March 15, 2010

முஹ்யித்தீன் மவ்லித் ஒரு பார்வை

தமிழக முஸ்லிம்களில் பெரும்பாலோர் மவ்லிதுகள் எனும் பாடல்களைப் புனிதமான வணக்கமாக எண்ணி ஓதி வருகின்றனர். இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமைகளான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய கடமைகளை நிறை வேற்றாதவர்கள் கூட இந்த மவ்லிதுகளைப் பாடுவதை மட்டும் விடாப்பிடியாக நிறைவேற்றி வருவதிலிருந்து இதை அறியலாம்.

மிக முக்கியமான கடமையாகக் கருதப்படும் இந்த மவ்லிதுகள் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் புனிதமானவையா? அல்லது அனுமதிக்கப்பட்டவையா? அல்லது தடை செய்யப்பட்டவையா? இது பற்றி கண்டிப்பாக ஆய்வு செய்யப்பட வேண்டும்

எந்த ஒரு காரியமும் ஒரு வணக்கமாகக் கருதப்பட வேண்டுமானால் – அதைச் செய்வதால் மறுமையில் ஏதேனும் நன்மை கிடைக்கும் என்று நம்ப வேண்டுமானால் – அந்தக் காரியம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களால் கற்றுத் தரப்பட்டிருக்க வேண்டும் அல்லது அவர்கள் முன்னிலையில் அக்காரியம் நிகழ்ந்து அதை அவர்கள் அங்கீகரித்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத எந்தக் காரியமும் ஒரு வணக்கமாக – மறுமையில் நன்மை யளிப்பதாக ஆக முடியாது. இது இஸ்லாத்தின் அடிப்படை விதி.

இந்த விதியைப் புரிந்து கொள்வதற்கு மிகப் பெரிய ஆராய்ச்சி ஏதும் தேவையில்லை. ‘அல்லாஹ் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைத் தனது இறுதித் தூதராக அனுப்பி வைத்தான். அவர்கள் வழியாக முஸ்லிம்கள் செய்ய வேண்டிய அனைத்து வணக்கங்களையும் கற்றுத் தந்தான். அவர்களுக்குப் பின் எவருக்கும் வஹீ – இறைச் செய்தி – வர முடியாது” என்ற அடிப்படைக் கொள்கையை விளங்கியிருந்தால் போதும். இந்த விதியைப் புரிந்து கொள்ள முடியும்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்குப் பின் ஒரு வணக்கத்தை மற்றவர்களும் ஏற்படுத்தலாம் என்று யாரேனும் கருதினால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வணக்கங்களை முழுமையாகக் கற்றுத் தரவில்லை என்று அவர் கருதுகிறார். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்குப் பின் மற்றவர்களுக்கும் வஹீ வரக் கூடும் என்றும் அவர் கருதியவராகிறார்.

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நான் நிறைவாக்கி விட்டேன். எனது அருட்கொடை களை உங்களுக்கு முழுமையாக்கி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்குரிய வாழ்க்கை நெறியாக நான் அங்கீகரித்து விட்டேன். (அல்குர்ஆன் 5:3)

‘நமது உத்தரவின்றி யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்” என நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷh(ரலி) நூல்: முஸ்லிம் (3541)

‘நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்” எனவும் நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷh (ரலி) நூல்கள்: புகாரி 2697 முஸ்லிம் 3540

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழும் போதே இம்மார்க்கத்தை முழுமைப்படுத்தி விட்டதாக அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் கூறுகின்றான்.

மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது என்றால் என்ன பொருள்? அதுவும் அல்லாஹ்வே முழுமைப்படுத்தி விட்டான் என்று கூறினால் அதற்கு என்ன பொருள்? மார்க்கத்தில் எவையெல்லாம் உள்ளனவோ அவை ஒவ்வொன்றையும் நான் கூறி விட்டேன். புதிதாக எதையும் உருவாக்கிட அவசியமில்லை. அது கூடாது என்பதைத் தவிர இதற்கு வேறு பொருள் இருக்க முடியாது. அல்லாஹ்வால் நேரடியாக முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் மவ்லிது இருக்கவில்லை என்பதே மவ்லிதை நிராகரிக்கப் போதுமான காரணமாகவுள்ளது.

மேற்கண்ட இரண்டு நபிமொழிகளும் கூறுவது என்ன? நாம் எந்த ஒரு அமலைச் (நல்லறத்தைச்) செய்வதாக இருந்தாலும் அது பற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஏதும் கட்டளை பிறப்பித்திருக்கிறார்களா? என்று பார்க்க வேண்டும். அவர்களது கட்டளையில்லாமல் எந்த ஒரு அமலைச் செய்தாலும் அது அல்லாஹ்வால் நிராகரிக்கப்படும் என்பதைத்தான் மேற்கண்ட நபிமொழிகள் கூறுகின்றன. மவ்லிது ஓதுமாறு நாயகம்(ஸல்) அவர்கள் எந்தக் கட்டளையும் பிறப்பிக்காததே மவ்லிதை நிராகரிக்க மற்றொரு காரணமாக அமைகின்றது.

தமிழகத்தில் ரபீவுல் அவ்வல் மாதத்தில் சுப்ஹான மவ்லிதும், ரபீவுல் ஆகிர் மாதத்தில் முஹ்யித்தீன் மவ்லிதும் ஓதப்படுகிறது. ரபீவுல் ஆகிர் மாதத்தில் ஓதப்படும் முஹ்யித்தீன் மவ்லிது ஏன் ஓதப்படுகிறது? முற்காலத்தில் வாழ்ந்த அப்துல்காதிர் ஜீலானி என்ற பெரியாரை புகழ்வதற்காகவே இந்த மவ்லித் ஓதுகிறோம் என்று கூறுகின்றனர்.

அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் மிகச் சிறந்த மார்க்க மேதை! உயிர் பிரியும் வரை ஏகத்துவத்தை நிலைநாட்டப் போராடிய பெரியவர்! இஸ்லாத்தின் மேன்மைக்காக உழைத்த மார்க்க சீலர் என்று நாம் அவரை மதிக்கிறோம். அவரது சேவையை மெச்சுகின்றோம். ஆயினும் அவரது பெயரால் போலிகள் சிலர் இட்டுக்கட்டி அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்(ஸல்) அவர்களுக்கும் அப்துல் காதிர் ஜீலானி அவர்களுக்கும் மாற்றமாகக் கதையை புனைந்து முஹ்யித்தீன் மவ்லிதில் இடம்பெறச் செய்துள்ளனர்.

காயல்பட்டிணத்தைச் சார்ந்த மஹ்மூத் என்பவரால் சில ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதே இந்த முஹ்யித்தீன் மவ்லிது. முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களை அல்லாஹ்வின் துதருக்கு நிகராகவும் அல்லாஹ்வின் தூதரை விடச் சிறந்தவராகவும் காட்டும் வகையில் இந்த மவ்லிது அமைந்திருக்கிறது. சில வரிகள் அவரை அல்லாஹ்வுக்கு நிகராகக் காட்டும் வகையில் அமைந்திருக்கின்றன. அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் நிகழ்த்தியதாகக் கூறப்படும் அற்புதங்கள் குர்ஆன் ஹதீஸுடன் நேரடியாக மோதும் வகையில் அமைந்திருக்கின்றன. அவற்றில் சிலவற்றை நாம் காண்போம்.

அபுல் மஆலி என்பார் அப்துல் காதிர் ஜீலானியிடம் வந்து ‘என் மகனுக்குப் பதினைந்து மாத காலம் காய்ச்சல் விலகாமல் உள்ளது” என்றார். அதற்கு அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் ‘காய்ச்சலே! நீ எப்போது இவனைப் பிடித்தாய்? நீ ஹில்லா எனும் ஊருக்குச் சென்று விடு!’ என்று உன் மகனுடைய காதில் கூறு” என்றார்கள். அவர் கட்டளையிடப் பட்டவாறு செய்தார். அதன் பின் அவனுக்குக் காய்ச்சல் ஒரு சிறிதும் மீண்டும் வரவில்லை. பிறகு ஹில்லா எனும் ஊரில் உள்ள ராபிளிய்யா கூட்டத்தினர் அனேகர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டதாகச் செய்தி வந்தது. இவ்வாறு முஹ்யித்தீன் மவ்தில் கூறப்பட்டுள்ளது.

காய்ச்சல் பதினைந்து மாதகாலம் நீடிக்குமா? என்ற கேள்வியை விட்டு விடுவோம். மார்க்க அடிப்படையில் இந்தக் கதை நம்பத்தக்கது தானா? இந்தக் கதையில் அப்துல் காதிர் ஜீலானி நோய் தீர்க்கும் அதிகாரத்தைப் பெற்றிருப்பதாகவும் நோயை வழங்கும் அதிகாரம் பெற்றிருப்பதாகவும் காய்ச்சலுடன் அப்துல் காதிர் ஜீலானி பேசியதாகவும் கூறப்படுகிறது.

நோய்களை வழங்குபவனும் அதை நீக்குபவனும் அல்லாஹ்தான். இந்த அதிகாரத்தில் எவருக்கும் அல்லாஹ் எந்த உரிமையையும் வழங்கவில்லை. இது இஸ்லாத்தின் அடிப்ப டையான கொள்கை. இதை திருமறைக் குர்ஆனிலிருந்தும் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையிருந்தும் அறியலாம்.

‘நான் நோயுற்றால் எனக்கு நோய் நிவாரணம் வழங்குபவன் இறைவன் என்று இப்றாஹீம் (அலை) கூறியதாக அல்லாஹ் கூறுகிறான்.’ (அல்குர்ஆன் 26:80)

இந்த அப்துல் காதிர் ஜீலானியை விடப் பல கோடி மடங்கு சிறந்தவர்களான இப்றாஹீம் நபியவர்கள் அந்த அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரியது என்கிறார்கள். இவரோ நோய் தீர்க்கும் அதிகாரம் தமக்குரியது என்கிறார்.

‘இந்தப் பூமியிலோ உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.’ (அல்குர்ஆன் 57:22)

‘எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் விருப் பத்தைக் கொண்டே தவிர இல்லை.’ (அல்குர்ஆன் 54:11)

இந்த வசனங்களை நிராகரிக்கும் வகையில் இந்தக் கதை அமைந்தள்ளது. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனையோ நபித்தோழர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தினரில் பலர் நோய்வாய்ப்பட்டனர். அந்தச் சந்தர்ப்பங்களில் நபி(ஸல்) அவர்கள் அந்த நோயைப் பார்த்துப் பேசி வேறு ஊருக்கு அனுப்பவில்லை. ஏன்? நபி (ஸல்) அவர்களே கூட நோய்வாய்ப்பட்டார்கள்.

‘மனிதர்களின் இறைவா! இந்தத் துன்பத்தை நீக்கு! இறைவா! நீ நிவாரணம் அளிப்பாயாக! உனது நிவாரணம் தவிர வேறு நிவாரணம் இல்லை” என்று துஆச் செய்யுமாறு தான் அந்தச் சந்தர்ப்பங்களில் தம் தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர். (நூல்: புகாரி 5675)

நபி(ஸல்) அவர்களுக்குக் கூட இல்லாத அதிகாரம் அப்துல் காதிருக்கு வழங்கப்பட்டதாக இந்தக் கதை கூறுகிறது. அந்தச் சிறுவனிடம் இருந்த காய்ச்சலை நீக்கியதோடு இவர் நிற்கவில்லை. ஹில்லா என்று ஊருக்கு அந்தக் காய்ச்சலைத் திருப்பி விட்டாராம். கடுகளவு இஸ்லாமிய அறிவு உள்ளவன் கூட இதை நம்பமுடியாது.

முஹ்யித்தீன் மவ்லிதில் உள்ள மற்றொரு கதையை பாருங்கள்:

ஜும்ஆவுக்காக அப்துல் காதிர் நடந்து சென்ற போது அவரது ஆசிரியர் ஹம்மாத் அவரை நதியில் தள்ளினார். இதனால் மண்ணறையில் ஹம்மாதின் கை சூம்பி விட்டது. இதைக் கண்ட அப்துல் காதிர் அல்லாஹ்விடம் துஆச் செய்தார்கள். கப்ரில் உள்ள ஐயாயிரம் பேர் இதற்கு ஆமீன் கூறினார்கள்.

இந்த வரிகளுக்கு விளக்கவுரையாக முஹ்யித்தீன் மவ்லிதில் இடம்பெறும் ஹிகாயத் என்னும் பகுதியையும் பார்த்து விட்டு இந்தக் கதையில் வரும் அபத்தங்களை ஆராய்வோம்.

ஒரு நாள் நீண்ட நேரம் அப்துல் காதிர் வெயிலில் நின்றார். அவருக்குப் பின் ஏராளமான வணக்கசகாகள் நின்றனர். நீண்ட நேரம் நின்று விட்டுப் பின்னர் சந்தோஷத்துடன் அவர் திரும்பியதைப் பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர் ‘ஒரு நாள் நான் ஹம்மாதுடன் ஜும்ஆ தொழச் சென்றேன். நதியோரத்தை நாங்கள் அடைந்த போது என்னை அவர் நதியில் தள்ளினார். அப்போது நான் அல்லாஹ்வின் பெயரால் ஜும்ஆவின் குளிப்பை நிறைவேற்றுகிறேன்’ என்றேன்.

நதியிலிருந்து வெளியேறி அவர்களைத் தொடர்ந்தேன். அவரது சீடர்கள் என்னைப் பழித்தனர். அவர் அதைத் தடுத்தார். இன்று கப்ரில் ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டவராக நான் கண்டேன். எனினும் அவரது வலது கை சூம்பியிருந்தது. ஏன்? இப்படி என்று நான் கேட்டேன். அதற்கவர்இ இந்தக் கையால் தான் உம்மைத் தள்ளினேன். இதை நீர் மன்னிக்கக்கூடாதா? இதை நல்லபடியாக மாற்றுமாறு அல்லாஹ்விடம் துஆச் செய்யக்கூடாதா?’ என்று கேட்டார்.

நான் அல்லாஹ்விடம் கேட்டேன். ஐந்தாயிரம் வலிமார்கள் தங்கள் கப்ருகளிலிருந்து எழுந்து ஆமீன் கூறினார்கள். உடனடியாக அல்லாஹ் அந்தக் கையை நல்லபடியாக மாற்றிவிட்டான். அந்தக் கையால் அவர் என்னிடம் முஸாஃபஹாச் செய்தார் எனக் கூறினார். இந்தக் கதையிலுள்ள அபத்தங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

அபத்தம் – 1 ஜும்ஆ தினத்தில் குளிப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும். இறைநேசர்கள் இது போன்ற சுன்னத்துக்களை விட்டுவிட மாட்டார்கள். ஆனால் அப்துல் காதிர் குளிக்காமலே ஜும்ஆவுக்குச் சென்றிருக்கிறார். ஹம்மாத் அவரைப் பிடித்துத் தள்ளிய போதுதான் ஜும்ஆவின் குளிப்பை நிறைவேற்றுவதாகக் கூறியுள்ளார். பிடித்துத் தள்ளாவிட்டால் குளிக்காமலே சென்றிருப்பார். இதிருந்து அப்துல் காதிர் சுன்னத்தைப் பேணாதவர் என்று இந்த கதை கூறுகின்றது.

ஒரு சுன்னத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் ஈடுபாட்டுடனும் விருப்பத்துடனும் செய்யவேண்டும். வலுக் கட்டாயமாகத் தள்ளப்பட்டு செய்தால் அது சுன்னத்தை நிறை வேற்றியதாக ஆகாது. இந்த அடிப்படை விஷயம் கூட அப்துல் காதிருக்குத் தெரியவில்லை என்று இந்தக் கதை கூறுகின்றது.

அபத்தம் – 2 கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவரை அப்துல் காதிர் சந்தித்து உரையாடியதாக இந்தக் கதை கூறுகின்றது. இந்தச் சந்திப்பு கனவு போன்ற நிலையில் நடக்கவில்லை. மாறாக நேருக்கு நேர் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அப்துல் காதிரும் ஹம்மாதும் ஒருவரை மற்றவர் முஸாஃபஹா செய்தார்கள் என்பதிருந்து இதை அறியலாம். உயிருடன் இவ்வுலகில் இருப்பவர் இறந்தவருடன் நேருக்கு நேராகச் சந்திப்பது நடக்க முடியாதது என்று இஸ்லாம் கூறுகின்றது. எந்த ஆத்மாவுக்கு இறைவன் மரணத்தை ஏற்படுத்தி விட்டானோ அவற்றைத் தன் கைவசத்தில் வைத்துக் கொள்கிறான். (அல்குர்ஆன் 39:42)

அவர்கள் (மரணித்தது முதல்) திரும்ப எழுப்பப்படும் வரை அவர்களுக்குப் பின் ஒரு திரை இருக்கின்றது. (அல்குர்ஆன் 23:99)

இறந்தவர்களுக்கு இவ்வுலகில் வாழ்வோருக்குமிடையே எவ்விதத் தொடர்பும் கிடையாது என்பதை இவ்வசனங்கள் அறிவித்துள்ளன. கப்ரில் உள்ளவரை அப்துல் காதிர் ஜீலானி நேருக்கு நேராகச் சந்தித்ததும் அவருடன் உரையாடியதும் முஸாபஹா செய்ததும் பச்சைப் பொய் என்பதை இவ்வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

இந்தக் கதையில் ஹம்மாத் என்பவரின் கை சூம்பியிருந்ததைத் தவிர மற்றபடி அவர் நல்ல நிலையில் உயர்ந்த அந்தஸ்துடன் இருந்ததாகக் கூறப்படுகின்றது. நல்ல மனிதர்கள் கப்ரில் எந்த நிலையில் இருப்பார்கள் என்பதை நபி(ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர். அந்த விளக்கத்துக்கு மாற்றமாக இந்தக் கதை அமைந்திருக்கின்றது.

…பின்னர் நல்லடியாரின் மண்ணறை விரிவுபடுத்தப்படும். ஒளிமயமாக்கப்படும். பின்பு அவரை நோக்கி உறங்குவீராக எனக்கூறப்படும். ‘நான் எனது குடும்பத்தினரிடம் சென்று இந்த விபரங்களை கூறிவிட்டுத் திரும்பி வருகிறேன்” என்று அம்மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள் ‘நெருக்கமானவரைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு புது மணமகன் உறங்குவது போல் நீர் உறங்குவீராக! அந்த இடத்திலிருந்து உம்மை இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக!” என்று கூறுவார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா(ரலி) நூல்: திர்மிதி (991)

இது நபியவர்கள் தந்த விளக்கம். நல்லடியார்கள் உறக்க நிலையில் உள்ளனர். யாராலும் அவர்களை எழுப்ப முடியாது. மறுமை நாளில் இறைவனால் அவர்கள் எழுப்பப்படும் வரையிலும் அவர்கள் உறங்கிக் கொண்டே இருப்பார்கள் என்பதை இந்த ஹதீஸ்கள் அறிவிக்கின்றன. அப்துல் காதிர் ஹம்மாத் என்பவரை நேருக்கு நேர் சந்தித்தாகக் கூறுவது பொய் என்பதற்கு இந்த ஹதீஸ் சான்றாகும்.

அபத்தம் – 3 ஐயாயிரம் அவ்லியாக்கள் அப்துல் காதிரின் துஆவுக்கு ஆமீன் கூறியதாகவும் இந்தக்கதை கூறுகின்றது. அவ்லியாக்கள் உறக்கத்தில் இருப்பார்கள் என்ற மேற்கண்ட ஹதீஸிற்கு இது முரணாக உள்ளது. மேலும் இறந்தவரைக் கேட்கச் செய்ய நபியாலும் முடியாது என்ற குர்ஆனின் கூற்றுக்கு (30:52 35:22) முரணாக உள்ளது.

திருக்குர்ஆனுக்கும்இ ஆதாரப்பூர்வமான நபிமொழிகளுக்கும் நேரடியாக மோதக்கூடிய இதுபோன்ற அபத்தங்கள் நிறைந்த இந்த மவ்லிதை ஒரு உண்மையான முஸ்லிம் எழுதியிருப்பானா?! அல்லது அன்னியர்களின் சதிதிட்டமா? நமக்கு பொருள் தெரியாது என்பதால் மார்க்க அறிஞர்கள் ராகமிட்டுப் பாடி நம்மை ஏமாற்றுகிறார்களா?! என்பதையெல்லாம் நாம் தெளிவாக சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்!

அப்துல் காதிர் ஜீலானி அவர்களைக் கடவுள் நிலைக்கு உயர்த்தும் வகையில் இட்டுக்கட்டப்பட்ட கதைகளின் தொகுப்பே இந்த முஹ்யித்தீன் மவ்லிது. இஸ்லாத்தின் கடமைகள் எத்தனையோ இருக்கும் போது மார்க்கம் அனுமதிக்காத இணை வைப்புக்குக் கொண்டு சேர்க்கும் இந்த மவ்லித் தேவைதானா? என்பதை ரபியுல் ஆகிர் மாதமான இம்மாதத்தில் சிந்திப்போம்: செயல்படுவோம். அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் வழிநடத்தி செல்வானாக!
thanks for tntj....

No comments:

Post a Comment