September 9, 2009

வாக்குறுதி

இஸ்லாமிய நேர்வழியை முற்றிலும் கடைபிடிக்கும் முஸ்லிம் ஒப்பந்தத்தைப் பேணி, வாக்குறுதியை நிறைவேற்றுவார்.

வாக்கை நிறைவேற்றுவது முஸ்லிமின் சமுதாய வெற்றிக்கான அடிப்படையும் மனிதகுலத்தின் உயர்வுக்கான வழியுமாகும்.

முஸ்லிம் வாக்குறுதியைப் பேணுவதில் முதன்மையானவராக இருப்பார்.

வாக்குறுதியை நிறைவேற்றுவது இஸ்லாமிய நற்பண்புகளில் தலையாயதாகும்.

ஒருவருடைய ஈமான் சீரானது என்பதற்கும், அவரது இஸ்லாம் அழகானது என்பதற்கும் இப்பண்பே சான்றாகும். அதை கடைபிடிப்பது ஈமானின் அடையாளமாகும். அதைப் புறக்கணிப்பது நயவஞ்சகத்தனத்தின் அடையாளமாகும்.

விசுவாசிகளே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளைப் பூரணமாக நிறைவேற்றுங்கள்... (அல்குர்அன் 5:1)

....உங்கள் வாக்குறுதியை நீங்கள் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள். எனென்றால், (மறுமையில்) வாக்குறுதியைப் பற்றி (உங்களிடம்) நிச்சயமாகக் கேட்கப்படும். (அல்குர்அன் 17:34)

இன்றைய காலகட்டத்தில் பல முஸ்லிம்கள் செய்து கொண்டிருப்பது போல ஒப்பந்தம், வாக்குறுதி என்பது காற்றில் பறக்கவிடப்படும் வார்த்தையல்ல. அல்லாஹ்விடம் விசாரணை செய்யப்படும் மிகப்பெரிய பொறுப்பாகும்.

நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையைப் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள்.... (அல்குர்அன் 16:91)

இவ்விடத்தில் மனிதர்களிடம் செய்யப்படும் உடன்படிக்கையை அல்லாஹ்வுடன் செய்யப்படும் உடன்படிக்கையைப் போன்று கூறப்பட்டுள்ளது. அதற்கு காரணம் உடன்படிக்கையின் முக்கியத்து வத்தையும், அதன் கண்ணியத்தையும், அது நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று என்பதையும் வலியுறுத்துவதேயாகும்.

விசுவாசிகளே! நீங்கள் செய்யாத காரியங்களை(ச் செய்வேன் என்று அல்லது செய்ததாக) ஏன் கூறுகிறீர்கள்? நீங்கள் செய்யாத காரியங்களைச் (செய்வேன் என்று அல்லது) செய்ததாகக் கூறுவது அல்லாஹ்விடத்தில் பெரும்பாவமாக இருக்கின்றது. (அல்குர்அன் 61:2,3)

வாக்குறுதிக்கு மாறுசெய்வதும் அதை நிறைவேற்றாமலிருப்பதும் அல்லாஹ் தனது அடியார்களிடம் மிகவும் வெறுக்கும் பெரும்பாவமாகும். அல்லாஹ் மேற்கூறிய திருவசனத்தின் ஆரம்பத்தில் கேள்வி எழுப்புவது அல்லாஹ்வின் கண்டனத்தை வெளிப்படுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும். 1)பேசினால் பொய்யுரைப்பான் 2)வாக்களித்தால் மாறு செய்வான் 3)நம்பினால் மோசடி செய்வான்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஸஹீஹ் முஸ்லிமின் ஒர் அறிவிப்பில்: "அவன் நோன்பிருந்தாலும் தொழுதாலும் அவன் தன்னை முஸ்லிம் எனக் கருதினாலும் சரியே'' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு முஸ்லிமின் இஸ்லாம் சீரடைவது தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்களைக் கொண்டு மட்டுமல்ல. மாறாக, இஸ்லாமிய வழிகாட்டுதலின்படி ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதன் மூலமே சீரடைகிறது. அப்போதுதான் உயர்ந்த நற்பண்புகளும், உன்னதமான நடைமுறைகளும் அவரிடம் பிரதிபலிக்கும்.
அல்லாஹ்வின் வரம்புக்குள் நின்று, ஏவலை செயல்படுத்தி, விலக்கலைத் தவிர்த்து வாழ்பவராகவும், அல்லாஹ்வின் நேர்வழியை எல்லா நிலையிலும் பின்பற்றுபவராகவும் இருப்பார். எனவே உண்மை முஸ்லிமின் வாழ்வில் பொய்யும், வாக்குறுதிக்கு மாறு செய்வதும் ஒப்பந்தங்களில் மோசடி செய்வதும் நிகழாது. இந்த கசப்பான உண்மையை வியாபாரிகளும் தொழிலாளர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் மக்களிடம் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடித்துத் தருவதாக வாக்களித்து, பிறகு அதை நிறைவேற்றுவதில்லை. அவர்கள் எதேனும் ஒரு விஷயத்தில் ஒப்பந்தம் செய்து, பிறகு அந்த ஒப்பந்தத்தை முறித்து விடுகிறார்கள். பொருள், ரகசியம், வாரிசுரிமை போன்ற விஷயங்களில் வைக்கப்பட்ட நம்பிக்கைக்கு மோசடி செய்து விடுகிறார்கள். இது போன்ற குணமுடையவர்கள் நயவஞ்சகர்களாவர். அவர்கள் தொழுதாலும், நோன்பிருந்தாலும், தங்களை முஸ்லிம்களாக எண்ணிக் கொண்டாலும் சரியே.

No comments:

Post a Comment