வேதமுடையோர் உங்களுக்கு சலாம் கூறினால் 'வ அலைக்கும்' என்று கூறுங்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ்(ரலி) அறிவிக்கிறார்கள். இது புகாரியில் இடம்பெற்ற ஹதீஸாகும். இந்த ஹதீஸை வைத்து முஸ்லிமல்லாதர்வர்கள் ஸலாம் கூறினால் 'அலைக்கும்' என்று மட்டுமே கூறவேண்டும் என்கிறார்கள்.
உங்கள் மீது யூதர்கள் ஸலாம் கூறினால் அஸ்ஸாமு அலைக்கும் (உங்கள்மீது அழிவு ஏற்படட்டும்) என்றே கூறுகின்றனர். எனவே நீங்கள் 'அலைக' என்று கூறுங்கள்! என இப்னு உமர்(ரலி) அறிவிக்கும் மற்றொரு ஹதீஸ் புகாரியில் இடம்பெற்றுள்ளது.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَى أَهْلِهَا ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அவர்களிடம் அனுமதி பெற்று அவர்களுக்கு சலாம் சொல்லாதவரை பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது கூறப்படுகிறது) (24:27)
யூதர்கள் 'அஸ்ஸாமு அலைக' (உன்மீது அழிவு ஏற்படட்டும்) என்று கூறுகின்றனர். அதனால் நீங்கள் 'அலைக' என்று கூறுங்கள் என என்று நபி(ஸல்) அவர்கள் அதன் காரணத்தை விளக்குகிறார்கள். யூதர்கள் முறையாக சலாம் சொல்லாததினால் தான் நபி(ஸல்) அவர்கள் 'அலைக' என்று கூறும்படி சொன்னார்கள். முஸ்லிம் அல்லாதவர்கள் 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று முறையாக கூறும்போது நாம் "அலைக" என்று கூற வேண்டியதில்லை.
யூதர்களில் ஒரு கூட்டத்தினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'அஸ்ஸாமு அலைக' என்றனர். (அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறாமல்) அவர்கள் கூறுவதை நான் விளங்கிக் கொண்டேன். "அலைக்குமுஸ்ஸாமு வல்லஃனது" (உங்களுக்கு அழிவும் சாபமும் ஏற்படட்டும்) என்று மறுமொழி கூறினேன். இதைக்கேட்ட நபி (ஸல்) அவர்கள் 'ஆயிஷாவே! சற்று பொறு! எல்லா விஷயங்களிலும் அல்லாஹ் பண்பாட்டை (நளினத்தை) விரும்புகின்றான் என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் கூறியதை நீங்கள் கேட்கவில்லையா? என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் " வ அலைக்கும்" (உங்ளுக்கும் அவ்வாறே) என்று கூறிவிட்டேனே என்றார்கள். ஆயிஷா(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரியில் இடம்பெற்றுள்ளது. யூதர்கள் அழிவு உண்டாகட்டும் என்று சொல்லியும் கூட அதேபோல் கூறாமல் நாகரீகமாக 'வ அலைக்கும்' (உங்களுக்கும்) என்று மட்டும் கூறச் சொல்கிறார்கள்.
وَإِذَا حُيِّيْتُم بِتَحِيَّةٍ فَحَيُّواْ بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا அல்லாஹ் தன் திருமறையில் "உங்களுக்கு முகமன் கூறப்பட்டால் அதைவிட அழகாக அல்லது அதற்கு சமமாக நீங்களும் மறுமுகமன் கூறுங்கள்" (4:86) எனவே, முஸ்லிமல்லாதவர்கள் அவர்கள் முறையாக அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறும் போது நாமும் முறையாக பதில் சொல்வதற்கு எந்தத் தடையும் கிடையாது. அல்லாஹ் மிக அறிந்தவன்.
No comments:
Post a Comment