June 1, 2009

தொழுகை

அல்லாஹ் கூறுகிறான்:

நிச்சயமாக தொழுகை முஃமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக விதிக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 4:103)

இஸ்லாத்தின் முதற்கடமை தொழுகையாகும். இது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். பருவமடைந்த, ஆண், பெண் அனைவரின் மீதும் தொழுகை கடமையாகும்.

அல்லாஹ் நமக்களித்துள்ள எண்ணிலடங்கா அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் வணக்கமே இத்தொழுகை. எனவே அதனை கடமை உணர்வுடனும் நன்மையை எதிர்பார்த்தும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் முறையாக நிறைவேற்றவேண்டும்.

இந்தக் கடமை மனிதன் மரணிக்கும் போதுதான் முடிவடைகிறது. ஊரில் இருக்கும் போதும் பயணத்தில் இருக்கும் போதும் ஆரோக்கியமாக இருக்கும் போதும் நோயாளியாக இருக்கும் போதும் கூட தொழுகையை அதன் நேரத்தில் நிறைவேற்றுவது அவசியமாகும்.

தொழுகையை நிலைநாட்டுமாறு சுமார் 80 இடங்களில் அல்லாஹ் குர்ஆனில் கட்டளையிட்டுள்ளான். நபி(ஸல்)அவர்கள் உயிர் பிரியும் கடைசி வேளையில் கூட தொழுகையை வலியுறுத்தினார்கள். முஸ்லிமுக்கும் முஸ்லிம் அல்லாதவருக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு தொழுகைதான். தொழுகை மானக்கேடான, பாவமான காரியங்களை விட்டும் மனிதனைத் தடுக்கின்றது. ஒரு தொழுகை மற்றொரு தொழுகைக்கு மத்தியிலுள்ள சிறிய பாவங்களுக்கு பரிகாரமாக அமைகிறது.

மறுமையில் தொழுகையைப் பற்றித்தான் முதலாவதாக விசாரிக்கப்படும். தொழுகையை பேணித் தொழுதவருக்கு அது மறுமையில் பிரகாசமாகவும் ஒளியாகவும் வரும். தொழுகையை பேணித் தொழாதவன் மறுமையில் அல்லாஹ்வின் எதிரிகளான ஃபிர்அவ்ன், ஹாமான், உபை பின் கலப் ஆகியோருடன் இருப்பான்.

தொழுகையை முறையாகப் பேணியவர்கள் நிச்சயமாக ஈருலகிலும் வெற்றியடைந்து விட்டார்கள். மனஅமைதியை பெற்று விட்டார்கள்

No comments:

Post a Comment