May 7, 2009

பொருட்டால்

இன்று முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் அதாவது தர்கா, தரீக்கா, மத்ஹபு இவற்றை சரிகண்டு மார்க்கத்திற்கு உட்பட்டதாக ஏற்று நடப்பவர்கள். அவர்கள் அல்குர்ஆன் அல்அஃராஃப் 7:55

இறைக் கட்டளைக்கு நேர்முரணாக தொழுகைகளுக்குப் பின்னரும், மற்றும் தங்களின் கூட்டு செயல்பாடுகளிலும், சப்தமிட்டு (துஆ) பிரார்த்தனையாக இருந்தாலும், கூட்டு(துஆ) பிரார்த்தனையாக இருந்தாலும் அவற்றை முடிக்கும் போது நபி(ஸல்) அவர்களின் பொருட்டால், ஷுஹதாக்களின் பொருட்டால், அவலியாக்களின் பொருட்டால் எங்களின் இந்த துஆவை ஏற்று அருள்புரிவாயாக யா அல்லாஹ் என்று தங்களின் பிரார்த்தனைகளை முடிக்கிறார்கள்.

அவர்களில், அல்லாஹ்விடம் என்ன கேட்பது? இறந்து மண்ணுக்குள் சென்றுவிட்ட அவுலியாக்களிடமே நேரடியாகக் கேடடுப் பெற்றுக் கொள்ளலாம்; பெற்றுக் கொள்ள முடியும் என்ற கொள்கையுடையோரும் உண்டு. இவர்கள் தர்காக்களிலுள்ள கபுருகளுக்கே சுஜுது - சிரம் பணியலாம். அது அல்லாஹ்வுக்கு மாறு செய்வது ஆகாது என்று நம்பும் பரேல்வி (அகீதா) கொள்கை கொண்ட ஆக வழிகெட்ட கூட்டமாகும்.

ஆனால் இந்த பரேல்வி கொள்கை தவறு என்று கூறும் தப்லீஃக், தேவ்பந்தி(அகீதா) கொள்கை உடையோரும் நபிமார்களின், நாதாக்களின் , நல்லடியார்களின் பொருட்டால் கேட்பது மார்க்க முரணான -இறைவனுக்கு இணை வைக்கும் தீய செயல் என்பதை உணராதிருக்கிறார்கள். நேரடியாக அவர்களிடம் கேட்கவில்லையே! அவர்களின் பொருட்டால்(?) மன்னிக்கும்படி, நமது தேவைகளைப் பூர்த்தி செய்து தரும்படி படைத்த அல்லாஹ்விடம் தானே கேட்கிறோம் என்பதே அவர்களின் பதிலாக இருக்கிறது.

மேலும் தங்களின் இந்த இணை வைக்கும் தீய செயலுக்கு ஆதாரமாக அல்குர்ஆன் அல்மாயிதா 5:35 இறைவாக்கைத் திரித்து வளைத்து ஆதாரமாகத் தருகிறார்கள்.

அந்த இறைவாக்கு வருமாறு:
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சி - ஆதரவு வையுங்கள். அவன்பால் நெருங்குவதற்குரிய வழியை (வஸீலா) தேடிக் கொள்ளுங்கள்; அவனுடைய பாதையில் பாடுபடுங்கள்; அதனால் நீங்கள் வெற்றி பெறலாம். (5:35)

அல்லாஹ் இங்கு வஸீலா என்று குறிப்பிட்டிருப்பது அல்லாஹ்வின் நேசத்திற்குரிய நல்லடியார்கள் தாம்; நாம் பாவிகள், அந்த நல்லடியார்களின் பொருட்டால் அல்லாஹ் நம்மை மன்னித்து நமக்கு கிருபை செய்யலாம் என்பது அவர்களின் விளக்கமாகும். இந்த சுய விளக்கம் தவறு என்பதை பனீ இஸ்ராயீல் 17:57 இறைவாக்கைப் படித்துப் பார்ப்பவர்கள் எளிதாக விளங்க முடியும். அது வருமாறு:

(இறைவனையன்றி) இவர்கள் யாரை அழைக்கிறார்களோ அவர்கள், ஏன் அவர்களில் (இறைவனுக்கு) மிகவும் நெருக்கமானவர்கள் கூட தங்களை இறைவன்பால் (கொண்டு செல்ல) நற்கருமங்களையே செய்து கொண்டும், அவனது அருளை எதிர் பார்த்தும், அவனது தண்டனைக்கு அஞ்சியுமே இருக்கின்றனர். நிச்சயமாக உமது இறைவனின் தண்டனை அச்சப்படத் தக்கதாகவே உள்ளது. (17:57)

இந்த இறைவாக்கு அல்லாஹ்வுக்கு மிகமிக நெருக்கமாக இருக்கும் நபிமார்களும், இவர்கள் வாதிடுவது போல் நெருக்கமாக இருக்கும் அவுலியாக்களான நல்லடியார்களும் இறைவனின் அடிமைகளே! அவர்களே அல்லாஹ்வை அஞ்சி தங்களின் நற்கருமங்களைக் கொண்டு அல்லாஹ்வின் மன்னிப்பையும், ஆதரவையும், அருளையும் எதிர்பார்த்திருக்கின்றனர் என்பதை உறுதிப்படுத்துகிறது. அப்படிப்பட்டவர்கள் இவர்களுக்காக எப்படி பரிந்துரை செய்ய முடியும்? நபி இப்றாஹீம்(அலை) அவர்களின் நேரடி வாரிசுகளான குறைஷ்கள் அல்லாஹ் காஃபிர்கள ் நிராகரிப்பாளர்கள் என முத்திரை குத்தி அவர்களை நரகவாசிகள் என தெளிவான அறிவித்துள்ளான்.

அதற்குக் காரணமே அவர்கள் நபிமார்களையும், வலிமார்களையும் தங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரை (வஸீலா) செய்வார்கள் என நம்பி, அவர்களை அழைத்துப் பிரார்த்தித்ததே என்பதை யூனூஸ் 10:18, ஜுமர் 39:3, கஹ்ஃப் 18: 102-106 இறைவாக்குகள் தெள்ளத் தெளிவாக அறிவித்துக் கொண்டிருக்கின்றன. நபி இப்றாஹிம்(அலை) அவர்களின் நேரடி வாரிசுகளுக்கே இந்தக் கதி என்றால், நம் தமிழக முஸ்லிம்கள் குடிகாரர்களையும், பயித்தியங்களையும், கஞ்சா மஸ்தான்களையும், இதற்குக் கீழும் போய் கழுதைகளையும், குதிரைகளையும், கட்டைகளையும் அவுலியாக்களாக்கி, தர்காக்கள் கட்டி அங்கு போய் அவர்களை அழைத்துப் பிராாத்திப்பவர்களின் (வஸீலா) நாளை மறுமையின் நிலை என்னவாகும்? சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

இந்த பொருட்டால் (வஸீலா) என கேட்டு மக்களை வஞ்சிக்கும் புரோகித மவ்லவிகள் அதை நியாயப்படுத்தும் முறை மேலும் பெரியதொரு குற்றத்தைச் செய்ய வைக்கிறது. வஸீலாவை நியாயப்படுத்து முறை வருமாறு:

நாட்டின் பிரதம மந்திரியையோ, முதன் மந்திரியையோ, உயர் அதிகாரிகளையோ நேரடியாகச் சந்தித்து நமது தேவைகளை முறையிட முடியுமா? முடியாது. அவர்களுக்கு வேண்டப்பட்ட மந்திரி, எம்எல்ஏ., எம்.பி., எம்.எல்.சி., போன்றோரின் அறிமுகத்துடன் (வஸீலா) தான் அவர்களைப் போய் சந்திக்க முடியும். அது போல் தான் நாம் அவுலியாக்களின் அறிமுகத்துடன் (வஸீலா) தான் அல்லாஹ்விடம் நம்முடைய தேவைகளை முறையிட முடியும், என மனித அறிவை மயங்கச் செய்யும் காரணத்தைக் கூறுவார்கள் இந்தப் புரோகித மவ்லவிகள்.

சுய சிந்தனையற்ற மக்கு மக்களும் இந்த போலிக் காரணத்தைச் சரி கண்டு அந்த முகல்லிது பின்னால் அணிவகுப்பார்கள். இந்த அவர்களின் சுய விளக்கத்தில் எத்தனைக் கொடூர இணை வைக்கும் மாபாதகங்கள் நிறைந்து காணப்படுகின்றன என்பதை வரிசையாகப் பார்ப்போம். முதல் குற்றம் மாபெரும் வல்லமைமிக்க அல்லாஹ்வை அவனால் படைக்கப்பட்ட பிரதம மந்திரி, முதன் மந்திரி, உயர் அதிகாரி என மனிதர்களோடு ஒப்பிட்டு உதாரணம் கூறி இருப்பது கொடிய குற்றம்; அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் குற்றமாகும்.

இதோ குர்ஆன் கூறுகிறது காது கொடுத்து கேளுங்கள்: “வானங்களிலோ, பூமியிலோ இவர்களுக்காக யாதொன்றையும் அளிக்க சுதந்திரமும், ஆற்றலும் அற்றவற்றையா அல்லாஹ்வை விட்டு விட்டு இவர்கள் அழைக்கிறார்கள். (16:73)

ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன்; ஆனால் நீங்கள் அறியமாட்டீர்கள். (அந்நஹ்ல் 16:74)

இந்த இரண்டு இறைவாக்குகளையும் கவனமாகப் படித்து விளங்குகிறவர்கள் அன்று நபி(ஸல்) காலத்தில் தாருந்நத்வா மவ்லவிகள் அல்லாஹ்வைப் பற்றி எப்படிப்பட்ட அறிவீனமான உதாரணத்தைக் கூறி அன்றைய குறைஷ்களை ஏமாற்றி வஞ்சித்தார்களோ, அதே அறிவீனமான, இணை வைக்கும் உதாரணத்தையே இன்றைய முகல்லிது மவ்லவிகள் கூறி முஸ்லிம்களை வஞ்சித்துச் சுரண்டுகிறார்கள் என்பதை எளிதாக விளங்க முடியும்.
இந்த உதாரணத்தின் மூலம் இந்த முகல்லிது மவ்லவிகள் சர்வ வல்லமை மிக்க அல்லாஹ்வை எந்த அளவு இழிவுபடுத்தி கேவலப்படுத்துகிறார்கள். (நவூதுபில்லாஹ்) என்று வரிசையாகப் பார்ப்போம்.

அவர்கள் கூறும் 1. பிரதம மந்திரி, முதன் மந்திரி, 2. இடைப்பட்ட மந்திரி, எம்.எல்.ஏ. எம்.பி.எம். எல்.சி., 3. தேவைகள் நிமித்தம் இவர்களிடம் செல்பவர்கள் என்ற இந்த மூன்று நிலையிலும் இடம் பெற்றுள்ளவர்கள் மனிதர்களே! இங்கு தேவை உடைய மனிதன் தன்னைப் பற்றி அறிந்திருக்கும் அளவுக்கு இடையில் வரும் மந்திரி, எம்.எல்.எ., எம்.பி., எம்.எல்.சி., அறிந்திருக்கும் அளவுக்கு பிரதம மந்திரி, முதன்மந்திரி, உயர் அதிகாரி அறிய மாட்டார். அறியும் வாய்ப்பும் இல்லை. இங்கு அந்த தேவையுடைய மனிதன் நல்லவனா? கெட்டவனா? யோக்கியனா? அயோக்கியனா போன்ற விவரங்கள், அவனறிந்த அளவு இடையில் வருபவர்களுக்குத் தெரியாது. இடையில் வருகிறவர்கள் அறிந்த அளவுக்கு பிரதமமந்திரி, முதன்மந்திரிக்குத் தெரியாது.
இங்கு தேவையுடைய மனிதனைப் பற்றிய உண்மை விபரம் மேலே போக போக இறங்கு வரிசையில் செல்கிறது. எனவே இந்த இந்த அறிவீனமான உதாரணத்தின் மூலம் முறையிடும் மனிதனைப் பற்றிய உண்மைத் தகவல்கள் அவனறிந்த அளவுக்கு அல்லாஹ்வுக்குத் தெரியாது. எனவே உலகில் பிரதம மந்திரியை அல்லது முதன் மந்திரியை அவரது அறியாமையைப் பயன்படுத்தி, அவரை ஏமாற்றிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ள முடியும் என்று கூறும் இந்த முகல்லிது மவ்லவிகள் எவ்வளவு பெரிய வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பது புரிகிறதா?
அவர்கள் நினைப்பதற்கு நேர் மாறாக, இங்கு அல்லாஹ் , சம்பந்தப்பட்ட மனிதனைப்பற்றி அந்த மனிதனே அறிந்துள்ளதற்கும் மேலதிகமாகவே அறிந்தவனாக இருக்கிறான். அந்த மனிதனுக்கோ தான் இதுவரை செய்துள்ள நல்லது, கெட்டது மட்டுமே தெரியும். ஆனால் முக்காலமும் அறிந்த இறைவனோ அந்த மனிதன் இறப்பதற்கிடையில் செய்யவிருக்கும் நல்லது, கெட்டது அனைத்தையும் முற்றிலும் அற்ப அறிவையுடைய பிரதமந்திரி, முதன் மந்திரி இவர்களோடு, முழுமையான அறிவையுடைய இறைவனை ஒப்பிட்டுப் பேசும் முகல்லிது தர்கா, தரீக்கா தப்லீஃக், தேவ்பந்த் மவ்லவிகள் எந்த அளவு வழிகேடர்களாகவும், மக்களை வழிகெடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை சிறிது சுய சிந்தனையுடையவனும் விளங்கிக் கொள்ள முடியும்.

நபிமார்களை , நாதாக்களை , அவுலியாக்களை, பொருட்டாகக் கொண்டு உதவி தேடுவதற்கு இந்த முகல்லிது மவ்லவிகள் கூறும் இரண்டாவது காரணம் வருமாறு:
சாதாரண மக்களாகிய நாமெல்லாம் பாவங்களிலேயே மூழ்கி இருக்கும் பெரும் பாவிகள்; நாம் அல்லாஹ்வை நேரடியாக நெருங்கமுடியாது. நபிமார்கள், நாதாக்கள், அவுலியாக்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அல்லாஹ்வின் அன்பை அதிகமாகப் பெற்றவர்கள். எனவே அவர்களின் பொருட்டால் கேட்கும்போது அல்லாஹ் அவர்களுக்காக வேணும் மனமிறங்கி நமது தேவையைப் பூர்த்தி செய்து கொடுப்பான் என்பதாகும். அதாவது பாவத்தில் மூழ்கி இருக்கும் மக்கள் மீது அல்லாஹ்வை விட அவனது நல்லடியார்கள் அதிகமான அன்பும் அக்கறையும் உடையவர்கள் என்ற குருட்டு நம்பிக்கையை மக்களின் உள்ளங்களில் விதைக்கிறார்கள் இந்த முகல்லிது மவ்லவிகள்.

அல்லாஹ் படைத்த மனிதன்மீது அல்லாஹ்வை விட அவனது அவுலியாக்களுக்கு அதிக அன்பு இருக்கிறது என்று எண்ணுவதை விட மாபெரும் குற்றம் வேறு ஒன்று இருக்க முடியுமா? அல்லாஹ் ஜுமர் 39:53-ல் என்ன கூறுகிறான் என்று பாருங்கள்.

என் அடியார்களே! எவரும் வரம்பு மீறி தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய அருளில் அவர் நம்பிக்கை இழக்க வேண்டாம்; நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன் என்று நீர் கூறுவீராக. (39:53)

மேலும் ஃகாஃப் 50:16 என்ன கூறுகிறது என்று பாருங்கள். மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும் (அவன்) பிடரி நரம்பை விட நாம் அவனுக்ககு சமீபமாகவே இருக்கிறோம். (50:16)

பெற்ற தாய் தனது குழந்தையிடம் அன்பு செலுத்துவதை விட பல மடங்கு அல்லாஹ் தான் படைத்த மனிதனிடம் அதிகம் அன்பு காட்டுகிறவனாக இருக்கிறான். அந்த அன்புக்கு ஈடாக வேறு எவருடைய அன்பும் இருக்க முடியாது.

தொழுகையின் ஒவ்வொரு ரகாஅத்திலும் உன்னிடமே உதவி தேடுகிறோம் என்று உறுதி அளிக்கிறோம்.

இது அல்லாமல் அல்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் “எனக்கே அடிபணியுங்கள். என்னிடமே கேளுங்கள்” என்று கூறுகிறான். இந்த அளவு தெள்ளத் தெளிவாக நெற்றிப் பொட்டில் அடிப்பது போல், தனக்கும் அடியானுக்கும் இடையில் எந்தப் பரிந்துரையாளரோ, இடைத்தரகரோ இல்லாமல், உங்கள் தேவைகளை நேரடியாக என்னிடமே கேளுங்கள் என்று
அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ் அல்ஃபுர்கான் 25:30-ல் கூறி இருப்பதுபோல் இந்த குர்ஆனின் இந்த அனைத்து உபதேசங்களையும் புறக்கணித்து விட்டு பொருட்டு என்ற பெயரால் இடைத்தரகர்களை அழைப்பவர்கள் யாராக இருக்க முடியும்? அப்படிப்பட்டவர்களின் முடிவு? அதையும் அல்லாஹ் 25:27,28,29-ல் நேரடியாகக் கூறி எச்சரித்துள்ளான். அவை வருமாறு.

“அந்நாளில் அநியாயக்காரன் தன்னிருகைகளையும் கடித்துக் கொண்டு “அத்தூதருடன் நானும் (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா? எனக் கூறுவான்” (25:27)

“எனக்கு வந்த கேடே! (என்னை வழி கெடுத்) ஒருவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாதிருக்க வேண்டாமா?” (25:28)

“நிச்சயமாக, என்னிடம் நல்லுபதேசம் (குர்ஆன்) வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழி கெடுத்தானே! மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான்” (என்று புலம்புவான்) (25:29)

என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கி விட்டார்கள்” என்று (நம்) தூதர் கூறுவார். (25:30)

இவ்வளவு தெள்ளத் தெளிவாக அல்லாஹ் அல்குர்ஆனில் நேரடியாக எச்சரித்திருந்தும், இவை அனைத்தையும் புறக்கணித்து விட்டு மவ்லவிகளின் தப்பான சுய விளக்கங்களைக் கேட்டு அதன்படி நடப்பவர்களை நாளை மறுமையில் போய்ச் சேரும் இடம் எதுவோ?
ஆக அல்லாஹ்வைவிட அவுலியாக்கள் தான் மனிதர்களிடம் அதிக அன்பு, கருணை காட்டுகிறவர்கள் என்று முஸ்லிம்களை நம்பச் செய்து அவுலியாக்கள் பரிந்துரையாளர்களாக ஆக்குகிறவர்கள் - பொருட்டால் கேட்பவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பது புரிகிறதா?
இந்தப் புரோகிதர்கள் தங்களின் தொழிலை தக்க வைத்துக் கொள்ள இன்னொரு தந்திரத்தையும் கையாள்கிறார்கள். அல்லாஹ் மார்க்கக் கடமைகளை மிகமிக எளிதாக, சுமையற்றதாக ஆக்கி இருப்பதாக குர்ஆனில் பல இடங்களில் கூறி இருக்கிறான். (பார்க்க 2:159, 4:28, 16:89, 19:97, 22:78, 25:33, 44:58, 54: 17,22,32,40, 80: 20) இப்படித் தெள்ளத் தெளிவாக எளிதாக்கப்பட்ட மார்க்கக் கடமைகளை, பிக்ஹின் பெயரால் மிகவும் கடினமாக ஆக்கி இருக்கிறார்கள். எனவே பெரும்பாலான முஸ்லிம்கள் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற கடமைகள் நிறைவேற்றுவதற்குக் கடினமானவை என நினைத்துக் கொண்டு அவற்றை விடடு விரண்டோடுகின்றனர். அதன் காரணமாக அவர்கள் தாங்கள் பெரும்பாவிகளாக இருப்பதாக தாழ்வு மனப்பான்மை கொள்கின்றனர். அல்லாஹ் தங்கள் பாவங்களை மன்னிக்க மாட்டான் என நினைக்கின்றனர். உலகில் குற்றங்கள் செய்பவர்கள் குறுக்கு வழியில் அக்குற்றங்களிலிருந்து விடுபட முயல்வது போல், இந்த முஸ்லிம்களும் குறுக்கு வழியில் இந்தப் புரோகித மவ்லவிகளிடம் போய் தஞ்சமடைகின்றனர். அவர்கள் இவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி, “பொருட்டால்” என்ற பெயரால் இடைத்தரகர்களைப் புகுந்து கொண்டு அவர்களிடம் தவறான வழிகளில் கொள்ளையடிப்பதோடு, அவர்களை நரகில் தள்ளுகின்றனர்.

நபிமார்களை, நாதாக்களை, அவுலியாக்களை பொருட்டாகக் கொண்டு கேட்பதற்கு, பிரதம மந்திரி, முதன்மந்திரி போன்ற மனிதர்களை அல்லாஹ்வோடு ஒப்பிட்டு உதாரணம் கூறுவதன் மூலம் அல்லாஹ்மீது இன்னொரு மாபெரும் பழியையும் சுமத்துகிறார்கள். அது வருமாறு:
பிரதம மந்திரியாகட்டும், முதன் மந்திரியாகட்டும் அவர்களும் மனிதன் என்ற நிலையில் தேவை உடையவர்கள் என்பதில் சிறிது சந்தேகமில்லை. அவர்கள் மந்திரி, எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி., போன்றோரின் பரிந்துரையை ஏற்று அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுகிறார்கள். அந்த கோரிக்கைகளில் அவர்களுக்கு முழுமையான உடன்பாடு இல்லை என்றாலும் அவற்றை நிறைவேற்றிக் கொடுக்கும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். காரணம் இந்த மந்திரி, எம்.பி., எம்.எல்.ஏ., எம். எல். சி., போன்றோரின் தயவு இல்லாமல் இவர்கள் அந்த பிரதம மந்திரி, முதன் மந்திரி பதவிகளில் நிலைத்து இருக்க முடியாது. அவர்களின் தயவு - உதவி அவசியம் இவர்களுக்கு இன்றியமையாததாக இருக்கிறது; எனவே பரிந்துரையை ஏற்கிறார்கள்.
இதுபோல் அதிகாரிகளுக்கு பணம், மனைவிமார்களின் தேவை இருப்பதால் அந்த மனைவிமார்களின் பரிந்துரையை ஏற்கும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதுபோல் அல்லாஹ்வுக்கு நபிமார்களின், நாதாக்களின், அவுலியாக்களின் தயவு - உதவி தேவை என இந்த முகல்லிது மவ்லவிகள் நம்புகிறார்களா? அப்படி நம்பினால் அவர்கள் ஈமான்-நம்பிக்கை உடையவர்களாக இருக்க முடியுமா? அவர்கள் இறைநேசர்களா? அல்லது இறைவனுக்குப் பகைவர்களா? சொல்லுங்கள்!

அல்லாஹ் எவ்வித தேவையுமற்றவன் என்று அல்குர்ஆனின் எத்தனை இடங்களில் அடித்துக் கூறுகிறான். எவரது பரிந்துரைக்கும் கட்டுப்பட்டவன் இல்லை அல்லாஹ் என்று அல்குர்ஆன் தெளிவாகக் கூறவில்லையா? (பார்க்க. பகரா 2:255, இக்லாஸ் 112:2) இந்த நிலையில் அல்லாஹ் நபிமார்களின், நாதாக்களின், அவுலியாக்களின் பரிந்துரைகளை எதிர்பாக்கிறான் என்று இந்த முகல்லிது தர்கா, தரீக்கா, தப்லீஃக், தேவ்பந்த் மவ்லவிகள் கூறுகிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பெரிய வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பது புரிகிறதா?

இந்தப் பொருட்டால் என்பது எவ்வளவு பெரிய குற்றம், இறைவனை இழிவுபடுத்தும் (நவூதுபில்லாஹ்) ஷிர்க்கான குற்றம் என்பதை உரிய அல்குர்ஆன் எச்சரிக்கைகளைக் கொண்டு தெளிவுபடுத்திய பின்னராவது, தவ்பா செய்துவிட்டு இந்தப் புரோகிதர்கள் மீள்வார்கள் என நினைக்கிறீர்களா? அது ஒரு போதும் நடக்காது. காரணம் அதைவிட்டு மீண்டுவிட்டால் அவர்களின் பிழைப்பு என்னாவது? வாழ்க்கைக்கு வேறு வழி என்ன? எனவே வேறு வாழ்வு ஆதாரம் கிடைக்காத நிலையில் அந்தப் புரோகிதத் தொழிலை விட்டு வெளியேறும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லவே இல்லை.

எனவே முஸ்லிம் பொது மக்கள்தான் சிந்தித்துச் சுதாரிக்க வேண்டும். தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசை இவர்களிடம் தாரை வார்த்துவிட்டு, அதல்லாமல் பெரும் பாவத்தையும் சுமந்து கொண்டு நரகம் புக வேண்டுமா? இது முஸ்லிம்களுக்குத் தேவையா? என சிந்தித்து விளங்கி அல்குர்ஆனின் மேலே எடுத்து எழுதியுள்ள படித்துணர்ந்து இந்த “பொருட்டால்” என்ற புருடாவை விட்டு தெளபா செய்து மீள வேண்டும். அல்லாஹ் அருள்புரிவானக.

No comments:

Post a Comment