங்குகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டினானோ அவனை வழிகெடுப்போன் யாருமில்லை. யாரை அல்லாஹ் வழிதவறச் செய்து விட்டானோ அவனுக்கு நேர்வழி காட்டுவோன் யாரும் இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.

நம்பிக்கையாளர்களே! இறைவனை முழுமையாக அஞ்சுங்கள். நீங்கள் முஸ்லிம்களாகவன்றி மரணிக்க வேண்டாம். (அல்குர்ஆன் 3:102)

விசுவாசிகளே!நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள்: அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்கிறீர்கள் மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக் அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4:1)

நம்பிக்கையாளர்களே!சொல்வதை தெளிவாகவும் தீர்கமாகவும் சொல்லுங்கள். அல்லாஹ் உங்கள் வணக்கங்களை சீர்செய்வான், உங்களது பாவங்களை மன்னிப்பான். யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுபட்டு நடக்கிறார்களோ நிச்சயமாக அவர்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டார்கள். (அல்குர்ஆன் 33: 70,71)

பெண்ணுக்கு பாதுகாவலர் - உரிமையுடையவர்.வலியின்றி (எந்தப் பெண்ணுக்கும்) திருமணமில்லை - என்று இறைத்தூதர் கூறியுள்ளார்கள். இந்தச் செய்தி அபூ மூஸா, அபூ ஹூரைரா, இப்னுஅப்பாஸ், அனஸ், ஆய்ஷா போன்ற நபித்தோழர்கள் மூலம்அறிவிக்கப்பட்டுள்ளது. (திர்மிதி)

பெண்ணைத் திருமணம் முடித்துக் கொடுக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் அந்தப் பெண்ணிற்கு வலியாவார்கள். அவர்களின்றி ஒரு பெண் திருமணம் செய்ய முடியாது.

திருமண சாட்சிகள்.

சாட்சிகளின்றி தானாக திருமணம் செய்யும் பெண்கள் விபச்சாரிகளாவர் - என்று இறைத் தூதர் எச்சரித்துள்ளார்கள். அபூ ஹூரைரா, இப்னு அப்பாஸ், இம்ரான் இப்னு ஹூஸைன், இப்னு அப்பாஸ் போன்ற நபித்தோழர்கள் இதை அறிவிக்கிறார்கள்.(திர்மிதி)

சாட்சியம் என்பது பின்னர் ஏற்படும் பிரச்சனைகளை எதிர் கொண்டு அதற்கு தீர்வு சொல்லும் முக்கியத்துவம் வாய்ந்தது.

திருமண விருந்து.

திருமணத்தின் போது பெண் வீட்டாருக்கென்று தனிப்பட்ட முறையில் எத்தகைய செலவும் இல்லை. செலவென்று வரும் அனைத்தும் மணமகனையே சாரும். அந்த வகையில் மணமகன் திருமண விருந்துக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கொடுத்த வலீமா விருந்துகளில் ஜைனப் (ரலி) அவர்களை மணமுடித்த பின் கொடுத்தது போன்ற சிறப்பானதை நான் பார்க்கவில்லை. அதற்கென நபி(ஸல்) அவர்கள் ஒரு ஆடு அறுத்து விருந்தளித்தார்கள். அந்த விருந்தில் ரொட்டியும், இறைச்சியும் வழங்கப்பட்டது. அனஸ்பின் மாலிக் (ரலி) புகாரி, முஸ்லிம்

நபி(ஸல்) தாம் செய்த அனைத்து திருமணத்திற்கும் விருந்தளித்துள்ளார்கள். அவற்றில் பெரிய விருந்து ஜைனப்(ரலி)யை திருமணம் செய்யும் போது கொடுத்ததுதான். வேறெந்த திருமணத்திற்கும் ஆடு அறுத்து விருந்து வைக்கவில்லை.

நபி (ஸல்) அவர்களின் திருமணங்களில் ஒரு சிலவற்றிக்கு இரு முத்துக்கள் அளவுள்ள பார்லியில் தயாரிக்கப்பட்டதை வலீமா விருந்தாக கொடுத்தார்கள். (1 முத்து 750 கிராம் ஆகும்)ஃபிய்யா பின்து ஷைபா (ரலி) புகாரி, முஸ்லிம்)

விருந்து வழங்கும் போது கவனிக்க வேண்டியவை.

நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:நீங்கள் வலீமா விருந்துக்கு அழைக்கப்பட்டால், அவ்வழைப்பை ஏற்றுச் சிறப்பளியுங்கள். இப்னு உமர்(ரலி)ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

எந்த விருந்துக்கு செல்வந்தர்கள் அழைக்கப்பட்டு, ஏழைகள் மறுக்கப்படுகிறார்களோ அவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்தவராவர்.அபூஹூரைரா, இப்னு அப்பாஸ் (ரலி-அன்ஹூம்) புகாரி, முஸ்லிம்

(இன்றைய திருமணங்களில் இந்த ஹதீஸில் வரும் எச்சரிக்கையை யாரும் கண்டுக் கொள்வதேயில்லை என்ற மோசமான நிலையே நீடிக்கிறது)

திருமண வாழ்த்து.

'பாரகல்லாஹுலக வ பாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபி கைர்' அல்லாஹ் உங்களுக்கு உள்ளும் புறமும் அருள் புரிந்து நல்லக் காரியங்களில் உங்கள் இருவரையும் ஒன்றிணைத்து வைப்பானாக... (என்பது நபிவழி துஆ) அபூஹூரைரா (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா, ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

இது தவிர இன்றைக்கு முஸ்லிம்கள் திருமணத்தின் போது செய்யும் சடங்குகள் - ஓதப்படும் பிற துஆக்கள் எதுவொன்றும் இஸ்லாத்திற்குட்பட்டது அல்ல என்பதால் அவற்றை இரு வீட்டாரும் கட்டாயம் புறக்கணிக்க வேண்டும்.பிற விட்டொழிக்க வேண்டிய சடங்குகள்.

நடைமுறையில் உள்ள மிக மோசமான துஆவும் அதன் பொருளும்.

திருமண வைபவங்களில் இன்று மிக முக்கியமாக ஓதப்பட்டு வரும் ‘நபிமார்களைப்போல் வாழ்க’ என்ற வாழ்த்துத் தொடரின் பின்னணியைப் பலரும் புரியாது ஓதி அதற்கு ஆமீன் கூறிவருவதைப் பார்க்கிறோம். அதை ஓதாவிட்டால் திருமணமே கூடாது என்ற ஒரு மாயையை மக்களிடையே ஏற்படுத்தி விட்டனர்.

ஓதித்தான் தீர வேண்டுமென பிடிவாதம் பிடிப்போர் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம் வஹவ்வா வநூஹ் வஃபாரிஸா வஇப்றாஹீம் வஸாரா வயூஸுஃப் வ ஸுலைஹா … இவர்களைப்போல் வாழ்க என்ற வாழ்த்துவதின் பின்னணியைக் கவனியுங்கள்.

1. நபி ஆதம் ஹவ்வா போல் வாழ்க !

1. ஆதமும் ஹவ்வாவும் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
2. இறைவன் தடுத்த சுவர்க்கத்துக்கனியை உண்டதற்காக இறைவனின் கோபத்திற்கு ஆளானார்கள்.
3. அதனால் சுவர்க்கத்திலிருந்து உலகிற்கு வீசப்பட்டார்கள்.
4. பின்னர் கணவனும் மனைவியும் பல்லாண்டுகள் பிரிந்து வாழ்ந்தார்கள்.இந்த மணமக்களும் துன்பத்திற்கும், இறைக்கோபத்திற்கும் ஆளாகி பிரிந்து வாழவேண்டுமா ?
2. நபி நூஹும் ஃபாரிஸாவும் போல் வாழ்க !

( நூஹு(அலை) , லூத் (அலை) ஆகிய )இருவருடைய மனைவியரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களிருவரும் அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே (அந்த இறைதூதர்களால்)அவ்வருவரையும் இறைவனி(ன் தண்டனையி)லிருந்து காப்பாற்ற முடியவில்லை.
இருவரும் நரகிற் செல்வோருடன் சேர்ந்து நுழையுங்கள் என்று கூறப்பட்டது. (அல்குர்ஆன்: 66: 10)

இவ்வசனத்தின் மூலம் நூஹ் நபி, லூத் நபி இருவரின் மனைவியர் இருவருமே நரகவாசிகள் என மிகத் தெளிவாகவே குர்ஆன் அறிவித்து விட்டது.

இவ்வசனத்தில் இரு நபிமார்களின் இரு மனைவியரும் இறை மறுப்பாளர்களாக இருந்து தங்கள் கணவர்களுக்குத் துரோகம் செய்து நரகவாசி யாகவும் ஆகிவிட்டதை இறைவன் உலகோருக்குப் பிறகடனப்படுத்துகிறான். இதைத் தெரிந்தும் நரக வாசியைப் போன்று வாழ்க என வாழ்த்தலாமா ?

3. நபி இப்றாஹீம், ஸாரா போல் வாழ்க !

இப்றாஹீம் நபி - ஸாரா தம்பதியருக்கு நீண்ட நெடுங்காலமாகவே (முதுமை வரை)குழந்தைப் பேறே இல்லாதிருந்தது.எனது கேடே! மாதவிடாய் நின்று நான் கிழவியாகவும் எனது கணவர்வயோதிகராகவும் இருக்க நான் (கர்ப்பமாகி ) பிள்ளை பெறுவேனா ?நிச்சயமாக இது ஆச்சரியமான விசயம் என்று அவரது மனைவி கூறினார்.என அல்- குர்ஆன் : 11: 71, 72. கூறுகிறது .

வயது முதிர்ந்து கிழப்பருவம் வரும் வரை குழந்தைப்பேறே இல்லாதிருந்ததைத் தெரிந்தும் இவ்வாறு வாழ்த்தலாமா?

எந்த தம்பதியர் வயது முதிரும்வரை குழந்தப் பேறில்லாதிருப்பதை விரும்புவர்? ஆசையோடு எதிர்பர்க்கும் புதுமணத் தம்பதியரை இப்படி வாழ்த்தலாமா ?

5. நபி யூஸுஃப் - ஸுலைஹா போல் வாழ்க !

1. குர்ஆனிலோ ஹதீஸிலோ ஸுலைஹாவைப்பற்றி எந்த இடத்திலும் கூறப்படவே இல்லை.இந்த ஸுலைஹா யார் ?
2. அறிமுகமே இல்லாதவரை மனைவியாக்க முன்வந்தது எப்படி?
3. குர்ஆனில் யூஸுஃப் நபியை அடிமையாக வளர்த்தவர் தான் பிற்காலத்தில் நபியின் மனைவியாக சித்தரிக்கப்படுகிறார். அது எப்படி?
4. திருமறையே இவளை நடத்தை கெட்டவள் என வர்ணிக்கிறது. நடத்தை கெட்டவள் நபியின் மனைவியாக முடியுமா?
5. இவளை நபியுடன் இணைத்து ஓர் காதற் காவியம் இயற்றியது அபாண்டமான பழியல்லவா ?
6. திருமணம் நடந்ததாக ஆதாரரமே இல்லாத ஒருவளை - ஒரு தம்பதியை - குறிப்பிட்டு வாழ்த்தலாமா ? இது முறையா ?
7. பல தீமைகளை தொடர்ந்து செய்த ஒரு பெண்ணை ஒரு நல்லடியாருக்கு அதுவும் ஒரு நபிக்கு மனைவிக்கவேண்டுமென்ற நிர்பந்தம் என்ன?
8. இன்னொருவரின் மனைவியை அதுவும் வயது முதிர்ந்த கிழவியை கன்னிப்பெண்ணாக உருமாற்றி திருமணம் செய்து வைக்கவேண்டுமென்ற அவசியம் என்ன?
9. அப்படி ஒரு அதிசயம் நடந்திருந்தால் அதை அல்லாஹ் குர்ஆனிலேயே அறிவித்திருப்பானே?
10. அஹ்ஸனுல் கஸஸ் அழகிய வரலாறு என்று கூறி ஒரு அத்தியாயம் முழுவதிலும் யூசுப் நபியின் அற்புத வரலாற்றை சுவைபட பிறப்பு முதல் இறுதி வரை கூறிய இறைவன் இதை எவ்வாறு கூறாது விட்டிருப்பான்?

இவ்வளவு பிரச்சனைக்குரிய விசயத்தை கட்டாயமாக அதுவும் மகிழ்சிகரமான மணவிழாவில் புதுத்தம்பதியரை வாழ்த்துவதற்காகக் கூறித்தான் ஆக வேண்டுமா? மார்க்க ஞானமுள்ளவரும், மார்க்கத்தைத் தெரிந்து கொள்ள விரும்புபவரும் சிந்தித்துப்பார்க்கவேண்டும் ?

தவிர்க்கப்பட வேண்டிய இஸ்லாத்திற்கு புறம்பானவை

மணமக்களை பூமாலை மலர்களால் அலங்கரித்து அழைத்து வரல்.திருமணத்திற்கு முந்திய நாளிரவு மணமக்களுக்கு நலங்கிடல்என்ற பெயரில் எண்ணெய் சடங்கு செய்தல்.கைக்கூலி எனும் வரதட்சணை வாங்குதல்.மாலை மாற்றுதல், வெற்றிலை மாற்றுதல், அரிசி அளத்தல், பல்லாங்குழி விளையாடல் போன்றவை.மணமேடைக்கு மணமகன் வருகையில் ஆரத்தி எடுத்தல், ஆட்டுத்தலை, கோழி போன்றவற்றை தலை சுற்றி எறிதல்.மணமகனுக்கு பெண் வீட்டார் நிறைகுட தண்ணீர்வைத்து அதில் அவரின் காலை கழுவி விடல்.மணமகனுக்கு தங்க மோதிரம், மைனர் செயின் அணிவித்தல்.மணமகளுக்கு தாலி மற்றும் கருகமணி கட்டுதல்.மணமக்களை வைத்து மஞ்சள் பூசி நலங்கு பாடுதல்.நல்லநேரம், சகுணம் பார்ப்பது, சடங்குகளின் பெயர்களால் வரம்புமீறி, ஆண், பெண் (திரை) ஹிஜாபின்றி இஸ்லாம் அனுமதிக்காத விதத்தில் விளையாடி மகிழ்வது.மேடை அலங்காரம், வீடியோ, மேளவாத்தியம் என்று அனாச்சாரமாக பணத்தை செலவழிப்பது.பெண் வீட்டாரிடம் திருமணத்திற்குப் பின்பல சந்தர்ப்பங்களில் சீர்வரிசை என்ற பெயரில் பொருட்களை கேட்டு வாங்குவது.சுன்னத்தான தாடியை முகச்சவரம் என்ற பெயரில் வழித்தல்.திருமணதன்று பெண் வீட்டாரிடம் விருந்து கொடுக்க நிர்பந்திப்பது.மணமக்களை தர்ஹாகளுக்கு அழைத்து செல்வது.இந்த சடங்குகள் அனைத்தையும் விட்டு விடுபட்டு செய்யப்படும் திருமணங்களே இஸ்லாமிய திருமணம் என்ற அந்தஸ்தைப் பெரும்.

திருமணம்

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “பெண்களை அவர்களின் அழகுக்காக திருமணம் முடிக்காதீர்கள், அவர்களுடைய அழகு அவர்களை அழித்துவிடக் கூடும். பெண்களைச் செல்வந்தர்கள் என்பதற்காக மணம் முடிக்காதீர்கள், அவர்களுடைய செல்வம் வரம்பு மீறுவதிலும் அடங்காப் பிடாரித்தனத்திலும் அவர்களை ஆழ்த்திவிடக் கூடும். மாறாக மார்க்கப்பற்றின் அடிப்படையில் அவர்களை மணமுடித்துக் கொள்ளுங்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் ر
َضِيَ اللَّهُ عَنْநபி صلى الله عليه وسلم அவர்கள் மொழிந்தார்கள்: “எவருடைய மார்க்கப் பக்தியையும் நற்குணத்தையும் நீங்கள் விரும்புகின்றீர்களோ அத்தகைய மனிதர் உங்களிடம் திருமணம் கேட்டு வந்தால் அவருக்கு மணமுடித்துக் கொடுத்து விடுங்கள். நீங்கள் இப்படிச் செய்யாவிட்டால் பூமியில் குழப்பமும் தீமையும் விளைந்துவிடும்.” (திர்மிதி)

அறிவிப்பாளர் : அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக! நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்!” (புகாரி, முஸ்லிம்)

July 15, 2009

இவ்வுலக வாழ்க்கை

மனிதர்களை உண்மையான நேர்வழியில் செலுத்த வழிகாட்டும் இறுதி இறை வெளிப்பாடாகிய குர்ஆன், இவ்வுலக வாழ்க்கையின் நோக்கம் இறைவனுக்கு அடிபணிவதே ஆகும். மனிதன் இறைவனுக்கு அடிபணிகின்றானா அல்லவா என்று சோதிப்பதற்காகவே அவன் அனுப்பப்பட்ட இடம்தான் இவ்வுலகம் என்றும் குர்ஆன் அறிவிக்கின்றது. இந்தச் சோதனையில் மனிதனை நேர்வழியில் நின்றும் பிறழத் தூண்டும் வகையில் படைக்கப்பட்ட பிரத்தியேகக் கூறுகளைப் பற்றி அல்லாஹ் எச்சரிக்கின்றான்; அவற்றின் தன்மைகளைப் பற்றிக் கூறுகையில் அவை முற்றிலும் ஏமாற்றுபவை எனவும் அறிவிக்கின்றான்.
உங்கள் பொருள்களைக் கொண்டும் உங்கள் ஆத்மாவைக் கொண்டும் நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 3:186
இவ்வுலகின் உண்மையான இயல்பை வர்ணிக்கும் வசனங்கள் பல குர்ஆனில் உள்ளன. அவற்றுள் சில கீழே தரப்படுகின்றன:
உங்களுடைய செல்வமும், சந்ததிகளும் உங்களுக்குச் சோதனையே. ஆனால் அல்லாஹ்விடத்தில் உங்களுக்கு உங்களுக்கு மகத்தான கூலி உள்ளது. அல்குர்ஆன் 64:15
பெண்களும்,ஆண் பிள்ளைகளும், தங்கம் மற்றும் வெள்ளியின் பெருங்குவியல்களும், உயர்ரகக் குதிரைகளும், கால்நடைகளும், வளம் மிகுந்த விளை நிலங்களும் எல்லாம் மனிதர்களைக் கவரும் வகையில் படைக்கப்பட்டுள்ளன. இவை யாவும் இவ்வுலக வாழ்க்கையின் வசதி வாய்ப்புகள். அல்லாஹ்விடத்தில் அழகிய தங்குமிடம் உள்ளது. அல்குர்ஆன் 3:14
உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பவை அனைத்தும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய வசதிவாய்ப்புகளும், பகட்டணிகலன்களுமே ஆகும். அல்லாஹ்விடத்தில் உள்ளவை மேலானாவையும் நிலையானவையும் ஆகும். (இதை) நீங்கள் அறிந்து கொள்ள மாட்டீர்களா?" அல்குர்ஆன் 28:60
சமூக தலைமை (அந்தஸ்து) செல்வவளம், சந்ததிகள், உயர் தரமான வாழ்க்கையும் அவையல்லாமல் ஏழ்மையும் மிக வறிய வாழ்க்கை நிலையும் எல்லாமே மனிதனை இவ்வுலகில் சோதிப்பதற்காக உள்ளவையே. குர்ஆன் வசனம் ஒன்று கூறுகிறது.
அவன் (அல்லாஹ்) தான் உங்களை இப்புவியின் வாரிசுகளாக ஆக்கினான். மேலும் உங்களில் சிலரை மற்றவர்களை விட தலைமையில் (அந்தஸ்தில்) உயர்த்தியும் உள்ளான். உங்களுக்கு அருளப்பட்டவை மூலம் உங்களைச் சோதிக்கின்றான். உங்கள் இறைவன் தண்டிப்பதில் மிகத் தீவிரமானவன். அவன் பிழை பொருப்பவனும் பேரருள் உடையவனும் ஆவான். அல்குர்ஆன் 6:165
வாழ்வும் மரணமும் மனிதனைச் சோதிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவையே என்பதை கீழ்வரும் வசனம் கூறுகிறது.
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். அல்குர்ஆன் 67:2
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 21:35
மனிதனுக்கு வழங்கப்படும் நன்மைகளும் ஆதரவுகளும் அதனைப் போலவே அவனிடமிருந்து பறிக்கப்படுபவையும் மனிதனைச் சோதனைக்குள்ளாக்குபவற்றில் உட்படுபவையே.
அவனைச் சோதனைக்குள்ளாக்கி அவனுக்கு அருள் புரிந்து அவனை இறைவன் மேம்படுத்தினால் மனிதன் என்னுடைய இறைவன் என்னை மகிமைப்படுத்தி விட்டான் என்று கூறுகிறான். ஆனால் அவனுடைய செல்வத்தைக் குறைத்து அவனைச் சோதித்ததால் என் இறைவன் என்னை இழிவுபடுத்திவிட்டான் என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 89: 15.16
மறுமையே மனிதனுக்கு யதார்த்தமான வீடு (தங்குமிடம்) ஆகும் எனக் குர்ஆன் அறிவுறுத்துகிறது.
புலனுணர்வுகளுக்கு அப்பாற்பட்ட எதையுமே உணர்ந்துகொள்ளும் ஆற்றலற்றவன் மனிதன், எதிர்காலம், இவ்விதம் மனிதன் உணர்ந்து கொள்ள முடியாதவற்றுள் ஒன்று. அடுத்த சில வினாடிகளில் என்ன நேரும் என்று யாருமே அறிய முடியாது. இத்தகைய வரையறைக்குட்பட்ட புலனுணர்வுடைய மக்கள் எல்லாக் காலங்களிலும் வருங்கால நிகழ்வுகள் பற்றி அறிய ஆர்வமுடையவர்களாக இருக்கின்றார்கள்; குறிப்பாக மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை பற்றி அறிய மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்.
மனிதர்கள் ஆர்வமுடன் அறிய விரும்புபவை ஆகிய இந்தப் பிரபஞ்சம், மானிட வர்க்கம், இறப்பு, நீதித் தீர்ப்பு நாள், நரகம், சுவர்க்கம், வருங்காலம் கடந்த காலம் மற்றும் மறுமை ஆகியவற்றிற்கெல்லாம் காரணகர்த்தாவாகிய அல்லாஹ் ஒருவனே அறிவிக்க வல்லவன். இந்தப் பிரபஞ்சத்தையும் உயிரினங்கள் அனைத்தையும் அல்லாஹ் “ஒன்றுமில்லாமை”யிலிருந்தே படைத்தான்; இன்னும் ஒவ்வொரு கணமும் படைத்துக்கொண்டே இருக்கின்றான். இப்பிரபஞ்சத்தில் ஓர் அம்சமாக விளங்கும் காலத்தையும் அல்லாஹ்வே திட்டமிட்டு வகுத்துள்ளான். காலத்திற்கு எல்லா படைப்பினங்களும் கட்டுப்பட்டாக வேண்டும். அல்லாஹ்வோ காலத்திற்கு கட்டுப்பட்டவன் அல்லன். காலததிற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டவன் அல்லாஹ். காலத்தின் கட்டுப்பாடின்றியே அல்லாஹ் யாவற்றையும் பரிமாணத்தோடு படைத்தான். நாம் கடந்தவை என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை என்றும் கருதும் யாவற்றையும் முழுமையாக அறிந்த நிலையில் ஒரு நொடியில் படைத்தான்.
நம்முடைய புலனுக்கு எட்டாத பிற்காலம் உட்பட யாவுமே “மறையானவை” என்று குறிப்பிடப்படுகின்றன. “மறுமை”யும் கூட மனிதர்கள் இம்மையில் வாழும் காலம் வரை ‘மறைவான’வற்றில் ஒர் அம்சமாகவே விளங்கும். “மறுமையை” பற்றிக் குறிப்பிடும் குர்ஆன் அதைப் பற்றிய விவரங்களைத் தருகின்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் தத்துவ ஞானிகள் பல்வேறு கலாச்சாரங்களில் காணப்படுகின்ற மூட நம்பிக்கைகளோடு இணைந்து, மறுமையைப் பற்றி பல அனுமானங்களைக் கூறுகின்றனர். இவ்வுலக வாழ்க்கையில் பற்றும் சொத்தும் செல்வமும் குவிப்பதில் ஆர்வமும், மக்களை உலகில் வசதி வாய்ப்புகளை அடையும் முயற்சியில் நின்றும் விடுபட விடுவதில்லை. தொல்லைகளும் இடர்ப்பாடுகளும் எதிர்படும் போது ஏமாற்றமடைந்து நம்பிக்கை இழப்பார்கள். இத்தகைய மன நிலையை குர்ஆன் கீழ் வருமாறு வர்ணிக்கிறது.
“நம்முடைய அருட்கொடையை மனிதன் நுகரச் செய்து அதன்பின் அதனை அவனிடமிருந்து பறிக்கப்பட்டால் அவன் நம்பிக்கை இழந்து நன்றி கெட்டவனாக ஆகிவிடுகின்றான். அவன் அனுபவித்த இடர்ப்பாடுகளை நீக்கி நம்முடைய அருட்கொடைகளை நுகரச் செய்தால் “என்னுடைய துன்பங்கள் நீங்கிவிட்டன” எனக் கூறி பெரும் மகிழ்ச்சியடைந்து பெருமை பாராட்டுகிறான். அல்குர்ஆன் 11:9,10
எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அனைத்து நிகழ்வுகளையும் குர்ஆனின் நெறிமுறைக்கு உகந்து விளங்கி, இறையுணர்வு நீங்காமல் மறுமையின் நினைவு மாறாமல் மனிதனின் நிரந்தர வீடாகிய மறுமையை அடையும் நோக்கோடு இறை நம்பிக்கையாளன் நிலை தவறாமல் முயலுகின்றான். “இவ்வுலகில் ஓர் அந்நியனைப் போல் அல்லது ஒரு பிரயாணியைப் போல் வாழ்வீராக” எனும் நபி மொழி (அல்புகாரி)க்கு ஏற்ப இவ்வுலக வாழ்க்கையை நிரந்தரமானது என்றும் நம்பி வாழ்வான். எனவேதான் இறை நம்பிக்கையாளர்கள் ஏராளமான நன்மைகளும் பேறுகளும் கிட்டும் போது வழி பிறழுவதுமில்லை; அவற்றை இழக்க நேரும்போது ஊக்கம் இழந்து சோர்வடைவதும் இல்லை. பேறுகளும் நன்மைகளும் அவை போன்று இழப்புகளும் எல்லாம் சோதனையே எனும் உண்மையை உணர்ந்தவர்களாக இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ் விரும்பும் நேரும் நிகழ்வுகளை எல்லாம் கீழ்வரும் இறை வசனத்தை நினைவு கூர்ந்து ஏற்றுக் கொள்வார்கள்.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும். நன்மையும் தீமையும் அனுபவிக்கும் நிலைக்கு உள்ளாக்கி நாம் உங்களைச் சோதிப்போம். நீங்கள் நம்மிடமே மீள்வீர்கள். அல்குர்ஆன் 21:35
இதனை உணரும்போது, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெரும் கருணை குர்ஆன் மூலம் வெளிப்படுவதைத் தெளிவாக மனிதன் அறிந்து கொள்கிறான். குர்ஆனின் மூலமே மறுமையைப் பற்றிய மிகச் சரியான உண்மைகளை இறை நம்பிக்கையாளர்கள் அறிந்து கொள்கிறார்கள். உண்மையான மார்க்கமே மறுமையைப் பற்றிய யதார்த்தங்களை அறிவிக்கவல்லது.
உண்மையான மார்க்கமே மனிதனுக்கு இவ்வுலக வாழ்க்கையின் நிலையற்ற தற்காலிக நிலையையும், நிரந்தரமான மறுமை வாழ்க்கையையும் பற்றி அறிவிக்கிறது. மனிதனின் நற்செயல்களுக்கும் தீயச் செயல்களுக்கு ஏற்ப கூலி வழங்கப்படும் ஒரு நாளைப் பற்றிக் குர்ஆனில் அறிவிக்கப்பட்டுள்ளது. மரணவேளை, நீதித் தீர்ப்பு நாள், சுவர்க்கம் மற்றும் நரகம் பற்றிய தகவல் தரும் தனிச் சிறப்பு வாய்ந்த ஒரே மூலம் குர்ஆனே ஆகும். இறைவனின் இறுதி வெளிப்பாடாகிய குர்ஆன் பல வசனங்களில் மனிதனின் நிரந்தர வீடு மறுமையே என அறிவிக்கின்றது. அவற்றுள் ஒன்று:
உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? அல்குர்ஆன் 6:32
இந்த இறைவசனத்தில் இந்தச் சோதனை வாழ்க்கையை விளங்கிக் கொள்ள முடியாத உணர்வற்ற ஒரு மனிதனின் மனப்போக்குத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இறை நம்பிக்கையாளர்கள் இத்தகைய உணர்வற்ற மனப்போக்கைப் பற்றி எச்சரிக்கப்படுவதோடு, அவர்களின் இம்மை வாழ்க்கையின் யதார்த்த நோக்கத்தைக் குறித்துத் திரும்பத் திரும்ப நினைவூட்டப்படுகிறார்கள்.
அவர்களில் சிலருக்கு இன்பமனுபவிக்க நாம் கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதீர்; (இவையெல்லாம்) அவர்களைச் சோதிப்பதற்காகவே நாம் கொடுத்துள்ள உலக வாழ்க்கையின் அலங்காரங்களாகும். உமது இறைவன் (மறுமையில் உமக்கு) வழங்கவிருப்பது சிறந்ததும் நிலையானதும் ஆகும். அல்குர்ஆன் 20:131
ஆனாலும் இவ்வுண்மைகளை ஊன்றிக் கவனித்து உணர முடியாதவர்கள் இந்த உலக வாழ்க்கையில் வசதி வாய்ப்புகளில் மயங்கி விடுகின்றனர்.

July 10, 2009

துவாவுடைய ஒழுக்கங்கள்

1.அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதற்குமுன்
1. பிரார்த்தனை செய்வதற்கு முன் அல்லாஹ்ப் போற்றிப் புகழவேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறவேண்டும். அது ஏனெனில், நிச்சயமாக நீர் அல்லாஹ்விடம் அவனுடைய அருட்கொடைகளை, கருணைகளை, பாவமன்னிப்பை கேட்கப்போகிறீர். எனவே, அல்லாஹ்வுடைய தகுதிக்கேற்றவாறு எதிலே புகழ்வார்த்தையும், மேன்மைப்படுத்திப் பேசுதலும் இருக்குமோ அத்தகைய ஒரு முன்னுரையை நீர் முதலில் அவனுக்காக முற்படுத்துவதே இவ்விடத்தில் பொருத்தமான ஒரு செயலாக இருக்கும்.

இதற்குச் சான்றாக பின்வரும் நபிமொழியைப் பாருங்கள்!

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்ந்திருந்தபோது, ஓர் ஆடவர் அந்நேரம் வந்தார். தொழுது முடித்தார். பின்னர், யாஅல்லாஹ்! எனக்கு நீ பாவம் பொருத்தருள்வாயாக! எனக்கு நீ அருள் செய்திடுவாயாக! என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தொழுது முடித்தவரே! நீர் அவசரப்பட்டுவிட்டீர்! நீர் தொழுது முடித்தால் அல்லாஹ் அவனுக்குத் தகுந்தவைகளைக் கொண்டு புகழ்வீராக! பின்னர் என்மீது ஸலவாத்துக் கூறுவீராக! பின்னர் அவனிடம் பிரார்த்திப்பீராக!

அறிவிப்பாளர் கூறுகிறார்:

பின்னர் அவரை அடுத்து ஒரு ஆடவர் தொழுது முடித்தார். அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்தைக் கூறினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவரிடம், தொழுது முடித்தவரே! துஆச் செய்வீராக! (ஒரு சமயம் உம்முடைய துஆ அங்கீகரிக்கப்பட்டு) நீர் பதிலளிக்கப்படலாம் என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: ஃபுளாலத் பின் உபைத் ரளியல்லா அன்ஹு, நூல்: திர்மிதீ

2. அல்லாஹ்ப்பற்றி நல்லெண்ணம் கொள்ளுதல்

உயர்வானவனாகிய அல்லாஹ்,
(البقرة ) وَإِذا سَأَلَكَ عِبَادِيْ عَنِّي فَإِنِّيْ قَرِيْبٌ أُجِيْبُ دّعْوَةَ الدَّاعِى إِذَا دَعَانِ

மேலும் , (நபியே!) என்னுடைய அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால், நிச்சயமாக நான் சமீபத்தில் இருக்கிறேன் (என கூறுவீராக!). அழைப்பாளனின் அழைப்பிற்கு அவன் என்னை அழைக்கும்போது நான் பதிலளிக்கிறேன் என்று கூறினான். (அல்பகறா:186)

எனவே, அல்லாஹ் நம்மிலிருந்து மிகச் சமீபமாக இருக்கிறான். அவனுடைய அறிவு, எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் அவன் சூழ்ந்து அறிதல், அவனுடைய பாதுகாப்பு ஆகியவற்றால் அவன் நம்மோடு இருக்கிறான் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கவேண்டும்

திட்டமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், துஆவை ஏற்றுக்கொள்ளுதல் என்ற விஷயத்தை அல்லாஹ்விடம் நாம் ஒப்படைத்து விடவேண்டும் எனவும், நாம் துஆச் செய்து கேட்ட நம்முடைய எண்ணம் நிறைவேறும் என்பதில் நாம் உறுதியாக இருக்கவேண்டும் எனவும் நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.

அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

(உங்களுடைய பிரார்த்தனை அல்லாஹ்வால்) ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை உறுதி கொண்டவர்களாக அல்லாஹ் அழைத்துப் பிரார்த்தனை புரியுங்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ

நிச்சயமாக அல்லாஹ், அவனுடைய விசாலமான தயாளத்தனத்தாலும், பேருபகாரத்தின் சிறப்பாலும் உங்களை எப்போது பிரார்த்தனைச் செய்பவரிடமிருந்து பேராதரவும் பிரார்த்தனையில் தூய்மையான எண்ணமும் ஏற்பட்டுவிடுமோ வெறுங்கையோடு திருப்பமாட்டான் என்பதை உறுதியாக நம்பிக்கைக் கொள்ளுங்கள். ஏனெனில், பிரார்த்தனை புரிபவர் (அல்லாஹ் நமது துஆவை ஏற்பான் என்ற) அவருடைய பேராதரவில் உறுதிகொண்டவராக இல்லையென்றால் அவருடைய துஆவும் தூய்மையானதாக அமையாது.

3. நமது பாவங்களை ஒப்புவித்தல்

இந்தச் செயலே அல்லாஹ்வுக்குரிய நமது அடிமைத்தனத்தை நிரூபணம் செய்வதில் முழுமையானதாகும்.
அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் உன்னையன்றி வேறு (யாரும், எதுவும்) இல்லை. நிச்சயமாக நான் எனக்கே அநீதி இழைத்துவிட்டேன். எனவே, என் பாவங்களை எனக்கு நீ பொருத்தருள்வாயாக! என்று ஒரு அடியான் கூறும்போது, அவனைப்பற்றி பெருமிதங்கொள்கிறான். என்னுடைய அடியான் நிச்சயமாக அவனுக்கு ஒரு இரட்சகன் இருக்கிறான், அவன்தான் பாவங்களை பொருத்தருள்வான். (பாவிகளுக்கு) தண்டனை வழங்கிடுவான் என்பதை அறிந்து கொண்டான் என்று (அல்லாஹ் வாகிய) அவன் கூறுகிறான். அறிவிப்பாளர்: அலீ பின் அபீதாலிப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்:ஹாகிம்

4. கேட்பதில் உறுதி

உங்களில் ஒருவர் பிரார்த்தனைச் செய்யும்போது கேட்பதை உறுதியாகக் கேட்கட்டும். யாஅல்லாஹ்! நீ நாடினால் கொடு என திண்ணமாக அவர் சொல்லவேண்டாம். ஏனெனில், அவனை நிர்ப்பந்திக்கச் செய்பவர் யாரும் இல்லை என அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்:புகாரீ, முஸ்லிம்

கேட்பதில் உறுதி என்பதன் நோக்கமாவது, தேடிப் பெறுவதில் நிரந்தரமாக நிலைத்து சளைக்காமல் பிடிவாதமாக மன்றாடிக் கேட்பது, அல்லாஹ்விடம் மிகக் கடுமையாக தெண்டித்துக் கேட்குதலைக் குறிப்பதாகும்.

5. பிரார்த்தனையில் கடுமை

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்குரிய ஒரு போர்வை திருடப்பட்டுவிட்டது. அதைத் திருடியவருக்கெதிராக துஆச் செய்பவர்களாக இருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், (திருடியதால் அவருக்குண்டான பாவத்தை அவருக்குக் கேட்பதில்) அவர் விஷயத்தில் மென்மையைக் கையாளவேண்டாம் என்று கூறினார்கள். (நூல்:அபூதாவூது)

6. ஒன்றை மூன்று முறை கேட்டு துஆச் செய்தல்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தமது தொழுகையை முடித்துக் கொண்ட போது, தனது தொணியை உயர்த்தி பின்னர் (பகைவர்களான) அவர்களுக்குக் கேடாக பிரார்த் தனை செய்தார்கள். அவர்கள் எதையும் பிரார்த்தனைச் செய்பவர்களாக இருந்தால் மூன்று முறை துஆச் செய்வார்கள். யாஅல்லாஹ்! குரைஷியரை நீ பிடித்துக்கொள்! யாஅல்லாஹ்! குரைஷியரை நீ பிடித்துக்கொள்! யாஅல்லாஹ்! குரைஷியரை நீ பிடித்துக்கொள்! என பின்னர் கூறினார்கள் என்று இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடைய அறிவிப்பில் முஸ்லிமில் வந்துள்ள நீளமான ஹதீஸில் நபிவழியில் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

7. 'ஜவாமிஉ' (சுருக்கமான வார்த்தையில் விசாலமான அர்த்தங்களைக் கொண்டுள்ள) துஆக்களைக் கூறி பிரார்த்தனைப் புரிதல்

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆக்களில் நிறைய பொருளை தரும் சுருக்கமான வார்த்தைகளை விரும்புபவர்களாகவும் அதுவல்லாத வார்த்தைகளை கூறாது விட்டு விடுபவர்களாகவும் இருந்தனர். நூல்: ஸன்னன் அபீதாவூது, அஹ்மது

இதுமாதிரியான பிரார்த்தனைகளில் உள்ளதே ஃபர்வா பின் நவ்ஃபல் அவர்கள் அறிவிப்பில் வந்துள்ள ஒன்று.

நான் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதைக்கொண்டு துஆச் செய்பவர்களாக இருந்தார்களோ அப்படியான ஒரு துஆவைப்பற்றி நான் கேட்டேன்.

اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا عمِلْتُ وَشَرِّ مَالَمْ أَعْمَلْ

அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக மின் ஷர்ரி மா அமில்த்து, வ ஷர்ரி மாலம் அஃமல் என்று துஆச்செய்பவர்களாக இருந்தார்கள் என்று கூறினார்கள். (பொருள்: யாஅல்லாஹ்! நான் செய்து விட்டவற்றின் தீங்கிலிருந்தும் மற்றும் நான் செய் யாதவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் காவல் தேடுகிறேன்) நூல்: முஸ்லிம், அபூதாவூது


اَللَّهُمَّ اغْفِرْ لِيْ خَطِيئَتِيْ وَجَهْلِيْ وَإِسْرَافِيْ فِي أِمْرِيْ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ اَللَّهُمَّ اغْفِرْ لِيْ جِدِّيْ وَهَزْلِيْ وَخَطَئِيْ وَعَمْدِيْ وَكُلُّ ذَلِكَ عِنْدِيْ ، اَللَّهُمَّ اغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ وَ أَنْتَ عَلى كُلِّ شَيئٍ قَدِيْرٌ
அல்லாஹும்மக் ஃபிர்லீ கதீஅதீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபீ ஃபீ அம்ரீ, வமா அன்த்த அஃலமு பி?ி மின்னீ, அல்லாஹும்மக் ஃபிர்லீ ஜித்தீ வ?ஜ்லீ, வ கதஈ, வ அம்தீ, வ குல்லு தாலிக இன்தீ, அல்லாஹும்மக் ஃபிர்லீ மா கத்தம்த்து, வமா அக்கர்த்து, வமா அஸ்ரர்த்து, வமா அஃலன்த்து, வமா அன்த்த அஃலமு பிஹி மின்னீ அன்த்தல் முகத்திமு, வஅன்த்தல் முஅக்கிரு, வ அன்த்த அலா குல்லி ஷையின் கதீர் என இந்த துஆவைக் கூறி பிரார்த்தனை புரிபவர்களாக நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்தார்கள் என அபூமூஸப் அல் அஷ்அரீ - ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்லிம்

(பொருள்: யாஅல்லாஹ்! என்னுடைய தவறை, எனது அறியாமையை, எனது காரியத்தில் வீண்விரயத்தை, என்னைவிட நீ அறிந்திருக்கும் ஒன்றை எனக்கு நீ பொருத்தருள்வாயாக!

யாஅல்லாஹ்! என்னுடைய முயற்சி(யால் ஏற்பட்டதை), என்னுடைய சோர்வு, என்னுடைய தவறு, வேண்டுமென்றே தெரிந்து என்னால் செய்யப்பட்டது, என்னிடமுள்ள அவை ஒவ்வொன் றையும் நீ எனக்கு பொருத்தருள்வாயாக!

யாஅல்லாஹ்! நான் முற்படுத்தியவற்றை, நான் பிற்படுத்தியவற்றை, நான் மறைத்தவற்றை, நான் பகிரங்கப்படுத்தியவற்றை, நான் விரயம் செய்தவற்றை, என்னை விட நீ எதை மிக அறிந்திருக்கின் றாயோ அந்த ஒன்றை நீ எனக்கு பொருத்தருள்வாயாக! நீதான் (நன்மைகளைச் செய்ய) முற்படுத்தி வைப்பவன், நீயே (தீயவற்றைச் செய்யாது காத்து) பிற்படுத்திவைப்பவன், நீயே ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுள்ளவன்.)

8. பிரார்த்தனை புரிபவர் தனக்காக முதலில் கேட்பார்
உயர்வானவனின் கூற்றில் வந்துள்ளவற்றைப் போன்று
:-رَبَّـنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُونَا
بِالْإِيْمَانِ

எங்களுடைய இரட்சகனே! எங்களுக்கும், ஈமான் கொண்டு எங்களை முந்திவிட்டார்களே அத்தகையோரான எங்களுடைய சகோதரர்களுக்கும் நீ பொருத்தருள்வாயாக! அல்ஹஷ்ரு: 10

இன்னும் அவனுடைய கூற்று:
-قَالَ رَبِّ اغْفِرْ لِيْ وَلِأَخِيْ وَأَدْخِلْنَا فِيْ رَحْمَتِكَ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِيْنَ

எனது இரட்சகா! எனக்கும் என்னுடைய சகோதரருக்கும் நீ பொருத்தருள்வாயாக! மேலும், எங்களை உன்னுடைய ரஹ்மத்தில் நுழைவிக்கச் செய்திடுவாயாக! என்று (நபி மூஸப்) அவர்கள் கூறினார்கள். அல் அஃராஃப்:151

இன்னும், அவனுடைய கூற்று:

- رَبَّنَا اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ

எங்கள் இரட்சகா! எனக்கும், என்னுடைய பெற்றோர்களுக்கும், விசுவாசிகளுக்கும் கேள்வி கணக்கு நிலைபெறும் நாளில் பொருத்தருள்வாயாக! இப்றாஹீீம்:41

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யாரை யாவது நினைவுகூர்ந்து, அவருக்காக பிரார்த்தனை புரிவார்களானால் தனக்காக அதை முதலில் கேட்டு ஆரம்பிப்பார்கள். (திர்மிதீ)

எனினும், இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கட்டாயமான வழக்கமாக இருந்ததில்லை. ஏனெனில், சில சமயங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடுத்தவருக்கு துஆச் செய்து கேட்டதை தனக்கு கேட்காமல் துஆச் செய்திருப்பதும் சரியான வழியில் வந்துள்ளது (நபி இப்றாஹீீம் அவர்களின் துணைவியர்) ஹாஜர் விஷயத்தில், 'இஸ்மாயீலின் தாயாருக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக! ஜம்ஜம் (நில்நில்)என்று சொல்வதை விட்டிருப்பார்களானால் (ஜம்ஜம் ஊற்றான) அது பெருக்கெடுத்து ஓடிவிடும் ஒரு பெரும் ஊற்றாக ஆகியிருக்கும் என்று கூறியது போன்று!

9. துஆச் செய்ய விரும்பத்தக்க நேரங்களில் துஆச் செய்ய முயற்சிப்பது
அவ்வாறான நேரங்களில் உள்ளதே நடு இரவு, பாங்கு மற்றும் இகாமத்துக்கு இடையேயான நேரம், ஸஜ்தாவில், (போருக்கு) அழைக்குமிடத்தில், போர் சமயத்தில், ஜும்ஆ தினத்தின் அசருக்குப்பின், அரஃபா நாள், மழை பொழியும் நேரம், ரமளானின் கடைசி பத்து நாட்கள்.

பரிட்சை வாழ்க்கை

இவ்வுலக வாழ்க்கைக்கு இன்றியமையாதது பொருளாதாரம். "அருளில்லார்க்கு அவ்வுலகில்லை, பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை" என்ற முதுமொழி இதை உணர்த்தும் படைத்த இறைவன் மனிதனுக்கென்று அருளிய அருள் மார்க்கம் இவ்வுலகில் மனிதனுக்குரிய பங்கையும் தெளிவுபடுத்தி கூறியுள்ளது. மறுஉலக பேருகளை இவ்வுலகிலேயே உழைத்துப்பெற வேண்டும் என்று விதித்திருக்கிறான் அல்லாஹ். உலக இன்பங்களை துறந்து காடு சென்று கடுந்தவம் செய்வது கொண்டே 'முக்தி' பெறமுடியும் என்ற கட்டாய விதியை இறைவன் விதிக்கவில்லை.

இவ்வுலக இன்பங்களை வரையறைக்குட்பட்டு முறையாக அனுபவித்துக்கொண்டே மறுமைப் பேறுகளையும் பெறும் வழியை இஸ்லாம் போதிக்கிறது. மறு உலகப் பேறுகளை நிறைவாகப் பெறுவதற்கு முறையான வழிகாட்டுதலையும் தெளிவாகத் தருகிறது இஸ்லாமிய மார்க்கம். இரண்டும் பின்னிப் பிணைந்த ஓர் உன்னத நிலையைத்தான் இஸ்லாம் போதிக்கிறது.

ஆனால் ஷைத்தான் அதற்கு மாறாக ஒன்று இவ்வுலக பேறுகளையே சதமாகக்கொண்டு மறு உலகத்திற்கு வேண்டிய சாதனங்களைத் தேடுவதில் குறை செய்யவைக்கிறான். அல்லது மறுஉலகப் பேறுகளைத் தேடுவதையே முழுக் குறிக்கோளாகக் கொண்டிருப்பது போன்ற மயக்கத்தை உண்டாக்குகிறான். அல்லாஹ் விதிக்காததை (துறவறம்) மனிதர்களாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவைக்கிறான். அதையும் முழுமையாக நிறைவேற்ற முடியாமல் தோல்வியுற்று இம்மை, மறுமை இரண்டையும் நஷ்டப்படுத்தி நரகில் விழ வழி வகுக்கிறான். இப்படி ஒன்றில் இம்மையை மட்டும், அல்லது மறுமையை மட்டும் தேர்ந்தெடுத்து அதனால் தோல்வியுற்று வழிகெட்டு நரகில் விழும் கூட்டம் ஏராளம்.

ஆனால் இம்மையை வரையரைக்குட்பட்டு நிறைவாக அனுபவிக்கவும் மறுமையை நிறைவாகப் பெறவும் அழகிய வழிமுறைகளைத் தருகிறான் படைத்த இறைவன்.

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான். அல்குர்ஆன் 67:2

''நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு" அல்குர்ஆன் 8:28

ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். அல்குர்ஆன் 63:9

இவ்வளவு தெளிவாகச் சொல்லப்பட்டும் ஷைத்தான் மனிதனுக்கு பொருள் செல்வத்திலும் மக்கள் செல்வத்திலும் மயக்கத்தைக் கொடுத்து அவனை வழி தவறச் செல்கிறான். ஆனால் இந்த பொருட்செல்வமும் மக்கள் செல்வமும் மறுமையில் உதவிடப்போவதில்லை என்பதை அறுதியிட்டு உறுதியாக அல்லாஹ் இறைவாக்குகளில் கடுமையாக எச்சரிக்கிறான்.

''அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா. "அல்குர்ஆன் 63:9

இன்னும் உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ உங்களை நம்மளவில் நெருங்கி வைக்க கூடியவர்கள் அல்லர். ஆனால் எவர் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அத்தகையோர்க்கு, அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பு நற்கூலி உண்டு; மேலும் அவர்கள் (சவனபதியின்) உன்னதமான மாளிகைகளில் நிம்மதியுடன் இருப்பார்கள். அல்குர்ஆன் 34:37 அன்புச் சகோதர சகோதரிகளே! இறைவனின் கடுமையான எச்சரிக்கைக்குப் பின்னும் பொருட்செல்வத்திலும் மக்கட் செல்வத்திலும் வரம்பு மீறி பேராசை கொண்டிருப்பவர்கள் அவை காரணமாக தங்கள் ஐங்கால தொழுகைகளை மற்றும் அமல்களை வீணாக்கிக் கொண்டிருப்பவர்கள் ஜகாத்தை முறைப்படி கணக்கிட்டுக் கொடுக்காமல் சேமித்து வைப்பவர்கள் நிச்சயமாகத் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படவேண்டும். ஜகாத்தை முறைப்படி கணக்கிட்டு உரியவர்களுக்கு சேர்க்காதவர்கள் படிப்பினை பெறாதவர்கள் பரிதாபத்திற்குரியவர்களே.

இன்றைய நமது முஸ்லிம் சமுதாயத்தின் பெரும் செல்வந்தர்களெல்லாம் அல்லாஹ்வின் இந்த எச்சரிக்கைகளை மறந்து பொருளைத் தேடுவதையே தங்களின் முழு நேரப் பணியாகக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தங்கள் தொழுகை மற்றும் நல்ல அமல்களை அனைத்தும் காணாமல் போய்விடுகின்றன.

பல லட்சங்கள் சேர்ந்தால் அதை கோடியாகவும் கோடிகள் சேர்ந்தால் அதை பல நூறு கோடிகளாக்கவும் கங்கணம் கட்டிக்கொண்டு இரவு பகல் பாராது அயராது பாடுபடுகிறார்களேயல்லாமல் அசலான மறுமையை மறந்து விடுகிறார்கள். என்றும் இவ்வுலகிலேயே நிலைத்திருப்பதுபோல் தப்புக்கணக்கு போடுகிறார்கள். இவர்கள் எத்தனை ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருந்தாலும் இவர்கள் அனுபவிப்பது என்னவோ மிகமிகக் குறைவுதான். ஒரு சாதாரண நடுத்தர மனிதன் சாப்பிடுவது, குடிப்பது சுகிப்பது போன்றவற்றைக்கூட இவர்கள் அனுபவிக்க முடியாமல் இவர்களை அல்லாஹ் ஆக்கிவிடுகிறான். முறைப்படி இவ்வுல இன்பங்களை அனுபவிப்பதையும் இழந்து விடுகிறார்கள். மறுமை பேறுகளையும் தங்களின் செயல்களினால் இழந்து விடுகிறார்கள்.

சாதாரன அறிவு படைத்த ஒரு மனிதனாலும் இப்படிப்பட்ட ஏமாளியாக இருக்க முடியுமா? ஆனால் ஷைத்தான் சொத்துக்கள் மீதும், பிள்ளைகள் மீதும் பேராசையை உண்டாக்கி இவ்வாறு செயல்பட வைக்கிறான். உண்மையில் இவர்களுடையது என்று சொல்லிக் கொண்டிருக்கும் சொத்துக்கள் இவர்களுடையது அல்ல. அவற்றிற்குரிய 'ஜகாத்' ஆக, அதற்கு மேலும் சதக்காவாக இவர்கள் வாரி வழங்கிச் செல்வதே இவர்களின் சொத்தாக மறுமையில் பலன் தரும் என்பதை புரிந்து செயல்படுவார்களா? ஷைத்தானின் மாயையை விட்டு விடுபடுபவார்களா? அல்லாஹ்வே மிக அறிந்தவன்.