August 29, 2009

ரமழான் நோன்பின் சிறப்புக்கள்

ரமழானில் அல்லாஹ்வுக்காக, அவனது கூலியை நாடி, உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன: அவ்விரவுகளில் தொழுதவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம்மாதத்தின் சிறப்பான "லைலத்துல் கத்ர்" இரவை பெற்றவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) நவின்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்

நோன்பாளி செய்யக் கூடாதவை
எவன் பொய்யான சொற்களையும், தீய நடத்தையையும், விடவில்லையோ அவன் உண்ணாமல் பருகாமலிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி

நீங்கள் நோன்பு வைத்திருக்கையில் கெட்டப் பேச்சுக்கள் பேசுவதோ கூச்சலிடுவதோ கூடாது. அவனை யாரேனும் ஏசினால், அல்லது அவனுடன் சண்டையிட முற்பட்டால் "நான் நோன்பாளி" என்று கூறி விடவும். நபி (ஸல்) அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி, முஸ்லிம்

நோன்பின் தற்காலிக சலுகைகள்
நீங்கள் பயணத்திலோ நோய்வாய்ப் பட்டவர்களாகவோ இருந்தால் வேறொரு நாளில் அதனை நோற்கவேண்டும். (அல்குர்ஆன்: 2:185)

எங்களுக்கு மாதவிடாய் ஏற்படுகையில் (விடுபட்ட) நோன்பை வேறு நாட்களில் நோற்கும்படியும், அதே காலத்தில் விடுபட்ட தொழுகையை வேறு நாட்களில் நிறைவேற்ற கூடாது என்றும் உத்திரவிடப் பட்டிருந்தது. அறிவிப்பவர்: அன்னை ஆயிஸா (ரழி) நூல்:முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் இருக்கும்போது நோன்பு நோற்க எனக்கு சக்தி உள்ளது. அப்போது நோன்பு நோற்பது என்மீது குற்றமாகுமா? என்று நான் கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் இது அல்லாஹ் வழங்கிய சலுகையாகும். எவன் இந்தச் சலுகையைப் பயன்படுத்துகின்றானோ, அது நல்லது தான். நோன்பு நோற்க எவரேனும் விரும்பினால் அதில் குற்றம் ஏதும் இல்லை. அறிவிப்பவர்: ஹம்ஸா இப்னு அம்ரு(ரழி) நூல்:முஸ்லிம்

நேன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவை
நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது பலமுறை பல் துலக்கிக் கொண்டிருக்க நான் கண்டுள்ளேன். அறிவிப்பவர்: ஆபிர் இப்னு ரபிஆ (ரழி) நூல்:அபூதாவூது, திர்மிதீ

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது தாகத்தின் காரணமாகவோ, அல்லது கடும் வெப்பத் தினாலோ தங்கள் தலைமீது தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்ததை அர்ஜ் என்ற இடத்தில் வைத்து நான் பார்த்தேன். அறிவிப்பவர்:மாலிக் (ரழி) நூல்:அபூதாவூது

நோன்பு நோற்றிருப்பவர் தான் நோன்பாளி என்பதை மறந்த நிலையில் உண்ணவோ பருகவோ செய்து விட்டால் (நோன்பு முறிந்து விட்டது என்று எண்ண வேண்டாம்) மாறாக அந்த நோன்பையே முழுமைப் படுத்தட்டும், ஏனெனில் அவனை அல்லாஹ் உண்ணவும், பருகவும் செய்திருக்கின்றான். நபி (ஸல்) அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்:புகாரி, முஸ்லிம்

சஹர் செய்தல்
நீங்கள் சஹர் செய்யுங்கள்: ஏனெனில் அதில்(அபிவிருத்தி) பரகத் உண்டு. நபி(ஸல்) அறிவிப்பவர்: அனஸ் (ரழி) புகாரி, முஸ்லிம் ஒரு ரமழானில் சஹர் உண்ண என்னை நபி (ஸல்) அவர்கள் அழைத்தனர். பரகத் நிறைந்த உணவு உண்ண வாரும் என்று அப்போது கூறினர். நூல்:அபூதாவுது,நஸ்யீ

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சஹர் உணவு உண்டோம்: அதன் பிறகு பஜ்ரு தொழுகைக்கு நின்றோம். ஸஹர் உணவு உண்டதற்கும் பஜ்ரு தொழுகைக்கும் இடையில் எவ்வளவு நேரமிருந்தது என நான் வினவினேன். அதற்கு அவர் திருக்குர்ஆனின் ஜம்பது வசனங்கள் ஓதுகின்ற அளவு இடைவெளி இருந்தது என விடை பகர்ந்தார்கள். அறிவிப்பவர்: ஜைது பின் தாபித் (ரழி) நூல்: புகாரீ,முஸ்லிம்

நோன்பு திறப்பது
அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். நோன்பு திறப்பதில் காலதாமதம் செய்யாத வர்கள் தான் எனக்கு விருப்பமான அடியார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) நூல்: அபூதாவூத், இப்னுமாஜ்ஜா நீங்கள் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தின் மூலம் நோன்பு திறங்கள்! அது கிடைக்காவிட்டால் தண்ணீர் மூலம் நோன்பு திறங்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரழி) நூல்:திர்மிதீ, அபூதாவூது

August 21, 2009

ரமழானே வருக...! ரஹ்மத்தைத் தருக...!!

அல்லாஹ்வின் அருள்மழை பொழியும் அற்புதத் திங்கள்!

ஆவலுடன் எதிர்பார்த்த அடியார்களின் ஆசை மாதம்!

இறைவனுடன் இணக்கத்தை ஏற்படுத்தும் இணையில்லா மாதம்!

ஈகையை ஈந்துவக்கும் ஈடில்லாதவனின் இனிமை மாதம்!

உயர் பண்புகளை உருவாக்கும் உன்னத மாதம்!

ஊண், உறக்கம் துறந்து உயர்வான குணங்களை உள்ளத்தில் கொண்டுவரும் மாதம்!
எத்தகைய இடர்பாடுகள் ஏற்படினும் பொறுமையை கற்றுத்தரும் மாதம்!

ஏழ்மையை விரட்டும் ஏந்தல்களின் ஏற்றமிகு மாதம்!

ஐயங்கள் நீங்கி படைத்தவனிடம் ஐக்கியமாகும் மாதம்!

ஒற்றுமையை ஒலி(ளி)க்கும் ஒப்பற்ற மாதம்!

ஓரிறைக் கொள்கையை உலகெங்கும் ஓதிய மாதம்...

நம்மை நோக்கி தன் ஒளிக்கதிர்களை பதிக்க விரைவில் வர இருக்கின்றது.

சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பக்கதிர்கள் நம்மை தாக்க வரும்போது நிழல் தேடி அலைவது போல் நம் பாவங்களை கருக வைக்கும் தீப்பிழம்பாய் ரமழான் வருகிறது.

அருள்மறையை அருளிய அருளாளனின் அன்பு மாதம் நம்மை அரவணைத்துச் செல்ல அண்மையில் வந்துகொண்டிருக்கிறது.

ஏக வல்லோன் அல்லாஹ்விடம் நெருங்க வைக்கும் மேலதிக வணக்க வழிபாடுகள் செய்ய வழிவகுக்கும் வரப்பிரசாதம் இந்த ரமழான்.

இறை நம்பிக்கைக் கொண்டோர் தம் உள்ளங்களால் எண்ணிய அனைத்து நற்செயல்களுக்கும் வழிதிறக்கும் அற்புத மாதம்.

இறைவனிடம் அருள் வேண்டும் முதல் பத்து தினங்களை உள்ளடக்கிய அருள் மாதம் அழகாக வருகின்றது.

பாவ மன்னிப்பு கோரும் நெஞ்சங்களில் பால்வார்க்கும் புண்ணிய மாதம் இரண்டாம் பத்து தினங்களுடன் புதையலாக வருகின்றது.

நரக நெருப்பின் விடுதலையை வேண்டி நிற்கும் நல்லோர்களின் நம்பிக்கை மாதம்,

சுவனத்தில் நுழைய துடிக்கும் சுந்தர நபிகளின் உம்மத்துகள் சுற்றும் சூழ காண துடிக்கும் சூப்பர் மாதம்

முத்தான மூன்றாம் பத்து தினங்களுடனே முன்னறிவிப்புடன் வருகின்றது.


உள்ளத்தால் அன்பை விதைத்து, உடலால் பணிவை வெளி கொணர்ந்து மக்களிடம் கருணையை அறுவடை செய்யும் காலம் ரமழான் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.

ஆன்மீக பயிற்சிக்கு அடிகோலும் அற்புத வாய்ப்பை அள்ளி வழங்கிடும் மாதம்!

இறைவனின் வற்றாத கருணையான ரஹ்மத்தையும், ஊற்றுக்கண்ணாக விளங்கும் பரக்கத்தையும் ஒருசேர வாரி வழங்கிடும் வள்ளல் மாதம்.

செய்த குற்றங்கள் சிறியதாயினும், பெரியதாயினும் மன்னிப்பின் வாசல் திறக்கப்பட்டு பாவிகளுக்கு பாவமன்னிப்பு பகிர்ந்திடும் படைத்தவனின் மாதம்.

நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெற நம்முடைய இருகரமேந்திய பிரார்த்தனை அவசியம், அப் பிரார்த்தனை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உடனடியாக பதிலளிக்கப்படும் பண்புள்ள மாதம்.

நாம் படைக்கப்படுவதற்கு முன்னர், மனிதனையா படைக்கப் போகிறாய்?
என்று ஆச்சரிய வினா தொடுத்த வானவர்கள் நம் செயல்களைக் கண்டு, வியந்து இறைவனிடம் பெருமை பாராட்டி பெருமிதப்படுத்தும் பேருள்ள மாதம்.

நம்மை வழிகெடுக்கும் நாசகார, தீய சக்திகளான ஷைத்தான்கள் விலங்கிடப்பட்டு கொட்டிலில் அடைக்கப்படும் காருண்ய மாதம்.இணையில்லா இறைவனின் எல்லையில்லா கூலி வழங்கப்படும் மாதம்.

நோன்பாளிகள் மட்டும்... என்ற அறிவிப்புடன் திறக்கப்பட்டுள்ள உயர்தர சுவனத்தில் நாம் நோன்பாளி என்ற பெருமையுடன் நுழைய வைக்கும் மாதம்.


சுகந்த காற்று வீசும் வசந்த கால திறப்பு போல சுவனக்காற்றை வீச வானங்கள் மற்றும் சுவனங்களின் திறப்பு விழா நடைபெறும் விழாக்கா(கோ)லம்.

கோடைகால வெப்பத்தையே தாங்க முடியாத நமக்கு நரகத்தின் கொடுமையை தாங்க முடியுமா?

அதற்கு முடிவுகட்டும் விதமாக முடிவில்லாத முன்னவன் அல்லாஹ்வின் முன்னேற்பாடு தான் இந்த ரமழான்.

ஆம்! இந்த வசந்த காலத்தில் நரகச்சூடு நம்மைத் தொட அனுமதியில்லை.

எங்கும் எப்போதும் சுகம்!

அதுதான் இறைவன் மனிதனுக்குக் கொடுத்த வரம்!!

அதற்காகத்தான் இந்த மாதத்தில் மூடப்படும் நரகம்!!!

ஓராயிரம் இரவுகள் விழித்திருந்தால்தான் ஒருசில நன்மைகளை பெற முடியும் என்ற வாழ்க்கைச் சூழலில் ஓரிரவு விழித்திருந்தாலே போதும் ஓராயிரம் இரவுகள் செய்த செயல்களுக்குண்டான நன்மைகளை சம்பாதித்துக் கொள்ளலாம் என்ற சுபச் செய்தியுடன் லைல(த்)துல் கத்ர் என்ற புதையலை தன்னுள் வைத்திருக்கும் அருள் சுரங்கம்.

வாடிய பயிரை கண்டபோது வாடுவதை விட அதற்கு தண்ணீர் வார்ப்பது மேலான செயல் என்பது போல வறியோருக்கும், எளியோருக்கும், இல்லாதோருக்கும் வாரி வழங்கி கொடைத்தன்மையையும், வள்ளல் குணத்தையும் வாஞ்சையுடன் கற்றுத்தரும் வளமிகு மாதம். நாம் மட்டும் நன்மைகள் பல செய்து, தீமைகளை விட்டும் தவிர்ந்திருந்தால் போதுமா?

பிறருக்கும் நல்லவற்றை போதிக்க வேண்டாமா? தீமையை விட்டும் தடுக்க வேண்டாமா?

அந்தப் புனிதப் பணியை வழங்கும் பயிற்சிக்களம்தான் இந்த ரமழான்.


அடுத்தவருக்கு அநீதி இழைத்தல் ஆபத்தானது என்பதை அனைவருக்கும் அறிவுறுத்தும் அழகிய மாதம்.

பிறரின் தேவைகளை அறிந்து முடிந்தளவு உதவிகள் புரிய உள்ளத்தில் உதவிப்பண்பை ஊற்றெடுக்க வைக்கும் உன்னத மாதம்.

கஸ்தூரி மணம் கமழும் மணப்பொருளை விட நோன்பாளியின் வாய் வாடை வல்லோன் விரும்பும் வாசனை என்பதை வலியுறுத்தும் வசந்த மாதம்.உலக காரியங்களில் போட்டியிட்டால் வெற்றியாளர் ஒருவரே!

மற்ற அனைவரும் தோல்வியுற்றோர் என்பது நாம் அறிந்த நியதி.

ஆனால், இம்மாதத்தில் நற்செயல்களில் போட்டியிடுவோர் அனைவரும் வெற்றியாளர்கள் என்பதும், தோல்வியில்லா வாழ்க்கையும், துவண்டு போகாத நிம்மதியும் கிடைக்கும் என்பதும் வெற்றியளிக்கும் அல்லாஹ்வின் வாக்குறுதி என்பதை உணர்த்தும் மாதம்.


வழிபாடுகள் என்ற குறைவான மூலதனம். இறைபொருத்தம் மற்றும் சுவனம் என்ற இலாபம் மட்டுமே! வேறு எந்தவித நஷ்டமும் இல்லை என்ற புதுவித வியாபார உத்தியை கற்றுக்கொடுக்கும் கல்வி மாதம்.இறுதியாக...

இறையச்சம் என்னும் தக்வாவை நம் உள்ளங்களில் உறையவைக்க உண்மையாளன் அல்லாஹ் உம்மி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் உம்மத்திற்கு வகுத்தளித்த செயல்முறை திட்டம்.


அம்மாதத்தில் நாம் செய்ய வேண்டியது நோன்பு நோற்பது மட்டும் தானா...?

இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து. நன்மைகளை எதிர்பார்த்து நோன்பு நோற்க வேண்டும்.

அதே அடிப்படையில் இரவு வணக்கங்களை நிறைவேற்ற வேண்டும்.

இவ்விரண்டு செயற்பாடுகளும் நம்முடைய முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்துவிடும்.


ஐவேளை தொழுகைகளையும் பள்ளிவாசலுக்கு சென்று கூட்டா(ஜமாஅத்தா)க நிறைவேற்ற வேண்டும்.

இது கூட்டு வாழ்க்கை முறையையும். சகோதர பாசத்தையும் பலப்படுத்த உதவி செய்யும்.தினந்தோறும் திருக்குர்ஆனை உள்ளச்சத்துடன். பொருள் விளங்கி, ஓத வேண்டிய முறையில் ஓத வேண்டும்.

இது இறைவனின் கருணையும். மன நிம்மதியும் ஏற்பட வழிவகுக்கும்.இஸ்லாமிய அறிவை கற்றுக்கொள்ள அல்லது கற்றுக்கொடுக்க முயற்சி செய்ய வேண்டும்.

இது ஈருலுக வெற்றிக்குண்டான பாதையை திறந்து வைக்கும்.இரவு வணக்கம் என்ற தராவீஹ் மற்றும் தஹஜ்ஜத் தொழுகைகளை அதிகமாக தொடர்ந்து தொழுது வர வேண்டும்.

இவை இறைவனின் நெருக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த வழிமுறையாகும்.உறவுமுறையை பேணி வாழ வேண்டும்.

இது குடும்ப சீரமைப்பிற்கும். சொந்தங்கள் சேர்ந்து வாழ்வதற்கும் சீரான வழியை காட்டும்.இல்லாருக்கும். எளியோருக்கும் முடிந்த வரை உதவிகள் புரிய வேண்டும்.

இது பிறர் மீது அன்பு செலுத்துதல் என்ற மேலான குணத்தை உள்ளத்தில் ஊற்றெடுக்க வைக்கும்
அன்பின் இஸ்லாமியச் சகோதர, சகோதரிகளே...!


தயாராகுவோம் நாம்...!

இறைவழிபாட்டில் திளைத்திருப்போம்!

இறைமறை குர்ஆனை ஓதுவதில் மூழ்கியிருப்போம்!

வீண் பேச்சுகளை தவிர்ந்திருப்போம்! வீணாணவைகளை விட்டும் ஒதுங்கியிருப்போம்!

பகல் முழுவதும் பசித்திருந்து நோன்பிருப்போம்!

இரவு முழுவதும் விழித்திருந்து இறையைத் தொழுவோம்!

புனித ரமழானில் புதையலைத் தேடிப் புறப்படுவோம்!

நாளை மறுமையில் பொன்னான வாழ்வை சென்றடைவோம்!

இங்கே நாள்தோறும் நன்மைகள் பல புரிவோம்!

ஈருலகிலும் நாயன் அல்லாஹ்வின் அருளைப் பெற முயற்சிப்போம்!

அல்குர்ஆனின் வழிமுறையில் செல்வோம்!

அல்லாஹ்வின் அளவிலா அருளைப் பெறுவோம்!

சுன்னத்தைப் பேணி சிறப்பாக வாழ்வோம்!

சுகந்தரும் சுவனத்தில் சுதந்திரமாக நுழைவோம்!

உலக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் புனித ரமழான் நல் வாழ்த்துக்கள்!

August 18, 2009

தொழுகையை விட்ட என் தோழனே...!

தொழுகையை விட்ட என் சகோதரனே!
தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருக்கும் என் நண்பனே! நீ உன் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றாய்? உன்னைப் படைத்து உணவளித்து இரட்சித்துக் கொண்டிருக்கும் உன் இறைவனுக்கு ஸுஜூது செய்யும் அவசியம் கூட இல்லாதளவுக்கு
- அவனது அருளே தேவையில்லாத அளவுக்கு நீ உன் விடயத்தில் தன்னிறைவு கண்டுவிட்டாயோ!
உனக்கு ஏற்படும் இன்னல்களில், துன்பங்களில் அவனது உதவியே தேவையில்லாதளவுக்கு நீ அவ்வளவு ஆற்றல் பெற்றுவிட்டாயோ?
அல்லது உன்னை பிடித்திருக்கின்ற கர்வமும் ஆணவமும் படைத்தவனுக்கு சிரம் சாய்க்கத் தடையாக இருக்கின்றதோ?
நீ பெற்ற பதவியும் சொத்து செல்வங்களும் படைத்தவனை நினைத்துப் பார்க்க அவகாசம் தராதிருக்கின்றனவோ?
அல்லது உன்னிடம் இருக்கின்ற ஷைத்தான் உன்னை ஆக்கிரமித்து இறைவனை மறக்கச் செய்துவிட்டானோ?
உனது மனச் சாட்சியை சாகடித்துவிட்டு உன் உள்ளத்தில் குடியேறி உன்னை வழிகெடுத்து நரகில் தள்ளத் திட்டமிட்டிருக்கின்றானோ?நன்றாகத் தெரிந்துகொள் சகோதரனே!
நீ இவ்வுலகில் எவ்வளவுதான் ஆடம்பரமாக வாழ்ந்தாலும் - எவர் உதவியும் உனக்குத் தேவையில்லாமல் இருந்தாலும் என்றோ ஒருநாள் நீ இந்த உலகை விட்டுப் பிரிந்து செல்வது மட்டும் உறுதி.
அது உனக்குத் தெரியாதா?
அவ்வேளை நீ சேகரித்த செல்வத்தில் எதை எடுத்துக் கொண்டு செல்ல இயலும்?
நீ பிறக்கும்போது இடுப்பில் ஒரு முழக் கயிறு கூட இல்லாமல் பிறந்தாயே!
நீ போகும்போது அதையேனும் உன்னால் எடுத்துக் கொண்டு செல்ல இயலுமா?
முடியவே முடியாது.
அப்படியானால் இவற்றையெல்லாம் அறிந்த பின்பும் எப்படி உன்னால் படைத்த இறைவனை மறந்து வாழ முடிகின்றது?
இவ்வுலகில் அவனை மறந்து வாழும் நீ நாளை மரணித்த பின்னர் அவனது சன்னிதானத்தில் எழுப்பப் படுவாயே!
அவ்வேளை எந்த முகத்தோடு அவனை சந்திப்பாய்?
உன்னை படைத்து உணவளித்துக் காத்த எனக்கு நீ செய்த கைமாறு இதுதானா?
என்று அவன் கேட்டால் நீ என்ன பதில் சொல்வாய்?
நீ என்னை படைக்கவில்லையென்று சொல்வாயா?
நீ எனக்கு உணவளிக்க வில்லையென்று சொல்வாயா?
நீ என்னை காக்க வில்லையென்று சொல்வாயா?
நீ அவனைச் சந்திக்கும் நாள் - அதுதான் நீ மரணிக்கும் நாள் - எப்போதென்று நீ அறிவாயா?
இல்லையே! அது நாளையாகவும் இருக்கலாம். ஏன்?
இன்றாகக் கூட இருக்கலாம். அந்த நாள் வந்துவிட்டால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள உன்னால் முடியுமா?
இல்லை, கொஞ்சம் தாமதப்படுத்தவாவது முடியுமா?
முடியவே முடியாது. அப்படியானால் நீ பிறந்து வாழ்ந்த இவ்வுலகை விட்டுச் செல்லும்போது உனக்கு வழித் துணையாக வருவது எது?
துன்புறுத்தும் வேதனையிலிருந்து உன்னை காப்பாற்றுவது எது?
உனது பணமா? பட்டமா? பதவியா? சொத்து செல்வங்களா?
எதுவுமேயில்லை.
ஒரேயொன்றைத் தவிர - அதுதான் நீ செய்த நல்லமல்கள்.
நீ புரிந்த தொழுகை, நோன்பு இன்ன பிற வணக்கங்கள். அதைத்தான் நீ உலகத்தில் சேமிக்கவில்லையே!
நீ உண்டாய், உடுத்தாய், உறங்கினாய், உலகத்தை அனுபவித்தாய். உன்னை படைத்தவனை நினைக்கவில்லையே!
அவனுக்காக உன்சிரம் பணியவில்லையே!
அவன் பள்ளி நோக்கி உன் கால்கள் செல்லவில்லையே!
அவனைப் பயந்து உன் விழிகள் அழவில்லையே!
அவன் பாதையில் உன் பணத்தை செலவு செய்யவில்லையே!
நீ உனக்காகவே உலகில் அழாதபோது, உனக்காகப் பிறர் அழுவார்கள் என்று நினைக்கின்றாயா?
உனக்கென நீ இறைவனிடம் பிரார்த்திக்காதபோது பிறர் உனக்காக பிரார்த்திப்பார்கள் என்று எண்ணுகின்றாயா?
அது ஒருபோதும் நடக்காது.. நடக்கவும் முடியாது...போதும் நண்பனே! போதும். விட்டுவிடு உன் பாவங்களை. இன்பம் துன்பத்தில் முடிகின்றது; யவ்வனம் விருத்தாபியத்தில் முடிகின்றது; அன்பு பிரிவில் முடிகின்றது; வாழ்வு மரணத்தில் முடிகின்றது. மரணத்தின் பின் உன் நிலை என்ன? என்பதற்கு நீதான் விடை காண வேண்டும்.


தொழுகையை மறந்த என் தோழனே!
தொழுகைதான் ஒரு மனிதன் முஸ்லிம் என்பதற்குரிய எளிய அடையாளம் என்பது உனக்குத் தெரியாதா? அது ஒருவனிடம் இல்லாவிட்டால் தீனே அவனிடம் இல்லையென்பதையும் நீ அறிய மாட்டாயா?நபியவர்கள் கூறினார்கள்..."இஸ்லாத்தின் கயிறுகள் இறுதி காலத்தில் ஒவ்வொன்றாக அறுந்திட ஆரம்பிக்கும். ஒவ்வொரு கயிறும் அறும்போது மக்கள் அடுத்துள்ள கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். அதன் இறுதிக் கயிறுதான் தொழுகையாகும். (அதுவும் அறுந்துவிட்டால் அவனிடத்தில் இஸ்லாமே இல்லாமலாகி விடும்) என்றார்கள். (இப்னு ஹிப்பான்)

தொழுகையை மறந்தவனே!
தொழாதிருத்தல் குப்ரும், வழிகேடுமாகும் என உனக்குத் தெரியாதா? நபியவர்கள் "எங்களுக்கும் காபிர்களுக்கும் மத்தியிலுள்ள வேறுபாடே தொழுகைதான். எவன் அதை விட்டு விடுகின்றானோ, அவன் காபிராகி விட்டான்" என்று கூறியிருப்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார். உன்னை எல்லோரும் முஸ்லிம் என்கின்றார்கள்தானே! ஆனால் உண்மையில் அல்லாஹ்விடத்தில் நீ முஸ்லிம்தானா? தொழாதவன் காபிர் என நபியவர்கள் கூறுகின்றார்களே! அப்படியானால் நீயும்???"நபித் தோழர்கள் தொழுகையைத் தவிர வேறெந்த இபாதத்தையும் விடுவதை குப்ர் எனக் கணிக்கமாட்டார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஷகீக்).இமாம் தஹபி அவர்கள் கூறுகின்றார்கள்..."தொழுகையை அதன் உரிய நேரத்தை விட்டும் பிற்படுத்துபவன் பெரும்பாவம் செய்தவனாவான். யார் தொழுகையை விட்ட நிலையில் இறக்கின்றானோ, அவன் துரதிஷ்டவாதியும், பெரும் பாவியுமாவான்". என்கின்றார்கள்.

என் தோழனே!
தொழுகையில் அலட்சியமாயிருப்பதும், நேரம் கிடைக்கும்போது தொழுவது முனாஃபிக் - நயவஞ்சகர்களின் செயல் என்பதை நீ அறிவாயா?
அல்லாஹ் சொல்கின்றான்...நிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வுக்கு சதிசெய்ய எத்தனிக்கின்றனர். ஆனால் அவனோ அவர்களுக்கெல்லாம் பெரிய சதிகாரனாயிருக்கின்றான். அவர்கள் தொழுகைக்குச் செல்லும்போது சோம்பேறிகளாகச் செல்கின்றனர். அல்லாஹ்வை மிகச் சொற்பமாகவேயன்றி அவர்கள் நினைவு கூர்வதில்லை. (குர்ஆன் 4:142)நயவஞ்சகர்களுக்கு இஷாத் தொழுகையையும் ஸூபஹூத் தொழுகையையும் விட மிகவும் சிரமமான தொழுகை வேறு ஏதுமில்லை. அவ்விரு தொழுகையிலுமுள்ள நன்மைகளை அவர்கள் அறிந்துவிட்டால் (நடக்க முடியாதவர்கள் கூட) தவழ்ந்து நக்கரைத்தவாறு அத்தொழுகைகளில் கலந்து கொள்வார்கள் என நபியவர்கள் சொல்லியிருப்பது உன் செவிகளில் விழ வில்லையா?பார் நண்பா! பார்! அக்காலத்தில் நயவஞ்சகர்கள் கூட பள்ளிக்கு வராதிருந்ததில்லை. அவர்களோ தமது தொழுகையைப் பிறருக்குக் காட்டவேண்டுமென்பதற்காகப் பள்ளிக்கு வந்தார்கள். ஆனால் நீயோ நிரந்தரமாகப் பள்ளி வாயிலுக்கே முழுக்குப் போட்டு விட்டாயே!கொஞ்சம் சிந்தித்துப் பார் நண்பா! உனக்குப் பகுத்தறிவு உண்டல்லவா? அதனாலேயே உனக்கு மனிதன் எனப் பெயர் வந்தது.

ஆனால் பார்! உன்னைவிடக் கேவலமான ஐவறிவுள்ள மிருகங்கள், பறவைகள் கூட அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கின்றனவே! அவனை மறந்து நொடிப் பொழுதுகூட அவை இருந்ததில்லையே!அல்லாஹ் சொல்கின்றான்...நிச்சயமாக வானங்களிலுள்ளவர்களும், பூமியிலுள்ளவர்களும், சூரியனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும், மனிதர்களில் பெரும்பாலானவர்களும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஸூஜூது செய்(து வணங்கு) கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? இன்னும் அநேகர் மீது வேதனை விதிக்கப் பட்டுவிட்டது. அன்றியும் எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகின்றானோ அவனை கண்ணியப் படுத்துபவன் எவனுமில்லை. நிச்ச்கயமாக அல்லாஹ் நாடியதைச் செய்கிறான். (குர்ஆன்22:18)ஆனால் பகுத்தறிவுள்ள உன்னால் உன்னைப் படைத்த கடவுளை மறந்து எங்ஙனம் இருக்க முடிகின்றது? ஐயறிவுள்ள மிருகங்களுக்கே இப்படி நன்றியுணர்வு இருக்கின்றதே! உனக்கு அந்த நன்றி எங்கே? உன் வீட்டு எச்சில் பாத்திரத்தை உண்ணும் நாய் கூட உனக்கு நன்றியுடன் வாலாட்டுகின்றதே! நீயோ உன்னைப் படைத்தவனான அல்லாஹ்வின் இடத்தில் இருந்து கொண்டு, அவனது உணவை உண்டு கொண்டு அவனை மறந்து வாழ்கின்றாயே! அவனுக்கு மாறு செய்கின்றாயே! உனக்கு மனசாட்சியே இல்லையா? உன் உள்ளம் மரத்துப் போய்விட்டதா? மனிதா! ஐயறிவுள்ளா மிருகங்களும் ஏனைய ஜடங்களும் உன்னைவிட அல்லாஹ்விடம் மதிப்புப் பெறுவதும், அவற்றைவிடக் கேவலங் கெட்டவனாக நீ ஆகுவதும் பற்றி உனக்கு வெட்கமில்லையா? உனது தன்மானம் அதை அனுமதிக்கின்றதா?என்னருமைச் சகோதரனே! நிச்சயம் மரணம் வரும். நீ என்றோ ஒருநாள் இறந்து விடுவாய். தொழுகையைப் பாழ்படுத்திய நிலையிலேயே நீ இறக்க நேரிட்டால் உன்னைவிட நஷ்டத்துக்கும், கை சேதத்திற்குமுரியவன் வேறு யார்? கப்ரிலே உனக்கு எப்படி வரவேற்பிருக்கும் என நீ எப்போதாவது சிந்தித்ததுண்டா? மறுமையில் எழுப்பப்பட்டதும் உன் கதி என்னவென்று கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தாயா? நபியவர்கள் கூறியதை கொஞ்சம் கேள்!!"ஜூம்ஆத் தொழுகைக்குச் செல்லாமலிருப்போர் அதை விட்டும் அவசரமாக விலகிக் கொள்ளட்டும்! அன்றேல் அவர்களுடைய இதயங்களை அல்லாஹ் முத்திரையிட்டு விடட்டும். பின்னர் அவர்கள் பராமுகமான பாவிகளாகி விடட்டும். (ஆதாரம்: முஸ்லிம்)

தொழுகையை பாழ்படுத்திய என் சினேகிதா!
இதே நிலையில் நீ இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்லும் நிலை நேர்ந்தால் நீ எந்த கூட்டத்தில் மறுமையில் எழுப்பப்படுவாய் என்பதை அறியாயோ? கேள் நண்பா! நபியவர்கள் சொல்லியிருப்பதைக் கேள்! "யார் ஐவேளைத் தொழுகையினை முறைப்படி நிறைவேற்றி வருகின்றாரோ, அவருக்கு அத்தொழுகை மறுமையில் பேரொளியாகவும், வழிகாட்டியாகவும், மாபெரும் வெற்றியாகவும் ஆகிவிடும். எவர் அதனைச் சரிவர நிறைவேற்றி வரவில்லையோ அவர்களுக்கு அது ஒளியாகவோ, வெற்றியாகவோ, வழிகாட்டியாகவோ ஆகிவிடாது. அவன் மறுமையில் பிர்அவ்ன், ஹாமான், உபய்யிப்னு கலப் போன்ற கொடியோர்களுடன் இருப்பான்." (ஆதாரம்: முஸ்லிம்)அல்குர் ஆன் சொல்வதைக் கேள்!..."யார் என்னை நினைவு கூர்வதை விட்டும் புறக்கணித்திருக்கின்றனரோ அவருக்கு (உலகில்) நெருக்கடி மிக்க வாழ்க்கையே அமையும். மறுமையில் அவனை நாம் குருடனாக எழுப்புவோம். அப்போதவன் என் றப்பே! நான் உலகில் கண்பார்வை உள்ளவனாகத்தானே இருந்தேன், என்னை ஏன் குருடனாக எழுப்பியிருக்கின்றாய்? என வினவுவான். அதற்கு அல்லாஹ் ஆம் அப்படித்தான், ஏனெனில் (உலகில்) எனது அத்தாட்சிகள் உன்னிடம் வந்தபோது அவற்றை மறந்து (குருடன் போல்) வாழ்ந்தாய். அதனால் இன்றைய தினம் நீயும் (என் அருளை விட்டும்) மறக்கப்பட்டு விட்டாய். இவ்வாறே நாம் உலகில் படைத்தவனின் அத்தாட்சிகளை நம்பாது காலத்தை விரயம் செய்தவனுக்குக் கூலி வழங்கவிருக்கின்றோம். இன்னும் மறுமையில் அவனுக்குள்ள வேதனை மிகக் கடுமையானதும், என்றென்றும் நிரந்தரமானதுமாகும். (குர்ஆன் - தாஹா:124)ஆகவே நண்பா! நீ இன்று, இப்போதே நல்லதொரு முடிவெடுக்க வேண்டும். நீ போகும் பாதையை மாற்ற வேண்டும். உன் வாழ்நாளில் பெரும் பகுதியை வீணாக்கி விட்டாய், மிகுதியுள்ளவற்றையாவது நீ உபயோகப் படுத்தக் கூடாதா? காலம் பொன்னானது. அதை இதுவரைக்கும் மண்ணாக்கி விட்டாய்! இதுவரை தூங்கியது போதும், இனியாவது நீ விழித்துக் கொண்டால் அது அல்லாஹ் நீ திருந்துவதற்காக உனக்களித்த இறுதி சந்தர்ப்பம். அரிய வாய்ப்பு. அதையும் வீணாக்கி விடாதே!போதும் நண்பா! போதும்! இத்தோடு நிறுத்திக் கொள். நான் படைத்தவனுக்கு விசுவாசமாய் நடப்பேன் என்று மனதில் உறுதி கொள். பாவச் சுமைகளை அவன் முன்னிலையில் இறக்கி வை. ஆம் .. தவ்பாச் செய். அவனிடம் மன்றாடி உனது பாவங்களுக்காக மன்னிப்பு கோரிடு. அழு, அழு - நன்றாக அழு.. உன் இதயச் சுமை குறையும் வரைக்கும் அழுதிடு. இனிமேல் பாவஞ் செய்வதில்லை, தொழாதிருப்பதில்லை, ஐவேளை ஜமாஅத் தொழுகையைத் தவற விடுவதில்லை என உன்னுடன் நீயே உறுதிமொழி எடுத்துக் கொள்.(அல்லாஹ்வை ) நம்பியோருக்கு அவர்களின் இதயங்கள் அவனை அஞ்சிப் பயந்து நினைவு கூர்ந்திட இன்னும் நேரம் வரவில்லையா? தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்ட எனது அடியார்களே!..நீங்கள் அல்லாஹ்வின் அருளை (மன்னிப்பை) விட்டும் நிராசையாகி விடவேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்போனும், கிருபையுள்ளாவனுமாவான். (குர்ஆன் - அல்ஹதீத்: 53)ஒரு முஸ்லிம் தொழுகையை விட்டு விட்டால், அவனது விசயத்தில் என்னென்ன இஸ்லாமியச் சட்டங்கள் அமுல்படுத்தப்படும் என்பதை நீ அறிவாயா? இதோ கேள்!
* தொழுகையை விட்டவன் காபிராக ஆகிவிடுகிறான். * அவன் மரணித்தால் அவனைத் தொழ வைக்கக் கூடாது. * அவனுக்காக எவரும் துஆக் கேட்கக் கூடாது. *அவனை குளிப்பாட்டக் கூடாது. முஸ்லிம்களின் மையவாடியில் அடக்கம் செய்யவும் கூடாது. * அவனுடைய மகளுக்கு அவன் வலியாக இருந்து திருமணம் முடித்து வைக்கவும் கூடாது. * அவன் இறந்தால் அவனது சொத்தில் உறவினருக்கோ, அவனது உறவினர் இறந்தால் அதில் அவனுக்கோ எவ்விதப் பங்குமில்லை. * அவன் மக்கா ஹரத்தின் எல்லைக்குள் பிரவேசித்திட அனுமதியில்லை. * அவன் அறுத்த பிராணிகளை யாரும் உண்ணக்கூடாது. * அவனுக்கு முஸ்லிம் பெண்ணை மணமுடித்துக் கொடுக்கக் கூடாது. அப்படி முடித்திருந்தால் அந்த திருமணத்தை ரத்து செய்யவேண்டும். * அவன் தான் முஸ்லிம் பெண்ணை மணப்பது கூடாதெனத் தெரிந்து கொண்டே மணமுடித்திருப்பின் அவனுக்குப் பிறந்த பிள்ளாய்கள் கூட அவனது குழந்தைகளாகக் கணிக்கப்பட மாட்டாது.பார்த்தாயா சினேகிதனே? நீ செய்து கொண்டிருந்த பாவம் எவ்வளவு மகா கெட்டது என்பதைப் பார்த்தாயா? ஆனால் அதே பாவத்தை நீ தொடர்ந்து செய்ததால் அது பாவமென்றே தெரியாதளவுக்கு உன் உள்ளம் வலித்து விட்டதே பார்த்தாயா? இன்றே நீ தவ்பாச் செய்யலாமல்லவா? ஆம். அதை தாமதப்படுத்தாதே! அல்லாஹ்விடம் தஞ்சமடைந்து விடு. அவன் உன்னை கைவிட்டால் வேறு உன்னைக் காப்பவர் யார்? அவனிடம் கையேந்தியோர் என்றுமே கைசேதப் பட்டதில்லை. கடவுளை நம்பினார் கைவிடப் படார்.அதேபோல் நீ செய்த ஏனைய பாவங்களுக்காகவும் சேர்த்தே தவ்பாச் செய்துவிடு. இனிமேல் அவற்றை விட்டு முழுமையாக விலகிவிடு. அவை பற்றிய எண்ணங்களைக் குழி தோண்டி புதைத்துவிடு. அவற்றின் பக்கம் இனிமேல் தலைவைத்துக் கூட உறங்காதே. அடிக்கடி அல்லாஹ்வின் வல்லமைகள் பற்றி - அவன் உனக்களித்துள்ள எண்ணிலடங்காத அருட்கொடைகளை எண்ணிப் பார்! அவனுக்கு வழிப்பட்டோருக்கு வழங்கவிருக்கும் இன்பங்களையும், மாறு செய்தோருக்குக் கொடுக்கவிருக்கும் தண்டனைகள் பற்றியும் கொஞ்சம் யோசி! அப்போது அல்லாஹ்வின் அச்சம் உனக்கு உண்டாகும். நல்ல மனிதர்களுடன் அதிகம் தொடர்பை ஏற்படுத்திக் கொள். உன் தீய நண்பர்களை விட்டு விடு. அவர்கள்தான் உன் அழிவுக்குக் காரணமாயிருந்தவர்கள். அவ்வாறே தீய பழக்கங்களிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாக விடுபட்டு விடு. பயன் தரும் நூல்களைப் படிப்பதை வழக்கத்தில் கொள். குறிப்பாக இஸ்லாமிய நூல்களை படி. அதனால் உன் ஈமான் அதிகரிக்கும். உன் பாவங்கள், தீய பழக்கங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். யார் மரணம் எப்போதென்று யாருக்கும் தெரியாது. எனவே நீ மரணிக்குமுன் உனக்குத் தேவையானவற்றை உன் மறுமை வாழ்வுக்குத் தேவையானவற்றை இப்போதே சேகரித்து வைத்துக்கொள்! நாளை நீ மரணித்து விட்டால்.. கூட இருப்பவர்கள் ஐயோ பாவம்!! ஒரு நல்ல மனிதன் மரணித்து விட்டானே என நான்கு பேராவது அனுதாபப்படும் அளவுக்காவது நல்லவனாக வாழ். உலகில் உன்னுடன் வாழ்ந்தவர்கள்தான் நாளை உன்னைப்பற்றி இறைவனிடம் சாட்சி சொல்பவர்கள் என்பது நபிமொழி. நீ நல்ல முறையில் வாழ்ந்தால்தானே அவர்கள் நல்லபடியாக சாட்சி சொல்வார்கள். எனவே நீ குறைந்த பட்சம் ஒரு நல்ல முஸ்லிமாக வாழ்ந்து மரணித்தால்தான் நீ உலகில் பிறந்ததற்கும், வாழ்ந்ததற்கும் ஒரு அர்த்தம் இருக்கும். இல்லையேல் அனைத்துமே வீண்!!!எனவே இன்றே நீ தவ்பாச் செய். நல்லவனாகிவிடு. இன்றிலிருந்து நீயொரு புதிய மனிதன்.
(எம் அனைவருக்கும் இறையருள் உண்டாகட்டும்).

சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.

1. அநாதையைப் பொறுப்பேற்றல்:"
அநாதையைப் பொறுப்பேற்றவரும், நானும் சுவர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் தனது ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டினார்கள்" (புஹாரி).2. கடமையான தொழுகைக்குப் பின் ஆயத்துல் குர்ஸி ஓதி வருதல்:"எவர் கடமையான தொழுகைக்குப் பின் 'ஆயத்துல் குர்ஸியை' ஓதி வருவாரோ மரணத்தைத் தவிர அவருக்கு சுவர்க்கம் நுழைய எதுவும் தடையாக இருக்காது" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நஸாஈ).

ஆயத்துல் குர்ஸி:"
அல்லாஹூ லாஇலாஹ இல்லா ஹூவல் ஹய்யுல் கய்யூம் லா தஃஹுதுஹு ஸினத்துவ்வலா நவ்ம் லஹு மாபிஃஸ் ஸமாவாதி வமாபில் அர்லி மன்தல்லதி யஷ்பஃஉ இன்தஹு இல்லா பி இத்னிஹி யஃலமு மாபயின அய்தீஹிம் வமா கல்பஹும் வலா யுஹீதூன பிஷய்இம்மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ல வலா யஊதுஹு ஹிப்லுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம" (பகரா 2:255).
اللَّهُ لا إِلَهَ إِلا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لا تَأْخُذُهُ سِنَةٌ وَلا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأرْضَ وَلا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது, அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று அவன் உயர்ந்தவன், மகத்துவமிக்கவன்.


3. வுழூச் செய்த பின் ஓதவேண்டியவை:
'உங்களில் ஒருவர் அழகான முறையில் வுழூச் செய்து பின்பு:
أشهد أن لا اله الاالله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله'அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு' (வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு எந்த இணையுமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் அடியாரென்றும் தூதரென்றும் சான்று பகருகிறேன்) என்று சொல்வாரானால் அவருக்கு சுவர்க்கத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படுகின்றன. அவர் விரும்பிய வாயிலால் நுழைய முடியும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).


4. அஸர் தொழுகையையும் சுபஹ் தொழுகையையும் தொடர்ச்சியாக தொழுது வருதல்:'
எவர் அஸர் தொழுகையையும், சுபஹ் தொழுகையையும் (பேணிப் பாதுகாத்து) தொழுது வருவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)5. ஐவேளை தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது வருதல்:"எவர் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது வருவாரோ அல்லாஹ்விடத்தில் அவரை சுவர்க்கத்தில் நுழைவிக்கும் ஓர் உடன்படிக்கை இருக்கிறது" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், அபூதாவூத், நஸாஈ).

6. ஸலாத்தை பரப்புதல்:"
உங்களில் எவரும் நம்பிக்கை கொள்ளாத வரை, சுவர்க்கம் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காத வரை விசுவாசம் கொண்டவராகக் கருதப்பட மாட்டீர். உங்களுக்கு மத்தியில் நேசத்தை ஏற்படுத்தும் ஒரு காரியத்தை சொல்லித் தரட்டுமா? உங்களுக்கு மத்தியில் ஸலாத்தை அதிகமாகப் பரப்புங்கள்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

7. வுழூச் செய்த பின் இரண்டு ரக்அத் மனப்பூர்வமாகத் தொழுதல்:'
ஒரு முஸ்லிம் அழகான முறையில் வுழூச் செய்து உளப் பூர்வமாக இரண்டு ரக்அத் தொழுவாரானால் அவருக்கு சுவர்க்கம் கடமையாகி விட்டது' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

8. கல்வியைத் தேடல்:"
எவர் கல்வியைத் தேடி வெளியேறிச் செல்கிறாரோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தின் பாதையை இலகு படுத்துகிறான்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)9. பெற்றோருக்கு நன்மை செய்தல்:அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும், பின்பு அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும், பின்பு அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும். இறைத் தூதரிடம் அவர் யார் எனக் கேட்கப்பட்டது? "பெற்றோர்களின் இருவரையோ அவர்களின் ஒருவரையோ முதிய வயதில் அடைந்து, பின்பு அவன் (அவர்கள் மூலம்) சுவர்க்கம் நுழையவில்லையானால் அவனேயாவான்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

10. நாவையும், மர்மப் பகுதியையும் பேணுதல்:"
எவர் இரு தாடைகளுக்கும், தொடைகளுக்கும் மத்தியில் உள்ளதை பாதுகாக்கிறேன் என பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு நான் சுவர்க்கத்தை பொறுப்பேற்றுக் கொள்கிறேன்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

11. முஅத்தீனின் அழைப்புக்கு மறுமொழி பகருதல்:
"முஅத்தீன் (அழைப்பாளர்) பாங்கு சொல்லும் போது அதை செவிமடுப்பவர் அதே போன்று சொல்ல் வேண்டும், 'ஹய்யஅலஸ் ஸலாஹ், ஹய்யஅலல் பலாஹ்' என்று சொல்லும் போது மாத்திரம் 'லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹி' என்று சொல்ல வேண்டும், பின்பு முஅத்தீன் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று சொல்லும் போது யார் தூய உள்ளத்துடன் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று பதில் சொல்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

12. ஒரு நாளைக்கு பன்னிரண்டு ரக்அத் ஸுன்னத் தொழுது வருதல்:
"எவர் ஒரு நாளைக்கு பன்னிரண்டு ரக்அத் ஸுன்னத் தொழுது வருவாரோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகிறான். அவைகளாவன: லுஹருக்கு முன் 4 ரக்அத்துகள், லுஹருக்குப் பின் 2 ரக்அத்துகள், மஃரிபுக்குப் பின் 2 ரக்அத்துகள், இஷாவுக்குப்பின் 2 ரக்அத்துகள், பஜ்ருக்கு முன் 2 ரக்அத்துகள்". (திர்மிதி)

13. அல்லாஹ்வின் 99 திருநாமங்களை மனனமிட்டு அதன்படி செயல்படுதல்:"
அல்லாஹ்விற்கு 99 திருநாமங்கள் உள்ளன. எவர் அவைகளை மனனமிட்டு அதன்படி செயல்படுவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்துவிட்டார்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

14. நான்கு விடயங்கள் ஒரு சேர பெற்று விட்டவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்:
"உங்களில் இன்று நோன்பு நோற்றவர் யார்? என நபி (ஸல்) அவர்கள் குழுமியிருந்த தனது தோழர்களிடம் வினவினார். அபூபக்ர் (ரலி) அவர்கள் அதற்கு நான் என்றார்கள். இன்று உங்களில் நோயாளியை சுகம் விசாரிக்க சென்றது யார்? என அன்னார் வினவினார், அதற்கும் நான் என அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். இன்று உங்களில் ஜனாஸாவில் கலந்து கொண்டவர் யார்? என அன்னார் கேட்டபோது, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்றார்கள். இன்று உங்களில் ஏழைகளுக்கு உணவளித்தவர் யார்? என அன்னார் கேட்டார், அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்றார்கள். எவருக்கு மேற் கூறப்பட்ட இவ்விடயங்கள் ஒரே நாளில் ஒரு சேர கிடைத்துவிடுமோ அவர் சுவர்க்கத்தில் நுழைந்து விடுவார்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

15. இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்:"
முஆதே! எவர் அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காத நிலையில் மரணிக்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

16."லா இலாஹ இல்லல்லாஹ்" வை உளத்தூய்மையுடன் மொழிதல்:
"எவர் "லா இலாஹ இல்லல்லாஹ்" வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இல்லை என்பதை உளத்தூய்மையுடன் சொல்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

17. எழுபதாயிரம் பேர் கேள்வி கணக்கின்றி சுவர்க்கம் நுழைவர்:
"நபி (ஸல்) அவர்கள்: எனது சமுதாயத்தில் எழுபதாயிரம் பேர் எந்த விசாரணையும், தண்டனையுமின்றி சுவர்க்கம் நுழைவார்கள் எனக் கூறிவிட்டு வீட்டுக்குள் நுழைந்து விட்டார்கள். அங்கிருந்தோர் தங்களுக்குள் அந்த எழுபதாயிரம் பேர் நபியோடு தோழமை கொண்டு இருந்தவர்கள், மற்றும் சிலர் இல்லை அவர்கள் இஸ்லாத்தில் பிறந்து அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காதவர்கள். வீட்டைவிட்டு வெளியில் வந்த நபி (ஸல்) அவர்கள் நீங்கள் எதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தீர்கள் எனக் கேட்க நடந்தவைகளைக் கூறினர். நபி (ஸல்) அவர்கள் அந்த எழுபதாயிரம் பேர்:

மந்திரித்துப் பார்க்காதவர்கள், மந்திரித்துப் பார்க்குமாறு கோராதவர்கள், பறவை சாஸ்த்திரம் பார்க்காதவர்கள் முழுமையாக அல்லாஹ்வையே சார்ந்திருக்கக் கூடியவர்கள் எனக் கூறினார்கள். அங்கிருந்த ஒருவர் எழுந்து நபியே நானும் அவர்களுடன் இருக்க பிரார்த்தியுங்கள், நீரும் அவர்களுடன் இருப்பீர் எனக் கூறினார்கள். மற்றொருவர் எழுந்து தனக்கும் பிரார்த்திக்குமாறு வேண்டினார், அதற்கு நபியவர்கள் "உக்காஷா" உம்மை முந்திவிட்டார் எனக்கூறினார்கள். (முஸ்லிம்).

"நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கச் சோலைகள் தங்குமிடங்களாக உள்ளன. அதிலே நிரந்தரமாக இருப்பார்கள். அங்கிருந்து இடம் பெயர்வதை விரும்ப மாட்டார்கள்" (குர்ஆன் 8:107,108).

August 17, 2009

அல்லாஹ்வின் அத்தாட்சிகள்

إِنَّا جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةً لَّهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا ، وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزًا '
அவர்களில் அழகிய நல்லறம் செய்பவர் யார் எனச் சோதிப்பதற்காக இந்தப் பூமியின் மேல் உள்ளவைகளை அதற்கு அலங்காரமாக நிச்சயமாக நாம் ஆக்கியுள்ளோம். மேலும் அதன் மேல் உள்ளதை வறண்ட மண்ணாகவும் நாம் ஆக்கக் கூடியவர்களே!'. (அல்குர்ஆன் 18:07,08)

இவ்விரு வசனங்களில் இரண்டு செய்திகள் அடங்கியுள்ளன. இறைவன் எத்தகைய ஆற்றல் மிக்கவன் என்பது ஒரு செய்தி! மனிதர்களுக்கு இவ்வுலகில் இன்பங்களை வாரி வழங்கியிருப்பது ஏன் என்பது மற்றொரு செய்தியாகும். இவ்வசனத்தில் தனது வல்லமையைக் கூற வெகு தொலைவுக்கு மனிதனை இழுத்துச் செல்லாமல் அவன் எந்த மண்ணில் வாழ்கின்றானோ அந்த மண்ணையே இதற்குக் களமாக்கிக் காட்டுகின்றான்.
எவ்வித கவர்ச்சியும் அலங்காரமும் இல்லாமல் கட்டாந்தரையாகக் கிடந்த பூமியின் மேல் மழையை விழச்செய்து அவற்றில் மரம் செடி கொடிகளை முளைக்கச் செய்கிறான். இவ்வாறு முளைத்தவுடன் பூமிக்கு புதுப் பெண்ணின் கவர்ச்சி வந்து விடுகின்றது. இதை நாம் தான் செய்கின்றோம் என்று இங்கே சுட்டிக் காட்டுகின்றான். திருக்குர்ஆனின் வேறு இடங்களில் இன்னும் அழுத்தமாகத் தனது இந்த ஆற்றலை மனிதனுக்குச் சுட்டிக் காட்டியிருக்கின்றான்.

'அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளிப்படுத்துகின்றோம். அதிலிருந்து நாம் வித்துக்களை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகின்றோம். பேரிச்சை மரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன. திராட்சைத் தோட்டங்களையும் (பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவைக்கு) வௌ;வேறாகவும் உள்ள மாதுளை, ஜைத்தூன் ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தியிருக்கின்றோம்) அவை (பூத்துக்) காய்ப்பதையும் பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக - ஈமான் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் அமைந்துள்ளன'. (திருக்குர்ஆன் 6:99)

'பந்தல்களில் படர விடப்பட்ட கொடிகளும் படர விடப்படாச் செடிகளும் பேரீச்சை மரங்களும் உள்ள சோலைகளையும் புசிக்கத் தக்க விதவிதமான காய், கறி தானியங்களையும் ஒன்று போலவும் வௌ;வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும் அவனே படைத்தான். ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். வீண்விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை'. (அல்குர்ஆன் 6:141)

'இன்னும் பூமியில் அருகருகே இணைந்தாற்போல் பல பகுதிகளை (அமைத்து அவற்றில்) திராட்சைத் தோட்டங்களையும் விளைநிலங்களையும் கிளைகள் உள்ளதும் கிளைகள் இல்லாததுமான பேரீச்சை (வர்க்கத்தை)யும் (அவனே உண்டாக்கினான், இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டு தான் பாய்ச்சப் பட்டாலும் அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கி இருக்கிறோம். நிச்சயமாக இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன'. (அல்குர்ஆன் 13:04)

'அதனைக் கொண்டே (விவசாயப்) பயிர்களையும் ஒலிவ (ஜைத்தூன்) மரத்தையும் பேரீச்சை மரங்களையும் திராட்சைக் கொடிகளையும் இன்னும் எல்லா வகைக் கனி வர்க்கங்களிலிருந்தும் அவன் உங்களுக்காக விளைவிக்கிறான். நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு (தக்க) அத்தாட்சி இருக்கிறது'. (அல்குர்ஆன் 16:11) '

இன்னும் தூர் ஸினாய் மலைக்கருகே உற்பத்தியாகும் மரத்தையும் (உங்களுக்காக நாம் உண்டாக்கினோம்) அது எண்ணையை உற்பத்தி செய்கிறது. மேலும் (ரொட்டி போன்றவற்றை) சாப்பிடுவோருக்கு தொட்டு சாப்பிடும் பொருளாகவும் (அது அமைந்துள்ளது)'. (அல்குர்ஆன் 23:20)

'அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? அதில் மதிப்பு மிக்க எத்தனையோ வகை (மரம், செடி, கொடி) யாவற்றையும் ஜோடி ஜோடியாக நாம் முளைப்பித்திருக்கின்றோம்'. (அல்குர்ஆன் 26:07) '

அன்றியும் வானங்களையும் பூமியையும் படைத்து உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கின்றோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள்'. (அல்குர்ஆன் 27:60)

'அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா? - நிச்சயமாக நாமே வறண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால்நடைகளும் உண்ணக் கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அவர்கள் (இதை ஆய்ந்து) நோட்டமிட வேண்டாமா?'. (அல்குர்ஆன் 32:27) '

பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும் (மனிதர்களாகிய) இவர்களையும் இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்'. (அல்குர்ஆன் 36:36)

'நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுக்களில் ஓடச் செய்கிறான். அதன் பின் அதைக் கொண்டு வௌ;வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால் அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர். பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகின்றான். நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது'. (அல்குர்ஆன் 39:21)

'(பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா? அதனை நீங்கள் முளைக்கச் செய்கிறீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கிறோமா?'. (அல்குர்ஆன் 56:63,64) கடவுள் என்று ஒருவன் இருக்கின்றான் என்பதற்கும் அவனது வல்லமைக்கும் மண்ணில் முளைக்கும் பயிர் பச்சைகள் மிகப் பெரும் சான்றாகவுள்ளதால் தான் இதை முக்கியத்துவத்துடன் அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்றான்.

இனிப்பான மாம்பழத்தை மாமரம் உற்பத்தி செய்கிறது என்றால் மாங்கொட்டையில் அந்த இனிப்பு இருக்கவில்லை. அது புதைக்கப்பட்ட மண்ணிலும் அந்த இனிப்பு இருக்க வில்லை. ஊற்றுகின்ற தண்ணீரிலோ வீசுகின்ற காற்றிலோ வெளிச்சத்திலோ இனிப்பு இருந்ததில்லை. ஆனாலும் மாம்பழங்கள் இனிக்கின்றன. இப்படிப் பல்வேறு சுவைகள் கொண்ட கனிகளை மனிதன் உண்ணும் போது அதைப் பற்றி சிந்தித்தால் 'சூப்பர் பவர்' உள்ள ஒருவன் ஆட்டிப் படைக்கின்றான் என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்வான். இலைகள், பூக்கள், காய்கள், கனிகளில் தான் எத்தனை வண்ணங்கள்! அந்த வண்ணங்கள் எப்படி வந்தன? என்றெல்லாம் ஆராயும் ஒருவன் கடவுளை மறுக்கவே மாட்டான். அடிக்கடி பார்த்துப் பழகியதால் நாம் இதை உரிய விதத்தில் சிந்திப்பதில்லை. மண்ணில் முளைத்தெழும் ஒவ்வொன்றிலும் கணக்கிட முடியாத அதிசயங்கள் புதைந்து கிடப்பதை இதனால் தான் நாம் சிந்திப்பதில்லை. எப்போதும் தூரத்தில் இருப்பது தான் நமக்கு அதிசயமாகத் தோன்றும். நம் பக்கத்தில் நிற்கும் அதிசயங்கள் அதிசயங்களாகத் தோன்றாது.

மனிதன் இதைச் சிந்திக்க மாட்டான் என்பதற்காகத் தான் இம்மண்ணின் மேல் உள்ளவற்றை மண்ணுக்கு அலங்காரமாக ஆக்கினோம் என்று அல்லாஹ் கூறுகின்றான். இதை மட்டும் கூறிவிட்டு நிறுத்திக் கொண்டால் கூட இதெல்லாம் இயற்கை என்று மனிதன் கூறி விடுவான். நாளை வறண்ட பாலைவனமாகவும் நாம் ஆக்குவோம் என்று சேர்த்துக் குறிப்பிடுகின்றான்.


உரிய நேரத்தில் உரிய அளவில் மழை பெய்த பிறகு இயற்கையாக முளைத்தன என்று கூறும் மனிதனே! உரிய நேரத்தில் மழை பெய்ததும் இயற்கையா? உரிய அளவில் மழை பெய்ததும் இயற்கையா? மேலப்பாளையத்தில் பெய்து விட்டு பாளையங்கோட்டையில் பெய்யாமல் இருந்ததும் இயற்கையா? காற்றும் குளிர்ந்து தரையும் குளிர்ந்து இதோ மழை வரப் போகின்றது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது ராஜஸ்தான் பாலைவனத்தில் - அனலாய் கொதிக்கும் பூமியில் - மழையை விரட்டிச் சென்று பெய்விப்பவன் யார்?

இதற்கு இயற்கை என்று எவரும் காரணம் சொல்ல முடியாது அல்லவா? இதனால் தான் தனது வல்லமைக்கு பசுமையை மட்டும் சான்றாகக் கூறி நிறுத்திக் கொள்ளாமல் வறட்சியை ஏற்படுத்துவதும் நாம் தான் எனக் கூறி ஆப்பு வைக்கிறான். இந்த இடத்தில் ஏன் இத்தனை வருடங்களாக மழை பெய்யவில்லை என்ற கேள்விக்கு 'இயற்கை' என்று விடை கூற முடியாது. யாரோ ஒருவன் தான் இதற்குக் காரணமாக இருக்கின்றான் என்பது தான் இதற்கு விடையாக இருக்க முடியும்.

இறைவனை மனிதன் நம்ப வேண்டும், அதுவும் சிந்தித்து விளங்கி நம்ப வேண்டும் என்ற காரணத்தினால் தான் இந்த சின்னஞ்சிறு சொற்றொடருக்குள் சேர்த்துக் கூறிவிடுகின்றான்.

August 16, 2009

அல்லாஹ் உனக்காக!

அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறக் கேட்டிருக்கின்றேன். மறுமைநாளில் அனைவர்க்கும் முதலில் இறைவனின் பாதையில் வீரமரணம் அடைந்தவனுக்கு எதிராகாத் தீர்ப்பளிக்கப்படும். அம்மனிதன் இறைவனின் நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்படுவான். பிறகு, இறைவன் அவனுக்குத் தான் அளித்த அருட்கொடைகள் அனைத்தையும் நினைவவூட்டுவான் அப்போது அவனுக்கு தான் பெற்றிருந்த அருட்கொடைகள் அனைத்தும் நினைவுக்கு வரும். இறைவன் அம்மனிதனிடம் வினவுவான்: நீ என் அருட்கொடைகளைப் பெற்று என்னென்ன பணியாற்றினாய்?

அம்மனிதன் கூறுவான்: நான் உன் உவப்புக்காக (உன் மார்க்கத்தை எதிர்த்துப் போரிடுவோருக்கு எதிராக) போரிட்டேன். இறுதியாக என் உயிரையும் கொடுத்து விட்டேன். இதை கேட்ட இறைவன் அவனிடம் கூறுவான்: நீ பொய்யுரைக்கின்றாய். மக்கள் உன்னை வீரன், துணிவு மிக்கவன் எனப் புகழ வேண்டும் என்பதற்காகத்தான் நீ போரிட்டாய்! (வீரத்தை வெளிக்காட்டினாய்!) அதற்கான புகழுரையும் உலகிலேயே உனக்குக் கிடைத்துவிட்டது! என்பான். பின்னர், இறைவன் அந்த உயிர்த் தியாகியைத் தலைகீழாக இழுத்துச்சென்று நரகத்தில் எறியும்படி கட்டளையிடுவான். அந்த மனிதன் நரகத்தில் எறியப்படுவான்.

பிறகு, மார்க்க அறிஞராயும், போதகராயும் இருந்த இன்னொரு மனிதன் இறை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவான். அவன் குர்ஆனைக் கற்றுத் தெளிந்த காரியாகவும் இருப்பான். அவனுக்கு இறைவன் தான் அளித்த அருட்கொடைகளை நினைவூட்டுவான். அவனுக்கு அருள் நலங்கள் அனைத்தும் நினைவுக்கு வரும். அப்போது இறைவன் அவனிடம் கேட்பான்: இந்த அருட்கொடைகளைப் பெற்ற நீ என்ன நற்செயல் புரிந்தாய்?

இறைவா! நான் உனக்காக உனது தீனைக் கற்றேன். உனக்காகவே அதனைப் பிறர்க்கு கற்பித்தேன். உனக்காகத்தான் குர்ஆனை ஓதினேன் என்று அம்மனிதன் கூறுவான். இதைக் கேட்ட இறைவன் பின்வருமாறு கூறுவான்: நீ பொய்யுரைக்கின்றாய்! மக்கள் உன்னை அறிஞர் எனக் கூறவேண்டும் என்பதற்காக கல்வி கற்றாய்! குர்ஆனை நன்கறிந்தவர் என மக்கள் உன்னை புகழ வேண்டும் என்பதற்காகத்தான் குர்ஆனை ஓதினாய்! அதற்கான வெகுமதி உலகிலேயே உனக்குக் கிடைத்துவிட்டது. பிறகு, அவனை முகம் குப்புற இழுத்துச் சென்று நரகில் எறியுங்கள் எனக் கட்டளையிடப்படும். அவ்வாறே அவன் நரகில் எறியப்படுவான்.

உலகில் வசதி வாய்ப்புக்கள் பலவும் அளிக்கப்பட்டிருந்த மூன்றாவது மனிதன் இறைவனின் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவான். அவனுக்கு எல்லாவகைச் செல்வங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இறைவன் அம்மனிதனிடம் தான் அளித்த அருட்கொடைகள் அனைத்தையும் எடுத்துக் கூறுவான். அப்போது அவன், ஆம்! இந்த அருட்கொடைகள் அனைத்தும் எனக்கு அளிக்கப்பட்டிருந்தன என ஒப்புக்கொள்வான். அப்போது இறைவன் அவனிடம் கேட்பான்: என் அருட்கொடைகளைப் பெற்று நீ என்ன நல்வினை புரிந்தாய்?

அம்மனிதன் சொல்வான்: உன் உவப்பைப் பெற எந்தெந்த வழிகளில் செலவழிப்பது உனக்கு விருப்பமானதோ, அவ்வழிகளில் எல்லாம் நான் செலவு செய்தேன் இறைவன் கூறுவான்: நீ பொய்யுரைக்கின்றாய். நீ இந்தச் செல்வங்கள் அனைத்தையும் மக்கள் உன்னை வள்ளல் எனப்புகழ்ந்து போற்ற வேண்டும் என்பதற்காகத்தான் வாரி இறைத்தாய்! அந்த வள்ளல் பட்டம் உலகிலேயே உனக்குக் கிடைத்துவிட்டது. பிறகு, இவனை முகம் குப்புற இழத்துச் சென்று நரகில் வீசி விடுங்கள் எனக் ஆனையிடப்படும். அவ்வாறே அவன் இழுத்துச் செல்லப்பட்டு நரகில் எறியப்படுவான்.
அறிவிப்பாளர்: அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ முஸ்லிம்

மேற்சென்ன தன்மைகள் கொண்ட இறைநம்பிக்கை அங்கு ஒருவனுக்கு எந்தப் பலனையும் தராது. அத்தகைய வணக்கங்கள் எந்த புண்ணியமும் ஈட்டித் தராது. யதார்த்த நிலை இதுதான். இதில் எவ்வித ஐயத்துக்கும் இடமில்லை. நிலைமை இவ்வாறிருக்க வெளிப்பகட்டுக்காகவும், புகழாசைகளுக்காகவும் செயல்படும் உணர்வுகள் குறித்து நாம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். அவை பெரும் நாசத்தை விளைவிக்கக்கூடாது. இல்லையெனில் நம் உழைப்பு, முயற்சி அனைத்தும் வீணாகிவிடும். நம்முடைய இந்த முதலீடு வீணாகிவிட்டதே என்று நாம் மறுமையில் கை பிசைந்து நிற்போம். சின்னஞ்சிறு நற்செயலும் நமக்கு துணை செய்யாதா என்று தவித்து நிற்கும் அந்த மறுமை நாளில், நம்முடைய வாழ்வின் முதலீடு முழவதும் முற்றிலும் வீணாகிவிட்டிருப்பது தொியவரும்.

August 10, 2009

இவ்வுலக வாழ்க்கை

மனிதர்களை உண்மையான நேர்வழியில் செலுத்த வழிகாட்டும் இறுதி இறை வெளிப்பாடாகிய குர்ஆன், இவ்வுலக வாழ்க்கையின் நோக்கம் இறைவனுக்கு அடிபணிவதே ஆகும். மனிதன் இறைவனுக்கு அடிபணிகின்றானா அல்லவா என்று சோதிப்பதற்காகவே அவன் அனுப்பப்பட்ட இடம்தான் இவ்வுலகம் என்றும் குர்ஆன் அறிவிக்கின்றது. இந்தச் சோதனையில் மனிதனை நேர்வழியில் நின்றும் பிறழத் தூண்டும் வகையில் படைக்கப்பட்ட பிரத்தியேகக் கூறுகளைப் பற்றி அல்லாஹ் எச்சரிக்கின்றான்; அவற்றின் தன்மைகளைப் பற்றிக் கூறுகையில் அவை முற்றிலும் ஏமாற்றுபவை எனவும் அறிவிக்கின்றான்.

உங்கள் பொருள்களைக் கொண்டும் உங்கள் ஆத்மாவைக் கொண்டும் நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 3:186

இவ்வுலகின் உண்மையான இயல்பை வர்ணிக்கும் வசனங்கள் பல குர்ஆனில் உள்ளன. அவற்றுள் சில கீழே தரப்படுகின்றன:
உங்களுடைய செல்வமும், சந்ததிகளும் உங்களுக்குச் சோதனையே. ஆனால் அல்லாஹ்விடத்தில் உங்களுக்கு உங்களுக்கு மகத்தான கூலி உள்ளது. அல்குர்ஆன் 64:15


பெண்களும்,ஆண் பிள்ளைகளும், தங்கம் மற்றும் வெள்ளியின் பெருங்குவியல்களும், உயர்ரகக் குதிரைகளும், கால்நடைகளும், வளம் மிகுந்த விளை நிலங்களும் எல்லாம் மனிதர்களைக் கவரும் வகையில் படைக்கப்பட்டுள்ளன. இவை யாவும் இவ்வுலக வாழ்க்கையின் வசதி வாய்ப்புகள். அல்லாஹ்விடத்தில் அழகிய தங்குமிடம் உள்ளது. அல்குர்ஆன் 3:14

உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பவை அனைத்தும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய வசதிவாய்ப்புகளும், பகட்டணிகலன்களுமே ஆகும். அல்லாஹ்விடத்தில் உள்ளவை மேலானாவையும் நிலையானவையும் ஆகும். (இதை) நீங்கள் அறிந்து கொள்ள மாட்டீர்களா?" அல்குர்ஆன் 28:60

சமூக தலைமை (அந்தஸ்து) செல்வவளம், சந்ததிகள், உயர் தரமான வாழ்க்கையும் அவையல்லாமல் ஏழ்மையும் மிக வறிய வாழ்க்கை நிலையும் எல்லாமே மனிதனை இவ்வுலகில் சோதிப்பதற்காக உள்ளவையே. குர்ஆன் வசனம் ஒன்று கூறுகிறது.

அவன் (அல்லாஹ்) தான் உங்களை இப்புவியின் வாரிசுகளாக ஆக்கினான். மேலும் உங்களில் சிலரை மற்றவர்களை விட தலைமையில் (அந்தஸ்தில்) உயர்த்தியும் உள்ளான். உங்களுக்கு அருளப்பட்டவை மூலம் உங்களைச் சோதிக்கின்றான். உங்கள் இறைவன் தண்டிப்பதில் மிகத் தீவிரமானவன். அவன் பிழை பொருப்பவனும் பேரருள் உடையவனும் ஆவான். அல்குர்ஆன் 6:165

வாழ்வும் மரணமும் மனிதனைச் சோதிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவையே என்பதை கீழ்வரும் வசனம் கூறுகிறது.

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். அல்குர்ஆன் 67:2

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 21:35

மனிதனுக்கு வழங்கப்படும் நன்மைகளும் ஆதரவுகளும் அதனைப் போலவே அவனிடமிருந்து பறிக்கப்படுபவையும் மனிதனைச் சோதனைக்குள்ளாக்குபவற்றில் உட்படுபவையே.

அவனைச் சோதனைக்குள்ளாக்கி அவனுக்கு அருள் புரிந்து அவனை இறைவன் மேம்படுத்தினால் மனிதன் என்னுடைய இறைவன் என்னை மகிமைப்படுத்தி விட்டான் என்று கூறுகிறான். ஆனால் அவனுடைய செல்வத்தைக் குறைத்து அவனைச் சோதித்ததால் என் இறைவன் என்னை இழிவுபடுத்திவிட்டான் என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 89: 15.16

மறுமையே மனிதனுக்கு யதார்த்தமான வீடு (தங்குமிடம்) ஆகும் எனக் குர்ஆன் அறிவுறுத்துகிறது.

புலனுணர்வுகளுக்கு அப்பாற்பட்ட எதையுமே உணர்ந்துகொள்ளும் ஆற்றலற்றவன் மனிதன், எதிர்காலம், இவ்விதம் மனிதன் உணர்ந்து கொள்ள முடியாதவற்றுள் ஒன்று. அடுத்த சில வினாடிகளில் என்ன நேரும் என்று யாருமே அறிய முடியாது. இத்தகைய வரையறைக்குட்பட்ட புலனுணர்வுடைய மக்கள் எல்லாக் காலங்களிலும் வருங்கால நிகழ்வுகள் பற்றி அறிய ஆர்வமுடையவர்களாக இருக்கின்றார்கள்; குறிப்பாக மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை பற்றி அறிய மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்.

மனிதர்கள் ஆர்வமுடன் அறிய விரும்புபவை ஆகிய இந்தப் பிரபஞ்சம், மானிட வர்க்கம், இறப்பு, நீதித் தீர்ப்பு நாள், நரகம், சுவர்க்கம், வருங்காலம் கடந்த காலம் மற்றும் மறுமை ஆகியவற்றிற்கெல்லாம் காரணகர்த்தாவாகிய அல்லாஹ் ஒருவனே அறிவிக்க வல்லவன். இந்தப் பிரபஞ்சத்தையும் உயிரினங்கள் அனைத்தையும் அல்லாஹ் “ஒன்றுமில்லாமை”யிலிருந்தே படைத்தான்; இன்னும் ஒவ்வொரு கணமும் படைத்துக்கொண்டே இருக்கின்றான். இப்பிரபஞ்சத்தில் ஓர் அம்சமாக விளங்கும் காலத்தையும் அல்லாஹ்வே திட்டமிட்டு வகுத்துள்ளான். காலத்திற்கு எல்லா படைப்பினங்களும் கட்டுப்பட்டாக வேண்டும். அல்லாஹ்வோ காலத்திற்கு கட்டுப்பட்டவன் அல்லன். காலததிற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டவன் அல்லாஹ். காலத்தின் கட்டுப்பாடின்றியே அல்லாஹ் யாவற்றையும் பரிமாணத்தோடு படைத்தான். நாம் கடந்தவை என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை என்றும் கருதும் யாவற்றையும் முழுமையாக அறிந்த நிலையில் ஒரு நொடியில் படைத்தான்.


நம்முடைய புலனுக்கு எட்டாத பிற்காலம் உட்பட யாவுமே “மறையானவை” என்று குறிப்பிடப்படுகின்றன. “மறுமை”யும் கூட மனிதர்கள் இம்மையில் வாழும் காலம் வரை ‘மறைவான’வற்றில் ஒர் அம்சமாகவே விளங்கும். “மறுமையை” பற்றிக் குறிப்பிடும் குர்ஆன் அதைப் பற்றிய விவரங்களைத் தருகின்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் தத்துவ ஞானிகள் பல்வேறு கலாச்சாரங்களில் காணப்படுகின்ற மூட நம்பிக்கைகளோடு இணைந்து, மறுமையைப் பற்றி பல அனுமானங்களைக் கூறுகின்றனர். இவ்வுலக வாழ்க்கையில் பற்றும் சொத்தும் செல்வமும் குவிப்பதில் ஆர்வமும், மக்களை உலகில் வசதி வாய்ப்புகளை அடையும் முயற்சியில் நின்றும் விடுபட விடுவதில்லை. தொல்லைகளும் இடர்ப்பாடுகளும் எதிர்படும் போது ஏமாற்றமடைந்து நம்பிக்கை இழப்பார்கள். இத்தகைய மன நிலையை குர்ஆன் கீழ் வருமாறு வர்ணிக்கிறது.

“நம்முடைய அருட்கொடையை மனிதன் நுகரச் செய்து அதன்பின் அதனை அவனிடமிருந்து பறிக்கப்பட்டால் அவன் நம்பிக்கை இழந்து நன்றி கெட்டவனாக ஆகிவிடுகின்றான். அவன் அனுபவித்த இடர்ப்பாடுகளை நீக்கி நம்முடைய அருட்கொடைகளை நுகரச் செய்தால் “என்னுடைய துன்பங்கள் நீங்கிவிட்டன” எனக் கூறி பெரும் மகிழ்ச்சியடைந்து பெருமை பாராட்டுகிறான். அல்குர்ஆன் 11:9,10

எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அனைத்து நிகழ்வுகளையும் குர்ஆனின் நெறிமுறைக்கு உகந்து விளங்கி, இறையுணர்வு நீங்காமல் மறுமையின் நினைவு மாறாமல் மனிதனின் நிரந்தர வீடாகிய மறுமையை அடையும் நோக்கோடு இறை நம்பிக்கையாளன் நிலை தவறாமல் முயலுகின்றான். “இவ்வுலகில் ஓர் அந்நியனைப் போல் அல்லது ஒரு பிரயாணியைப் போல் வாழ்வீராக” எனும் நபி மொழி (அல்புகாரி)க்கு ஏற்ப இவ்வுலக வாழ்க்கையை நிரந்தரமானது என்றும் நம்பி வாழ்வான். எனவேதான் இறை நம்பிக்கையாளர்கள் ஏராளமான நன்மைகளும் பேறுகளும் கிட்டும் போது வழி பிறழுவதுமில்லை; அவற்றை இழக்க நேரும்போது ஊக்கம் இழந்து சோர்வடைவதும் இல்லை. பேறுகளும் நன்மைகளும் அவை போன்று இழப்புகளும் எல்லாம் சோதனையே எனும் உண்மையை உணர்ந்தவர்களாக இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ் விரும்பும் நேரும் நிகழ்வுகளை எல்லாம் கீழ்வரும் இறை வசனத்தை நினைவு கூர்ந்து ஏற்றுக் கொள்வார்கள்.

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும். நன்மையும் தீமையும் அனுபவிக்கும் நிலைக்கு உள்ளாக்கி நாம் உங்களைச் சோதிப்போம். நீங்கள் நம்மிடமே மீள்வீர்கள். அல்குர்ஆன் 21:35

இதனை உணரும்போது, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெரும் கருணை குர்ஆன் மூலம் வெளிப்படுவதைத் தெளிவாக மனிதன் அறிந்து கொள்கிறான். குர்ஆனின் மூலமே மறுமையைப் பற்றிய மிகச் சரியான உண்மைகளை இறை நம்பிக்கையாளர்கள் அறிந்து கொள்கிறார்கள். உண்மையான மார்க்கமே மறுமையைப் பற்றிய யதார்த்தங்களை அறிவிக்கவல்லது.

உண்மையான மார்க்கமே மனிதனுக்கு இவ்வுலக வாழ்க்கையின் நிலையற்ற தற்காலிக நிலையையும், நிரந்தரமான மறுமை வாழ்க்கையையும் பற்றி அறிவிக்கிறது. மனிதனின் நற்செயல்களுக்கும் தீயச் செயல்களுக்கு ஏற்ப கூலி வழங்கப்படும் ஒரு நாளைப் பற்றிக் குர்ஆனில் அறிவிக்கப்பட்டுள்ளது. மரணவேளை, நீதித் தீர்ப்பு நாள், சுவர்க்கம் மற்றும் நரகம் பற்றிய தகவல் தரும் தனிச் சிறப்பு வாய்ந்த ஒரே மூலம் குர்ஆனே ஆகும். இறைவனின் இறுதி வெளிப்பாடாகிய குர்ஆன் பல வசனங்களில் மனிதனின் நிரந்தர வீடு மறுமையே என அறிவிக்கின்றது. அவற்றுள் ஒன்று:

உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? அல்குர்ஆன் 6:32

இந்த இறைவசனத்தில் இந்தச் சோதனை வாழ்க்கையை விளங்கிக் கொள்ள முடியாத உணர்வற்ற ஒரு மனிதனின் மனப்போக்குத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இறை நம்பிக்கையாளர்கள் இத்தகைய உணர்வற்ற மனப்போக்கைப் பற்றி எச்சரிக்கப்படுவதோடு, அவர்களின் இம்மை வாழ்க்கையின் யதார்த்த நோக்கத்தைக் குறித்துத் திரும்பத் திரும்ப நினைவூட்டப்படுகிறார்கள்.
அவர்களில் சிலருக்கு இன்பமனுபவிக்க நாம் கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதீர்; (இவையெல்லாம்) அவர்களைச் சோதிப்பதற்காகவே நாம் கொடுத்துள்ள உலக வாழ்க்கையின் அலங்காரங்களாகும். உமது இறைவன் (மறுமையில் உமக்கு) வழங்கவிருப்பது சிறந்ததும் நிலையானதும் ஆகும். அல்குர்ஆன் 20:131


ஆனாலும் இவ்வுண்மைகளை ஊன்றிக் கவனித்து உணர முடியாதவர்கள் இந்த உலக வாழ்க்கையில் வசதி வாய்ப்புகளில் மயங்கி விடுகின்றனர்.

SURA QIYAMAH...

August 6, 2009

கீழக்கரை அல் மத்ரஸத்துன் நிஸ்வானித் தாருஸ்ஸலாம் பத்தாம் ஆண்டு நிறைவு விழா

கீழக்கரை அல் மத்ரஸத்துன் நிஸ்வானித் தாருஸ்ஸலாம் பத்தாம் ஆண்டு நிறைவு விழா

கீழக்கரை : கீழக்கரை அல் மத்ரஸத்துன் நிஸ்வானித் தாருஸ்ஸலாம் பத்தாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் 5 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா 07.08.2009 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு சாலை தெரு பெண்கள் தொழுகைப் பள்ளியில் நடைபெற இருக்கிறது.

கீழக்கரை ஹமீதிய்யா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சி. ஆமினா விழாவிற்கு தலைமை தாங்குகிறார்.

ஆயிஷா சித்தீக்கா ஆலிமா எஸ். ஹமீதா மஹ்ஃபூனா சிற்ப்புரை நிகழ்த்துகிறார்.

அல் மத்ரஸத்துன் நிஸ்வானித் தாருஸ்ஸலாம் நிர்வாகி சபீன் அமீர் பட்டம் வழங்குகிறார்.

அஜீஸா காஸிம் மற்றும் தாஜுன்னிஸா நூர்தீன் பரிசு வழங்குகின்றனர். இவ்விழா சிறப்புற நடைபெற துஆச் செய்திட நிர்வாகிகள் கேட்டுக் கொள்கின்றனர்.

குறிப்பு : இவ்விழா பெண்களுக்கு மட்டுமே

From: ameer
Date: Wed, Aug 5, 2009 at 7:24 பம்
Subject: RE: Madrasathun Niswanil Darussalam இன்விடடின்

This is the invitation for our Girls Madarasa located at my place that was established by my elder daughter Mrs. Duraiya Najmudeen who is residing at Germany with her family. Presently my wife is the Correspondent and running this Madarasa since 10 years with grace of Allah (W.S.W.T). We do not agree any fund from outside but Allah’s support only. Please make Du’a for us!

Regards,
Ameer