"தக்வா" என்பது பயபக்தி, இறை உணர்வு, பாவ தடுப்பு சக்தி முதலியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளதோர் சிறப்புத் தன்மையாகும். தக்வாவுடன் செய்யப்படும் அமலுக்குத்தான் அல்லாஹ்விடம் அங்கீகாரம் உள்ளது. அல்லாஹ் (அமல்களை) ஏற்றுக் கொள்வதெல்லாம் "தக்வா" பயபக்தி இறை உணர்வு உள்ளவர்களிடமிருந்து தான் (5:27) என்று குர்ஆன் கூறுகிறது.
ஆகவே நாம் செய்யும் ஒவ்வொரு அமலிலும் தக்வா இருந்தாக வேண்டும். இல்லையேல் அதன் பலனை அடையும் வாய்ப்பினை இழக்க நேரிடும்.
ஓர் அடியான் பாவமில்லாதவற்றையும் அவை பாவமாக இருந்து விடுமோ என்று பயந்து அவற்றை விட்டொழிக்கும் வரை "முத்தக்கீன்" பயபக்தியாளர்- இறை உணர்வுமிக்கவர் என்ற உயர் நிலையை தான் அடைந்து கொள்ள முடியாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அத்திய்யத்துஸ்ஸஃதீ(ரழி) திர்மிதீ, இப்னுமாஜ்ஜா)
"தக்வா" ஒருவருடைய உள்ளத்தில் ஏற்பட்டு விட்டால் அவர் சதா காலமும் தான் அல்லாஹ்வின் முன்னிலையில் இருப்பதான உணர்வு அவருக்கு உண்டாகி விடுகிறது. அதன் காரணமாக அவர் தாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் அது பாவமாக இருந்துவிடக் கூடாது என்று மிகவும் எச்சரிக்கையாக இருந்து கொள்வார். அல்லாஹ் மிக அறிந்தவன்.
No comments:
Post a Comment