இன்று முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மையினர் இறந்துபோன அவுலியாக்களான இறைநேசர்களிடம் உதவி தேடலாம்; அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதே என்ற தவறான நம்பிக்கையில் “தர்கா” என்ற பெயரால் படையெடுக்கின்றனர். இந்தப் பெரும்பாலான சமாதிகளுக்கு(தர்கா) சரியான வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்பது ஒரு புறம் இருக்க, அந்த சமாதிகளில் போய் தங்கள் தேவைகளுக்காக உதவி தேடுவதை அவர்களும், அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள முகல்லிது மவ்லவி புரோகிதர்களும் சரி கண்டு நியாயப்படுத்தி வருவது பெரும் வேதனை தரும் விஷயமாகும். காரணம் முஸ்லிம் சமுதாயத்தின் மிகப் பெரும் கொண்ட மக்கள் இந்த வழிகேட்டின் காரணமாக நாளை மறுமையில் தங்களின் இருப்பிடத்தை நரகில் தேடிக்கொள்கின்றனர் என்று தெளிவாகக் கூறும் அல்குர்ஆன் அல்கஹ்ஃபு 18:102-106 இறைவாக்குகளை - எச்சரிக்கைகளைத் துணிவுடன் இவர்கள் நிராகரிக்கின்றனர் என்பதுதான்.
அதற்கு மேலும் வேதனை தரும் விஷயம் இந்த முகல்லிது மவ்லவிகள், கேவலம் அழிந்து போகும் இந்த அற்ப இவ்வுலக வாழ்க்கையில் தங்களின் ஒரு ஜான் வயிற்றை நிரப்ப, இவ்வளவு தரம் தாழ்ந்து அறிவுக்கே பொருந்தாத கற்பனை உதாரணங்களைக் கூறி அல்லாஹ் அல்குர்ஆன் லுக்மான் 31:6 -ல் எச்சரித்திருப்பதையும் கண்டு கொள்ளாமல் மனம் துணிந்து மக்களை ஏமாற்றி வருவதுதான்.
மனிதர்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்கி, (மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழிகெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிசாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்) இத்தகையயோருக்கு இழிவு தரும் வேதனையுண்டு. (31:6)
தர்கா, தரீக்கா முகல்லிது மவ்லவிகளின் இப்படிப்பட்ட அறிவீனமான வாதம் வருமாறு:
அல்லாஹ் ஒருவன்தான் நம்முடைய ரப்பு; அவனே நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்து தருகிறவன் என்பதில் உங்களை விட எங்களுக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது. இந்த அவுலியாக்களின் மூலம் தருகிறான் என்றே கூறுகிறோம். நம்முடைய தேவைகளுக்காக அவுலியாக்களிடம் உதவி தேடிச் செல்வது தவறு என்றால், நமது மருத்துவ தேவைக்காக டாக்டர்களிடம் உதவி தேடிச் செல்வதும் தவறுதான்; வழக்கு சம்பந்தமாக வக்கீல்களிடம் உதவி தேடுவதும் தவறுதான்; கட்டிட தேவைக்காக பொறியாளர்களிடம் உதவி தேடுவதும் தவறுதான்; பணக்கஷ்டம் ஏற்பட்டால், நம்மைப் போன்ற மற்ற மனிதர்களிடம் உதவி தேடுவதும் தவறுதான்; இப்படிப்பல தரப்பட்ட நம்முடைய தேவைகளுக்காக மற்றவர்களிடம் உதவி தேடாமல் அல்லாஹ்விடம் மட்டுமா உதவி தேடுகிறோம்? இங்கெல்லாம் அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுவதை சரி கண்டு ஏற்கும் இவர்கள், அவுலியாக்களிடம் உதவி தேடுவதை மட்டும் ஏன் மறுக்கிறார்கள்? அதை ஷிர்க்(இணை வைப்பு) என்கிறார்கள். நாங்கள் ஷிர்க் செய்கிறோமா? அல்லது அவர்களுக்குக் கிறுக்குப்பிடித்திருக்கிறதா? என்று கேட்டு தங்களை நம்பியுள்ளவர்களை ஏமாற்றி நரகில் தள்ளுகிறார்கள். அந்த அப்பாவி மக்களும் தங்களின் சிந்தனையை இந்த முகல்லிது மவ்லவிகளிடம் கடன் கொடுத்து விட்டு, அல்லாஹ் 31:6-ல் கூறியுள்ளது போல், அவர்களின் அறிவில்லாத வீணான பேச்சுக்களை இறைவாக்காக ஏற்று, அதன்படிச் செயல்பட்டு, நாளை மறுமையில் தங்களின் இருப்பிடத்தை நரகில் தேடிக் கொள்கின்றனர்.
இந்த முகல்லிது புரோகித மவ்லவிகள் மனந்துணிந்து அறிந்த நிலையில் செய்யும் ஹிமாலயத்தவறு என்ன தெரியுமா? அல்லாஹ்விடம் மட்டுமே கேட்கக் கூடிய உதவியான “இஸ்திஆனத்” (பார்க்க அல்ஃபாத்திஹா 1:4) என்பதற்கும், மனிதர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக்கொள்ளும் “தஆவுன்” (பார்க்க அல் மாயிதா 5:2) என்பதற்குமுள்ள ஹிமாலய வேறுபாட்டை தெரிந்திருந்தும் தெரியாதது போல் நடிப்பதுதான். இதையும் அல்லாஹ் அல்குர்ஆன் அல்பகரா 2:75 -ல் “இவர்களில் ஒரு சாரார் இறைவாக்கைக் கேட்டு, அதை விளங்கிக் கொண்ட பின்னர், தெரிந்து கொண்டே அதை மாற்றி விட்டார்கள்” என்றும், அல்குர்ஆன் பக்ரா 2:146 மற்றும் அன்ஆம் 6:20-ல் கூறுவதுபோல் சத்தியத்தை அறிவார்கள்; அறிந்த நிலைமையிலேயே அதை மறைப்பார்கள் என்றும் அப்பட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளான்.
எனவே எமது இந்த விளக்கங்கள் இந்தப் புரோகித மவ்லவிகளின் உள்ளங்களில், அவர்கள் புரோகிதத்தில் நிலைத்திருக்கும் வரை, அதாவது மார்க்கத்தைத் தங்களின் வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருக்கும் வரை கடுகளவும் மாற்றத்தை ஏற்படுத்தாது, இதை அல்குர்ஆன் யாஸீன் 36:21 இறைவாக்கு உறுதிப்படுத்துகிறது. எனவே அவர்கள் பின்னால் செல்லும் முஸ்லிம்களே இந்த விளக்கங்களை நடு நிலையோடு படித்து சிந்தித்து விளங்கி நேர்வழி பெற முன் வரவேண்டும்.
சூரத்துல்ஃபாத்திஹா 1:4 -ல் காணப்படும் “இஸ்திஆனத்” என்ற உதவி பரஸ்பரம் ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் உதவி அல்ல; மேலும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைக்கும் உதவி நினையாபுரத்திலிருந்து கிடைப்பதாகும். அதற்குரிய காரணகாரியத்தைத் துள்ளியமாக அறிய முடியாது. இந்த உதவியை அல்லாஹ் அல்லாத யாரிடமும் அவர்கள் இறந்து போன அவுலியாக்களாக இருந்தாலும், உயிரோடிருப்பவர்களாக இருந்தாலும் கேட்க முடியாது. அது ஷிர்க்காகும்; இணை வைப்பாகும். அதற்கு மாறாக “தஆவுன்” என்ற உதவி உயிரோடிருப்பவர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக்கொள்வதாகும். 5:2 இறைவாக்கைப் படித்துப் பார்த்தால் இது தெளிவாக விளங்கும். இந்த உதவி காரண காரியங்களுடனேயே நிறைவேறும்.
உதாரணமாக ஒரு மருத்துவரிடம் சென்று நமது வியாதி பற்றி முறையிடுகிறோம். அவர் காது கொடுத்து கேட்கிறார். தனது சந்தேகங்களை வாய்திறந்து கேட்கிறார். பரிசோதனைக்கருவிகள் மூலம் பரிசோதித்து விளங்குகிறார். வியாதியை முடிவு செய்து மருந்து தருகிறார். அதற்குரிய பணத்தைப் பெற்றுக் கொள்கிறார். அவர் கொடுத்த மருந்தை அல்லது கடையில் வாங்கி அதைச் சாப்பிடுகிறோம். இவை அனைத்தும் காரண காரியங்கள். இந்த மருத்துவரிடம் ஒவ்வொருவரும் தனித்தனியாகச் சென்று அவரிடம் வியாதியைச் சொல்லி வைத்தியம் செய்து கொள்கிறோம்.
நோயாளிகளில் இருவர் கூட ஒரே நேரத்தில் அவர்களின் வியாதி பற்றி முறையிட்டால், அவரால் அதைக் கேட்கவும் முடியாது; முறையாக விளங்கி மருந்து தரவும் முடியாது. இந்த நிலையில் ஏக காலத்தில் பலர் முறையிட்டால் அவரது நிலை என்னவாகும்? அதுபோல் அந்த மருத்துவர் நனடறாகத் தூங்கிக்கொண்டிருக்கும் போதும், நோயாளியின் குறைபாட்டைக் கேட்டு அதற்கு மருத்துவம் செய்ய முடியாது.
இந்த பலகீனங்கள் மருத்துவர், வழக்குரைஞர், பொறியாளர் இதுபோல் உதவி செய்யும் அனைத்து மனிதர்களிடமும் காணப்படவே செய்யும். ‘தஆவுன்’ என்ற பரஸ்பர உதவி செய்தலின் நிலை இதுதான்.
இன்னும் ஓர் உதாரணம்:
இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் அவுலியாவை - இறைநேசரையே எடுத்துக் கொள்வோம். அவர் மக்களிடம் மிகமிக அதிகமாக அன்பு காட்டுகிறவர். தன்னிடம் வந்து யார் எந்த உதவி கேட்டாலும் மறுக்காமல் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து கொடுப்பவர். மக்களுக்கு உதவி செய்வதையே தனது கொள்கையாகக் கொண்டவர். அப்படிப்பட்ட உயர்ந்த இறைநேசர்; அவரிடம் போய் முறையிட்டு உதவி தேடுகிறவர்கள் ஒவ்வொருவராக, தனித்தனியாக மட்டும் சென்று தான் உதவி கேட்க வேண்டும். எல்லோரும் ஒரே நேரத்தில் உதவி கேட்டால், யாருடைய அழைப்பையும் அவரால் கேட்க முடியாது என்பதையும் இந்த மவ்லவிகள் மறுக்க முடியாது.
மேலும் அந்த அவுலியா - இறைநேசர் மரணிக்கவில்லை. சிறு மரணம் என்று சொல்லக்கூடிய கடுமையான உறக்கத்தில் இருக்கிறார். இந்த நிலையில் யாரும் கூட்டாக அல்ல தனியாக அவரது தலைமாட்டில் போய் நின்றுகொண்டு, தங்களுடைய கஷ்டங்களைக் கூறி உதவி கேட்கிறார்கள் கஷ்டங்களைக் கூறி உதவி கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த அவுலியாவால் அவர்களில் இந்த தனி மனிதரது அழைப்பையேனும் செவியேற்று அவருக்கு வேண்டிய உதவியைச் செய்ய முடியுமா? நிச்சயமாக தூக்கத்தில் அவரால் உதவி செய்ய முடியாது என்பதையும் இந்த புரோகித மவ்லவிகளால் மறுக்க முடியாது.
இந்த நிலையில் அந்த அவுலியா பெரிய மெளத் என்ற நிரந்தர மரணத்தை அடைந்து, அவருக்காக ஜனசா தொழுகை தொழுது, குழி தோண்டி மண்ணுக்குள் அடக்கம் செய்த பின்னர், அந்தப் புதைகுழியின் தலைமாட்டில் போய் நின்று கொண்டு உதவி தேடினால் அவரது சடலத்தால் உதவி செய்ய முடியுமா? நிச்சயமாக முடியாது என்பதையும் மறுக்க முடியாது.
அப்படியானால் இந்த முகல்லிது மவ்லவி புரோகிதர்கள் இறந்து அடக்கம் செய்யப்பட்டு, மண்ணுக்கடியில் சென்றவர்களிடம் உதவி தேட முடியும் என்று கூறுவது எந்த அடிப்படையில்? தஆவுன் என்ற பரஸ்பர உதவி அடிப்படையிலா? அல்லது படைத்து, உணவளிதது, பாதுகாத்து வரும் எஜமானன் அல்லாஹ்விடம் மட்டும் கேட்கும் இஸ்திஆனத் என்ற காரண காரியங்கள் காண முடியாத உதவியா? ஆம்! இந்த மூட முகல்லிது மவ்லவி புரோகிதர்கள், அவுலியாக்களுக்கும் தெய்வீக சக்தி இருக்கிறது. அத்துவைதம் என்ற மனிதனும் இறைவனுடன் இரண்டறக் கலந்து ஒன்றாக முடியும் என்ற இறைவனுக்கு இணை வைக்கும் (வஹ்தத்துல்வுஜூது) மூட நம்பிக்கையின் அடிப்படையில், ‘இஸ்திஆனத்’ என்ற அல்லாஹ்விடம் மட்டும் கேட்கும் உதவியைத்தான் இறந்து அடக்கம் செய்யப்பட்ட அவுலியாக்களிடம் கேட்க மக்களைத் தூண்டிவருகின்றனர்.
அல்குர்அன் 18:102 -106 இறை எச்சரிக்கைகளின்படி இஸ்திஆனத் என்ற அல்லாஹ்விடம் மட்டும் கேட்க வெண்டிய உதவியை, அவுலியாக்களிடம் கேட்பதன் மூலம், இறந்து போன் அந்த அவுலியாக்களை தங்களின் பாதுகாவலர்களாக - உதவி செய்பவர்களாக நம்புவதன் மூலம் இறை நிராகரிப்பவர்களாகி - காஃபிர்களாகி நரகம் புகும் நிலைக்கு ஆளாகிறார்கள். அவர்களின் தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ், தான தர்மம் இவை அனைத்தும் ஏற்கப்படாது. அவற்றிற்கு எவ்வித மதிப்பும் இல்லை. அவை அனைத்தும் வீணாகி விடும். நரகில் எறியப்படுவார்கள். அவர்களுக்காக நரகத்தைத் தயார் செய்து வைத்திருப்பதாக அல்லாஹ் தெளிவாக நேரடியாகவே இந்த 18:102 -10 வசனங்களில் கூறி எச்சரிக்கிறான்.
இந்த 18:102-106 இறைவாக்குகளை படித்துக்காட்டி தர்கா சடங்குகள் எவ்வளவு பெரிய பாராதூரமான கொடிய இணைவைக்கும் குற்றம் என்று சொன்னவுடன் இந்த முகல்லிது புரோகித மவ்லவிகள் என்ன சொல்லி மக்களை ஏமாற்றவார்கள் தெரியுமா?
இந்த 18:102 இறைவாக்கு “நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(தம்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்களா”? என்று ஆரம்பிப்பதைக் காட்டி, இது முஸ்லிம்களுக்கல்ல; காஃபிர்களுக்கு இறங்கிய ஆயத்து; முஸ்லிம்களைக் கட்டுப்படுத்தாது என்று கூறி அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றி, வஞ்சித்து வயிறு வளர்த்து வருகின்றனர். சுய சிந்தனையற்ற முஸ்லிம்களும், இவர்களின் இந்த நயவஞ்சகக் கூற்றை அப்படியே நம்பி, கத்தம், ஃபாத்திஹா, கூடு, கொடி, கந்தூரி, மீலாது, மெளலூது, யாகுத்பா, ஸலாத்து நாரியா என்ற நெருப்பு(நரக) ஸலவாத் இத்தியாதி, இத்தியாதி என நரகிற்கு இட்டுச் செல்லும் வழிகேட்டு சடங்குகளை பக்தி சிரத்தையோடு செய்து வருகின்றனர்.
இந்த புரோகித முகல்லிது மவ்லவிகளின் கூற்றுப்படியே, அல்லாஹ் நிராகரிப்பவர்கள் - காஃபிர்கள், அல்லாஹ் நிராகரிப்பவர்கள் - காஃபிர்கள் என்று சுட்டிக்காட்டுவது யாரைத் தெரியுமா? இப்றாஹீம் (அலை) இஸ்மாயீல்(அலை) ஆகிய சிறப்புக்குரிய இரண்டு நபிமார்களின் நேரடி வாரிசுகளாகும். அவர்கள், எந்த இப்றாஹீம்(அலை) அவர்களின் மார்க்கத்தை நம்மைப் பின்பற்றும்படி அல்லாஹ் கட்டளையிட்டுள்ளானோ அந்த நபி இப்றாஹீம்(அலை) அவர்களின் நேரடி வாரிசுகள். எங்கள் தந்தை இப்றாஹீம்(அலை) அவர்களின் மார்க்கமான இஸ்லாத்தைப் பின்பற்றும், முஸ்லிம்கள் நாங்கள் என்று சொல்லிக் கொண்டு தான் உண்மையான அவுலியாக்களை - இறைநேசர்களை (இவர்கள் அவுலியாக்களாக்கியுள்ள குடிகாரர்களையும், பயித்தியங்களையும், கஞ்சா மஸ்தான், பீடி மஸ்தான், பீங்காட்டப்பா போன்றவர்களையும், கழுதைகளையும், கட்டைகளையும் அல்ல) தங்களின் பாதுகாவலர்களாகக் கொண்டு அவர்களிடம் உதவி தேடி வந்தனர். இந்த உண்மையை 10:18, 39:3 இறைவாக்குகளைப் பொருள் அறிந்து படித்து விளங்குகிறவர்கள் மறுக்காமல் ஒப்புக் கொள்வார்கள்.
இப்போது நாம் சிந்திக்க வேண்டும். தங்களை முஸ்லிம்கள் என்றும், தங்களின் தந்தை இப்றாஹீம்(அலை) அவர்களின் மார்க்கமான இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்ட குறைஷ்களை அல்லாஹ் காஃபிர் - நிராகரிப்பாளர்கள் என்று ஏன் கூறுகிறான்?
அப்படி நாம் சிந்தித்து விளங்கினால் நாம் புரிந்து கொள்ள முடியும். அதாவது தங்களை முஸ்லிம்கள் என்றும், இப்றாஹீம்(அலை) அவர்களின் மார்க்கமான இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டு, அல்லாஹ்வின் அடியாளர்களான அவுலியாக்களைத் தங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் இடையீட்டாளர்களாக (MEDIATOR) அவர்களிடம் உதவி கோரினால் அல்லது அவர்களின் பொருட்டால் கேட்டால், அவர்கள் நிராகரிப்பாளர்களாக - காஃபிர்களாக ஆகிறார்கள். நரகத்திற்குரியவர்களாக ஆகிறார்கள். இதையே அல்குர்ஆன் 18:102 -106 இறைவாக்குகள் கடுமையாக எச்சரிக்கின்றன.
தன்னை முஸ்லிம் என்றும் இஸ்லாம் என்ற நேரிய மார்க்கத்தை மட்டுமே பின்பற்றுகிறேன் என்று சொல்லிக் கொள்ளும் உண்மை முஸ்லிம் தனக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் அவுலியாக்களை ஒருபோதும் கொண்டு புகுத்தமாட்டார். உங்கள் பிடரி நரம்பைவிட நான் உங்களுக்கு நெருக்கமானவனாக இருக்கிறேன்; என்னிடமே உதவி தேடுங்கள் ‘இஸ்திஆனத்’ (பார்க்க அல்குர்ஆன் 1:4, 50:16, 2:45,153) என்று அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைகளைப் புறக்கணிக்காமல், அவற்றை மதித்து தன்னுடைய எந்தத் தேவையாக இருந்தாலும் அதை அல்லாஹ்விடமே முறையிடுவார். உலகக் காரியங்களில் இடைத்தரகர்களைப் பிடித்து குறுக்கு வழிகளில் - தவறான வழிகளில் லஞ்சம் கொடுத்து காரியங்களைச் சாதித்துக் கொள்வது போல், அரசையும், அதிகாரிகளையும் ஏமாற்றுவது போல், அவுலியாக்களிடம் உதவி தேடி உண்டியலில் லஞ்சமாகக் காசை போட்டு குறுக்கு வழியில் படைத்த அல்லாஹ்வை ஏமாற்றி விட முடியும் என்று குருட்டுத்தனமாக நினைக்க மாட்டார்.
மனிதர்களுக்கிடையே இடம்பெறும் ‘தஆவுன்’ என்ற பரஸ்பர உதவிக்கும், அல்லாஹ்விடம் மட்டுமே கேட்கும் இஸ்திஆனத் என்ற உதவிக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல், அல்லது அல்லாஹ் 2:146, 6:20 இறைவாக்குகளில் கூறி இருப்பது போல் அவர்கள் பெற்ற குழந்தையை அறிவதுபோல் நன்கு அறிந்த நிலையில் மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பவர்களாக மட்டுமே இருக்க முடியும் இந்த முகல்லிது புரோகித மவ்லவிகள்.
நாங்கள்தான் அரபி கற்ற மேதைகள்; எங்களுக்குத்தான் குர்ஆன், ஹதீஸ் தெளிவாக விளங்கும் எனத் தம்பட்டம் அடிக்கும் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி போன்ற மவ்லவி புரோகிதர்கள் ்இஸ்திஆனத்’ என்ற உதவிக்கும் ‘தஆவுன்’ என்ற உதவிக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் பிதற்றுகிறார்களா? அல்லது நன்கு அறிந்த நிலையில் மக்களை ஏமாற்றி வஞ்சித்து நரகில் தள்ளுகிறார்களா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
ஹிஜ்ரி 400 க்குப்பிறகே மத்ஹபுகள் கற்பனை செய்யப்பட்டன; அதன்பின்னர் ஹிஜ்ரி 600 வாக்கில் தரீக்காக்கள் கற்பனை செய்யப்பட்டன. அதன்பின்னரே அதாவது ஹஜ்ரி 600க்குப் பிறகே இந்த தர்கா - சமாதிச் சடங்குகள் அனைத்தும் முஸ்லிம்களிடையே அரங்கேறின. நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் அதாவது ஹிஜ்ரி 11க்குப் பிறகு மார்க்கத்தில் ஓர் அணுவளவும் புதிதாகச் சேர்க்க முடியாது என்பதைத் தெள்ளத் தெளிவாக நெற்றியடியாக 5:3, 7:3, 3:19,85, 33:21,36,66,67,68 இறை வாக்குகள் கூறிக்கொண்டிருக்க இத்தனை குர்ஆன் வசனங்களையும் நாளை மறுமையில் நபி(ஸல்) அவர்கள் முறையிடுவதாக 25:30-ல் உள்ளபடி அப்பட்டமாகப் புறக்கணித்துவிட்டு தங்கள் சொந்த யூகங்களையும், கற்பனைகளையும் கூறி (பார்க்க 31:6) மக்களை வழிகெடுக்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு சுமார் 200 தலைமுறைகளுக்குப் பிறகே தோன்றிய தர்கா -சமாதி சடங்குகளை நியாயப்படுத்தி வருகிறார்கள் என்றால் இவர்களது முடிவும் இவர்களைப் பின்பற்றிச் செல்லும் பெருங்கொண்ட முஸ்லிம் மக்களின் நிலையும் அல்லாஹ் 2:159-162, 18:102-106,33:36,66,67,68 இறைவாக்குகளில் கூறி இருப்பது போல், அல்லாஹ்வின் வாக்குகள் நிறைவேறுமா? இல்லையா? என்பதை மக்களே முடிவு செய்யுங்கள்.
No comments:
Post a Comment