June 27, 2009

மண் கேட்ட படலம்

அல்லாஹ், ஆதம் (அலை) அவர்களைப் படைக்க எண்ணிய போது, ஜிப்ரீல் (அலை) அவர்களைப் பூமிக்கு அனுப்பி மண் எடுத்து வருமாறு பணிக்கிறான். ஜிப்ரீல் (அலை) அவர்கள் பூமிக்கு வந்து மண் எடுக்க முற்பட்டபோது, பூமி மண் தர மறுத்ததாம். தோல்வியோடு ஜிப்ரீல் (அலை) திரும்பி விடுகிறார்களாம். அடுத்து மீகாயீல் (அலை) அவர்களை அல்லாஹ் அனுப்ப, மீகாயீலும் தோல்வியோடு திரும்பி சென்றார்களாம். மூன்றாவதாக இஸ்ராபீலை அனுப்பியபோது, அவரும் வெறுங்கையுடன் திரும்பி விட்டார்களாம். இறுதியாக மலக்குல் மவ்தை அல்லாஹ் அனுப்ப, பூமியின் மறுப்பைப் பொருட்படுத்தாமல் அவர் மண் எடுத்துச் சென்றாராம். அதனால்தான் மனித உயிர்களைப் பறிக்கின்ற பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாம்.

ஒரு சில ஏடுகளில் இந்தக் கதை எழுதி வைக்கப்பட்டுள்ளது. பல மேடைகளில் கூறப்படுகின்றது. மலக்குல் மவ்திடம் உயிர் வாங்கும் பொறுப்பை ஒப்படைத்ததற்கு ஏதேனும் ஒரு காரணம் கூறியாக வேண்டும், என்பதற்காக சிலரது கற்பனையில் உதித்த பொய்தான் இந்தக் கதை என்பதை சற்று சிந்தித்தால் எவரும் புரிந்து கொள்ளலாம். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கே இந்தக்கதை முரணாக அமைந்துள்ளதை நாம் விரிவாக பார்ப்போம்.

வானங்கள், பூமி,அவற்றில் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வின் ஆணைக்கு அப்படியே கட்டுப்பட்டு நடக்கின்றன என்பது இஸ்லாத்தின் மிக முக்கியமான அடிப்படையாகும். பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ள மனித, ஜின் இனங்கள் மட்டுமே அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்கக்கூடியவர்களாகவும், மறுக்கக்கூடியவர்களாகவும் உள்ளனர். மற்ற படைப்பினங்கள் அனைத்தும் அவனது கட்டளைக்கும் விருப்பத்துக்கும் எதிராக செயல்படுவதில்லை என்பதை முஸ்லிம்களும் ஏற்றுக் கொண்டுமிருக்கிறோம். திருமறைக் குர் ஆன் இதைத் தெளிவாக விளக்குகின்றது.

வானமும் பூமியும் அவனது உத்திரவுப்பிரகாரம் நிலைபெற்றிருப்பது அவனது அத்தாட்சிகளில் ஒன்றாகும் [அல்குர் ஆன் 30:25]

என்று அல்லாஹ் கூறுகிறான். அந்த அல்லாஹ்வின் ஒரு கட்டளைக்கு அடிபணிய பூமி மறுத்து விட்டதாக இந்தக் கதை அமைந்துள்ளது. வானங்களையும், பூமியையும் படைத்தபின் அவற்றை நோக்கி அல்லாஹ் ஒரு உடன்படிக்கை எடுத்ததை பின்வரும் வசனத்தில் சொல்லிக் காட்டுகிறான்.

பூமியையும், வானங்களையும் நோக்கி, 'நீங்கள் விரும்பிய நிலையிலும் விரும்பாத நிலையிலும் (எனது ஆணைக்குக் கட்டுப்பட்டு) வாருங்கள்!' என்று (அல்லாஹ்) கூறுகிறான், "நாங்கள் (விரும்பி) கட்டுப்பட்டவைகளாக வந்தோம்" என்று அவ்விரண்டும், (வானமும், பூமியும்) கூறின.

அல்லாஹ் பூமிக்கோ,வானத்திற்கோ ஒரு கட்டளையிட்டு விட்டால், அதை அப்படியே பூமியும், வானமும் ஏற்று நடக்கும். அதில் எள்ளளவும் மாற்றம் செய்யாது என்று மேற்கூறிய குர் ஆன் வசனம் ஐயத்திற்கிடமின்றி தெளிவு படுத்துகின்றது. அல்லாஹ் மண் எடுத்து வருமாறு ஆணையிட்டிருக்கும்போது அதற்கு பூமி எப்படி மறுப்புச் சொல்லி இருக்கும்? இந்தக் கதையை நம்பினால், திருக்குர் ஆனின் வசனத்தை நம்பாத நிலை ஏற்படுமே! இறைவனின் வல்லமையைக் குறைத்து மதிப்பிட்டதாக ஆகுமே!

எனவே பூமி அல்லாஹ்வின் ஒரு கட்டளைக்கு அடிபணிய மறுத்திருக்கும் என்று எந்த முஸ்லிமும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

இந்தக் கதையில், அல்லாஹ், மலக்குகளுக்கு ஒரு கட்டளை பிறப்பிக்கின்றான். அதற்கு மாற்றமாக பூமி வேரொரு கட்டளையைப் பிறப்பிக்கின்றது. ஜிப்ரீல், மீகாயீல், இஸ்ராபீல் ஆகிய மூவரும்- மலக்குகளில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ள மூவரும், அல்லாஹ்வின் உத்தரவை விட பூமியின் உத்தரவிற்குக் கட்டுப்பட்டு தோல்வியோடு திரும்பினார்கள் என்றால் இதை நம்ப முடிகின்றதா? மலக்குகள் அல்லாஹ்வின் உத்தரவுக்கு எதிராக ஒரு போதும் செயல்பட மாட்டார்கள். மாறு செய்வது அவர்களின் இயல்புக்கே அப்பாற்பட்டது என்றெல்லாம் திருக் குர் ஆன் வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

அவன் எதை ஆணையிடுகிறானோ அதைச் செய்து முடிப்பார்கள். (அல்குர் ஆன்66:6)

(எதையேனும்) பேசுவதில் அவனை அவர்கள் (மலக்குகள்) முந்த மாட்டார்கள். அவனது ஆணைப்படியே செயலாற்றுவார்கள். (அல்குர் ஆன் 21:27)

மேற்கூறிய இரண்டு வசனங்களும், வானவர்களைப் பற்றி அல்லாஹ் தருகின்ற நற்சான்று. அவனது உத்திரவை அப்படியே செயல்படுத்திக் காட்டுகின்ற வானவர்கள் - அதிலும் சிறப்புக்குரிய வானவர்கள், அல்லாஹ்வின் கட்டளையை செயல்படுத்தாமல் எப்படித் திரும்பிச் சென்றிருக்க இயலும்? இறை உத்தரவுக்கு முரணாக உள்ள பூமியின் உத்தரவுக்கு எப்படி அடிபணிந்திருக்க முடியும்?

அப்படி எல்லாம் இறை உத்தரவுக்கு மலக்குகள் மாறு செய்ய மாட்டார்கள் என்று திருக்குர் ஆன் தெளிவாக்குகின்றதே! அந்தக் குர் ஆன் வசனங்களுக்கும் இந்தக் கதை முரண்படுகின்றது.

இந்தக் கதையின் கருத்துப்படி அல்லாஹ் மண் எடுத்து வரச் சொன்னது, கீழ்த்தரமான பொருளைப் படைப்பதற்காக அல்லவே! படைப்பினங்களிலேயே மிகச் சிறந்து விளங்குகின்ற, மனித இனத்தைப் படைப்பதற்குத்தான் அல்லாஹ் மண் எடுத்து வரச் சொல்கிறான்.

"பூமியில் நான் பிரதிநிதியைப் படைக்கப் போகிறேன்" (அல்குர்ஆன் 2:30)
என்று மலக்குகளிடம் அல்லாஹ் கூறுகிறான். மிக உயர்ந்த நோக்கத்திற்காக அல்லாஹ் மண் எடுத்து வரச் சொல்லி இருக்கும் போது பூமி எப்படி மறுத்திருக்க முடியும்? என்பதையும் தாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

மண் எடுத்து வரச் சொன்னவன் சர்வ உலகத்தையும் படைத்து அதிகாரம் செய்யும் வல்ல அல்லாஹ். இந்தக் கதையில் அவனது உத்தரவு மதிப்பற்றதாக ஆக்கப்படுகின்றது.

அந்தப் பணியை செய்து முடிக்க அனுப்பப்பட்டவர்களும் சாதாரணமானவர்கள் அல்ல. இறைவனின் உத்தரவை அப்படியே செய்து முடிக்கும் இயல்பும் அதற்குரிய திறனும் கொடுக்கப்பட்ட மிகச் சிறந்த வானவர்கள். இந்தக் கதையில் வானவர்கள் இறை உத்தரவை மீறிவிட்டார்கள் என்று காட்டப்படுகின்றது.

அற்பமான காரியத்தை செய்து முடிக்க மண் எடுத்து வரச் சொல்லவில்லை.

மிக உயர்ந்த-சிறந்த நோக்கத்திற்காக அல்லாஹ் மண் எடுத்துவரச் சொல்லி இருந்தும் அது பூமியால் மறுக்கப்படுவதாக இந்தக்கதை குறிப்பிடுகிறது. எந்த வகையில் பார்த்தாலும், இந்தக் கதை சரியானதல்ல. ஒரு முஸ்லிம் நம்பக்கூடாது என்பது ளெிவாகவே தெரிகின்றது. இது போன்ற கதைகளை நம்பினால், இறைவனைப் பற்றியும் அவனது மலக்குகளைப் பற்றியும் தவறாக நம்பிக்கை கொண்டவர்களாவோம். மேலே நாம் எடுத்துக்காட்டிய இறை வசனங்களை நிராகரித்தவர்களாகவும் நாம் ஆக நேரிடும்.

இந்தக் கதை முழுக்க முழுக்க பொய் என்பதைப் பின்வரும் நபி மொழி தெளிவாக்குகின்றது.

"பூமியின் எல்லாப் பாகங்களிலிருந்தும் அல்லாஹ்வே கைப்பிடி மண் எடுத்து ஆதமைப் படைத்தான்" (நபிமொழி) நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ, இப்னுஹிப்பான் அறிவிப்பவர்: அபூமூஸல் அஷரீ(ரழி)
மண் எடுத்து வரும்படி அல்லாஹ் மலக்குகளுக்கு உத்தரவிடவில்லை. மாறாக அவனே கைப்பிடி மண் எடுத்து ஆதம் (அலை)அவர்களை உருவாக்கினான், என்று அல்லாஹ்வின் தூதர் சொல்லியிருக்கும் போது, இந்தக் கதை பச்சைப் பொய் என்பது தெளிவாகின்றது.

June 26, 2009

படைத்தவனிடம் பாவமன்னிப்பு தேடுவோம்

அல்லாஹ் தனது திருமறையில் 48:2 வசனத்தில் முஹம்மது (ஸல்) அவர்களின் முன் பின் பாவங்களை மன்னித்து விட்டதாகக் கூறுகின்றான். இப்படியொரு பாக்கியத்தைப் பெற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றாடம் பாவம் செய்து கொண்டிருக்கவில்லை. ஆனால் அதே சமயம் அன்றாடம் பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருந்தார்கள்.”அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல் ‘அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி’ (பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி அவன் பக்கமே திரும்புகின்றேன்) என்று கூறுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 6307

”எனது உள்ளத்தில் கவனக்குறைவு ஏற்படுகின்றது. நிச்சயமாக நான் அல்லாஹ்விடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்அகர் பின் யஸார் (ரலி), நூல் : முஸ்லிம் 4870

”மக்களே! அல்லஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள். நான் அவனிடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்அகர் பின் யஸார் (ரலி), நூல் : முஸ்லிம் 4871

எப்போதும் இறைச் சிந்தனையில் இருக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உள்ளம் கொஞ்சம் அந்தச் சிந்தனையை விட்டு விலகினால் கூட அதற்காக பாவமன்னிப்பு தேடுகின்றார்கள். ஆனால் நாம் சிறு சிறு பாவங்களால் முற்றுகையிடப்பட்டுள்ளோம். அன்றாடம் ஆயிரக்கணக்கான பாவங்களைச் செய்து விட்டு கல்லாக உட்கார்ந்திருக்கின்றோம். அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவது கிடையாது. ஒரு மாதிரியான மிதப்பில் இருக்கின்றோம். இது போன்ற பாவங்களை விட்டு விலகுவதுடன் அன்றாடம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடி அதற்குரிய பலன்களை அடைய வேண்டும்.

வேதனையை விட்டும் பாதுகாவல்
(முஹம்மதே!) நீர் அவர்களுடன் இருக்கும் போது அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பவனாக இல்லை. அவர்கள் பாவ மன்னிப்புத் தேடிக் கொண்டிருக்கும் போதும் அவர்களை அல்லாஹ் தண்டிப்பவனாக இல்லை. (அல்குர்ஆன் 8:33)

பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தண்டனை இறங்காது என்பதை இந்த வசனம் உணர்த்துகின்றது.மக்கள் செல்வமும், மழை நீர் வளமும்உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக இருக்கிறான். உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான். செல்வங்கள் மூலமும், மக்கள் மூலமும் உங்களுக்கு உதவுவான். உங்களுக்காக சோலைகளை ஏற்படுத்துவான். உங்களுக்காக நதிகளையும் ஏற்படுத்துவான். (அல்குர்ஆன் 71:10லி12)

அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடினால் அவன் மழை, செல்வங்கள், மக்கள் ஆகியவற்றைக் கொண்டு நமக்கு உதவுவான் என்பதை இந்த வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

ஸஹர் நேரத்தில்…
அவர்கள் இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள். (அல்குர்ஆன் 51:18)(அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மை பேசுவோராகவும், (இறைவனுக்கு) கட்டுப்பட்டோராகவும், (நல் வழியில்) செலவிடுவோராகவும், இரவின் கடைசி நேரத்தில் பாவ மன்னிப்புத் தேடுவோராகவும் (இருப்பார்கள்.) (அல்குர்ஆன் 3:17)இந்த வசனங்களில் இறை நம்பிக்கையாளர்களின் பண்புகளைப் பற்றி சொல்லும் போது, ஸஹர் நேரத்தில் அவர்கள் பாவமன்னிப்பு தேடுவார்கள் என்று வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இந்த வசனங்களுக்கு விளக்கமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இரவின் பிற்பகுதியில் பாவமன்னிப்பு தேடுவதை வலியுறுத்தியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

”நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது, ”என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கின்றேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை நான் மன்னிக்கின்றேன்” என்று கூறுவான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 1145

சுவனத்தைப் பெற்றுத் தரும் ஸய்யிதுல் இஸ்திஃக்ஃபார்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
”அல்லாஹும்ம அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கலக்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க. வ வஃதிக்க மஸ்ததஃத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஃத்து. அபூஉ லக்க பி நிஃமத்திக்க அலைய்ய வ அபூஉ லக்க பி தன்பீ. ஃபஃக்ஃபிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த.”


(பொருள் : அல்லாஹ்வே! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமையாவேன். நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதிமொழியையும், வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளி­ருந்து உன்னிடம் பாதுகாப்பு கோருகின்றேன். நீ (எனக்கு) அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கின்றேன். நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் ஒப்புக் கொள்கின்றேன். ஆகவே. என்னை நீ மன்னிப்பாயாக. ஏனெனில் பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை.)
என்று ஒருவர் கூறுவதே தலை சிறந்த பாவமன்னிப்பு கோரல் (ஸய்யிதுல் இஸ்திஃக்ஃபார்) ஆகும். யார் இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும், தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறந்து விடுகின்றாரோ அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். யார் இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டு, காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடுகின்றாரோ அவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.

அறிவிப்பவர் : ஷத்தாத் பின் அவ்ஸ் (ர­), நூல் : புகாரி (6306)

தொழுகையில் ஸலாம் கொடுத்ததும்…
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பும் போது மூன்று தடவை (அஸ்தஃக்ஃபிருல்லாஹ் என்று) பாவமன்னிப்பு தேடுவார்கள்.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி), நூல் : முஸ்லிம் 931

June 13, 2009

முஸ்லிம்களே ஒன்று படுவீர்

மேலும் நீங்கள் யாவரும் (ஒன்று சேர்ந்து) அல்லாஹ்வுடைய (வேதமாகிய) கயிற்றை பலாமாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள். (அல்குர்ஆன் 3:103)

இன்றைய உலகில் இஸ்லாம் வேகமாகப் பரவி வருகிறது. இஸ்லாத்தில் இணையும் புதியவர்களிடம் ஓர் உத்வேகம் இயல்பாகவே ஏற்பட்டு விடுகிறது. இதுவரை தங்களை பிணைத்திருந்த விலங்குகளை உடைத்தெரிந்து தாங்கள் பெற்ற சுதந்திரத்தை ஏனையோரும் அனுபவித்திட வேண்டும் என்ற உத்வேகமே அது. ஆனால் இங்கு வேதனை என்னவென்றால் இன்றைய உலகில் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முஸ்லிம்களே பல விதத்தில் முட்டுக்கட்டையாக உள்ளனர் என்பதுதான்.

இன்றைய மார்க்க அறிஞர்கள் என்போரும், அதிகார வர்க்கத்தினரும் தங்கள் அதிகாரங்களை தக்க வைத்துக்கொள்வதற்காகவே இஸ்லாத்தின் தனித்தன்மையை குலைத்து மாற்று வண்ணங்கள் பூசுகின்றனர். இந்நிலைகளை தகர்த்து இஸ்லாத்தைப் பூரணமாக நிலை நாட்டப் புறப்பட்ட இஸ்லாமிய இயக்கங்களோ சிறுசிறு கருத்து வேறுபாடுகளையும் அல்லாஹ் 4:59 வசனத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல் குர்ஆன் ஹதீஸை மட்டும் கொண்டு முடிவுக்கு வராமல் தங்கள் சொந்த யூகங்களை புகுத்தி அவற்றை பூதாகார பிரச்னையாக்கி தங்களுக்குள் பிளவுண்டு கிடக்கின்றன.

துண்டாடப்பட்ட பட்ட இயக்கங்கள் அமைப்புகள் ஒவ்வொன்றும் ஒற்றுமையாக அல்லாஹ்வின் கயிற்றை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என ஒங்கி ஒலிக்கின்றனர். இவர்கள் எல்லோரும் பற்றிப் பிடித்திருப்பது குர்ஆனைத்தான். ஆனால் இவர்களிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால்தான் இப்படி பிளவுண்டு கிடக்கின்றனர். இவர்கள் இலக்கை எட்ட முடியாமல் எங்கோ நின்று எதையோ செய்து கொண்டு இதுதான் 'இஸ்லாமியப் பணி' என்று திருப்திப் பட்டுக்கொள்கின்றனர்.

குர்ஆன் என்ற தனது கயிற்றை அடியார்கள் அனைவரையும் ஒற்றுமையாகப் பற்றிப் பிடிக்கத்தான் அல்லாஹ் கோருகின்றான். இங்கே நிகழ்வதென்ன? ஜமாஅத்தே இஸ்லாமி என்றும், முஜாஹித் என்றும், ஸலபி ஜமாஅத் என்றும், அஹ்லே ஹதீஸ் என்றும், JAQH என்றும், TNTJ என்றும் இன்னும் எத்தனையோ இயக்கங்கள் அமைப்புகள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்கிறார்கள். ஆனால் தாங்கள் குர்ஆனையே பற்றிப் பிடித்திருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். ஏன் இந்த நிலை?
இவர்களின் இத்தகைய போக்கினால் இஸ்லாமிய மறுமலர்ச்சி என்பது வெறும் கனவாகத்தான் இருக்கும். அடுத்து நம்மிடையே ஏற்படும் கருத்து வேற்றுமைகளை களைய சம்பந்தப்பட்ட அனைவரும் ஒன்றுகூடி இறை வழிகாட்டுதலை ஆராயமல் அவசரப்பட்டு தங்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தி விடுவது இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு நம்மால் ஏற்படுத்தப்படும் மாபெரும் முட்டுக்கட்டைதான். இறை மார்க்கத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் இத்தகைய நம் செயல்களுக்காக நாளை மறுமையில் இறைவன் முன் நாம் குற்றவாளிக் கூண்டில் நின்றேயாக வேண்டும்.

இறைவன் தன் திருமறையில் கடுமையாக இப்படி எச்சரிக்கிறான்
"(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனையுண்டு. (அல்குர்ஆன் 3:105)

அல்லாஹ்வின் நல்லடியானாக வாழ்வது எப்படி

மனிதர்கள் இறைவனுக்கு அடிபணியவே படைக்கப்படடிருப்பதால், அவனை வணங்கி வழிபடுவது எப்படி என்பதை அவர்கள் அறிந்திருப்பது கடமையாகும். இதுவும் குர்ஆனில் அறிவிக்கப்பட்டுள்ளது. ( 22:67)

ஒவ்வொரு வகுப்பாருக்கும் அவர்கள் வணங்குவதற்கு உரிய வழியை நாம் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். எனவே அந்த விவகாரத்தைப் பற்றி அவர்கள் உம்மிடம் தர்க்கிக்க வேண்டியதில்லை. (22:67)

இறைவன் தன் அடியார்கள் எப்படித் தன்னை வணங்கி வழிபட வேண்டும் என்று கோருகிறான் என்பதைப் குர்ஆன் விரிவாக விளக்குகிறது. தொழுகை, வணக்க வழிபாடு, கடமையாக்கப்பட்ட ஈகை, போன்றவற்றைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு குர்ஆன் பதில் அளிக்கிறது. இறை நம்பிக்கையாளருக்கு உரிய பண்பாடுகள் பற்றி மட்டும் கூறுவதோடல்லாமல், இறை நம்பிக்கையாளர்கள் தவிர்க்க வேண்டியவை, அவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள், ஆகிய யாவும் குர்ஆனில் விவரிக்கப்படுகின்றன. தன்னடக்கம், தியாக மனப்பான்மை, நேர்மை, நீதி, இரக்கம், சகிப்புத்தன்மை, உறுதி மற்றும் இவை போன்ற ஒழுக்கச் சிறப்பியல்புகள் இறைவனின் நல்லடியாளர்களிடம் அமைய வேண்டிய பண்புகளாகக் குறிப்பிடப்படுகின்றன. இறை நம்பிக்கையாளர்கள் இவற்றைக் தவிர்க்கும்படி எச்சரிக்கப்படுகிறார்கள்.

இப்பிரபஞ்சத்தையும் மனிதனையும் இறைவன் ‘ஒன்றுமில்லாமை’ யிலிருந்து படைத்தான். உயிரினங்களில் மனிதன் குறிப்பாக ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டிருக்கிறான். அவற்றுள் மிக முக்கியத்துவமும் சிறப்பும் வாய்ந்தது ‘ஆன்மா’ ஆகும். இதுதான் மனிதனை உணர்வுடையனாக்குகிறது. மனிதனுக்கு வழங்கப்பட்ட சலுகைகளின் எண்ணிக்கை எவ்வளவு அதிகமானவை எனில் அவற்றை மனிதன் எண்ண ஆரம்பித்தால் அவனால் எண்ணி முடிக்க முடியாது, என்று இறைவன் அறிவிக்கின்றான். (அந்நஹல்:18). எனவே மனிதன் இந்தச் சலுகைகள் எல்லாம் தனக்கு வழங்கப்பட்டிருப்பது ஏன் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவற்றிற்கெல்லாம் பிரதிபலனாக இறைவன் மனிதனிடம் கோருவது என்னவென்பதையும் ஆலோசித்து அறிய முற்பட வேண்டும்.

அவன் வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும், மனிதர்களுக்குப் பயனளிப்பவற்றை ஏற்றிக் கொண்டு கடலில் செல்லும் கப்பலிலும், வறண்டு காய்ந்த பூமியை செழிப்படையச் செய்ய வானத்திலிருந்து இறைவன் பொழியச் செய்யும் மழையிலும், எல்லாவிதமான படைப்பினங்களையும் பூமியில் பரவ விட்டிருப்பதிலும், காற்று வீசும் பல திசைகளிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் (நல்ல நோக்கங்கள் நிறைவேற உதவும்படி) நிலைபெற்றிருக்கச் செயதிருக்கச் செய்திருக்கும் கருமேகத்திலும் சிந்திக்கக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக சான்றுகள் இருக்கின்றன. (2:164)

தான் நுகரும் எல்லாச் சலுகைகளும் இறைவனால் வழங்கப்பட்டவை என்பதை உய்த்துணரும் ஆற்றல் படைத்தவன் மனிதன். எனவே தான் இறைவனுக்கு நன்றியுள்ளவனாக விளங்கவேண்டும் என்பதை உணர்ந்தவனாக மனிதன் விளங்குகின்றான். ஆனாலும் அந்த நன்றியுணர்வு எப்படி வெளிப்படுத்துவது என்பதை அறியமாட்டான். இதிலும் மனிதனுக்கு வழிகாட்டுகிறது குர்ஆன்.

குர்ஆனில் இறைவன், மனிதன் தன் வாழ்நாளில் ஒவ்வொரு காரியத்திற்கும் தன் அனுமதியைப் பெற வேண்டுமென்று கோருகிறான். மனிதனுடைய வாழ்வில் ஒவ்வொரு கணமும் இறைவனுடைய விருப்பத்தை அறிந்து செயல்பட வேண்டுமேயல்லாது தன்னுடைய விருப்பத்திற்கும் இச்சைக்கும் ஏற்ப செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மனிதன் தன் இச்சைக்கு அடிமையாகி விடுவான். ( 25:43)

தன் இச்சையை தன்னுடைய இறைவனாக எடுத்துக்கொண்டிருப்பவனை பார்த்தீருக்கிறீரா?

இறைவனின் இந்த எச்சரிக்கைக்குச் செவி சாய்த்து, இறை நம்பிக்கையாளர் தன்னுடைய வாழ்நாளில் ஏதேனும் ஒரு நடவடிக்கையை நிறைவேற்ற பலவழிகள் தோன்றும்போது, இறைவனின் திருப்தியைப் பெற்று தரும் வழிமுறைகளையே தேர்ந்தெடுப்பான்; அஃதொரு சாதாரண நிகழ்வாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு கருத்தாகவோ மனப்பான்மையாகவோ இருந்தாலும் சரி.

இதன் விளைவாக, தன் இறைவனின் திருப்தியைப் பெறும் வகையில் தன் வாழ்நாளில் எல்லா நடவடிக்கைககளையும் மேற்கொள்ளும் இறைநம்பிக்கையாளன் என்றும் அழியாத பேறுகளை அடைய அருகதை உடையவனாகிறான். எனவே,மனிதன் இறைவனின் அடிமையாக இருப்பதன் மூலம் தனக்கே பலன் தேடிக் கொள்கிறான் என்பது தெளிவாகிறது.
இன்னும், எவர் (அல்லாஹ்வின் பாதையில்) உழைக்கிறாரோ அவர் நிச்சயமாகத் தமக்காகவே உழைக்கிறார் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் (உதவி எதுவும்) தேவைப்படாதவன். (29:6)

மனிதனுடைய வணக்க வழிபாடுகளும் நல்ல நடவடிக்கைகளும் எல்லாம் இறைவனுக்குத் தேவையே இல்லை. குர்ஆன் இதனை, அல்லாஹ் என்றுமே தேவைப்படாத வளமிக்கவன்.

June 12, 2009

இறைவனை சிந்திக்காதவர்கள்

இன்னும் அவர்கள் (சிந்தித்து) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டமாக (பல்வேறு) விளக்கங்களைகூறியுள்ளோம். (அல்குர்ஆன் 17:41)

நிச்சயமாக இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக சகலவிதமான உதாரணங்களையும் விவரித்துள்ளோம். (அல்குர்ஆன் 17:89 )

இன்னும் நிச்சயமாக நாம் இந்த குர்ஆனில் ஒவ்வோர் உதாரணங்களையும் மனிதர்களுக்காக விளக்கியுள்ளோம் எனினும் மனிதன் அதிகமாக தர்க்கம் செய்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 39:27)

மேலுள்ள நான்கு வசனங்களும் வெவ்வேறு வசனங்களாக இருந்தாலும் சிந்திக்க வேண்டும் என்ற ஒத்த கருத்தை ஓங்கி ஒலிக்கின்றன.

ஷைத்தான் மனிதர்களின் சிந்தனையை மழுங்கச் செய்து பகுத்தறிவு என்ற வார்த்தைக்கு ஒரு மங்கலான விளக்கமளித்து அவர் அவர்கள் செய்வதுதான் சரி என்ற நிலையில் அழகாகக் காண்பித்து மனிதர்களில் அனேகரை இணை வைக்கும் கொடிய பாவத்திலும், அல்லாஹ்வால் மன்னிக்கப்படாத பாவங்களிலும் இறை நிராகரிப்பிலும் இட்டுச் செல்கின்றான்.

இறைவனை நம்புவது நன்மையான காரியம்தான்.
அந்த இறையை வணங்குவதற்காக நாமாகவே ஒன்றை உருவாக்கி, ஒரு தோற்றத்தை ஏற்படுத்திஇறைத்தன்மை யெல்லாம் நாம் உருவாக்கிய உருவங்களுக்கு இருப்பதாக நினைக்கின்றார்களே? நம்மை படைத்தவன் தான் இறைவனாக இருக்க இயலும் நாம் படைத்தவைகள் இறைவனாக கடவுளாக இருக்க சாத்தியமில்லை. அப்படியானால் நம்மை படைத்தது யார்? அந்த இறைவனின் தன்மை, ஆற்றல், ஆட்சியதிகாரம் என்ன? என்பதை சிந்திப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்கும் தன்மைகள் அவற்றிற்கு இருக்கின்றனவா? என்பதையாவது சிந்திக்க வேண்டும்.

அவர்களுக்கு நடக்க கூடிய கால்கள் உண்டா? அல்லது பிடிப்பதற்குறிய கைகள் உண்டா? அல்லது அவர்களுக்கு பார்க்கக் கூடிய கண்கள் உண்டா? அல்லது அவர்களுக்கு கேட்கக் கூடிய காதுகள் உண்டா? நபியே கூறும்! நீங்கள் இணை வைத்து வணங்கும் தெய்வங்களை எல்லாம் அழைத்து எனக்கு தீங்கு செய்திட சூழ்ச்சி செய்து பாருங்கள். இதில் எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள். (அல்குர்ஆன் 7:195)

இவ்வாறு ஒவ்வொரு விசயத்தையும் அறிவுக்கு பொருத்தமாக கூறி, சிந்தனையில் ஆழ்த்தி, பகுத்துணரச் செய்வதுதான் குர்ஆனின் தன்மையே. இவ்வாறு எதையும் பற்றி சிந்திக்காதவர்களை குர்ஆன் உவமையாக கூறி விமர்சிப்பதை கீழுள்ள வசனங்களை படித்து பாருங்கள்.

நிச்சயமாக அவர்களில் பெரும்பாலோர் (உம் உபதேசத்தை) கேட்கின்றார்கள். அல்லது அறிந்துணர்கிறார்கள் என்று நீர் நினைகின்றீரா? அவர்கள் கால் நடைகளைப் போன்றவர்களேயன்றி வேறில்லை அல்ல (அவற்றை விடவும்) அவர்கள் மிகவும் கேடு கெட்டவர்கள். (அல்குர்ஆன் 25:44)

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர் பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாத செவிடர்களும் ஊமையர்களும் தான். (அல்குர்ஆன் 8:22)

குர்அன் போன்று எவ்வேதமும் சிந்தனையை தூண்டவுமில்லை. சிந்திக்காதவர்களை குர்ஆன் போன்று எவ்வேதமும் விமர்சனம் செய்யவுமில்லை. குர்ஆன் சிந்தனை செய்ய திறந்த மடலாக திகழ்கின்றது. தன்னையே சிந்தித்து ஏற்றுக் கொள்ளும்படி அறை கூவல் விடுகின்றது.

உண்மையை சிந்திக்காதவர்கள் இறவனிடம் இழிவானவர்கள்; மேலும் சிந்திக்காதவர்கள் கண் இருந்தும் குருடர், வாய் இருந்தும் ஊமையர், செவி இருந்தும் செவிடர்கள் என்று ஊனமுற்றவராக சித்தரிக்கின்றது. கால்நடைகள் என்றெல்லாம் சிந்திக்காதவர்களை ஒப்பிட்டு வர்ணிக்கிறது. இப்படிப்பட்ட விமர்சனங்கள் இனியாவது சமுதாயத்தின் சிந்தனைக்கதவை திறக்குமா? நல்லறிவுடையோர்தான் குர்ஆனை சிந்திப்பார்கள் என அல்லாஹ் கூறுவதால் எங்களுக்கு நல்லறிவு கொடுக்கப்படவில்லை, எவ்வாறு சிந்திப்பது என கேட்கப் போகின்றார்களா? இறைவன் நம்அனைவருக்கும் சிந்தித்து உணரும் நல்லறிவை தந்து அருள்வானாக!

மார்க்கத்தில் புதிதாக ஒன்றை ஏற்படுத்தாதே

இமாம் அபூஹனிபா (ரஹ்) கூறியுள்ளார்கள் :-
நீங்கள் ஹதீஸ் ஆதாரங்களையும், நபிதோழர்களின் நடை முறைகளையும் பற்றிப் பிடிப்பவர்களாய் இருங்கள். மார்க்கத்தில் புதிதாக தோன்றியவை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், அனைத்தும் பித்அத்துக்களும் வழிகேடுகளேயாகும்.

இமாம் மாலிக் (ரஹ்) கூறியுள்ளார்கள் :-
"மார்க்கத்தில் பித்அத்தை உண்டாக்கி அதற்கு பித்அத்து ஹஸனா என்று எவன் பெயர் சூட்டுகின்றானோ,அவன் நபி(ஸல்) அவர்கள் தனது ரிஸாலத்தில்(தூதுவப் பணியில்) மோசடி செய்து விட்டார்கள் என்றே கருதுகிறான்.எனேன்றால், அல்லாஹ், "அல்யவ்ம அக்மல்து லக்கும் தீனுக்கும்......என்று சொல்லிவிட்டான். அன்று மார்க்கமாக இல்லாதது இன்றும் மார்க்கமாக இருக்க முடியாது.

இமாம் ஷாபிஈ (ரஹ்) கூறியுள்ளார்கள் :-
எவன் மார்க்கத்தில் புதிதாக ஒன்றை உண்டாக்கி, அதை பித்அத்து ஹஸனா என்று சொல்கிறானோ அவன் புதிதாக ஒரு மார்க்கத்தையே உண்டாக்கி விட்டான்.

இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) கூறியுள்ளார்கள் :-
எங்களிடம் சுன்னாவின் அடிப்படையாவது:ரசூல் (ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் இருந்த வழியை உறுதியாகப் பற்றிப் பிடித்து, அவர்களைப் பின்பற்றி பித்அத்துக்களை விடுவதேயாகும். ஏனென்றால் பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகளேயாகும். நூல்:அஸ்ஸுன்னத்து வல் பித்ஆ

மனிதர்கள் சிந்திக்க வேண்டாமா?

நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா? 2:44

தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. 2:269 அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க வேண்டாமா (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். 4:82

(நபியே!) நீர் கூறும்; "என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை." இன்னும் நீர் கூறும்; "குருடனும் பார்வையுடைவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?" 6:50

உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப்பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம். 6:98

அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும் ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. 13:

நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும் நன்மை செய்யுமாறும் உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும் மானக்கேடான காரியங்கள் பாவங்கள் அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் - நீங்கள நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான். 16:90

அவர்கள் தங்களுக்குள்ளே (இத பற்றிச்) சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லாஹ் வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவற்றையும் உண்மையையும் குறிப்பட்ட தவணையையும் கொண்டல்லாமல் படைக்கவில்லை எனினும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் தங்கள் இறைவன் சந்திப்பை நிராகரிக்கிறார்கள். 30:8

அச்சமும் ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டுவதும்; பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்து அதைக் கொண்டு பூமியை - அது (வரண்டு) இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சகள் இருக்கின்றன.30:24

மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும் பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன் அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை அவ்வாறிருக்க (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள். 35:3

அல்லாஹ் உயிர்களை அவை மரணிக்கும் போதும் மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. 39:42

அவர்கள் கூறுவார்கள்; "நாங்கள் (அவர் போதனையைச்) செவியுற்றோ அல்லது சிந்தித்தோ இருந்திருந்தோமானால் நாங்கள் நரகவாசிகளில் இருந்திருக்க மாட்டோம்."

June 11, 2009

ராசி பலன் பார்ப்பது, தாயத்து கட்டுவது

கிரக பலன்களையும் ராசி பலன்களையும் நம்புவது நட்சத்திரங்கள் மூலமாக ராசி பலன் பார்ப்பதும், கோள்கள், நட்சத்திரங்களால் உலகில் மாற்றங்கள் எற்படுகின்றன என நம்புவதும் குஃப்ராகும்.
ஜைது இப்னு காலித் அல்ஜுஹனி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு முறை நபி அவர்கள் ஹுதைபிய்யாவில் சுப்ஹு தொழுகையை தொழ வைத்தார்கள். அன்றிரவு மழை பெய்திருந்தது. தொழுகை முடிந்தவுடன் மக்களை முன்னோக்கி "உங்களது இறைவன் என்ன கூறினான் என்பதை அறிவீர்களா?' என்று வினவினார்கள். "அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்' என நபித்தோழர்கள் கூறினார்கள். அப்போது நபி அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான் "எனது அடியார்களில் என்னை விசுவாசித்தவரும் என்னை மறுத்தவரும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் கிருபையாலும் அவனது அருளாலும் நமக்கு மழை பொழிந்தது என்று கூறியவர் என்னை விசுவாசித்து கிரகங்களை மறுத்தவராவார். இன்ன கிரகத்தின் காரணமாக மழை பொழிந்தது என்று கூறுபவர் என்னை நிராகரித்து கிரகத்தை விசுவாசித்தவராவார்.'' (ஸஹீஹ முஸ்லிம்)


நாளிதழ், வார இதழ், மாத இதழ்களில் வெளியிடப்படும் நட்சத்திர ராசி பலன்களை நம்புவது ஷிர்க்காகும். அதை படிப்பதும் பெரும் குற்றமாகும். காரணம், அது ஷிர்க்கிற்கு வழிவகுத்து விடும்.


அல்லாஹ் அனுமதிக்காதவைகளிலிருந்து பயன்களைத் தேடுவது சிலர் தாயத்துகள், கயிறுகள், வளையங்கள் போன்றவற்றை அணிந்து கொள்கிறார்கள் அல்லது தங்களது பிள்ளைகளுக்கு அணிவிக்கிறார்கள். சிலர் தங்களது கை, கழுத்து, இடுப்பில் அவைகளை கட்டிக் கொள்கிறார்கள். சிலர் சில கற்களை ராசிக்கல் என்று கூறி அதை மோதிரங்களில் பதித்து அணிகிறார்கள். இவ்வகையான அனைத்து செயல்களும் இறை நம்பிக்கைக்கு எதிரானதாகும். இவை மென்மேலும் ஈமானில் பலவீனத்தை எற்படுத்துகின்றன. இவைகளின் மூலம் நிவாரணம் தேடுவது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும்.


பெரும்பாலான தாயத்துகளில் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் வாசகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அல்லது புரிந்துகொள்ள முடியாத சில படங்களும், எழுத்துக்களும், கட்டங்களும் காணப்படுகின்றன. தாயத்து எழுதுபவர்களில் சிலர் குர்ஆன் வசனங்களையும் இணை கற்பிக்கும் வாசகங்களையும் இணைத்து எழுதுகிறார்கள். சிலர் திருக்குர்அன் வசனங்களை நஜீஸ்(அசுத்தங்)களைக் கொண்டோ அல்லது மாதவிடாய் உதிரத்தைக் கொண்டோ எழுதுகிறார்கள். இம்மாதிரியானவைகளை அணிந்து கொள்வதோ, எங்கேனும் தொங்க விடுவதோ தடுக்கப்பட்ட பெருங்குற்றமாகும்.


நபி அவர்கள் கூறினார்கள்: "தாயத்தைத் தொங்க விட்டவன் அல்லாஹ்வுக்கு இணை வைத்துவிட்டான். '' (முஸ்னத் அஹமத்)
இக்காரியங்களைச் செய்பவன், இவைகள் தானாகவே நன்மை தீமை செய்யும் ஆற்றல் பெற்றவை என நம்புபவன் பெரிய "ஷிர்க்'கைச் செய்தவனாவான். அனைத்து வகை ஷிர்க்கும் பெரும் பாவத்தைவிட மிகக் கொடியதாகும்.

வாக்குறுதி

இஸ்லாமிய நேர்வழியை முற்றிலும் கடைபிடிக்கும் முஸ்லிம் ஒப்பந்தத்தைப் பேணி, வாக்குறுதியை நிறைவேற்றுவார். வாக்கை நிறைவேற்றுவது முஸ்லிமின் சமுதாய வெற்றிக்கான அடிப்படையும் மனிதகுலத்தின் உயர்வுக்கான வழியுமாகும். முஸ்லிம் வாக்குறுதியைப் பேணுவதில் முதன்மையானவராக இருப்பார். வாக்குறுதியை நிறைவேற்றுவது இஸ்லாமிய நற்பண்புகளில் தலையாயதாகும்.

ஒருவருடைய ஈமான் சீரானது என்பதற்கும், அவரது இஸ்லாம் அழகானது என்பதற்கும் இப்பண்பே சான்றாகும். அதை கடைபிடிப்பது ஈமானின் அடையாளமாகும். அதைப் புறக்கணிப்பது நயவஞ்சகத்தனத்தின் அடையாளமாகும்.

விசுவாசிகளே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளைப் பூரணமாக நிறைவேற்றுங்கள்... (அல்குர்அன் 5:1) ....

உங்கள் வாக்குறுதியை நீங்கள் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள். எனென்றால், (மறுமையில்) வாக்குறுதியைப் பற்றி (உங்களிடம்) நிச்சயமாகக் கேட்கப்படும். (அல்குர்அன் 17:34)

இன்றைய காலகட்டத்தில் பல முஸ்லிம்கள் செய்து கொண்டிருப்பது போல ஒப்பந்தம், வாக்குறுதி என்பது காற்றில் பறக்கவிடப்படும் வார்த்தையல்ல. அல்லாஹ்விடம் விசாரணை செய்யப்படும் மிகப்பெரிய பொறுப்பாகும்.

நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையைப் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள்.... (அல்குர்அன் 16:91)

இவ்விடத்தில் மனிதர்களிடம் செய்யப்படும் உடன்படிக்கையை அல்லாஹ்வுடன் செய்யப்படும் உடன்படிக்கையைப் போன்று கூறப்பட்டுள்ளது. அதற்கு காரணம் உடன்படிக்கையின் முக்கியத்து வத்தையும், அதன் கண்ணியத்தையும், அது நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று என்பதையும் வலியுறுத்துவதேயாகும்.

விசுவாசிகளே! நீங்கள் செய்யாத காரியங்களை(ச் செய்வேன் என்று அல்லது செய்ததாக) ஏன் கூறுகிறீர்கள்? நீங்கள் செய்யாத காரியங்களைச் (செய்வேன் என்று அல்லது) செய்ததாகக் கூறுவது அல்லாஹ்விடத்தில் பெரும்பாவமாக இருக்கின்றது. (அல்குர்அன் 61:2,3)

வாக்குறுதிக்கு மாறுசெய்வதும் அதை நிறைவேற்றாமலிருப்பதும் அல்லாஹ் தனது அடியார்களிடம் மிகவும் வெறுக்கும் பெரும்பாவமாகும். அல்லாஹ் மேற்கூறிய திருவசனத்தின் ஆரம்பத்தில் கேள்வி எழுப்புவது அல்லாஹ்வின் கண்டனத்தை வெளிப்படுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும். 1)பேசினால் பொய்யுரைப்பான் 2)வாக்களித்தால் மாறு செய்வான் 3)நம்பினால் மோசடி செய்வான்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஸஹீஹ் முஸ்லிமின் ஒர் அறிவிப்பில்: "அவன் நோன்பிருந்தாலும் தொழுதாலும் அவன் தன்னை முஸ்லிம் எனக் கருதினாலும் சரியே'' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு முஸ்லிமின் இஸ்லாம் சீரடைவது தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்களைக் கொண்டு மட்டுமல்ல. மாறாக, இஸ்லாமிய வழிகாட்டுதலின்படி ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதன் மூலமே சீரடைகிறது. அப்போதுதான் உயர்ந்த நற்பண்புகளும், உன்னதமான நடைமுறைகளும் அவரிடம் பிரதிபலிக்கும். அல்லாஹ்வின் வரம்புக்குள் நின்று, ஏவலை செயல்படுத்தி, விலக்கலைத் தவிர்த்து வாழ்பவராகவும், அல்லாஹ்வின் நேர்வழியை எல்லா நிலையிலும் பின்பற்றுபவராகவும் இருப்பார்.

எனவே உண்மை முஸ்லிமின் வாழ்வில் பொய்யும், வாக்குறுதிக்கு மாறு செய்வதும் ஒப்பந்தங்களில் மோசடி செய்வதும் நிகழாது.

இந்த கசப்பான உண்மையை வியாபாரிகளும் தொழிலாளர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் மக்களிடம் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடித்துத் தருவதாக வாக்களித்து, பிறகு அதை நிறைவேற்றுவதில்லை. அவர்கள் எதேனும் ஒரு விஷயத்தில் ஒப்பந்தம் செய்து, பிறகு அந்த ஒப்பந்தத்தை முறித்து விடுகிறார்கள்.

பொருள், ரகசியம், வாரிசுரிமை போன்ற விஷயங்களில் வைக்கப்பட்ட நம்பிக்கைக்கு மோசடி செய்து விடுகிறார்கள். இது போன்ற குணமுடையவர்கள் நயவஞ்சகர்களாவர். அவர்கள் தொழுதாலும், நோன்பிருந்தாலும், தங்களை முஸ்லிம்களாக எண்ணிக் கொண்டாலும் சரியே.

மனித வாழ்வு இவ்வுலகோடு முடிவு பெற்றால்!

பகுத்தறிவற்ற எண்ணற்ற பிராணிகளைப்போல், பகுத்தறிவுள்ள மனிதனும் ஒரு பிராணியே. சிலர் சொல்லுவது போல் அவனுக்கு மறுமை வாழ்க்கை என்று ஒன்றில்லை. மனிதன் மரணிப்பதோடு அவனது வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. மற்ற பிராணிகளைப் போல் அவனும் வாழந்து மடிந்து மண்ணாகிப் போவதே அவனது இறுதி முடிவு என்பது நாத்திக நண்பர்களின் உறுதியான முடிவு.

இந்த அவர்களின் முடிவின் அடிப்படையில் எமக்குச் சில ஐயங்கள் எழுகின்றன. அவற்றைத் தீர்த்து வைப்பது அவர்களின் கடமையாகும்.

நாத்திகர்கள் தாங்கள் தான் அசலான பகுத்தறிவாளர்கள் என்று பறைசாற்றிக் கொள்வது ஊர் அறிந்த உண்மை. எனவே எமது சில பகுத்தறிவுக் கேள்விகளுக்கு விடை தருவது அவர்கள் மீதுள்ள பொறுப்பாகும். அவர்கள் தரும் பதில்களிலிருந்து அவர்கள் பகுத்தறிவுப் பாசறையிலுள்ளவர்களா? அல்லது ஐயறிவு பாசறையிலுள்ளவர்களா? என்பதை எம்போன்றவர்கள் விளங்கிக் கொள்ள முடியும்.

உலகில் காணப்படும் கோடான கோடி ஜீவராசிகளைப் போல் அதாவது புழு பூச்சிகளைப் போல் மனிதனும் ஒரு புழு -பூச்சியே - ஒரு பிராணியே ஜீவராசியே! அனைத்து உயிரினங்களும் மடிந்து மண்ணணாகிப் போவது போல் மனிதனும் மடிந்து மண்ணாகி போகின்றவன்தான். மற்றபடி அவனுக்கொரு ஆத்மாவோ, மறுமை வாழ்க்கையோ இல்லை என்பதே நாத்திகர்களின் பகுத்தறிவு வாதம். அதாவது உலக வாழ்வோடு மனித வாழ்வு முற்றுப் பெற்று விடுகிறது. அதன் பின் ஒரு தொடர்ச்சியும் இல்லை என்பதே அவர்களின் வாதம். இப்போது அவர்களின் வாதத்தில் நமக்கு ஏற்படும் ஐயங்கள் இவைதான்.

மற்ற படைப்பினங்களைப் போன்றதொரு சராசரி படைப்பினமே மனிதன் எனும் போது மற்ற படைப்பினங்களுக்குரிய சட்டங்களே மனிதனுக்கும் பொருந்த வேண்டும். மற்ற படைப்பினங்களைப் பொருத்தமட்டிலும் “வல்லனவற்றின் வாழ்வு வளம்” (Survival of the fittest) என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே அவற்றின் வாழ்வு அமைந்துள்ளது. அதாவது வலிமையுள்ளவை வலிமையற்றவற்றை வீழ்த்தி, அல்லது அழித்து தம்மை வளப்படுத்திக் கொள்கின்றன. உதாரணமாக பெரிய மீன்கள் சிறிய மீன்களைக் கொன்று தமக்கிரையாக்கி கொள்கின்றன. சிங்கம், புலி போன்றவை மான், மாடு போன்றவற்றைக் கொன்று தமக்கிரையாக்கிக் கொள்கின்றன. இந்த “வல்லனவற்றின் வாழ்வு வளம்” புழு, பூச்சியிலிருந்து, ஊர்வனவற்றிலிருந்து, நாலு கால் பிராணிகள் வரை பொருந்தும், தரையிலுள்ள பிராணிகளுக்கும் பொருந்தும். இந்த சித்தாந்தத்தை நாத்திக பகுத்தறிவாளர்கள் அநீதி என்று தீர்ப்பு அளிப்பதில்லை.

அப்படியானால், அந்த ஜீவராசிகளைப் போன்றதொரு புழு, பூச்சி-மிருகம் போன்ற ஜீவராசிதான் மனிதன் என்று நாத்திக பகுத்தறிவாளர்கள் கூறும் போது, அதே “வல்லனவற்றின் வாழ்வு வளம்” (Survival of the Fittest) என்ற சித்தாந்தம் மனிதனுக்கும் பொருந்திப் போக வேண்டுமல்லவா? மனிதர்களிலும் வலியவர்கள் வலிமை அற்றவர்களை வீழ்த்தி தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்வதை அநீதி என்று கூற முடியுமா? இல்லை; இது அநீதி என்று நாத்திகர்கள் கூறுவார்களேயானால், எந்த அடிப்படையில் அநீதி என்று கூறுகிறார்கள்? மற்ற படைப்பினங்களைப் போன்றதொரு, மண்ணோடு மண்ணாகிப் போகும் ஒரு படைப்புத்தானே - புழு பூச்சிதானே, மிருகம் போன்றவன்தானே மனிதனும் நாத்திகர்களின் கூற்றுப்படி அப்படியானால் மற்றப் படைப்பினங்களுக்குப் பொருந்திப் போகும் வல்லனவற்றின் வாழ்வு வளம் (Survival of the fittest) என்ற கோட்பாடு மனிதனுக்கு மட்டும் ஏன் பொருந்திப் போகாது? இதற்குரிய சரியான விளக்கத்தை பகுத்தறிவு அடிப்படையில் தரக் கடமைப்பட்டிருக்கிறார்கள் நாத்திகர்கள். அது மட்டுமல்ல; மற்ற படைப்பினங்கள் விஷயத்தில் அது நீதியாகும்; மனிதப்படைப்பு விஷயத்தில் அது நீதியாகும்; மனிதப்படைப்பு விஷயத்தில் மட்டுமே அது அநீதியாகும் என்று பிரித்துச் சட்டம் சொன்ன அதிகாரம் பெற்ற சக்தி எது? இதற்கு பகுத்தறிவு ரீதியாக விளக்கம் தரக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

நீதிக்கும், தர்மத்திற்கும் கட்டுப்பட்டு வாழ்பவர்களில் பெரும்பாலோர் வறுமையிலும், துன்பங்களிலும் சதா உழன்று மடிகிறார்கள். அவர்கள் நீதிக்கும், தர்மத்திற்கும் உட்பட்டு வாழ்ந்ததற்குரிய நற்பலனை இவ்வுலகில் அனுபவிக்கவில்லையே! அப்படியானால் எங்கே பெறுவார்கள்?
அடுத்து வலுவில்லாதவர்கள் வலுவானவர்களை அடக்கி ஒடுக்கி தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வது அநீதியே என்ற பகுத்தறிவு ரீதியாகவும் மனச்சாட்சியின் படியும் அப்பட்டமாக ஒப்புக் கொண்டிருக்கும் நாத்திகர்களில் பலர், இன்று அதற்கு மாறாக மக்களையும் அரசையும் அதிகாரிகளையும் ஏமாற்றி அல்லது லஞ்சம் கொடுத்து கோடி, கோடியாகக் கொள்ளை அடித்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சொத்துக்களைக் குவித்துக் கொண்டிருக்கிறார்களே? இதற்குக் காரணம் என்ன? அவர்கள் அநீதி என்று ஒப்புக் கொண்டுள்ளதற்கு மாற்றமாக - மக்களிடம் அநீதி என்று அப்பட்டமாக அறிவிப்பதற்கு மாற்றமாக அந்த அநீதியான கொள்ளை அடிக்கும் செயலை செய்ய அவர்களைத் தூண்டும் சக்தி எது? அவர்களது பகுத்தறிவும், மனச்சாட்சியும் பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமற்ற செயல் என்று ஒப்புக்கொள்ளும் குடி, விபச்சாரம், சூது போன்ற தீய காரியங்களில் அவர்களில் பலர் மூழ்கி இருக்கிறார்களே? இத்தீய செயல்களைச் செய்ய அவர்களைத் தூண்டும் சக்தி எது?

இறைவனையும், மறுமையையும் உறுதியாக நம்பிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களோ மனிதனின் உடம்பில் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் அவனது பகிரங்கப் பகைவனான ஷைத்தான் ஓடிக்கொண்டு மனிதனை வழிகெடுத்து நரகில் கொண்டு தள்ளி அதை நிரப்ப கங்கணம் கட்டிச் செயல்படுகிறான். அவனது வலையில் சிக்கியே மனிதன், தானே பாவம், அநீதி, அக்கிரமம், ஓழுக்கமற்ற செயல் என்று பகிரங்கமாக ஒப்புக் கொள்ளும் துர்ச்செயல்களைச் செய்து பாவியாக நேரிடுகிறது என்று கூறிவிடுவார்கள். நிச்சயமாக நாத்திகர்கள் இறைவனையும், மறுமையையும், ஷைத்தானையும் மறுப்பதால் இந்தக் காரணத்தை ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள்; சொல்லவும் மாட்டார்கள். அப்படியானால் பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமற்ற செயல் என்று மனிதனே பகிரங்கமாக ஒப்புக்கொண்டுவிட்டு, அடுத்த கனமே அவற்றைச் செய்வதற்குரிய காரணம் என்ன? பகுத்தறிவு செய்வதற்குரிய காரணம் என்ன? பகுத்தறிவு பாதையில் பயிற்சி பெற்ற நாத்திகர்கள் அதற்குரிய காரணம் கூறக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

அடுத்து அவர்களே பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டு விட்டு அதற்கு மாறாக அந்த பாவமான செயல்களை, அநீதியான செயல்களை, அக்கிரமமான, ஒழுக்கமற்ற காரியங்களைச் செய்து கோடி, கோடியாக கொள்ளை அடித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் குவித்து வைத்துள்ளனர். அவர்களுக்கு இன்று மக்களுக்கு மத்தியில் பெருஞ்செல்வாக்கு ஆள், அம்பு, பட்டம், பதவி, பலவித அதிகார ஆதிக்கம், அரசியல் செல்வாக்கு என்று மன்னாதி மன்னர்கள் போல் உல்லாச புரிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வுலகில் வாழ்நாள் பூராவும் அவர்கள் கொள்ளை அடித்து சேர்த்த சொத்துக்கள் அவர்களுக்கு இவ்வுலகை சுவர்க்கப்பூமியாக ஆக்கித் தருகிறது.

அவர்கள் செய்த அநீதி, அக்கிரமம், பாவச் செயல்கள், கொலை, கொள்ளைகள் இவை காரணமாக இவ்வுலகில் எவ்வித தண்டனையோ, கஷ்டமோ, துன்பமோ அனுபவிக்காமல் சுவர்க்கவாசிகள் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பாடையில் வைத்து மண்ணறையில் கொண்டு தள்ளும் வரை அல்லது தீயிலிட்டுப் பொசுக்கும் வரை இன்பமே இன்பம்; மற்றபடி துன்பத்தின் சாயல் கூட படாதபடி வாழ்ந்து மடிகிறார்கள். பகுத்தறிவு நாத்திகர்கள் பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்ட செயல்களைச் செய்தே அவர்கள் இவ்வுலகில் குபேர வாழ்க்கையை- சொர்க்கலோக வாழ்க்கையை அடைந்தார்கள்.

ஆனால் அவர்கள் செய்து முடித்த எந்த பாவமான செயலுக்கும், அநீதியான செயலுக்கும், அக்கிரமமான செயலுக்கும், ஒழுக்கமற்ற செயலுக்கும் அணுவத்தனை கூட தண்டனையோ துன்பமோ அனுபவிக்கவில்லை. மரணத்திற்குப் பின் மனிதனுக்கு வாழ்வு உண்டு என்று உறுதியாக நம்பும் முஸ்லிம்களோ நிச்சயமாக அப்படிப்பட்டவர்கள் இவ்வுலகளில் மக்களையும், அரசுகளையும், அதிகாரிகளையும் ஏமாற்றித் தப்பிக் கொண்டாலும் இறைவனுடைய தர்பாரில் தப்பவே முடியாது. அங்கு வசமாக மாட்டிக் கொள்வார்கள். கடுமையான தண்டனைகள் அவர்களது குற்றச் செயல்களுக்குக் காத்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்லி விடுவார்கள். ஆனால் இறைவனையும், மறுமையையும் மறுக்கும் நாத்திகர்கள் இப்படிச் சொல்ல முடியாது.

அப்படியாயின் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கைப்படி இப்படிப்பட்ட பாவமான, அநீதியான, அக்கிரமமான, ஒழுக்கமற்ற செயல்களைச் செய்து வளமான வாழ்வை அமைத்துக் கொண்ட கொடியவர்கள் அதற்குரிய தண்டனையை அனுபவிப்பது எப்போது? பகுத்தறிவு ரீதியாக விடை தரக்கடமைப் பட்டிருக்கிறார்கள். ஒன்று புழு, பூச்சி, மிருகம் போன்ற படைப்பினங்களைப் போல், மனிதனும் “வல்லனவற்றின் வாழ்வு வளம்” (Survival of the fittest) என்ற கோட்பாட்டின்படி வாழக் கடமைப்பட்டவன் என்று ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லை அது பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று சொன்னால் இந்த சட்டத்தை வகுத்தளித்த சக்தி எது என்பதையாவது தெளிவு படுத்த வேண்டும்.

மேலும் அவர்களே அவர்களது மனட்சாட்சிப்படி பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று அப்பட்டமாக ஒப்புக் கொண்டுவிட்டு மறைமுகமாக அவற்றைச் செய்யத் தூண்டும் சக்தி எது என்பதையும் தெளிவு படுத்த வேண்டும். இப்படி மனட்சாட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டு சொத்துக்களை குவித்து உலகில் குபேர வாழ்க்கை, சொர்க்கலோக வாழ்க்கை வாழ்ந்து மடியும் சண்டாளர்கள் தங்களின் குற்றங்களுக்குரிய தண்டனைகளை அனுபவிப்பது எப்போது? எங்கே? என்பதையும் தெளிவு படுத்த வேண்டும். இந்த எமது சந்தேகங்களுக்கெல்லாம் பகுத்தறிவு ரீதியான விளக்கங்களை அவர்கள் தரவேண்டும், அப்படியானால் மட்டுமே அவர்களைப் பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சி பெற்றவர்களாக உலகம் ஒப்புக் கொள்ளும். இல்லை என்றால் புறக்கண்ணால் பார்த்தே கடவுளை, மறுமையை ஏற்பேன் என்ற ஐயறிவு வாதத்தையே அவர்கள் முன் வைக்கிறார்கள் என்ற முடிவுக்கே முறையான பகுத்தறிறவை- நுண்ணறிவை உடையவர்கள் வர நேரிடும்.

பாவமான, அநீதமான, அக்கிரமமான, ஒழுக்கமற்ற செயல்களைச் செய்கிறவனின் மனச்சாட்சியே அவனைக் கொள்ளாமல் கொன்று கொண்டிருக்கும்; அதுவே அவனுக்குரிய தண்டனையாகும் என்ற பிதற்றலான, மழுப்பலான, நழுவலான பதிலை அவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கவில்லை. காரணம் இந்த வாதம் உண்மையானால், இவ்வுலகிலும் அதே வாதப்படி அக்குற்றச் செயல்களுக்கு அரசுகளும் எவ்விதத் தண்டனையும் அளிக்கக் கூடாது. அவர்களின் மனட்சாட்சியே அக்கயவர்களை கொல்லாமல் கொள்வதே போதுமானதாகும் என்பதையும் நாத்திகர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்? எதைச் சரிகாணப்போகிறார்கள் நாத்திகர்கள்?

June 1, 2009

தொழுகை

அல்லாஹ் கூறுகிறான்:

நிச்சயமாக தொழுகை முஃமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக விதிக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 4:103)

இஸ்லாத்தின் முதற்கடமை தொழுகையாகும். இது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். பருவமடைந்த, ஆண், பெண் அனைவரின் மீதும் தொழுகை கடமையாகும்.

அல்லாஹ் நமக்களித்துள்ள எண்ணிலடங்கா அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் வணக்கமே இத்தொழுகை. எனவே அதனை கடமை உணர்வுடனும் நன்மையை எதிர்பார்த்தும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் முறையாக நிறைவேற்றவேண்டும்.

இந்தக் கடமை மனிதன் மரணிக்கும் போதுதான் முடிவடைகிறது. ஊரில் இருக்கும் போதும் பயணத்தில் இருக்கும் போதும் ஆரோக்கியமாக இருக்கும் போதும் நோயாளியாக இருக்கும் போதும் கூட தொழுகையை அதன் நேரத்தில் நிறைவேற்றுவது அவசியமாகும்.

தொழுகையை நிலைநாட்டுமாறு சுமார் 80 இடங்களில் அல்லாஹ் குர்ஆனில் கட்டளையிட்டுள்ளான். நபி(ஸல்)அவர்கள் உயிர் பிரியும் கடைசி வேளையில் கூட தொழுகையை வலியுறுத்தினார்கள். முஸ்லிமுக்கும் முஸ்லிம் அல்லாதவருக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு தொழுகைதான். தொழுகை மானக்கேடான, பாவமான காரியங்களை விட்டும் மனிதனைத் தடுக்கின்றது. ஒரு தொழுகை மற்றொரு தொழுகைக்கு மத்தியிலுள்ள சிறிய பாவங்களுக்கு பரிகாரமாக அமைகிறது.

மறுமையில் தொழுகையைப் பற்றித்தான் முதலாவதாக விசாரிக்கப்படும். தொழுகையை பேணித் தொழுதவருக்கு அது மறுமையில் பிரகாசமாகவும் ஒளியாகவும் வரும். தொழுகையை பேணித் தொழாதவன் மறுமையில் அல்லாஹ்வின் எதிரிகளான ஃபிர்அவ்ன், ஹாமான், உபை பின் கலப் ஆகியோருடன் இருப்பான்.

தொழுகையை முறையாகப் பேணியவர்கள் நிச்சயமாக ஈருலகிலும் வெற்றியடைந்து விட்டார்கள். மனஅமைதியை பெற்று விட்டார்கள்

நல்லவற்றையும் கெட்டவற்றையும் பிரித்தறிவது எப்படி?

குர்ஆனின் கோட்பாடுகள் நிராகரிக்கப்படும் சூழ்நிலையில், நல்லவற்றையும் கெட்டவற்றையும் பிரித்தறிய பல்வேறு அளவுகோல்கள் கையாளப்படுகின்றன. இத்தகைய பலதரப்பட்ட அளவுகோல்களை நம்புவதால் தவறான வழியில் நடக்கவும் தீய விளைவுகளைச் சந்திக்கவும் நேரிடுகிறது.
எடுத்துக்காட்டாக ஒரே ஒரு முறை குற்றம் இழைக்க முயன்ற ஒருவர் பல குற்றங்களைச் செய்தவரை விடத் தூய்மையானவராகக் கருதப்படுகிறார். கொள்ளையடிப்பவன் தன்னைக் கொலையாளியை விடத் தீமையற்றவனாக எண்ணிக் கொள்கிறான்; கொலையாளி தான் ஒரு தடவை தான் கொலை செய்திருப்பதால் தன்னை அவ்வளவு கெட்டவனாகக் கருதுவதில்லை.
கொலை செய்வதையே தன் பிழைப்பாகக் கொண்டவனோ தன்னை மனநோயாளியோடு ஒப்பிட்டு அவனை விடத் தான் தூய்மையானவன் என வாதிடுகின்றான். குற்றவாளிகள் எனக் கருதப்படா விட்டாலும் கூடாவொழுக்கமுடையவர்களைப் பொருத்த வரையிலும் இதுவே தான் உண்மை. வீண் அரட்டை அடிப்பதில் நேரத்தைக் கழிப்பவன் தன் செய்கையை மிக அற்பமானதாகவே கருதுகிறான்.


தனக்கு கெட்ட எண்ணம் எதுவும் கிடையாது என்று அதற்குக் காரணமும் கற்பிப்பான். வேறொருவனுக்கு தீங்கு செய்ய நினைப்பவன், தான் நல்லவனாக இருப்பதாலேயே தீங்கு செய்ய நினைப்பதாகவும் கூறுகிறான். இத்தகைய வாதங்களைப் பற்றி தொடர்ந்து எழுதிக் கொண்டே போகலாம். மேலே குறிப்பிட்டவர்கள் யாவருமே தங்களைக் குற்றமற்றவர்கள் என்று கூறுவார்களே இல்லாமல் தாங்கள் செய்த குற்றங்கள் விளைவித்த தீமையை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.


ஆனாலும் இவர்கள் கூறும் காரணங்கள் எல்லாம் ஏற்கத்தக்கவை அன்று இவர்கள் எலலோருமே பெரும் குற்றவாளிகள் தாம். ஏனெனில், குர்ஆனை முழுமையாகப் பற்றிப் பிடித்து ஒழுகுபவனே குற்றமற்றவனாகத் திகழ முடியும். நேர்மாறாக, அவன் என்னதான் காரணம் கற்பித்தாலும் குற்றவாளியே ஆவான்.


மனித ஆன்மாவுக்கு இரண்டு நிலைகள் உள்ளன என்பதை நாம் யாவரும் அறிவோம்; மனச்சாட்சியும் கீழான ஆன்மாவும் (தான் எனும் முனைப்பு). மனச் சாட்சி எப்பொழுதும் மனிதனை நல்லதையும் சரியானதையுமே செய்யத் தூண்டும். கீழான ஆன்மா (நஃப்ஸ்) -தான் எனும் ஆணவம் - எல்லாவிதமான தீயச் செயல்களை செய்யத் தூண்டும்; இதனை இறைவன் அங்கீகரிப்பதில்லை. ஆனாலும் உறுதியான இறை நம்பிக்கையும் இறை பயமும் இருந்தால் மாத்திரமே மனிதன் தன் மனச்சாட்சியை முழுமையாக நம்பி செயல்பட முடியும்.


மார்க்கம், மனிதன் நல்லதையும் கெட்டதையும் பிரித்தறியும் மனச்சாட்சியைப் பெற உதவுகிறது. இறைவனால் வெளிப்பாடு மூலம் வழங்கப்பட்டதன் மீது முழு நம்பிக்கை கொண்டு அதற்கு முற்றிலுமாக அடிபணிந்து நடந்தால் தான் மனிதன் நல்ல சிந்திக்கக் கூடிய ஆற்றலையும் நல்ல முடிவெடுக்கும் திறனையும் பெற முடியும். எடுத்துக்காட்டாக, இறைவனை அஞசும் மனிதன் குர்ஆன் கூறுவது போல நல்லதையும் கெட்டதையும் பிரித்தறியும் அளவுகோல் வழங்கப்படுகிறான் ( 8:29)


இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்விற்குப் பயந்தால் அவன் உங்களுக்கு (நல்லதையும் கெட்டதையும் பிரித்தறியும்) அளவுகோலைத் தருவான். உங்கள் பாவங்களை உங்களை விட்டும் நீக்கி உங்களை மன்னித்து விடுவான். அல்லாஹ்வின் அருள் மிக மேன்மையானது. (8:29)


நல்லதையும் கெட்டதையும், உண்மையையும் பொய்யையும் பிரித்தறிவிக்கக் கூடியச் சிறந்த ஆதாரம் குர்ஆன் தான்.


(நன்மை தீமைகளைப் பிரித்தறிவிக்கும் (நெறி நூலாகிய) ஃபுர்கானைத் தன் அடியாருக்கு, அன்னார் உலகத்தார் அனைவரையும் எச்சரிக்கை செய்யும் பொருட்டு இறக்கியருளினான். (25:1)


குர்அன் நல்லவை மற்றும் தீயவை பற்றி விரிவாக விளக்கி நம்முடைய மனச்சாட்சியையும் உணர்வையும் பயன்படுத்தும் விதத்தையும் கூறுகிறது. எடுத்துக் காட்டாக, குறிப்பிட்ட ஒரு வசனத்தில் நேர்மையானவை பற்றிய கருத்தை விரிவாகத் தருகிறது;

மேற்கு நோக்கியோ, கிழக்கு நோக்கியோ உங்கள் முகங்களைத் திருப்புவது நேர்மையான செய்கையாக ஆகி விடாது.


அல்லாஹ்வையும், இறுதிநாளையும் வானவர்களையும் வேதங்களையும் இறைத்தூதர்களையும் மெய்யென நம்பி, தன் பொருளை அதனை அவர்கள் எவ்வளவு தான் விரும்பினாலும் உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசகர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்க்கு வழங்குபவருக்கும், தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தும் கொடுத்து வருவோரும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுபவரும், ஏழ்மையிலும், துன்பத்திலும் கடுமையான போர் நிகழும் நேரத்திலும் பொறுமையைக் கைக் கொள்வோரும் தாம் நேர்மையாளர்கள்; மேலும் இவர்கள் தாம் உணமையாளர்களும், இறையுணர்வுடையவர்களும் ஆவர். (2:177)


குடும்பத்தினரிடமிருந்தும் மூதாதையரிடமிருந்தும் அல்லது சமுதாயப் பழக்க வழக்கங்களிலிருந்தும் ஏற்றுக் கொண்ட நம்பிக்கை எதுவானாலும் அது குர்ஆனின் கொள்கைகளுக்கு ஒவ்வாததாயின் அஃது எவ்வகையிலும் நம்பத்தக்கதல்ல. சாதாரணமாக, ஒரு நல்ல மனிதனைப் பற்றி, விவரிக்க சமுதாயத்தில் புழங்கி வரும் சொற்றொடர் ஒன்றை எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். “ஒரு ஈயைக் கூடக் கொல்ல மாட்டான்” என்பது இத்தகையச் சொற்றொடர்களில் ஒன்று.


ஆனாலும் ஒரு மனிதன் ஈயைக் கொல்வதைத் தவிர்க்கும் போது அவன் குர்ஆனின் ஏவல்களுக்குப் பணியத் தவறிவிட்டால் அவனை நல்லவன் என்று கூறுவது முறையாகாது. குர்ஆன், தீயவை என்று வகைப்படுத்தியவற்றைத் தவிர்ப்பதும் நல்லவை என்று குறிப்பிட்டவற்றை செயல்படுத்துவதும் தாம் உண்மையில் நம்மீது கடமை ஆகும். ஏழைகளுக்கு இரங்கி அவர்களுக்கும் குழநதைகளுக்கும் உதவி அளிப்பவரைச் சிலர் மார்க்கச் சிந்தை உடையவர்கள் என்று வகைப்படுத்துகின்றனர். ஆனால், அந்த நடவடிக்கைகள் எல்லாம் ஒருவனை உண்மையான இறை நம்பிக்கையாளன் என்று வகைப்படுத்த அருகதையுடையவனாக்குபவை அல்ல என்று குர்ஆன் அறிவிக்கிறது. குர்ஆனின் கட்டளைகளை அக்கறையுடன் நிறைவேற்றி வாழ்நாள் முழுவதும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறப் பாடுபடுகிறவன் தான் உண்மையான இறைநம்பிக்கையாளன் ஆவான்.