June 12, 2009

இறைவனை சிந்திக்காதவர்கள்

இன்னும் அவர்கள் (சிந்தித்து) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டமாக (பல்வேறு) விளக்கங்களைகூறியுள்ளோம். (அல்குர்ஆன் 17:41)

நிச்சயமாக இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக சகலவிதமான உதாரணங்களையும் விவரித்துள்ளோம். (அல்குர்ஆன் 17:89 )

இன்னும் நிச்சயமாக நாம் இந்த குர்ஆனில் ஒவ்வோர் உதாரணங்களையும் மனிதர்களுக்காக விளக்கியுள்ளோம் எனினும் மனிதன் அதிகமாக தர்க்கம் செய்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 39:27)

மேலுள்ள நான்கு வசனங்களும் வெவ்வேறு வசனங்களாக இருந்தாலும் சிந்திக்க வேண்டும் என்ற ஒத்த கருத்தை ஓங்கி ஒலிக்கின்றன.

ஷைத்தான் மனிதர்களின் சிந்தனையை மழுங்கச் செய்து பகுத்தறிவு என்ற வார்த்தைக்கு ஒரு மங்கலான விளக்கமளித்து அவர் அவர்கள் செய்வதுதான் சரி என்ற நிலையில் அழகாகக் காண்பித்து மனிதர்களில் அனேகரை இணை வைக்கும் கொடிய பாவத்திலும், அல்லாஹ்வால் மன்னிக்கப்படாத பாவங்களிலும் இறை நிராகரிப்பிலும் இட்டுச் செல்கின்றான்.

இறைவனை நம்புவது நன்மையான காரியம்தான்.
அந்த இறையை வணங்குவதற்காக நாமாகவே ஒன்றை உருவாக்கி, ஒரு தோற்றத்தை ஏற்படுத்திஇறைத்தன்மை யெல்லாம் நாம் உருவாக்கிய உருவங்களுக்கு இருப்பதாக நினைக்கின்றார்களே? நம்மை படைத்தவன் தான் இறைவனாக இருக்க இயலும் நாம் படைத்தவைகள் இறைவனாக கடவுளாக இருக்க சாத்தியமில்லை. அப்படியானால் நம்மை படைத்தது யார்? அந்த இறைவனின் தன்மை, ஆற்றல், ஆட்சியதிகாரம் என்ன? என்பதை சிந்திப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்கும் தன்மைகள் அவற்றிற்கு இருக்கின்றனவா? என்பதையாவது சிந்திக்க வேண்டும்.

அவர்களுக்கு நடக்க கூடிய கால்கள் உண்டா? அல்லது பிடிப்பதற்குறிய கைகள் உண்டா? அல்லது அவர்களுக்கு பார்க்கக் கூடிய கண்கள் உண்டா? அல்லது அவர்களுக்கு கேட்கக் கூடிய காதுகள் உண்டா? நபியே கூறும்! நீங்கள் இணை வைத்து வணங்கும் தெய்வங்களை எல்லாம் அழைத்து எனக்கு தீங்கு செய்திட சூழ்ச்சி செய்து பாருங்கள். இதில் எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள். (அல்குர்ஆன் 7:195)

இவ்வாறு ஒவ்வொரு விசயத்தையும் அறிவுக்கு பொருத்தமாக கூறி, சிந்தனையில் ஆழ்த்தி, பகுத்துணரச் செய்வதுதான் குர்ஆனின் தன்மையே. இவ்வாறு எதையும் பற்றி சிந்திக்காதவர்களை குர்ஆன் உவமையாக கூறி விமர்சிப்பதை கீழுள்ள வசனங்களை படித்து பாருங்கள்.

நிச்சயமாக அவர்களில் பெரும்பாலோர் (உம் உபதேசத்தை) கேட்கின்றார்கள். அல்லது அறிந்துணர்கிறார்கள் என்று நீர் நினைகின்றீரா? அவர்கள் கால் நடைகளைப் போன்றவர்களேயன்றி வேறில்லை அல்ல (அவற்றை விடவும்) அவர்கள் மிகவும் கேடு கெட்டவர்கள். (அல்குர்ஆன் 25:44)

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர் பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாத செவிடர்களும் ஊமையர்களும் தான். (அல்குர்ஆன் 8:22)

குர்அன் போன்று எவ்வேதமும் சிந்தனையை தூண்டவுமில்லை. சிந்திக்காதவர்களை குர்ஆன் போன்று எவ்வேதமும் விமர்சனம் செய்யவுமில்லை. குர்ஆன் சிந்தனை செய்ய திறந்த மடலாக திகழ்கின்றது. தன்னையே சிந்தித்து ஏற்றுக் கொள்ளும்படி அறை கூவல் விடுகின்றது.

உண்மையை சிந்திக்காதவர்கள் இறவனிடம் இழிவானவர்கள்; மேலும் சிந்திக்காதவர்கள் கண் இருந்தும் குருடர், வாய் இருந்தும் ஊமையர், செவி இருந்தும் செவிடர்கள் என்று ஊனமுற்றவராக சித்தரிக்கின்றது. கால்நடைகள் என்றெல்லாம் சிந்திக்காதவர்களை ஒப்பிட்டு வர்ணிக்கிறது. இப்படிப்பட்ட விமர்சனங்கள் இனியாவது சமுதாயத்தின் சிந்தனைக்கதவை திறக்குமா? நல்லறிவுடையோர்தான் குர்ஆனை சிந்திப்பார்கள் என அல்லாஹ் கூறுவதால் எங்களுக்கு நல்லறிவு கொடுக்கப்படவில்லை, எவ்வாறு சிந்திப்பது என கேட்கப் போகின்றார்களா? இறைவன் நம்அனைவருக்கும் சிந்தித்து உணரும் நல்லறிவை தந்து அருள்வானாக!

No comments:

Post a Comment