March 31, 2009

சத்தியத்தின்பால் அழைப்பார்

உண்மை முஸ்லிம் எல்லாக் காலங்களிலும் தனது அழைப்புப் பணியில் உற்சாகத்துடனும் உறுதியுடனும் செயல்படுவார். நன்மையைச் செய்ய ஏதேனும் தகுந்த சூழ்நிலை ஏற்படுமா என எதிர்பார்க்காமல் மனிதர்களை சத்தியத்தின்பால் அழைப்பதற்கு விரைந்து செல்வார். மனத்தூய்மையுடன் அழைப்புப் பணிபுரிபவர்களுக்கு அல்லாஹ் சித்தப்படுத்தி வைத்துள்ள அருட்கொடைகளை பெரிதும் விரும்புவார்.
அலீ (ரழி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஒரு மனிதருக்கு உம்மூலமாக அல்லாஹ் நேர்வழி கிடைக்கச் செய்வது உமக்கு உயர்ரக செந்நிற ஒட்டகைகளைவிட மேலானதாகும்.'' (ஸஹீஹுல் புகாரி)
வழிதவறி திகைத்து நிற்கும் ஒரு மனிதனின் செவியில் சத்திய அழைப்பாளர் ஒரு நல்ல வார்த்தையை போடுவதன் மூலம் அவரது இதயத்தில் நேர்வழியின் விளக்கேற்றுகிறார். அப்போது அவர் அரபுகளின் செல்வங்களில் மிக உயரியதாக கருதப்பட்ட செந்நிற ஒட்டகைகள் அவருக்கு கிடைப்பதைவிட பன்மடங்கு அதிகமான நன்மைகளை அடைந்து கொள்கிறார். இவர் மூலமாக நேர்வழி பெற்றவரின் நன்மைகளைப் போன்று இவருக்கும் கிடைக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''ஒருவர் நேர்வழியின்பால் அழைத்தால் அவருக்கு அவரைப் பின்பற்றியவர்களின் நற்கூலியைப் போன்று வழங்கப்படும். பின்பற்றியவர்களின் நற்கூலியில் எவ்விதக் குறைவும் ஏற்படாது.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
நேர்வழியிலிருந்து விலகியிருப்பவர்களை ஏகத்துவத்தின்பால் அழைப்பதில் தங்களது செல்வங்களையும் நேரங்களையும் செலவிட்டு அறிவீனர்களிடமிருந்து வரும் தீமைகளை இன்முகத்துடன் சகித்துக் கொள்ளும் அழைப்பாளர் மீது பொறாமை ஏற்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
விரும்பத் தகுந்த இப்பொறாமை குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''இரண்டு விஷயத்திலே தவிர பொறாமை (கொள்ள அனுமதி) கிடையாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தைக் கொடுத்தான். சத்தியத்திற்காக அதை அவர் செலவு செய்கிறார். மற்றொருவருக்கு அல்லாஹ் கல்வி ஞானங்களைக் கொடுத்தான். அவர் அதன்படி மக்களுக்குத் தீர்ப்பளித்து மற்றவருக்கும் கற்றுக் கொடுக்கிறார்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
அல்லாஹ்வின்பால் அழைப்புப் பணிபுரியும் முஸ்லிம் தன்னிடமுள்ள ஞானத்தை அற்பமாக நினைக்காமல் சத்திய வார்த்தைகளில் தனக்கு எது தெரியுமோ அது அல்லாஹ்வுடைய வேதத்தின் ஒரே ஒரு வசனமாயிருப்பினும் எவ்விதத் தயக்கமுமின்றி அதை பிறருக்கு எடுத்துரைக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் கூறினார்கள்: ''...என்னிடமிருந்து (நீங்கள் அறிந்து கொண்டது) ஒரே ஒரு வசனமாயிருப்பினும் அதை எத்திவைத்து விடுங்கள்...'' (ஸஹீஹுல் புகாரி)
ஏனெனில், ஒரு வசனம் கூட மனித இதயத்தினுள் ஊடுருவி அவன் நேர்வழிபெற போதுமானதாகி விடலாம். அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் அவனது இதயத்தில் ஈமான் இடம்பெற ஒரு வசனம் போதும். அந்த ஒரு வசனம் அவனது ஆன்மாவில் ஒளியேற்றி, வாழ்வில் பெரியதொரு மாற்றத்தை உண்டு பண்ணி அவனை புதியதொரு மனிதனாக மாற்றிவிட முடியும்.
நபிமொழி கூறுவதுபோல உண்மை முஸ்லிம் தனக்கு விரும்புவதையே தமது சகோதரருக்கும் விரும்புவார். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவருக்கும், அனைத்து முஸ்லிம்களுக்கும் நன்மையே நாடுவார். அதனால் பிரகாசமான நேர்வழி தன்னிலும், தன்னைச் சுற்றியிருப்பவர்களிலும் குறுகிப் போய்விடாமல் உலகம் முழுவதும் பரவவேண்டுமென விரும்புவார். தனக்கும் தனது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி உலக மக்கள் அனைவருக்கும் சுவனத்தை விரும்புவார். அதனால் நரகத்தை தூரமாக்கி சுவனத்தில் சேர்ப்பிக்கும் நேர்வழியின்பால் எல்லாக் காலங்களிலும் எல்லோரையும் அழைத்துக் கொண்டேயிருப்பார். இது அழைப்பாளர்களின் பண்பாகும். இப்பண்பைக் கடைபிடிப்பதால் அல்லாஹ்வின் தூதரின் வாழ்த்தையும் துஆவையும் பெற்றுக் கொள்கிறார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''நம்மிடமிருந்து ஒரு விஷயத்தைக் கேட்டு அதைக் கேட்டவாறே பிறருக்கு எடுத்துரைக்கும் மனிதரை அல்லாஹ் செழிப்பாக்குவானாக! எத்தி வைக்கப்பட்ட எத்தனையோ மனிதர்கள் அதைக் கேட்டவரைவிட நன்கு புரிந்து கொள்கிறார்கள்.'' (ஸுனனுத் திர்மிதி)
இஸ்லாமிய சமூகம், பொறுப்புகளை சுமந்து நிற்கும் சமூகமாகும். இஸ்லாம் அந்த பொறுப்புகளை தனது உறுப்பினர் ஒவ்வொருவரின் மனதிலும் ஆழப்பதித்துள்ளது. ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்விற்கு முன் தங்களது பொறுப்புகளை நன்கறிந்து அழைப்புப் பணியை திறம்பட செய்திருந்தால் இன்று இஸ்லாமிய சமுதாயம் பின்தங்கி பலவீனப் பட்டிருப்பதை நிச்சயமாக தவிர்த்திருக்க முடியும்.
ஏகத்துவ அழைப்புப் பணிக்கான வசதி வாய்ப்புகளைப் பெற்றிருந்தும் அதில் குறை செய்து, கல்வி ஞானமிருந்தும் அதை மறைத்து, பதவியையும் பொருளையும் அடைந்துகொள்ள கல்வியைப் பயன்படுத்திக் கொள்பவர்களை நபி (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''ஒருவர், அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தரும் கல்வியை உலகாதாயத்தை பெறுவதற்காக மட்டுமே கற்றுக் கொள்வாரேயானால் அவர் மறுமை நாளில் சுவனத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்.'' (ஸுனன் அபூதாவூத்)
மேலும் கூறினார்கள்: ''தான் அறிந்த ஒரு விஷயத்தைப் பற்றி கேட்கும்போது அதை மறைப்பவர் மறுமைநாளில் நரக நெருப்பினாலான கடிவாளம் அணிவிக்கப்படுவார்.'' (ஸுனன் அபூதாவூத், ஸுனனுத் திர்மிதி)
நன்மையை ஏவி தீமையைத் தடுப்பார் அல்லாஹ்வின்பால் அழைப்பதன் அவசியப் பணிகளில் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதும் ஒன்றாகும். அழைப்பாளர் அறிவுடனும், நிதானத்துடனும் அழகிய முறையில் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பார். கரத்தால் தடுப்பதில் கடுமையான குழப்பங்கள் எதுவும் ஏற்படாது என்றால் அத்தீமையை தனது கரத்தால் மாற்றுவார். அது இயலவில்லையென்றால் தனது நாவின்மூலம் சத்தியத்தை எடுத்துரைத்து தீமையை நன்மையாக மாற்றப் போராடுவார்.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''உங்களில் ஒருவர் வெறுக்கத் தகுந்ததைக் கண்டால் அதை தனது கரத்தால் மாற்றட்டும். அதற்கு சக்தி பெறவில்லையெனில் தனது நாவால் மாற்றட்டும். அதற்கும் சக்தி பெறவில்லையெனில் தனது மனதால் வெறுத்து விடட்டும். இது ஈமானின் பலவீனமான நிலையாகும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
ஒரு முஸ்லிம் பிற முஸ்லிம்களின் நலம் நாடி நல்லதை ஏவி, தீமையைத் தடுப்பார். ஏனெனில், மார்க்கம் என்பது பிறர் நலம் நாடுவதுதான். இதை உண்மைப்படுத்த வேண்டுமெனில் அவர் நன்மையை ஏவி தீமையைத் தடுத்தேயாக வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள், ''மார்க்கம் என்பது பிறர் நலம் பேணுவது'' என்று கூறியபோது நாங்கள் கேட்டோம் ''யாருக்கு?'' நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ்வுக்கும், அவனது வேதத்துக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், பொது மக்கள் அனைவருக்கும்'' என பதிலளித்தார்கள். (ஸஹீஹ முஸ்லிம்)
பிறர் நலம் நாடுவதும், நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதும் அநீதியிழைப்பவனின் முகத்துக்கு நேராக சத்தியத்தை உரக்கச் சொல்வதற்கான துணிவை முஸ்லிமுக்கு ஏற்படுத்தித் தரும். சுதந்திரமாகவும், கண்ணியமாகவும், கெªரவத்துடனும் இச்சமூகம் நிலைபெறுவதென்பது அநியாயக்காரனுக்கு முன் 'நீ அநியாயக்காரன்' என்று அச்சமின்றி சொல்லும் ஆற்றல் பெற்ற வீரர்களால் மட்டுமே சாத்தியமாகும். இச்சமூகத்தில் எப்போது அச்சமின்றி சத்தியத்தை எடுத்துரைக்கும் ஒரு கூட்டம் இல்லையோ அப்போது ஒட்டுமொத்த சமுதாயமும் வீழ்ச்சியை சந்திக்கும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''அநியாயக்காரனிடம் 'நீ அநியாயக்காரன்' என்று சொல்ல அஞ்சுபவர்களாக எனது உம்மத்தினரைக் கண்டால் நீர் அவர்களிடமிருந்து விலகிக்கொள்.'' (முஸ்னத் அஹமத்)
அசத்தியத்தை எதிர்ப்பதில் வீரத்தை கடைபிடிக்க வேண்டும், அநியாயக்காரனை எதிர்ப்பது உணவையோ வாழ்வையோ குறைத்துவிட முடியாது என்று அறிவுறுத்தும் அதிகமான நபிமொழிகள் காணக் கிடைக்கின்றன.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''மனிதரைப் பற்றிய அச்சம் நீங்கள் சத்தியத்தைக் கூறுவதிலிருந்தோ, மகத்தானதை (அல்லாஹ், மறுமை நாளை) நினைவுபடுத்துவதிலிருந்தோ உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில் அவ்வாறு செய்வது நிச்சயமாக உங்களது ஆயுளைக் குறைத்துவிடவோ, உணவை தூரமாக்கிவிடவோ முடியாது.'' (ஸுனனுத் திர்மிதி)
நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் இருந்தபோது ஒரு மனிதர் எழுந்து வினவினார்: ''அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களில் சிறந்தவர் யார்?'' நபி (ஸல்) அவர்கள், ''மனிதர்களில் சிறந்தவர் அவர்களில் நன்கு குர்ஆன் ஓதுபவர், மிகுந்த இறையச்சமுடையவர், அவர்களில் மிக அதிகம் நன்மையை ஏவி தீமையை தடுப்பவர், அவர்களில் மிக அதிகமாக இரத்த பந்துக்களோடு இணைந்திருப்பவர்'' என்று கூறினார்கள் (முஸ்னத் அஹமத்)
இஸ்லாமிய சமூகத்தில் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது முஸ்லிம்களின் வீரத்தையும், துணிச்சலையும் அடிப்படையாகக் கொண்ட தாகும். தீமைகளை எதிர்கொள்வதிலும், அநீதி இழைக்கப்பட்டோருக்கு உதவி புரிவதிலும், வீரத்தை வெளிப்படுத்த வேண்டும்.
சத்தியத்தை பாதுகாக்கும் வீரர்களுக்கு அல்லாஹ்வின் உதவி உள்ளதென்றும், சத்தியத்தை எடுத்துரைக்காமல் வாய் மூடியிருக்கும் கோழைகளுக்கு இழிவு உள்ளதென்றும் விவரிக்கும் ஏராளமான நபிமொழிகள் காணக் கிடைக்கின்றன.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''ஒரு முஸ்லிமை கேவலப் படுத்துகிறார்கள்; அவனுடைய கண்ணியத்தைத் தாக்குகிறார்கள்; அந்த இடத்தில் ஒருவன் அந்த முஸ்லிமைக் காப்பாற்றவில்லையென்றால் அல்லாஹ்வுடைய உதவி அவனுக்குத் தேவைப்படும் ஒரு இக்கட்டான தருணத்தில் அல்லாஹ் அவனை கைவிட்டு விடுவான். ஒரு முஸ்லிம் கேவலப்படுத்தப்படும்போது, அவனுடைய கண்ணியம் தாக்கப்படும் போது யாராவது அவனுக்கு உதவி செய்தால் அவன் 'அல்லாஹ்வுடைய உதவி கிடைக்காதா' என்று ஏங்கும் தருணத்தில் அல்லாஹ் அவனுக்கு உதவி செய்வான்.'' (ஸுனன் அபூதாவூத்)
முஸ்லிம் அசத்தியத்தை சகித்துக்கொள்ள மாட்டார். சத்தியத்திற்கு உதவி செய்வதில் சோர்வடைய மாட்டார். தனது சமூகத்தில் அநீதம் பரவுவதையும், சபைகளில் தீமைகள் பரவுவதையும் ஒருபோதும் விரும்பமாட்டார். எப்போதும் தீமைகளை தடுத்துக் கொண்டேயிருப்பார். ஏனெனில் தீமையைத் தடுக்காதிருந்தால் அல்லாஹ்வின் வேதனை வாய்மூடி கோழையாக இருப்பவர்களையும் சூழ்ந்து கொள்ளும்.
அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்கள் கலீஃபாவாக பொறுப்பேற்ற போது மிம்பரில் ஏறி அல்லாஹ்வைப் புகழ்ந்த பின் கூறினார்கள்: மனிதர்களே நீங்கள் அல்லாஹ்வின் திருவசனமான, ''விசுவாசிகளே! நீங்கள் (தவறான வழியில் செல்லாது) உங்களை இரட்சித்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேரான வழியில் சென்றால் வழிதவறிய எவனுடைய தீங்கும் உங்களை பாதிக்காது...'' (அல்குர்ஆன் 5:105) என்ற திருவசனத்தை ஓதுகிறீர்கள். நீங்கள் அந்த திருவசனத்திற்கான பொருளை உரிய வகையில் விளங்கிக்கொள்வதில்லை. நிச்சயமாக நான் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் ''மனிதர்கள் தீமைகளைக் காணும்போது அதை தடுக்காமல் இருந்தால் வெகுவிரைவில் அல்லாஹ்வின் வேதனை அவர்கள் அனைவரையும் சூழ்ந்துகொள்ளும்.'' (ஸுனன் அபூதாவூத்) ஒரு முஸ்லிமின் மார்க்கப் பற்று உண்மையாக இருந்து, அவரது ஈமான் உயிரோட்டமுடையதாக இருந்தால் நன்மையை ஏவுவதில் தீவிரமாகவும், தீமையை எதிர்கொள்வதில் வீரத்துடனும் இருப்பார். தீமைகளை அகற்ற முடிந்தளவு போராடுவார். ஏனெனில் மார்க்கத்தின் எல்லா அம்சங்களும் முக்கியமானவைதான். அதன் எந்தப் பகுதியிலும் அலட்சியம் கூடாது. அதன் கொள்கைகள் அனைத்தும் உறுதியானவை; சந்தேகமற்றவை. தங்களது மார்க்க விஷயங்களில் யூதர்கள் அலட்சியம் செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு இலக்கானதுபோல, முஸ்லிம்களும் பலியாகிவிடக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''உங்களுக்கு முன் வாழ்ந்த சமூகமான பனூ இஸ்ராயீல்களில் ஒருவர் தவறு செய்தால் அதைத் தடுத்து கண்டிக்க வேண்டியவர் தடுப்பார். அதற்கு அடுத்த நாள் அந்த நபருடன் அமர்ந்து சாப்பிடவும், குடிக்கவும் செய்வார். அவர் நேற்று எந்த தவறுமே செய்யாதது போன்று நடந்துகொள்வார். இதை அல்லாஹ் அவர்களிடையே கண்டபோது அவர்கள் மாறுசெய்து, வரம்பு மீறியதன் காரணமாக தாவூது (அலை), ஈஸா (அலை) அவர்களின் நாவினால் சபித்து அம்மனிதர்கள் சிலரின் உள்ளங்களை வேறு சிலரின் உள்ளங்களோடு கலந்துவிட்டான். எவனது கைவசம் எனது ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நன்மையை ஏவுங்கள், தீமையைத் தடுத்துக் கொள்ளுங்கள். தவறிழைப்பவனின் கரங்களைப் பிடித்து அவனை சத்தியத்தின்பால் திருப்பிவிடுங்கள். அவ்வாறு செய்யவில்லையானால் அல்லாஹ் உங்களது இதயங்களை ஒன்றோடொன்று இணைத்து விடுவான். (தீமைகளோடு ஒத்துப் போய் விடுவீர்கள்) அந்த இஸ்ரவேலர்களை சபித்ததுபோல உங்களையும் சபித்து விடுவான்.'' (முஃஜமுத் தப்ரானி)

No comments:

Post a Comment