May 29, 2009

குர்ஆனின் நற்போதனைகள்... நாவைப் பேணுக!

உண்மை பேசுக!

அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119

நேர்மையாக பேசுக!

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.
அழகானதைப் பேசுக!பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். 2:83


கனிவாகப் பேசுக!

உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். 4:8

நியாயமாகப் பேசுக!

நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள். 6:152

அன்பாகப் பேசுக!

அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. 4:36

வீண் பேச்சை தவிர்த்துடுக!

நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும். 6:68

பொய் பேசாதீர்!

உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பெய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். 16:116

புறம் பேசாதீர்!

உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். 49:12

ஆதாரமின்றி பேசாதீர்!

யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும். 40:35

அவதூறு பேசாதீர்!

எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; 24:23

பட்டதாரிகள் முதல் பாமரர்கள் வரை

மனிதரில் எவரும் தன்னை அறிவற்றவர் என்று ஒப்புக் கொள்வதில்லை. அறிவு வளர வளரத்தான் தன்னுள் எந்த அளவு அறியாமை குடி கொண்டுள்ளது என்பது புலப்படும். விண்ணையும் மண்ணையும் தன்னையும் படைத்து போஷித்துப் பரிபாலித்து வரும் இணை துணையற்ற ஒரே ஒரு இறைவன் இருக்கிறான் என்பதை பகுத்தறிய முடியாதவர்கள் தங்களை அறிவு ஜீவிகள் என்று அலட்டிக் கொள்வதில் அர்த்தமில்லை. அதே போல் அந்த இறைவனை ஒப்புக்கொண்ட பின்னர் அவனது தனித்தன்மைகளை, தெய்வாம்சங்களை இறந்து போன மனிதப் புனிதர்களுக்கும் மற்றும் படைப்பினங்களுக்கும் கொடுத்து மரியாதை செய்பவர்களும் அறிவாளிகளாக இருக்க முடியாது.


இறைத்தன்மைகளை இறைவனது படைப்பினக்களுக்குக் கொடுத்து மரியாதை செய்வது, ஒரு மனைவி தனது கணவனது ஸ்தானத்தில் மற்றொரு ஆடவனை வைத்து மதித்து நடந்தால் அவளது கணவன் அவள் மீது எந்த அளவு ஆத்திரப்படுவானோ அவளை மன்னிக்க மாட்டானோ அதைப்போல் பல ஆயிரம் மடங்கு இறைவன் கோபப்படுகிறான். அப்படிப்பட்டவர்களை மன்னிக்கவே மாட்டான் என்பதை சாதாரண அறிவு படைத்தவர்களும் விளங்க முடியும். ஆனாலும் ஷைத்தானின் பிடியில் சிக்கி இப்படிப்பட்ட காரியங்களில் மூழ்கி இருப்பவர்களே இவ்வுலகில் பெரும்பான்மையினராகக் காணப்படுகின்றனர். அவர்களே தங்களைப் பெரும் அறிவு ஜீவிகளாக எண்ணிக் கொள்கின்றனர்.


இந்த அறியாமை அறிவாளிகளிடமும் புறையோடிப் போயிருப்பதுதான் வேதனையான விஷயம். தெள்ளத் தெளிவான அல்குர்ஆனையும், இரவுப் பகலைப் போன்று வெளிச்சமுடைய நபி (ஸல்) அவர்களின் நடைமுறைகளையும் கொண்டுள்ள முஸ்லிம்களில் பெருந்தொகையினர் இறந்து போனவர்களை அடக்கம் செய்து கபுருகளைக் கட்டிக்கொண்டு ஊரெல்லாம் உண்டாக்கிக் கொண்டு 18:102 இறைவாக்கிற்கு முரணாக இறை அடியார்களை தங்கள் பாதுகாவலர்களாக்கி அவர்களிடம் போய் பரிந்துரைக்காக முறையிடும் அவலத்தைப் பார்க்கிறோம்.

அத்தியாயம் 18:102 லிருந்து 106 வரையிலுள்ள இறைவாக்குகளை உற்று நோட்டமிட்டால், அல்லாஹ் மன்னிக்காத மாபெரும் இணைவைக்கும் குற்றத்தை அவர்கள் செய்து வருவது புலப்படும். ஆயினும் அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள முல்லாக்களின் தவறான வழிகாட்டலில் இந்த வசனங்கள் காஃபிர்களுக்கு இறங்கியது என்று கூறுகிறார்கள். முஸ்லிம் என்று தன்னைக் கூறிக்கொண்ட நபி இபுறாஹீம் (அலை) அவர்களின் நேரடி வாரிசுகளான மக்கத்து குறைஷ்கள் இறைவனது அவுலியாக்களைத் தங்களின் பாதுகாவலர்களாக, அதாவது தங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரைப்பவர்களாக (பார்க்க 10:18) அல்லாஹ்வை நெருங்கச் செய்பவர்களாக (பார்க்க 39:3) எடுத்துக்கொண்ட காரணத்தால் அவர்கள் ஒரு நபியுடைய சந்ததிகளாக இருந்தும் காஃபிர்களாக ஆனார்கள் என்ற உண்மையை அறியத் தவறி விடுகிறார்கள். இவர்களும் தங்களை அறிவு ஜீவிகள் என்றே இறுமாந்திருக்கிறார்கள்.


இந்த அறியாமையிலிருந்து விடுபட்டுள்ள முஸ்லிம்களில் பலர் மத்ஹபு மயக்கத்திலும் தரீக்கா மோகத்திலும் மூழ்கி இருக்கிறார்கள். இவையும் அல்லாஹ்வின் தனித்தன்மைக்கும் அவனது நேரடி கட்டளைக்கும் மாறு செய்வதே (பார்க்க 2:170, 7:3, 33:36,66,67,68) என்பதை உணர முடியாதவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். இவர்களும் தங்களை அறிவு ஜீவிகள் என்றே கூறிக்கொள்கிறார்கள்.


இவற்றை விட்டு விடுபட்டவர்களில் பலர் குர்ஆன், ஹதீஸ் படி நடக்கிறோம் என்று பல பிரிவுகளாகவும் பல இயக்கங்களாகவும் பிரிந்து செயல்படுகிறார்கள். மேலும் பலர் குர்ஆன் ஹதீஸ் பார்த்து விளங்குகிறவர்கள் தவ்ஹீத் ஆலிம் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும், என்னதான் நாம் விளங்கினாலும் அரபி படித்த மவ்லவியை சார்ந்திருப்பதே மேலானது, சாலச் சிறந்தது என்ற மயக்கத்திலேயே இருக்கின்றனர் படித்த பட்டதாரிகளிலிருந்து பாமரகள் வரை.


இப்படி ஒவ்வொருவரும் தாங்கள் தான் அறிவாளிகள் என்ற மெலெண்ணத்தில் அறியாமையிலும், வழிகேட்டிலும் மேலும் மேலும் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். இந்த ஷைத்தானின் சூழ்ச்சிகள் அனைத்தையும் விட்டு விடுபட்டு தூய்மையான எண்ணத்தோடு சமுதாய மறுமலர்ச்சி ஏற்படவேண்டும் என்ற ஆர்வ துடிப்பு மிக்கவர்கள் சத்தியத்தை தெளிவாக உணர்ந்தாலும், அந்த சத்தியம் மக்கள் மன்றத்தில் எடுபடாத காரணத்தால் மனம் குன்றி எதிர் நீச்சல் போடுவதில் சோர்வடைந்து மக்கள் மனப்பான்மைக்கு ஏற்றவாறு சிறிதாவது வளைந்து கொடுத்தால் தான் பிரச்சார பணி புரிய முடியும் என்று எண்ணுகின்றனர்.


தன்னைப் படைத்த இறைவனைத் தனது எஜமானனாக ஏற்று அவனது கட்டளைகளை அப்படியே ஏற்று 33:36 இறைவாக்கில் சொல்லியிருப்பது போல் அதிலிருந்து அனுவத்தனையும் பிசகாது அப்படியே குர்ஆன், ஆதாரப்பூர்வமான ஹதீஸ் வழியொட்டி நடப்பவனே உண்மையான அறிவு ஜீவியாகும்

May 20, 2009

அனைத்துப் பொருட்களிலும் இணைகள்


وَمِن كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ
நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம். 51:49 سورة الذاريات


இந்த இறைவசனம் மனிதர்கள், மிருகங்கள் செடிகொடிகள் பழவகைகள் என்ற இனங்களையும் கடந்து மற்றவற்றிலும் பாலினம் இருக்கிறது என்பதை கூறுகிறது. நாம் அன்றாடம் பயன் படுத்தும் மின்சாரம் கூட Negative, Positive என அமைந்திருப்பதை காணலாம்.


سُبْحَانَ الَّذِي خَلَقَ الْأَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ وَمِنْ أَنفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُونَ பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன். 36:36 سورة يس


இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் இணைகள் உள்ளடங்கி நிற்கின்றன என்பதை இறைமறை கூறுகின்றது. ஆனால் சில உண்மைகளை இப்பொழுது அறியாமல் இருக்கலாம். எதிர் வரும் காலங்களில் அவன் அவற்றைக் கண்டு பிடித்து உலகிற்கு அறிவிக்கக்கூடும்

அழியும் சூரியன்

சூரியனின் ஒளி அதன் மேற்பரப்பில் நிகழும் ஒருவித இரசாயன் செயல் முறையினால்தான் (Chemical Process) ஏற்படுகின்றது. இந்த இரசாயன செயல்முறை கடந்த 500 கோடி வருடங்களாக தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. எதிர்காலத்தில் இந்த இரசாயன செயல் முறை முடிவுக்கு வந்துவிடும். அப்பொழுது சூரியன் தன் ஒளியை முழுமையாக இழந்து அணைந்து விடும். இதனால் புவியில் உயிரினங்கள் யாவும் அழிவை சந்திக்கும். சூரியன் வாழ்வு நிரந்தரமானது அல்ல என்பதை பின் வரும் வசனம் கூறுகிறது.

وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَّهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ
இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையறைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவற்றையும் மிகைத்தோனும், நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும். 36:38 سورة يس

இங்கு கையாளப்பட்டுள்ள 'முஸ்தகர்' என்ற சொல்லுக்கு பொருள் தீர்மானிக்கப்பட்டுவிட்ட ஓர் இடத்தை அல்லது காலத்தைக் குறிப்பதாகும். எனவே முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட இடத்தை நோக்கி நகர்ந்து செல்லும் சூரியனானது ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் சென்றிடும். அதன் பின்னர் அது ஒரு முடிவுக்கு வந்து விடும் அல்லது அணைந்துவிடும்.

இக்கருத்தினை இன்னும் தெளிவாக எடுத்துரைக்கும் வசனங்கள். 13:2, 35:13, 39:5

May 17, 2009

சுழலும் சூரியன்


பூமி இந்த பேரண்டத்தின் நடுவில் மைய இடத்தில் சூரியன் உட்பட மற்ற கோள்கள் அனைத்தும் பூமியை மையமாகக் கொண்டே சுற்றி சுழன்று வருகின்றன என்றே நீண்ட நெடுங்காலமாக மேல்நாட்டு தத்துவ அறிஞர்களும் அறிவியலாளர்களும் நம்பி வந்தனர்.


மேல் நாட்டில் கி.மு இரண்டாம் (B.C 200) நூற்றாண்டில் வாழ்ந்த Ptolemy என்ற அறிஞரின் காலந்தொட்டு பூமியை மையமாகக் கொண்டே அனைத்து கோள்களும் சுற்றிச் சுழல்கின்றன என்ற புவி மையக் கோட்பாடே (Geocentric Theory) புழக்கத்தில் இருந்தது.


கி.பி 1512ல் Nicolas Copernicus என்னும் அறிவியலாளர் ஒரு புதிய கோட்பாட்டை கொண்டு வந்தார். அதன்படி கோள்கள் அனைத்தும் சூரியனை மையமாகக் கொண்டே சுற்றி வருகின்றன. ஆனால், நமது சூரிய குடும்பத்தின் (Solar System) மத்தியில் திகழும் சூரியன் நகர்ந்து செல்லும் ஆற்றல் இல்லாதவை என்ற கருத்தை வெளிப்படுத்தினார். இந்த கோட்பாட்டை The Heliocentric theory of Planetary Motion) என்று அழைத்தனர்.


ஜெர்மன் விஞ்ஞானி Johannes kepler கோள்கள் முட்டை வடிவ (Elliptical Shapes) பாதையில் சூரியனை சுற்றி வருவதாகவும் சூரியன் தன் அச்சின் மீது ஒழுங்கற்ற வேகத்தில் சுற்றி வருவதாகவும் கி.பி.1609ல் எழுதிய நூலில் தெரிவித்திருந்தார். Keppler வெளியிட்ட இந்த கருத்தே இரவு பகல் மாறிவரும் தொடர் நிகழ்ச்சி சூரிய குடும்பத்தின் செயல்பாடுகள் குறித்தும் சரியான விளக்கம் அளித்திட அறிவியலாளர்களுக்கு ஒரு வாய்ப்பினை வழங்கியது.


இந்தக் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகும்கூட சூரியன் ஒரே இடத்தில் நிலையாக நின்று கொண்டுள்ளது; அது பூமியைப் போன்று தன்னை தானே சுற்றிக்கொள்வதில்லை என்ற சிந்தனை நிலைத்து நின்றது. எனது பள்ளிப் பருவத்தின் போது புவியியல் பாடத்தில் இந்த தவறான அறிவியல் கருத்தைப் படித்துள்ளதை இன்று நினைவுபடுத்திப் பார்க்கிறேன். பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தை சிந்தித்து பாருங்கள்.


وَهُوَ الَّذِي خَلَقَ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ
இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன. 21:سورة الأنبياء 33


இதில் 'யஸ்பஹூன்' எனும் சொல் 'சபஹ' எனும் மூல வினைச் சொல்லிருந்து பிறந்துள்ளது. இச்சொல் ஒரு கோளப் பொருளின் இயக்கத்திலிருந்து பெறப்படும் இயக்கவினை கருத்தினையும் சுமந்து செல்கிறது. நிலத்தின் மீது ஒரு மனிதனுக்கு இச்சொல் பயன்படுத்தினால் 'அவன் சுழன்று கொண்டுள்ளான்' அவன் 'ஓடுகிறான்' 'நடமாடுகிறான்' என்றும் இதற்கு பொருள் கொள்ளலாம். நீரில் உள்ள மனிதனுக்கு பயன்படுத்தினால் 'அவன் மிதந்து கொண்டுள்ளான்', 'நீந்திக் கொண்டுள்ளான்' என்று பொருள் கொள்ளவும் வாய்ப்புண்டு.


அவ்வாறே சூரியனைப் போன்ற ஒரு விண்கோளுக்கு 'யஸ்பஹ' எனும் சொல்லை நாம் பயன்படுத்தினால் அக்கோள் வாண்வெளியில் பறந்து செல்கிறது, தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது என்றும் பொருள் கொள்ளலாம்.


சூரியனில் சில புள்ளிகள் (Sun-Spots) இருப்பதும் அப்புள்ளிகள் 25 நாட்களுக்கு ஒருமுறை வட்டப்பாதையில் சுழன்று வருவதும், தன் அச்சின் மீது தானே சுழன்று கொள்வதற்கு சுமார் 25 நாட்கள் ஆகின்றன என்றும் கண்டறியப்பட்டுள்ளது. உண்மையில் ஒரு வினாடிக்கு 150 மைல்கள் வேகத்தில் பயணித்துக் கொண்டுள்ளது. நாம் வசிக்கும் இந்த Galazy (கோள்கள் நட்சத்திரங்கள்) (Milky Way) பால்வீதி மண்டலம் என அழைக்கப்படுகிறது. இதன் மைய கேந்திரத்தை சுற்றி வர நமது சூரியன் 20 கோடி வருடங்களை எடுத்துக் கொள்கிறது.


لَا الشَّمْسُ يَنبَغِي لَهَا أَن تُدْرِكَ الْقَمَرَ وَلَا اللَّيْلُ سَابِقُ النَّهَارِ وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ
சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்த முடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. 36:40 سورة يس

இந்த இறை வசனம் Modern Astronomy கண்டுபிடித்துக் கூறியிருக்கும் ஓர் அடிப்படை உண்மையை கூறுகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் தனித்தனியே கோளப் பாதைகள் உள்ளன. அப்பாதைகளில் தம்மைத் தாமே சுற்றிக் கொண்டு விண்வெளியில் நகர்ந்தும் செல்கின்றன.


சூரியன் தன் கோள குடும்பத்துடன் ஓர் இடத்தை நோக்கி (Fixed Place) செல்கிறது. அவ்விடத்திற்கு நவீன விஞ்ஞானம் Solar Apex என்ற பெயரையும் சூட்டியுள்ளது. அந்த இடம் Constellation of Hercules என்ற விண்மீன் கூட்டத்தில் அமைந்துள்ளது. இவ்விண்மீன் கூட்டத்திற்கு Alpha Lyrae என்ற பெயரும் உண்டு.


சந்திரனும் தன் அச்சில் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் 29.5 நாட்கள் பிடிக்கின்றன. திருக்குர்ஆன் எடுத்துரைக்கும் இவ்வுண்மைய கண்டு ஆச்சரியத்தால் மலைத்து நிற்காமல் இருக்க முடியவில்லை.

நிலவின் ஒளி பிரதிபலிப்பு


நிலவு தன்னுடைய ஒளியை வெளிப்படுத்திக் கொள்கிறது என்றே முந்தைய நாகரிங்கள் கருதின. ஆனால் இன்றோ நிலவின் அதன் ஒளி பிரதிபலிக்கப்பட்ட ஒளி என்ற உண்மையை இன்றைய அறிவியல் எடுத்து கூறுகின்றது. ஆனால் 1400 வருடங்களுக்கு முன்பே திருக்குர்ஆன் வசனத்தில்...


تَبَارَكَ الَّذِي جَعَلَ فِي السَّمَاء بُرُوجًا وَجَعَلَ فِيهَا سِرَاجًا وَقَمَرًا مُّنِيرًا
வான (மண்டல)த்தில் கோளங்கள் வரும் பாதைகளை உண்டாக்கி, அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன்.سورة الفرقان 25:61


திருக்குர்ஆனில் சூரியனுக்கு பயன்படுத்தப்படும் அரபுச் சொல் 'ஷம்ஸ்' இதனை 'ஸிராஜ்' (ஒளிவிளக்கு) 'வஹ்ஹாஜ்' (பிரகாசிக்கும் விளக்கு) 'தியா' (ஒளிரும் மகிமை) என்றும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. சூரியன் தனக்குள் எரிந்துகொண்டே இருப்பதால், அது கடுமையான உஷ்ணத்தையும் வெளிச்சத்தையும் உண்டு பண்ணிக்கொண்டே உள்ளது.


சந்திரனை குறிக்கும் அரபுச் சொல் 'கமர்' என்பதாகும். இந்த சந்திரனை 'முனீர் என்றும் வர்ணிக்கிறது. 'முனீர்' என்றால் ஒளியை (நூர்) வழங்கும் கோளம் என்று பொருள். எந்த இடத்திலும் சந்திரனை குறித்திட 'வஹ்ஹாஜ்' 'தியா' 'ஸிராஜ்' ஆகிய சொற்கள் பயன்படுத்தப்படவே இல்லை. அதே போல் சூரியனை குறித்திட 'நூர்' அல்லது 'முனீர்' என்ற சொற்களும் பயன்படுத்தப்படவில்லை.


சூரியனிலிருந்தும், சந்திரனிலிருந்தும் பெறப்படும் ஒளியின் இயல்பை எடுத்துக் கூறும் வசனங்களைப் பாருங்கள்.


هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاء وَالْقَمَرَ نُورًا
"அவன்தான் சூரியனை (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை

ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான்" سورة يونس 10:5

أَلَمْ تَرَوْا كَيْفَ خَلَقَ اللَّهُ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا وَجَعَلَ الْقَمَرَ فِيهِنَّ نُورًا وَجَعَلَ الشَّمْسَ سِرَاجًا
ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படி படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளி விளக்காகவும் அவனே ஆக்கியிருக்கிறான். 71:15,16 سورة نوح

May 14, 2009

குர்ஆனும் விஞ்ஞானமும் Dr. Zakir Naik.


அனைத்து உயிரினமும் நீரிலிருந்து தோன்றின

أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا وَجَعَلْنَا مِنَ الْمَاء كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ
நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா? 21:30 سورة النور

இந்த திருமறை வசனத்தை சற்று ஆழ்ந்து சிந்தித்து பாருங்கள். நமது உடலிலுள்ள உயிரணுவின் (Cell) உள்ளீடாய் விளங்கும் (Cytoplasm) 80% சதவிகிதம் தண்ணீரையே அடிப்படையாய் கொண்டுள்ளது.
மேலும் பெரும்பாலான உயிரினங்கள் 50% முதல் 90% சதவிகிதம் வரை தண்ணீரையே அடிப்படையாய் கொண்டுள்ளது. ஒவ்வொரு உயிரினமும் நீறைக் கொண்டே படைக்கப்பட்டுள்ளது என்பதை 14 நூற்றாண்டுகளுக்கு எந்த ஒரு மனிதனும் கற்பனை செய்து கூட பார்த்திருக்க முடியுமா?

இன்னும் தண்ணீருக்கே தட்டுப்பாடு உள்ள நிலையில் அரேபிய பாலைப் பெருவெளியில் வசிக்கும் ஓர் அரேபியன் இவ்வாறு எண்ணிப் பார்த்திருக்க முடியுமா?

விலங்கினங்களை நீரிலிருந்தே படைத்ததாக பின்வரும் வசனம் எடுத்துக்கூறுகிறது.

للَّهُ خَلَقَ كُلَّ دَابَّةٍ مِن مَّاء فَمِنْهُم مَّن يَمْشِي عَلَى بَطْنِهِ وَمِنْهُم مَّن يَمْشِي عَلَى رِجْلَيْنِ وَمِنْهُم مَّن يَمْشِي عَلَى أَرْبَعٍ يَخْلُقُ اللَّهُ مَا يَشَاء إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
மேலும், எல்லா உயிர்ப்பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்; அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு. அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு; அவற்றில் நான்கு (கால்)களை கொண்டு நடப்பவையும் உண்டு; தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். 24:45 سورة الفرقان

அதே போன்று பின்வரும் வசனமும் நீரிலிருந்தே மனிதனின் படைப்பு தொடங்கியுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டுகின்றது.

وَهُوَ الَّذِي خَلَقَ مِنَ الْمَاء بَشَرًا فَجَعَلَهُ نَسَبًا وَصِهْرًا وَكَانَ رَبُّكَ قَدِيرًا
இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன். 25:54 سورة الفرقان

குர்ஆனும் விஞ்ஞானமும் Dr. Zakir Naik.


கடல்கள் இடையே உள்ள திரைகள்
مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَنِ بَيْنَهُمَا بَرْزَخٌ لاَّيَبْغِيَن
அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா. (55:19,20)
அரபி மூலத்தில் பர்ஸக் எனும் சொல் இடம் பெறுகின்றது.இதன் பொருள் ஒரு தடுப்பு அல்லது பிரிவினை என்பதாகும்.இந்தத் தடுப்பு என்பது ஜடரீதியான (Material) அல்லது ஒரு பொருளை அடிப்படையாகக் கொண்ட தடுப்பு அல்ல. 'மரஜா' எனும் அரபிச் சொல்லின் அசலான அர்த்தம் அவர்கள் இருவரும் சந்தித்து கலந்து கொண்டனர் என்பதாகும்.
இன்றைய நவீன அறிவியல் இரண்டு வெவ்வேறு கடல்கள் ஒன்றாய் சந்திக்கும் இடங்களில் தடுப்பு உள்ளது என்பதை கண்டு பிடித்துள்ளது. இந்த தடுப்பு இரு கடல்களையும் பிரித்து விடுகின்றது. இதனால் ஒவ்வொரு கடலும் அதனதன் தட்ப வெட்ப நிலை, உப்பின் தன்மை, அடர்த்தி ஆகியவற்றை பாதுகாத்திடும் தனித்துவம் பெற்றுவிடுகின்றது.
ஆனால், ஒரு கடலின் நீர் மற்றொரு கடலுக்குள் நுழைந்து கலக்கின்றபோது அது தன் தனிச்சிறப்பு வாய்ந்த இயல்பை இழந்து விடுகின்றது. திருக்குர்ஆன் கூறும் இந்த நிகழ்வை Dr.William Hay (University of Clorado) தனது ஆராய்ச்சி உறுதி செய்துள்ளார்.
மத்திய தரைக்கடலுக்கும், ஜிப்ரால்டரில் உள்ள அட்லாண்டிக் சமுத்திரத்திற்கும் இடையே உள்ள தடுப்பைப் பற்றி திருக்குர்ஆன் சொல்லுகின்ற போது அத்தடுப்போடு இணைந்து நிற்கும் ஒரு தடுக்கப்பட்ட திரை (ஹிஜ்ரம் மஹ்ஜூரா) பற்றியும் குறிப்பிடுகின்றது.

وَهُوَالَّذِيْ مَرَجَ الْبَحْرَيْنِ هَذَاعَذْبٌ فُرَاتٌ وَّهَذَامِلْحٌ اُجَاجٌ وَجَعَلَ بَيْنَهُمَا بَرْزَخًا وَّحِجْرًامَّحْجُوْرًا
அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். (25:53)
நதி முகத்துவாரங்களில், அதாவது இரண்டு நதிகள் சந்திக்கும் இடங்களில் உப்பு நீரிலிருந்து சுவைமிகு நீரை தனியாகப் பிரித்து அடையாளம் காட்டும் ஒரு திரை அல்லது மண்டலம் (Pycnocline Zone) உள்ளது. (இம்மண்டலத்தையே திருக்குர்ஆன் திருக்குர்ஆன் ஹிஜ்ரம் மஹ்ஜூரா என்று குறிப்பிடுகின்றது.) இப்பிரிவினை மண்டலம் சுவை நீரிலிருந்தும், உப்பு நீரிலிருந்த்தும் வித்தியாசமான அளவு உப்புத்தன்மை கொண்டுள்ளது.
இந்த இயற்கை நிகழ்வு கடலின் பல்வேறு இடங்களில் ஏற்படுகின்றது. மத்தியத்தரைக்கடலுக்குள் ஓடி மறையும் எகிப்தின் நைல் நதியிலும் இது நிகழ்கின்றது.

குர்ஆனும் விஞ்ஞானமும் Dr. Zakir Naik.


சமுத்திர ஆழங்களில்மண்டிக்கிடக்கும் மையிருள்


أَوْ كَظُلُمَاتٍ فِي بَحْرٍ لُّجِّيٍّ يَغْشَاهُ مَوْجٌ مِّن فَوْقِهِ مَوْجٌ مِّن فَوْقِهِ سَحَابٌ ظُلُمَاتٌ بَعْضُهَا فَوْقَ بَعْضٍ إِذَا أَخْرَجَ يَدَهُ لَمْ يَكَدْ يَرَاهَا وَمَن لَّمْ يَجْعَلِ اللَّهُ لَهُ نُورًا فَمَا لَهُ مِن نُّورٍ
அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை; அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள் சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதைப் பார்க்க முடியாது; எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை. 24:40 سورة النور
கடல் ஆழங்களில் மண்டிகிடக்கும் மையிருட்டை நவீன கருவி சாதனங்களால் தான் விஞ்ஞானிகளால் உறுதி செய்திட முடிந்தது என ஜித்தாவில் உள்ள மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக்கலகத்தில் பணியாற்றிய பேராசிரியர் துர்கா ராவ் கூறினார். எந்த ஒரு பொருளின் துணையில்லாமல் 20 முதல் 30 மீட்டர் அளவுக்கு மேல் மனிதர்கள் கடலுக்குள்ளே மூழ்குவது இயலாத காரியமாகும். அதேப்போன்று 200 மீட்டருக்கும் அப்பாற்பட்ட ஆழத்தில் கடல் பகுதிகளில் மனிதன் உயிர் வாழ்ந்திட முடியாது.

இந்த இறை வசனம் எல்லா கடல்களையும் குறிக்காது. காரணம் எல்லா கடல்களும் அடுக்கடுக்காய் மையிருள் திரைகள் படிந்துள்ளன என்று கூற முடியாது. "ஆழ் கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்" என்ற திர்க்குர்ஆன் கூற்றுப்படி அது ஆழ்கடலையே குறிக்கும். ஆழ் கடலில் இருள்திரைகள் அடுக்கடுக்காய் படிந்து கிடக்க இரண்டு முக்கிய காரணங்கள் அடிப்படையாகும்.

ஓர் ஒழிக்கதிர் ஏழு வர்ணங்களைக் கொண்டுள்ளது. இவை ஊதா(Violet), ஆழ்ந்த நீலம்(Indigo), நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிறம், சிகப்பு ஆகியன. இந்த சூரிய ஒளிக்கதிர் நீரை கடக்கும்போது ஒளிச்சிதைவு (Refraction of Light) ஏற்படுகின்றது. 10 முதல் 15 மீட்டர் மேலளவு கொண்ட நீர் சிகப்பு நிறத்தை உள்வாங்கி உறிஞ்சிக் கொள்கின்றது. எனவே நீரில் மூழ்கும் ஒருவர் அந்நீருக்கு கீழ் 25 மீட்டர் ஆழத்தில் சென்றவர் அடிபட்டு இரத்தம் கசிந்தால் இரத்ததின் சிகப்பு நிறத்தை கண்ணால் பார்க்க முடியாது. காரணம் இந்த ஆழத்திற்கு சிகப்பு நிறம் ஊடுருவிச் செல்வதில்லை.

அவ்வாறு ஆரஞ்சு நிறம் 30 முதல் 50 மீட்டர் வரையும், மஞ்சல் நிறம் 50 முதல் 100 வரையும், பச்சை நிறம் 100 முதல் 200 வரையும், நீல நிறம் 200 மீட்டருக்கு அப்பால் வரையும் ஊதாவும், கருநீலமும் 200 மீட்டருக்கு அப்பாலும் ஊடுருவிச் செல்கின்றன. இவ்வாறு பல்வேறு வர்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக படிப்படியாக கருமை அடைந்துக்கொண்டே செல்லும். கடலில் 1000 மீட்டருக்கு கீழ் உள்ள ஆழத்தில் முழுமையான இருள் ஆட்சி புரியத் தொடங்கிவிடும்.

ஒளிக்கதிர்கள் கடலின் மேற்பரப்பை சென்றடைகின்றபோது அது கடலலையின் மேற்பரப்பால் பிரதிபலிக்கப்பட்டு அதற்கு ஓர் ஒளிப்பிரகாசமான தோற்றத்தை வழங்கிவிடுகின்றது. ஒளியை பிரதிபலித்து இருளை ஏற்படுத்துவது கடலலைகளே! பிரதிபலிக்கப்படாத ஒளியோ கடல் ஆழங்களுக்குள் ஊடுருவிச் சென்று விடுகின்றது. ஆகவே கடலானது இரண்டு பகுதிகளை கொண்டதாக மாறி விடுகின்றது.

கடல்கள் மற்றும் சமுத்திரங்கள் ஆழமான அடிநீரை கடலின் உள்ளே உள்ள அலைகள் மூடிக்கொள்கின்றன. இதற்கு காரணம் கடல் ஆழத்தின் நீர் அதன் மேற்பரப்பில் உள்ள நீரை விட அதிகமான அடர்த்தித் தன்மைக் கொண்டதாக இருப்பதே! கடலின் உள்ளே உள்ள அலைகளுக்கு கீழ்தான் இருள் கவியத் தொடங்கும். அப்பொழுது அந்த ஆழத்தில் வசிக்கும் மீன் இனங்கள் கூட பார்வையை இழந்துவிடக் கூடும். அம்மீனனங்களின் உடலிலிருந்து வெளிப்படும் சொந்த ஒளி மட்டுமே அவற்றுக்கு வழிகாட்டும். இதனை மிகச் சரியாக திருக்குர்ஆன் வசனம் குறிப்பிடுகின்றது;
ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை....

வேறு வார்த்தைகளால் சொன்னால் இந்த அலைகளுக்கு அப்பால் இன்னும் அதிகமான அலை வடிவங்கள் உள்ளன. அதாவது இவை அனைத்தும் கடலின் மேற்பரப்பில் காணப்படுபவை.

இறை வசனம் மேலும் கூறுகின்றது;

அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள் சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன.

விளக்கிக் கூறப்பட்ட இம்மேகங்கள் யாவும் ஒன்று மற்றொன்றின் மேல் தடுப்பு சுவர்களாய் அமைந்து கடலின் பல்வேறு அலை மட்டங்களில் நிறங்களை உள்வாங்கி கருமையை தோற்றுவிக்கின்றன.

பேராசிரியர் துர்க்கா ராவ் இறுதியாக இவ்வாறு கூறினார்.

"1400 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கடலலையின் நிகழ்வை குறித்து ஒரு சாதாரண மனிதன் இவ்வளவு தெளிவாக கூறி இருக்க முடியாது. எனவே இயற்கைக் கடந்த தெய்வீக ஊற்றிலிருந்தே இந்தச் செய்தித் தகவல்கள் வந்திருக்க முடியும்."

குர்ஆனும் விஞ்ஞானமும் Dr. Zakir Naik.நீரின் சுழற்சி
நீரின் சுழற்சி பற்றி நிகழ்கால மனிதன் அறிந்திருக்கும் கோட்பாட்டை Bernard Palissy என்பவர் தான் முதன் முறையாக கி.பி 1580ல் விளக்கிச் சொன்னார். சமுத்திரத்திலுள்ள நீர் எவ்வாறு கரு மேகங்களாக உருவெடுக்கின்றது என்பதை அவரே விளக்கிச் சொன்னார்.உருண்டு திரண்ட வெண் மேகங்கள் நிலத்தை நோக்கி மெல்ல நகர்கின்றன. கடலிலிருந்து உயர எழுந்து குளிர்ந்து கெட்டியாகி நிலத்தில் மழைத்துளிகளாய் விழுகின்றன. இவ்வாறு விழுந்த மழைத்துளிகள் ஏரிகளாய், நதிகளாய் மாறி மீண்டும் சமுத்திரத்திற்கே திரும்பிச் செல்கின்றன. இவை தொடர் நிகழ்ச்சியாய் நிகழ்கின்றன.கி.மு 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த தேல்ஸ் (Thales of Miletus) என்பார் கடலின் மேற்பரப்பில் உள்ள நீர்த்திவலைகள் காற்றின் வாயிலாக எடுத்துச் செல்லப்பட்டு நிலம் நோக்கி மழைத்துளியாய் விழுகின்றது என நம்பினார். ஆரம்ப காலத்தில் நிலத்தடி நீரின் நிலை பற்றிய அறிவை மக்கள் அறிந்திருக்கவில்லை.இந்நீரியல் கோட்பாட்டின்படி நீரானது குளிர்ந்த மலைப் பொதும்புகளில் உறைந்து நிலத்தடி நீர் நிறைந்த ஏரிகளாய் உருவாயின. அந்த ஏரிகளோ நீரூற்று பொங்கிப் பாய உதவின என்று கருதப்பட்டது. ஆனால், பூமியின் பிளவுகளில் கசிந்து உட்புகும் மழை நீரே ஏரிகளும், நீரூற்றுகளும் தோன்றக் காரணமாய் உள்ளது என்பதை நாம் இன்று அறிந்துள்ளோம். நீரின் சுழற்சி குறித்து திருக்குர்ஆனில் விளக்கப்பட்டுள்ளது.أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ أَنزَلَ مِنَ السَّمَاء مَاء فَسَلَكَهُ يَنَابِيعَ فِي الْأَرْضِ ثُمَّ يُخْرِجُ بِهِ زَرْعًا مُّخْتَلِفًا أَلْوَانُهُ
நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக்கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது. 39:21

وَيُنَزِّلُ مِنَ السَّمَاء مَاء فَيُحْيِي بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَ


அச்சமும், ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டுவதும்; பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்து, அதைக் கொண்டு பூமியை அது (வரண்டு) இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன; நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. 30:24
وَأَنزَلْنَا مِنَ السَّمَاء مَاء بِقَدَرٍ فَأَسْكَنَّاهُ فِي الْأَرْضِ وَإِنَّا عَلَى ذَهَابٍ بِهِ لَقَادِرُونَ

மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம்; நிச்சயமாக அதனைப் போக்கிடவும் நாம் சக்தியுடையோம். 23:18ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் நாமறிந்த வகையில் எந்த ஒரு மூல நூலும் நீரின் சுழற்சி குறித்து இவ்வளவு துல்லியமாக வர்ணித்திடவில்லை.

May 13, 2009

முதல் இடத்தில் இந்தியா...! வெட்கம்...!!! வேதனை...!!!

நம்மை விஞ்ச எந்த நாடும் இல்லை. அமெரிக்கா, முதல் ஐந்து இடத்திற்குள் கூட இல்லை. இதை ஒலிம்பிக் போட்டியில் வைத்திருந்தால் தங்கப்பதக்கம் நமக்கே நமக்கு. அதை விட உலகத்திலுள்ள எல்லா நாடுகளும் சேர்ந்து கூட இந்தியாவை முந்த முடியவில்லையாம். நிரம்ப மகிழ்ச்சியா?

உலக நாடுகள் அனைத்தையும் சேர்த்தாலும் அதை விட கூடுதலாக சுவிஸ் வங்கிகளில் பணம் வைத்திருப்பது இந்திய நாட்டினர்தான். இரண்டாவதாக உள்ள ரஷ்யா இந்தியாவை விடவும் நான்கு மடங்கு குறைவு. என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா?

உலக நாடுகள் கொடுத்த கெடுபிடிகளின் காரணமாக, தனது நாட்டில் கணக்கு வைத்திருப்போரின் தகவல்களைத் தர சுவிஸ்நாடு தற்போது தயாராக இருக்கிறது. ஆனால் அதை அந்தந்த அரசாங்கங்கள்தான் கேட்டுப் பெற வேண்டுமென நிபந்தனை விதித்துள்ளது.

நம் அரசு கேட்குமா? ஏன் கேட்காது என்பதற்கு காரணங்களை சொல்லித்தான் தெரிய வேண்டுமா? நம் அரசை கேட்கச் செய்ய நாம் அழுத்தமான இயக்கமாக இயங்க வேண்டும். இதை எல்லோரிடமும் கொண்டு சேர்ப்பது நல்ல இந்தியனின் முன்னுள்ள முக்கிய கடமை.

இந்தியா ஏழை நாடா?

யார் சொன்னது?

சுவிஸ் வங்கிகளிடம் கேட்டுப் பாருங்கள். இந்திய கள்ளக் கணக்கு சொத்தின் மொத்த மதிப்பு 1500 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது இந்தியாவின் வெளிநாட்டுக் கடனை 13ஆல் பெருக்க வரும் தொகை. அதாவது 13 மடங்கு. இந்தப் பணத்தைக் கொண்டு 45 கோடி மக்களுக்கு, ஆளுக்கு ஒரு இலட்சம் தர இயலும். இப்போது சொல்லுங்கள் இந்தியா ஏழை நாடா?

இவ்வளவு பெரிய தொகையும் நேர்மையற்ற தொழிலதிபர்கள், ஊழல் அரசியல்வாதிகள், இலஞ்ச இலாவண்யத்தில் ஊறித் திளைக்கும் IAS, IRS, IPS அதிகாரிகள் ஆகியவர்களால் வைக்கப்பட்டுள்ளது. இவை மக்களைச் சுரண்டியதாலும் ஏமாற்றியதாலும் வந்தவை. சுரண்டப்படும் அந்த ஏழைக்குச் சொந்தமானவை. இந்திய மக்களுக்குச் சொந்தமானவை!.

இந்தப் பணம் முழுதும் திரும்ப பெறப்பட்டால் 24மணி நேரத்துக்குள் இந்தியக் கடனை அடைத்து விடலாம். மிகுதியுள்ள 12மடங்கு தொகையையும் வருவாய் வரும் நல்ல வழிகளில் முதலீடு செய்தால், வரும் லாபம் மட்டுமே இந்திய அரசின் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் தொகையை விட கூடுதலாகும். எல்லா வரிகளையும் நீக்கி விட்டாலும் கூட இந்தியாவை சுலபமாக வழி நடத்த முடியும்.

நேர்மையற்ற தொழிலதிபர்கள், ஊழல் அரசியல்வாதிகள், இலஞ்ச இலாவண்ய அதிகாரிகள், கிரிக்கெட்காரர்கள், சினிமா நடிகர்கள், போன்றவர்கள் இந்தியாவின் சொத்து சுகத்தை சூறையாடி எவ்வளவு குவித்துள்ளார்கள் என்பதை மேலும் படியுங்கள். இங்கே சொல்லப்பட்டிருப்பது சுவிஸ்நாட்டு கணக்கு மட்டும்தான். மற்ற வெளிநாட்டு வங்கி கணககுகள்????????

சுவிஸ் வங்கிகளில் உள்ள கருப்புப்பணம் பற்றிய Swiss Banking Association உடைய 2006ம் ஆண்டு அறிக்கையின் படி சுவிஸ் நாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள வெளிநாட்டவர் தொகை.
முதல் ஐந்து இடங்கள்:

1. இந்தியா - 1456 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
2. ரஷ்யா - 470 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
3. U.K. - 390 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
4. யுக்ரைன் - 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
5. சீனா - 96 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

மற்ற உலக நாடுகளிலுள்ளோர் வைத்துள்ள தொகையை கூட்டினாலும் இந்தியர்கள் வைத்துள்ள 1456பில்லியன் அல்லது 1.4 ட்ரில்லியன் டாலர்களைத் தொடுகிறதா? கணக்கிட்டுக் கொள்ளுங்கள்

அல்லாஹ் உனக்காக!

அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறக் கேட்டிருக்கின்றேன். மறுமைநாளில் அனைவர்க்கும் முதலில் இறைவனின் பாதையில் வீரமரணம் அடைந்தவனுக்கு எதிராகாத் தீர்ப்பளிக்கப்படும். அம்மனிதன் இறைவனின் நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்படுவான். பிறகு, இறைவன் அவனுக்குத் தான் அளித்த அருட்கொடைகள் அனைத்தையும் நினைவவூட்டுவான் அப்போது அவனுக்கு தான் பெற்றிருந்த அருட்கொடைகள் அனைத்தும் நினைவுக்கு வரும். இறைவன் அம்மனிதனிடம் வினவுவான்: நீ என் அருட்கொடைகளைப் பெற்று என்னென்ன பணியாற்றினாய்? அம்மனிதன் கூறுவான்: நான் உன் உவப்புக்காக (உன் மார்க்கத்தை எதிர்த்துப் போரிடுவோருக்கு எதிராக) போரிட்டேன். இறுதியாக என் உயிரையும் கொடுத்து விட்டேன். இதை கேட்ட இறைவன் அவனிடம் கூறுவான்: நீ பொய்யுரைக்கின்றாய். மக்கள் உன்னை வீரன், துணிவு மிக்கவன் எனப் புகழ வேண்டும் என்பதற்காகத்தான் நீ போரிட்டாய்! (வீரத்தை வெளிக்காட்டினாய்!) அதற்கான புகழுரையும் உலகிலேயே உனக்குக் கிடைத்துவிட்டது! என்பான்.
பின்னர், இறைவன் அந்த உயிர்த் தியாகியைத் தலைகீழாக இழுத்துச்சென்று நரகத்தில் எறியும்படி கட்டளையிடுவான். அந்த மனிதன் நரகத்தில் எறியப்படுவான்.

பிறகு, மார்க்க அறிஞராயும், போதகராயும் இருந்த இன்னொரு மனிதன் இறை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவான். அவன் குர்ஆனைக் கற்றுத் தெளிந்த காரியாகவும் இருப்பான். அவனுக்கு இறைவன் தான் அளித்த அருட்கொடைகளை நினைவூட்டுவான். அவனுக்கு அருள் நலங்கள் அனைத்தும் நினைவுக்கு வரும். அப்போது இறைவன் அவனிடம் கேட்பான்: இந்த அருட்கொடைகளைப் பெற்ற நீ என்ன நற்செயல் புரிந்தாய்? இறைவா! நான் உனக்காக உனது தீனைக் கற்றேன். உனக்காகவே அதனைப் பிறர்க்கு கற்பித்தேன். உனக்காகத்தான் குர்ஆனை ஓதினேன் என்று அம்மனிதன் கூறுவான். இதைக் கேட்ட இறைவன் பின்வருமாறு கூறுவான்: நீ பொய்யுரைக்கின்றாய்! மக்கள் உன்னை அறிஞர் எனக் கூறவேண்டும் என்பதற்காக கல்வி கற்றாய்! குர்ஆனை நன்கறிந்தவர் என மக்கள் உன்னை புகழ வேண்டும் என்பதற்காகத்தான் குர்ஆனை ஓதினாய்! அதற்கான வெகுமதி உலகிலேயே உனக்குக் கிடைத்துவிட்டது. பிறகு, அவனை முகம் குப்புற இழுத்துச் சென்று நரகில் எறியுங்கள் எனக் கட்டளையிடப்படும். அவ்வாறே அவன் நரகில் எறியப்படுவான்.

உலகில் வசதி வாய்ப்புக்கள் பலவும் அளிக்கப்பட்டிருந்த மூன்றாவது மனிதன் இறைவனின் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவான். அவனுக்கு எல்லாவகைச் செல்வங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இறைவன் அம்மனிதனிடம் தான் அளித்த அருட்கொடைகள் அனைத்தையும் எடுத்துக் கூறுவான். அப்போது அவன், ஆம்! இந்த அருட்கொடைகள் அனைத்தும் எனக்கு அளிக்கப்பட்டிருந்தன என ஒப்புக்கொள்வான். அப்போது இறைவன் அவனிடம் கேட்பான்: என் அருட்கொடைகளைப் பெற்று நீ என்ன நல்வினை புரிந்தாய்? அம்மனிதன் சொல்வான்: உன் உவப்பைப் பெற எந்தெந்த வழிகளில் செலவழிப்பது உனக்கு விருப்பமானதோ, அவ்வழிகளில் எல்லாம் நான் செலவு செய்தேன் இறைவன் கூறுவான்: நீ பொய்யுரைக்கின்றாய். நீ இந்தச் செல்வங்கள் அனைத்தையும் மக்கள் உன்னை வள்ளல் எனப்புகழ்ந்து போற்ற வேண்டும் என்பதற்காகத்தான் வாரி இறைத்தாய்! அந்த வள்ளல் பட்டம் உலகிலேயே உனக்குக் கிடைத்துவிட்டது. பிறகு, இவனை முகம் குப்புற இழத்துச் சென்று நரகில் வீசி விடுங்கள் எனக் ஆனையிடப்படும். அவ்வாறே அவன் இழுத்துச் செல்லப்பட்டு நரகில் எறியப்படுவான். அறிவிப்பாளர்: அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ முஸ்லிம்

மேற்சென்ன தன்மைகள் கொண்ட இறைநம்பிக்கை அங்கு ஒருவனுக்கு எந்தப் பலனையும் தராது. அத்தகைய வணக்கங்கள் எந்த புண்ணியமும் ஈட்டித் தராது. யதார்த்த நிலை இதுதான். இதில் எவ்வித ஐயத்துக்கும் இடமில்லை. நிலைமை இவ்வாறிருக்க வெளிப்பகட்டுக்காகவும், புகழாசைகளுக்காகவும் செயல்படும் உணர்வுகள் குறித்து நாம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். அவை பெரும் நாசத்தை விளைவிக்கக்கூடாது. இல்லையெனில் நம் உழைப்பு, முயற்சி அனைத்தும் வீணாகிவிடும். நம்முடைய இந்த முதலீடு வீணாகிவிட்டதே என்று நாம் மறுமையில் கை பிசைந்து நிற்போம். சின்னஞ்சிறு நற்செயலும் நமக்கு துணை செய்யாதா என்று தவித்து நிற்கும் அந்த மறுமை நாளில், நம்முடைய வாழ்வின் முதலீடு முழவதும் முற்றிலும் வீணாகிவிட்டிருப்பது தொியவரும்.

பரிட்சை வாழ்க்கை

இவ்வுலக வாழ்க்கைக்கு இன்றியமையாதது பொருளாதாரம். "அருளில்லார்க்கு அவ்வுலகில்லை, பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை" என்ற முதுமொழி இதை உணர்த்தும் படைத்த இறைவன் மனிதனுக்கென்று அருளிய அருள் மார்க்கம் இவ்வுலகில் மனிதனுக்குரிய பங்கையும் தெளிவுபடுத்தி கூறியுள்ளது. மறுஉலக பேருகளை இவ்வுலகிலேயே உழைத்துப்பெற வேண்டும் என்று விதித்திருக்கிறான் அல்லாஹ். உலக இன்பங்களை துறந்து காடு சென்று கடுந்தவம் செய்வது கொண்டே 'முக்தி' பெறமுடியும் என்ற கட்டாய விதியை இறைவன் விதிக்கவில்லை.

இவ்வுலக இன்பங்களை வரையறைக்குட்பட்டு முறையாக அனுபவித்துக்கொண்டே மறுமைப் பேறுகளையும் பெறும் வழியை இஸ்லாம் போதிக்கிறது. மறு உலகப் பேறுகளை நிறைவாகப் பெறுவதற்கு முறையான வழிகாட்டுதலையும் தெளிவாகத் தருகிறது இஸ்லாமிய மார்க்கம். இரண்டும் பின்னிப் பிணைந்த ஓர் உன்னத நிலையைத்தான் இஸ்லாம் போதிக்கிறது.


ஆனால் ஷைத்தான் அதற்கு மாறாக ஒன்று இவ்வுலக பேறுகளையே சதமாகக்கொண்டு மறு உலகத்திற்கு வேண்டிய சாதனங்களைத் தேடுவதில் குறை செய்யவைக்கிறான். அல்லது மறுஉலகப் பேறுகளைத் தேடுவதையே முழுக் குறிக்கோளாகக் கொண்டிருப்பது போன்ற மயக்கத்தை உண்டாக்குகிறான். அல்லாஹ் விதிக்காததை (துறவறம்) மனிதர்களாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவைக்கிறான். அதையும் முழுமையாக நிறைவேற்ற முடியாமல் தோல்வியுற்று இம்மை, மறுமை இரண்டையும் நஷ்டப்படுத்தி நரகில் விழ வழி வகுக்கிறான். இப்படி ஒன்றில் இம்மையை மட்டும், அல்லது மறுமையை மட்டும் தேர்ந்தெடுத்து அதனால் தோல்வியுற்று வழிகெட்டு நரகில் விழும் கூட்டம் ஏராளம்.


ஆனால் இம்மையை வரையரைக்குட்பட்டு நிறைவாக அனுபவிக்கவும் மறுமையை நிறைவாகப் பெறவும் அழகிய வழிமுறைகளைத் தருகிறான் படைத்த இறைவன்.

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான். அல்குர்ஆன் 67:2

''நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு" அல்குர்ஆன் 8:28

ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். அல்குர்ஆன் 63:9

இவ்வளவு தெளிவாகச் சொல்லப்பட்டும் ஷைத்தான் மனிதனுக்கு பொருள் செல்வத்திலும் மக்கள் செல்வத்திலும் மயக்கத்தைக் கொடுத்து அவனை வழி தவறச் செல்கிறான். ஆனால் இந்த பொருட்செல்வமும் மக்கள் செல்வமும் மறுமையில் உதவிடப்போவதில்லை என்பதை அறுதியிட்டு உறுதியாக அல்லாஹ் இறைவாக்குகளில் கடுமையாக எச்சரிக்கிறான்.

''அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா. "அல்குர்ஆன் 63:9

இன்னும் உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ உங்களை நம்மளவில் நெருங்கி வைக்க கூடியவர்கள் அல்லர். ஆனால் எவர் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அத்தகையோர்க்கு, அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பு நற்கூலி உண்டு; மேலும் அவர்கள் (சவனபதியின்) உன்னதமான மாளிகைகளில் நிம்மதியுடன் இருப்பார்கள். அல்குர்ஆன் 34:37

அன்புச் சகோதர சகோதரிகளே! இறைவனின் கடுமையான எச்சரிக்கைக்குப் பின்னும் பொருட்செல்வத்திலும் மக்கட் செல்வத்திலும் வரம்பு மீறி பேராசை கொண்டிருப்பவர்கள் அவை காரணமாக தங்கள் ஐங்கால தொழுகைகளை மற்றும் அமல்களை வீணாக்கிக் கொண்டிருப்பவர்கள் ஜகாத்தை முறைப்படி கணக்கிட்டுக் கொடுக்காமல் சேமித்து வைப்பவர்கள் நிச்சயமாகத் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படவேண்டும். ஜகாத்தை முறைப்படி கணக்கிட்டு உரியவர்களுக்கு சேர்க்காதவர்கள் படிப்பினை பெறாதவர்கள் பரிதாபத்திற்குரியவர்களே.

இன்றைய நமது முஸ்லிம் சமுதாயத்தின் பெரும் செல்வந்தர்களெல்லாம் அல்லாஹ்வின் இந்த எச்சரிக்கைகளை மறந்து பொருளைத் தேடுவதையே தங்களின் முழு நேரப் பணியாகக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தங்கள் தொழுகை மற்றும் நல்ல அமல்களை அனைத்தும் காணாமல் போய்விடுகின்றன.

பல லட்சங்கள் சேர்ந்தால் அதை கோடியாகவும் கோடிகள் சேர்ந்தால் அதை பல நூறு கோடிகளாக்கவும் கங்கணம் கட்டிக்கொண்டு இரவு பகல் பாராது அயராது பாடுபடுகிறார்களேயல்லாமல் அசலான மறுமையை மறந்து விடுகிறார்கள். என்றும் இவ்வுலகிலேயே நிலைத்திருப்பதுபோல் தப்புக்கணக்கு போடுகிறார்கள். இவர்கள் எத்தனை ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருந்தாலும் இவர்கள் அனுபவிப்பது என்னவோ மிகமிகக் குறைவுதான். ஒரு சாதாரண நடுத்தர மனிதன் சாப்பிடுவது, குடிப்பது சுகிப்பது போன்றவற்றைக்கூட இவர்கள் அனுபவிக்க முடியாமல் இவர்களை அல்லாஹ் ஆக்கிவிடுகிறான். முறைப்படி இவ்வுல இன்பங்களை அனுபவிப்பதையும் இழந்து விடுகிறார்கள். மறுமை பேறுகளையும் தங்களின் செயல்களினால் இழந்து விடுகிறார்கள்.

சாதாரன அறிவு படைத்த ஒரு மனிதனாலும் இப்படிப்பட்ட ஏமாளியாக இருக்க முடியுமா? ஆனால் ஷைத்தான் சொத்துக்கள் மீதும், பிள்ளைகள் மீதும் பேராசையை உண்டாக்கி இவ்வாறு செயல்பட வைக்கிறான். உண்மையில் இவர்களுடையது என்று சொல்லிக் கொண்டிருக்கும் சொத்துக்கள் இவர்களுடையது அல்ல. அவற்றிற்குரிய 'ஜகாத்' ஆக, அதற்கு மேலும் சதக்காவாக இவர்கள் வாரி வழங்கிச் செல்வதே இவர்களின் சொத்தாக மறுமையில் பலன் தரும் என்பதை புரிந்து செயல்படுவார்களா? ஷைத்தானின் மாயையை விட்டு விடுபடுபவார்களா? அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

பிடரி நரம்பினும் அருகிலுள்ளவன்!

أَفَحَسِبَ الَّذِينَ كَفَرُوا أَن يَتَّخِذُوا عِبَادِي مِن دُونِي أَوْلِيَاء إِنَّا أَعْتَدْنَا جَهَنَّمَ لِلْكَافِرِينَ نُزُلًا


நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை (த் தம்) பாதுகாவலராக எடுத்துக்கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காபிர்கள் இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம். (அல்குர்ஆன்-18:102)

மாமறை அல்குர்ஆன் இவ்வாறு தெளிவாக அறிவித்த பின்பும், மக்கள் 'தர்கா' மாயைகளில் விழுவார் களேயானால் அவர்களைவிட கைசேதத்துக்குரியவர்கள் யார் இருக்க முடியும்?
அல்லாஹ் அல்லாத எதனிடமும் அவரிடமும் நமது தேவைகளைக் கேட்பதும் பாதுகாப்புத் தேடுவதும் இறைக்கு இணை வைத்தல் என்னும் மாபெரும் கொடிய பாவமாகும். அதாவது 'ஷிர்க்'ஆகும். இது விஷயத்தில் நாம் கவனத்துடன் நடந்துகொள்ள ேவண்டும்.

பச்சைத் தலைப்பாகைகளுடன் பவனி வரும் போலி வேடதாரிகளை 'இறை நேசர்கள்' என்றும், 'நடமாடும் வலீ என்றும் கருதி, நமது ெபான்னான நேரத்தையும் - ெபாருளையும் செலவழித்து, நமது பகுத்தறிவையும் - இறை நம்பிக்கையையும் இறையச்சத்தையும் ஆழக் குழி தோண்டிப் புதைத்து விட்டு அவர்கள் பின்னாலேயே செல்வோமேயானால் நம்மைவிட நஷ்டமடைந்தவர்கள் எவரும் இரார்!

அல்லாஹ், அருள் மறையிலே அழகாக நமக்கு எச்சரிக்கின்றான்.
وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللّهِ وَبِالْيَوْمِ الآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ


"நாங்கள் அல்லாஹ்ைவயும், இறுதி நாைளயும் நம்புகிறோம்" என்று வாயளவில் கூறுபவர்களும் மனிதர்களில் உள்ளனர் (உண்மையில்) அவர்கள் விசுவாசிகள் அல்லர்". (அல்குர் ஆன் 2:8)
ேமலும்,
உயிருடன் நடமாடும் 'மஜ்தூப்களை' (பைத்தியக்கார நிலயிலுள்ளவர்களை) 'வலீ' என்று கற்பனை செய்து கொண்டு, அவர்களின் பிறந்த நாளின் போது அவர்களின் உடம்பில் சந்தனதைப் பூசுகின்ற கோலத்தையும் கேள்விப்படுகின்றேன்! அவர்கள் இறந்துவிட்டால் அடக்கம் பண்ணுவதற்கென்று தர்காக்கள் கட்டி வைத்திருப்பதையும் அறிகின்றேன். அம்மட்ேடா? பிணி முதலான மன நோய்களுக்குள்ளானோர், அந்தத் தர்காவே சரணென - 40 நாட்கள் - 3 மாதங்கள் - 6 மாதங்கள் - ஓராண்டு என நேர்ச்சைக்காக தங்கியும் வருகின்றனர். இவ்வளவும் உயிருடன் வாழ்கின்ற ஒருவரின் ெபயரால் கட்டிவைக்கப்பட்ட தர்காவில்?

கூத்துக்கள் கொஞ்சமா? நஞ்சமா? காகிதக் கூண்டுகளை இழுத்து 'கும்மாளம்' ேபாடும் நயவஞ்சக நரிக் கூட்டங்களான வேடதாரிகளை, அப்பாவி பாமர மக்கள், 'உயர்ந்தோர் எனவும், 'சாலச் சிறந்தோர்' எனவும் நம்பி, 'மாலை - துண்டு' மரியாதை செய்வதையும் கண்ணுற முடிகின்றது! சிறு நீர் கழித்துவிட்டுத் துப்புரவு செய்யாத இந்த இறை நேச பக்தர் (?) களின் கால்களில் விழும் அப்பாவிகள் எண்ணற்றோர்!

பசுத்தோல் போர்த்திய புலிகளாய் பவனி வரும் இவர்கள், தங்கள் வயிறுகளை எப்படியெலாம் நிரப்புகின்றார்கள் தெரியுமா? ஏமாந்த அப்பாவி மக்கள் 'தர்கா' உண்டியலில் ேபாடும் காணிக்கைகளை-தாங்களே அங்கு 'அடக்க' மாகியிருக்கும் 'பாவாவின் நேரடி வாரிசுகள்' என பாமரர்களை நம்பவைத்து பங்கு ேபாட்டுக்கொள்கின்றனர்!

முகமூடிக் கொள்ளைக்காரர்களைவிட பயங்கரவாதிகளான இவர்களின் அட்டகாசங்களை இறை நம்பிக்கைக் கொண்டவர்கள் உணர்ந்து தெளிந்து - வல்ல நாயனான அல்லாஹ்வை மட்டுமே தங்களுக்குப் பாதுகாவலனாக ஏற்று ஈடேற்றம் ெபற்று வாழ்வாங்கு வாழுங்கள்! எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனே நம் அைனவரையும் நன்கு உணர்ந்தவன்! நாம் செய்யக்கூடியவைகளை அறிந்து கொள்பவனாகவும் பார்ப்பவனாகவும் செவியுறுபவனாகவும் இருப்பவன் அல்லாஹ் ஒருவனே! அல்லாஹ்வுக்கும் நமக்கும் தடுப்பும் இல்லை! திரையும் இல்லை! ஆதலால் அல்லாஹ்வுக்கும் நமக்கும் இடைத்தரகர்கள் தேவையில்லை!

பிடரி நரம்பினும் அருகிலுள்ள அல்லாஹ்விடமே நமது தேவைகளை எடுத்துரைத்து உதவி பெறுவோமாக! (ஆமீன்)

மரணத்திற்குப் பின்பும் நற்செயல்கள்

ஒரு மனிதன் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவை ஆகி விடுகின்றன. அம்மூன்று செயல்கள்:---

1.சதக்கத்துல் ஜாரியா 2.பலன் தரும் கல்வி 3.பெற்றோருக்காக பிரார்த்திக்கும் நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:முஸ்லிம்

ஒரு முஸ்லிமின் மரணத்தோடு அவரது செயல்கள் முற்றுப்பெறுகின்றன. நற்செயல்கள் செய்து நன்மையைத் தேடிக்கொள்வதும் இயலாமல் ஆகிவிடுகின்றது. ஆயினும் அவர் உயிரோடு இருந்த காலத்தில் செய்த நற்செயல்களில் சில மரணத்திற்குப் பின்னரும் நிரந்தரமாக என்றென்றும் எந்நோக்கத்துடன் அச்செயல் நிறைவேற்றப்பட்டனவோ அந்நோக்கங்கள் நிறைவேறிக் கொண்டு இருக்கும் காலமெல்லாம் அவர் மரணமடைந்த பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டிருக்கும். உதாரணமாக பள்ளிவாசல்கள், கல்விக்கூடங்கள், மக்கள் குடிநீர் பெற தோண்டிய கிணறுகள், மருத்துவமனைகள், அநாதை இல்லங்கள், தர்ம ஸ்தாபனங்கள், பலன் தரும் விஞ்ஞான கண்டு பிடிப்புகள் இவையாவும் அத்தகையனவாகும்.


இரண்டாவதாக தான் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு பலனளித்து கொண்டிருந்த அவரது மார்க்க கல்வியும் மனிதர்களுக்கு பலனளிக்கும் மற்ற கல்வியும், இறந்தவர் தன் கல்வி அறிவால் போதித்தவைகள் பலனாக நன்மைகள் செய்தவருக்குறிய பலன்கள் குறைவில்லாமல் கிடைப்பதோடு அந்நன்மைகளை செய்ய ஊக்குவித்த கல்வியாளருக்கும் அவரது மரணத்திற்குப் பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டே இருக்கும்.


மூன்றாவதாக மார்க்க நெறிகளை பேணி ஒழுக்கமுடன் வளர்க்கப்பட்ட மக்கள் ஆற்றுகின்ற நற்செயல்கள் யாவும் மரணமடைந்த பெற்றோர்களுக்கு நன்மைகள் சேர்ப்பவையாகும். இத்தகைய சாலிஹான பிள்ளைகளின் இறைவணக்கம், அவர்களின் பிள்ளைகள் இறை உணர்வோடு நிறைவேற்றும் அனைத்து செயல்களும் பெற்றோர்களுக்கு அவர்களின் மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்ப்பவையாகும்.

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களை அணுகி 'என்னுடைய தந்தையார் மரண சாசனமும் அறிவிக்காமல் அவருடைய சொத்துக்களை விட்டு விட்டு இறந்து விட்டார். நான் அவருடைய சார்பில் 'சதக்கா' (தர்மம்) கொடுத்தால் அவரது பாவச் சுமைகளிலிருந்து அவருக்கு விடுதலை கிடைக்குமா?" என வினவினார். நபி(ஸல்) அவர்கள் 'ஆம்' என பதிலளித்தார்கள். (அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்)

வேறொரு நபிமொழி கீழ்வருமாறு அறிவிக்கப்படுகிறது:
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் "என்னுடைய தாயார் மரண சாசனம் அறிவிக்காமல் திடீரென மரணம் எய்திவிட்டார்கள். இறப்பதற்கு முன் பேச வாய்ப்பிருந்திருக்குமேயானால் அவர்கள் 'சதக்கா' செய்வது பற்றி கூறி இருப்பார்கள் என நான் நினைக்கிறேன். அவர்களுடைய சார்பில் நான் சதக்கா செய்தால் அவர்களுக்கு நன்மை கிட்டுமா?" என வினவினார். நபி(ஸல்) அவர்கள் 'ஆம்' என்றார்கள். (ஆயிஷா (ரலி) முஸ்லிம்

மேலே கூறிய நபிமொழி ஒருவர் செய்யும் நற்செயல்கள் தமது வாழ்நாளில் தமக்கு நன்மை பயப்பதுடன், தாம் இறந்த பின்பும் தமக்கு நன்மைகள் கிடைத்துக்கொண்டிருக்கும் என அறிந்து செயல்பட ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. இறந்தவர்களுக்காக அவர்களது சார்பில் தர்மம் செய்வது கட்டாயக் கடமை அல்லவெனினும் அவர்களது சார்பில் செய்யும் தர்மங்களால் இறந்தவர்களுக்கு நன்மை கிடைக்க வழி செய்வதோடு தானும் நன்மை அடைகிறார்.

இறந்தவர் வாரிசுகளின் மீது சாட்டப்படும் கடமை யாதெனில், இறந்தவர் சொத்தின் மீது ஜகாத் கடமையாகி நிறைவேற்றாமல் இருந்தால் அதனை நிறைவேற்ற வேண்டும். இறந்தவர் உயில் எழுதியிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரது கடன்களை அவரது சொத்திலிருந்து அடைத்து விடவேண்டும். இவைகளை நிறைவேற்றுவதற்கு போதுமான அளவு அவரது சொத்துக்களில் மதிப்பு இல்லையெனில் அவைகளை நிறைவேற்றுவது வாரிசுகளுக்கு கடமை இல்லை. இருப்பினும் வாரிசுகள் தாம் ஈட்டிய பொருளிலிருந்து நிறைவேற்றுவார்களாயின் அது மிகச் சிறப்புடைய செயலாகும்.

ஆனால், நம்மில் பெரும்பாலோர் துரதிஷ்டவசமாக இவை போன்ற நபிமொழிகளின் கருத்துக்களை அறியாமலும், உணராமலும் மார்க்கத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். இறந்தவர்களுக்கு நன்மை சேர்ப்பதாக எண்ணி 3ம், 7ம், 40ம் நாள் பாத்திஹா, வருடப் பாத்திஹா மற்றும் மெளலிதுகள் ஓதி சடங்குகள் செய்கின்றனர். இச்சடங்குகளால் இறந்தவர்கள் நன்மை அடைவர் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இவற்றால் பொருள் நேரம் சக்தி விரயமாவதுடன் அல்லாஹ்வின் வெறுப்பிற்கும் ஆளாகி விடுகிறார்கள் என்பதை உணரவேண்டும்.

இத்தகைய சடங்குகள் இறந்தவர்களுக்கு நன்மையாக இருப்பின் நபி(ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் செய்து காட்டி இருப்பார்கள். அவர்களின் மற்ற நற்செயல்களின் முறையும் ஹதீதுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் இத்தைகைய சடங்குகள் நிறைவேற்றப்பட்டதாக எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே இவை நிச்சயமாக தவிர்க்கப்படவேண்டியவை.

அன்புச் சகோதரர்களே! மேற்கூறிய நபிமொழிகளில் கூறப்பபட்டிருப்பவைகளில் தான், நாம் இறந்தவர்களுக்கு நன்மை செய்ய முடியும். அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.
எவன் நேரான வழியில் செல்லுகிறானோ, அவன் தன்னுடைய நன்மைக்காக நேரான வழியில் செல்லுகிறான்; எவன் வழிகேட்டில் செல்லுகின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; ஒருவனுடைய பாவச்சுமையை மற்றெருவன் சுமக்க மாட்டான்; (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை. (அல்குர்ஆன் 17:15)

அல்லாஹ் நம் அனைவரையும் நல்வழியில் செலுத்துவானாக!

May 12, 2009

மன்னிப்பு

தனது மார்க்கத்தின் வழிகாட்டுதலை எற்றுக் கொண்ட உண்மை முஸ்லிம், மன்னிக்கும் மாண்பாளராகத் திகழ்வார். மன்னிப்பது மனிதனின் உயர் பண்பாகும். அது குறித்து வலியுறுத்தும் திருக்குர்ஆனின் வசனங்கள் எராளம். அந்தப் பண்புகளைப் பெற்றவர்களை இஸ்லாம் "இறையச்சமுள்ள சிறந்த முன்மாதிரியான முஸ்லிம்' என்றும் "அல்லாஹ்வின் அன்பையும் திருப்பொருத்தத்தையும் அடைந்தவர்கள்' என்றும் கூறுகிறது.

அவர்கள் எத்தகையோரென்றால் செல்வ நிலைமையிலும் வறுமை நிலைமையிலும் தானம் செய்துகொண்டேயிருப்பார்கள். கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோரையே நேசிக்கிறான். (அல்குர்ஆன் 3:134)

இதன் காரணமாவது அவர்கள் தங்களது கோபத்தை தடுத்துக் கொள்வார்கள். போட்டி, பொறாமை கொள்ளாமல், பகைமை, பொறாமையின் நெருப்புக் கங்குகளை "மறந்து மன்னித்துப் புறக்கணித்தல்' என்ற தண்ணீரால் அணைத்து விடுவார்கள். பரிசுத்த மனதுடன் நிம்மதிப் பெருங்கடலில் நீந்தி அல்லாஹ்வின் திருப்பொருத்தம், அல்லாஹ்வின் அன்பு என்ற கரையைத் தொடுவார்கள்.

எவரது உள்ளங்கள் இஸ்லாம் என்ற நேர்வழியின் திறவுகோல் மூலம் திறக்கப்பட்டிருக்கிறதோ அவர்கள் மட்டுமே மன்னிப்பின் உச்சத்துக்கு செல்ல முடியும். அவர்களது மனம் நற்குணத்தால் மலர்ந்திருக்கும். அவர்கள் தங்களது நீதம் செலுத்துதல், உதவி செய்தல், பிறர் தவற்றை மன்னித்தல் போன்ற நற்பண்புகளால் அல்லாஹ்விடமுள்ள மன்னிப்பையும், மகத்தான நற்கூலியையும் அடைந்து கொள்வார்கள்.

எவரேனும் (தனக்கிழைக்கப்பட்ட) அக்கிரமத்திற்கு (அதே அளவு) பழிவாங்கினால் அதனால் அவன் மீது யாதொரு குற்றமுமில்லை. குற்றமெல்லாம் அளவுமீறி மனிதர்கள் மீது அக்கிரமம் செய்து நியாயமின்றிப் பூமியில் கொடுமை செய்வோர்மீதுதான். இத்தகையோருக்கு மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு. எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால் நிச்சயமாக இது மிக்க வீரம் பொருந்திய காரியமாகும். (அல்குர்ஆன் 42:39-43)

அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்கள் தங்களது மகளாரான ஆயிஷா (ரழி) அவர்களை சில பாவ நாவுகள் அவதூறு கூறி காயப்படுத்தியபோது அபூபக்கர் (ரழி) அவர்களின் இதயத்தில் கவலைகள் அலைமோதின. அவதூறு கூறியவர்களுக்கு தான் செய்துவந்த உதவியை துண்டித்து விடுவதாக சத்தியம் செய்தார்கள். அப்போது அல்லாஹ் தனது அருள் வசனத்தை இறக்கி வைத்தான்:
உங்களில் செல்வந்தரும், (பிறருக்கு உதவி செய்யும்) இயல்புடையோரும் தங்கள் பந்துக்களுக்கோ, எழைகளுக்கோ, அல்லாஹ்வுடைய பாதையில் ஹ்¢ஜ்ரத் செய்தவர்களுக்கோ (யாதொன்றுமே) கொடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் உங்களுக்கு எதும் வருத்தம் எற்பட்டிருந்தால்) அதனை நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து விடவும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 24:22)

இஸ்லாம், தனது உறுப்பினர்கள் தண்டிப்பது, கண்டிப்பது, சிறிய விஷயங்களுக்கெல்லாம் நீதி தேடி செல்வது, பழிவாங்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்காது. மாறாக பொறுமையும், மன்னிப்பும், பெருந்தன்மையுமான நடைமுறைகளையே மேற் கொள்ளும்படி வலியுறுத்துகிறது.

நன்மையும் தீமையும் சமமாகிவிடாது. (ஆதலால் நபியே! தீமையை) நீர் நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்ளும். அவ்வாறாயின், உம்முடைய கொடிய விரோதியை அதே சமயத்தில் உம்முடைய மெய்யான, மிக்க நெருங்கிய சினேகிதனைப்போல் காண்பீர். பொறுமையுடையோர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடைய மாட்டார்கள். அன்றி பெரும் பாக்கியம் உடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடையமாட்டார்கள். (அல்குர்ஆன் 41:34,35)

ஒரு தீமையை எப்போதும் தீமையால் எதிர்கொண்டால் மனித மனங்கள் குரோதங்களுக்கும், பகைமைக்கும் ஆளாகிவிடும். அதே தீமையை நன்மையால் எதிர்கொண்டால் கோப ஜுவாலைகள் அணைந்து, மனம் கொதிப்படைவதிலிருந்து அமைதியாகி, குரோதமெனும் அழுக்குகளிலிருந்து தூய்மையாகிவிடும். அதன்மூலம் கொடும் விரோதிகளான இருவர் ஒருவரையொருவர் நேசிக்கும் நண்பர்களாக மாறிவிடுவார்கள். இது தீமைகளைத் தடுத்துக்கொள்ள மிக அழகிய வழியாகும். ஆனால் இப்பண்பு பெரும் பாக்கியசாலிக்கே சாத்தியமாகும். அதையே அல்குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.

இது இஸ்லாமிய சமுதாயத்தில் ஒரு மு·மினிடம் அமைந்திருக்க வேண்டிய பண்பாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் மு·மின் தனது கோப உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, அழகிய முறையில் மறந்து, மன்னித்துவிட வேண்டும். இந்த மனிதநேயப் பண்பை வலியுறுத்தி அது முஸ்லிம்களின் இதயத்தில் குடிகொள்ள வேண்டுமெனக்கூறும் எராளமான வசனங்கள் திருமறையில் காணக்கிடைக்கின்றன. முஸ்லிம்களின் வழிகாட்டியும் தலைவருமான நபி (ஸல்) அவர்களும் இப்பண்புகளைக் கைக்கொண்டு பிறரையும் தூண்டினார்கள்.

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடும்போதே தவிர (தனிப்பட்ட முறையில்) தங்கள் கரத்தால் எவரையும் அடித்ததில்லை. எந்தவொரு பெண்ணையும் ஊழியரையும் அடித்ததேயில்லை. அவர்களுக்கு எதேனும் துன்பம் விளைவித்ததற்காக எவரையும் பழிவாங்கியதில்லை. அல்லாஹ்வின் கட்டளைகள் தகர்க்கப்படும் சந்தர்ப்பங்களில் மட்டும் அல்லாஹ்வுக்காக பழி வாங்கியுள்ளார்கள்''. (ஸஹீஹ் முஸ்லிம்)

மன்னித்தல் என்பது அகிலங்களைப் படைத்து பரிபாலிப்பவனின் தன்மையாகும். அதை மனிதர்களிடையேயும் விசாலப்படுத்த வேண்டும். அவர்கள் தீமையை தீமையால் எதிர்கொள்ளாமல் அறிவீனர்களை மன்னிப்பதன் மூலம் எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு அழகிய முறையில் நடந்து கொள்வதையே அல்லாஹ் விரும்புகிறான்.

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களோடு நடந்து சென்று கொண்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் ஒரம் தடித்த நஜ்ரானி போர்வை ஒன்றை அணிந்திருந்தார்கள். அதை ஒரு கிராமவாசி பிடித்துக்கொண்டு மிகக்கடுமையாக இழுத்தார். நான் நபி (ஸல்) அவர்களின் புஜத்தைப் பார்த்தேன். கடுமையாக இழுத்ததன் காரணத்தால் அதில் போர்வையின் ஒரத்தின் அடையாளம் பதிந்திருந்தது. பின்பு அந்த கிராமவாசி "முஹ்ம்மதே! உம்மிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்க உத்தரவிடுங்கள்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவர் பக்கம் திரும்பி சிரித்தவர்களாக அவருக்கு சில அன்பளிப்புகளைக் கொடுக்க உத்தரவிட்டார்கள். (ஸஹீஹ¤ல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களின் மன்னிக்கும் மாண்பு மிக அழமானதாகும். தனக்கு விஷம் கலந்த ஆட்டிறைச்சியைக் கொடுத்தனுப்பிய யூதப் பெண்ணையும் மன்னித்தார்கள். அதன் விபரமாவது: ஒரு யூதப்பெண் நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் கலந்து சமைக்கப்பட்ட ஆட்டிறைச்சியை அன்பளிப்பாக அனுப்பி வைத்தாள். அதை நபி (ஸல்) அவர்களும் சில நபித் தோழர்களும் சாப்பிடத் தொடங்கினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களிடம் "அதை சாப்பிடாதீர்கள்; அதில் விஷம் கலக்கப்பட்டிருக்கிறது'' என்றார்கள்.
பிறகு அந்தப் பெண் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டாள். அவளிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள் "நீ இவ்வாறு செய்யக் காரணமென்ன?'' அவள், "நீங்கள் அல்லாஹ்வின் தூதரா என்பதை அறிய விரும்பினேன். நீங்கள் நபியாக இருந்தால் அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துக் கொடுத்துவிடுவான்; விஷம் உங்களுக்குத் தீங்களிக்காது. நீங்கள் நபியாக இல்லையென்றால் உம்மிடமிருந்து நாங்கள் நிம்மதி அடைந்து விடுவோம்'' என்றாள். அப்போது நபித்தோழர்கள் "அவளை நாங்கள் கொன்றுவிடட்டுமா?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் "வேண்டாம்'' என்று கூறி மன்னித்து விட்டார்கள். (புகாரி, முஸ்லிம்)

தௌஸ் என்ற கூட்டத்தினர் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்து கொண்டிருந்தனர். அந்தக் குலத்தைச் சேர்ந்த து·பைல் இப்னு அம்ரு (ரழி) நபி (ஸல்) அவர்களிடம், "தௌஸ் கூட்டத்தினர் அல்லாஹ்வுக்கு மாறு செய்து, சத்தியத்திற்குக் கட்டுப்பட மறுத்து விட்டனர். அவர்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்'' என வேண்டிக்கொண்டார்கள்.
உடனே நபி (ஸல்) அவர்கள் கிப்லாவை நோக்கி அமர்ந்தவர்களாக தனது திருக்கரத்தை உயர்த்தினார்கள். அங்கிருந்தவர்கள், "அந்த தௌஸ் கூட்டத்தினர் அழிந்து விட்டார்கள்'' என்று கூறினார்கள். எனினும் அல்லாஹ்வின் அடியார்கள் மீது கருணையும், பரிவும் கொண்ட காருண்ய நபி (ஸல்) அவர்கள் தமது உம்மத்தினர் அல்லாஹ்வின் தண்டனைக்கு இலக்காவதை விரும்பாமல், "யா அல்லாஹ்! தௌஸ் கூட்டத்தினருக்கு நேர்வழிகாட்டி என்னிடம் வரச்செய்வாயாக. யா அல்லாஹ்! தௌஸ் கூட்டத்தினருக்கு நேர்வழிகாட்டி என்னிடம் வரச்செய்வாயாக. யா அல்லாஹ்! தௌஸ் கூட்டத்தினருக்கு நேர்வழிகாட்டி என்னிடம் வரச்செய்வாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள். (ஸஹீஹ¤ல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

உறவை முறித்தல், புறக்கணித்தல், நேர்வழியைத் தடுத்தல் போன்ற இழி குணங்களை எதிர்கொள்ள நேர்ந்தால், அதை மன்னிப்பு, மற்றும் பெருந்தன்மையின் மூலம் எதிர்கொள்ள வேண்டுமென்ற சிந்தனையை முஸ்லிம்களின் இதயங்களில் நபி (ஸல்) அவர்கள் விதைத்தார்கள். மனிதர்கள் கடினத்தன்மைக்கு கட்டுப்படுவதைவிட மிக அதிகமாக அன்பிற்கு கட்டுப்படுவார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் விளங்கி இருந்தார்கள்.
எனவேதான் உக்பா இப்னு ஆமிர் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நற்செயல்களில் மிகச் சிறப்பானதை எனக்கு அறிவித்துத் தாருங்கள்'' என வேண்டிக் கொண்டபோது, நபி (ஸல்) அவர்கள், "உக்பாவே! உம்மைத் துண்டிப்பவர்களுடன் சேர்ந்து வாழ்ந்து, உமக்குக் கொடுக்காதவர்களுக்குக் கொடுத்து வருவீராக! உமக்கு அநீதமிழைத்தவர்களைப் புறக்கணித்து விடுவீராக!'' என்று கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில், "உமக்கு அநீதமிழைப்பவரை மன்னித்து விடுவீராக!'' என்று வந்துள்ளது. (முஸ்னத் அஹ்மத்)

மழை வந்தால் பலர் சனியன் பிடித்த மழை விட மாட்டேங்குதே என்று கூறுகிறார்களே இவ்வாறு கூறலாமா?

மனிதர்களில் பலர் குறிப்பாக முஸ்லிம்கள் கூட இறைவனின் அருட்கொடைகளைப் போற்றி புகழாது நன்றி கெட்டவர்களாகவே உள்ளனர். மேலும் தாங்கள் கூறியபடி மழையை பழிக்கும் புத்தி உடையவர்களாகவும் உள்ளனர்.
அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா - நிச்சயமாக நாமே வரண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக்கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம்; அவர்கள் (இதை) நோட்ட மிட வேண்டாமா? (அல்குர்ஆன் 32:27)

வெயிலும் மழையும் காற்றும் இன்ன பிற வஸ்துகளும் மனிதனது நலனுக்காகவே வல்ல அல்லாஹ்வால் அருளப்படுகின்றன. இவ்வருட்கொடையை பழிப்பது மாபெரும் தவறு. நமக்கு நாமே நாசத்தை தேடிக்கொள்ளூம் வழி. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மழை பெய்வதைப் பார்த்தால் "அல்லாஹும்ம ஸய்யிபன் நாஃபியா" - யா அல்லாஹ் பலன் தரும் மழையை பொழிய வைப்பாயாக! என்று ஓதுவார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இச்செய்தி புகாரியில் இடம்பெற்றுள்ளது. ஆகவே நாம் பழிப்பதை தவிர்த்து பலன் தரும் துஆக்களை கேட்போம்.

மார்க்கத்தில் சில காரியங்களை பித்அத் என்கிறார்கள். 'பித்அத்' என்றால் என்ன?

மார்க்க வணக்க வழிபாடுகளில் புதியதாக ஒன்றைச் செய்வதே புதுமை 'பித்அத்' ஆகும். இறை நெருக்கம் பெற்று இம்மை மறுமையில் ஈடேற்றம் பெருவதற்கான வழிகளை வல்ல அல்லாஹ்வும் நாம் உயிரினும் போற்றும் நபி (ஸல்) அவர்களும் மிகத் தெளிவாக நமக்குக் காட்டித் தந்துள்ளார்கள். அல்லாஹ்வால் நிறைவு செய்யப்பட்ட இம்மார்க்கத்தில் அவனது தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளை வெளேர் என்று விட்டுச் சென்ற மார்க்கத்தில், மனிதர்கள் தங்களது யூகங்களையும் பொய்யான கற்பனைகளையும் புகுத்துவதைப் 'பித்அத்' என்றும், இது நம்மை பல வழிகேடுகளில் இட்டுச் சென்று நரகத்தில் தள்ளும் எனவும் நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக எச்சரித்துள்ளார்கள்.

"வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். நடைமுறையில் சிறந்தது முஹம்மத் (ஸல்) அவர்களின் நடமுறை. காரியங்களில் கெட்டது (பித்ஆத்) புதுமையாகும். பித்அத்துகள் அனைத்தும் வழிகேடு; வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும்" (இப்னு மஸ்வூத் (ரலி), ஜாபிர் (ரலி) புகாரி, முஸ்லிம், நஸயி.

மார்க்கத்தை பிழைப்பாக ஆக்கிக் கொண்ட மவ்லவிகள் மார்க்கத்தில் இல்லாத 'பித்அத்' பலவற்றை மார்க்கமாக்குவதற்கு அவர்களாக அவர்கள் இஷ்டத்திற்கு 'பித்அத் ஹஸனா' அழகிய பித்அத் என்றும் 'பித்அத் ஸஸ்யிஆ' கெட்ட பித்அத் என்றும் இரண்டாகப் பிரித்தும் பிழைப்புக்காக உண்டாக்கியுள்ளனர். மற்றபடி மார்க்கத்தில் நுழைக்கக் கூடிய 'பித்அத் ஹஸனா' ஒன்றும் இல்லை. "எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப் பட்டவையாகும். அவை நூறு ஷரத்துகளாயினும் சரியே" என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்)அல்லாஹ் மிக அறிந்தவன்

இஸ்லாத்தில் ஒரு மனிதனுக்கு கெட்ட காலம் என்றும் நல்ல காலம் என்றும் உள்ளதா?

காலத்தில் நல்ல நேரம், கெட்ட நேரம் என்பது இல்லை. நல்ல நேரம் என்று கருதுகிற நேரத்தில் கெட்ட விஷயங்களும் நடக்கின்றன.இஸ்லாத்தில் நல்ல காலம் கெட்ட காலம் என்பது அறவே கிடையாது. எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கும். திருமறை குர்ஆன் கூறுகிறது:
வானங்களிலும், பூமியிலுள்ளோர் அனைவரும் (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றனர். ஒவ்வொரு நாளிலும் அவன் (அல்லாஹ்) காரியத்திலேயே இருக்கிறான். (அல்குர்ஆன் 55:29)

இக்கருத்தினை விளக்கும் முகமாக ரசூல் (ஸல்) அவர்கள் மனித இனம் முழுமைக்கும் அறிவுரைக் கூறுகிறார்கள்:
காலத்தை நேரத்தை ஆதத்தின் மகன் திட்ட வேண்டாம். ஏனெனில் நானே அதனை நிகழச் செய்கிறேன். இரவையும் பகலையும் அனுப்பி வைக்கிறேன். நான் விரும்பினால் அதனை பற்றிக் கொள்வேன். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி முஸ்லிம், அபூதாவூத்

இந்நபி மொழியில் இரவு பகல் என்பதை நல்லது கெட்டது, சுகம், துக்கம் என்ற கருத்துக் கொள்ளவும் இடம் உண்டு. எனவே நல்லதும் கெட்டதும் அல்லாஹ்வின் தனிச் சட்டத்தில் உருவாவது என்பதே ஈமானின் ஒரு விதி என்பதை எல்லா முஸ்லிம்களும் அறிவர். இதனை நாம் "வல் கத்ரி கைரிஹி வ ஷர்ரிஹி மினல்லாஹி தஆலா" எனக் கூறுகிறோம்.

தராவீஹ் இருபது ரக்அத் என்று பல ஹதீஸ்கள் இருக்கும் போது ஏன் சிலர் எட்டு ரக்அத் மட்டும் தொழுகிறார்கள்? தராவீஹ் 20 ரக்அத்துதான் சரியானது என எங்கள் ஊர்

நாம் இன்று பயன்படுத்தி வரும் தராவீஹ் என்ற பதம் ஹதீஸ்களில் காணப்படவில்லை என்பதை முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இரவுத் தொழுகை, ரமழான் தொழுகை, தஹஜ்த், வித்ர் என்ற பெயர்களாலேயே இந்தக் குறிப்பிட்ட தொழுகை பல ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் நபி(ஸல்) அவர்கள், உமர்(ரழி)அவர்கள், மற்றும் சிறப்புக்குரிய நபித் தோழர்கள் (8+3=11) ரகஅத்துகளுக்கு மேல் இந்த ரமழான் தொழுகை தொழுததில்லை என்று தான் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்னை ஆயிஷா(ரழி) அவர்களிடம் அபூசல்மதுப்னு அப்துர் ரஹ்மான் (ரழி), நபி(ஸல்) அவர்களிடன் ரமழான் தொழுகை எவ்வாறு இருந்தது என்று கேட்டதற்கு, "ரமழானிலும், ரமழான் அல்லாத காலங்களிலும் நபி(ஸல்) அவர்கள் 11ரகஅத்துகளுக்கு மேல் தொழுததே இல்லை" என்னும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமான அனேக ஹதீஸ் கிதாபுகளில் காணலாம்.

நபி(ஸல்)அவர்கள் ரமழானில் 20 ரகஅத்துகள் தொழுததாக இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களைக் கொண்டு அறிவிக்கப்பட்ட ஹதீஸ் சில கிதாபுகளில் காணப்படுகின்றது. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் வருகின்றன: அபூசைபா இப்ராஹீம் இப்னு உஸ்மான், ஹகம் இப்னு உதைபா ஆகிய இருவரும் காஜிகளாக இருந்தார்கள். பொய்யர்கள் என்று அஸ்மாவுர்ரிஜால் (ஹதீஸ் அறிவிப்பாளர்களின் தகுதிகளை எடைபோடும்) கலையில் வல்லுனர்கள் பலர் பதிவு செய்துள்ளனர். இமாம்களான ஸுஹ்பா, அஹமது, இப்னு முயீன், புகாரி, நஸயீ (ரஹ்-அலை) போன்றோர் இந்த இருவரையும் நல்லவர்களாக, நேர்மையாளர்களாகக் கணிக்கவில்லை.

ஹதீஸ் கலை வல்லுனர்கள் அனைவரும் எகோபித்து இந்த ஹதீஸ்,அன்னை ஆயிஷ(ரழி) அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள உண்மையான ஹதீஸூக்கு எதிராக இருக்கிறது என்று அறிவித்து நிராகரித்திருக்கிறர்கள்.

இதைபோல் உமர்(ரழி) 20 ரகஅத்துகள் தொழுதார்கள். தொழ வைக்கும்படி சொன்னார்கள். உமர்(ரழி) காலத்தில் 20 ரகஅத்துகள் மக்களால் தொழப்பட்டது போன்ற ஹதீஸ்களும் இட்டுக் கட்டப்பட்ட பலஹீனமான ஹதீஸ்களாக ஹதீஸ்கலை வல்லுனர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பைஹகீயில் காணப்படும் உமர்(ரழி) காலத்தில் மக்கள் 20 ரகஅத்துகள் தொழுதார்கள் என்ற ஹதீஸ் பலஹீனமானது, காரணம் இதை ரிவாயத்துச் செய்யும் யஸீதுப்னு ரூமான் உமர்(ரழி)காலத்தில் பிறக்கவே இல்லை என்று பைஹகீ இமாமே பைஹைகியில் குறிப்பட்டுள்ளார்கள். மேற்கொண்டு தெளிவு பெற ரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்) என்ற தலைப்பை பார்வையிடவும்

அல்லாஹ்வும், அவனது வானவர்களும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கிறார்கள்.(33:56) அப்படி என்றால் அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்பதின் பொருள் என்ன?

நிச்சயமாக அல்லாஹ்வும், அவனது வானவர்களும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கிறார்கள். (எனவே) விசுவாசிகளே! நீங்களும் அவர்மீது ஸலவாத்துச் சொல்லி ஸலாமும் பகருங்கள். (அல்குர்ஆன் 33:56)

அல்லாஹ் நபியவர்களின் மீது ஸலவாத் கூறுகிறான் என்றால் அவர்கள் மீது அருள் புரிகிறான் என்பது பொருள். மலக்குகளும், மனிதர்களும் ஸலவாத்துக் கூறுகிறார்கள் என்றால் அவர்கள் நபி(ஸல்) அவர்கள் மீது அருள் புரியும்படி அல்லாஹ்விடம் துஆ செய்கிறார்கள் என்பது பொருளாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

பழிக்குப்பழி வாங்க மார்க்கத்தில் அனுமதியுண்டா?

உயிருக்கு உயிர், கண்ணுக்கு கன், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்கு பல் ஆகவும் காயங்களுக்கு (சமமான) காயங்களாகவும், நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம். எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டு விட்டால் அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரம் ஆகும். (திருக்குர்ஆன் 5:45)

பழிக்குப்பழி வாங்க வேண்டுமென்ற சராசரி மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்த அல்லாஹ், பழிக்கு பழி வாங்குவதை மேலே கண்ட வசனத்தில் அனுமதிக்கிறான். இருப்பினும் சிறப்பானது மன்னித்து மறந்து விடுவதுதான் எனவும் எடுத்துரைக்கிறான் அல்லாஹ். அல்லாஹ் மிக அறிந்தவன்.

மறைவான ஒரு மையித்திற்காக ஜனாஸா தொழுகை நடத்தலாமா, ஹதீஸ்களில் ஆதாரம் உண்டா?

மறைவான மையித்திற்கு ஜனாஸா தொழுகை நடத்து கூடும். இதற்கு பின் வரும் ஹதீஸ் சான்றாக உள்ளது.

நபி(ஸல்) அவர்கள் நஜ்ஜாஜு அரசர் மரணமான தினத்தன்று மக்களுக்கு அவரது மரணச் செய்தியை அறிவித்து, மக்களுடன் ஓர் இடத்திற்குச் சென்று, அங்கு தமது ஸஹாபாக்களை அணி வகுக்கச் செய்து நான்கு தக்பீர்கள் கூறி அவருக்காக மறைவான மைய்யித்துத் தொழுகை நடத்தினார்கள். (அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ) அல்லாஹ் மிக அறிந்தவன்.

ஜியாரத் நபி(ஸல்) அவர்களின் சுன்னத் என்கிறார்கள். தர்காக்களுக்கு 'ஜியாரத்' செல்வது கூடாது என்கிறார்கள். இது முன்னுக்கு பின் முரணாக இருக்கிறதே?

இதனை மேலோட்டமாக பார்க்கும்போது முரணாகத் தெரியும். சிந்தித்து விளங்கிக் கொண்டால் முரண்பாடு தீர்ந்துவிடும். நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த 'ஜியாரத்' நல்லவர்கள், கெட்டவர்கள் என்ற பாகுபாடின்றி இறந்தவர்களை அடக்கம் செய்யப்பட்டிருக்கும் பொது கபுரஸ்தான்களுக்கு சென்று அதன் மூலம் நாமும் மரணிப்பவர்களே என்ற எண்ணத்தையும், மறுமையின் சிந்தனையுயும் உண்டாக்கிக் கொள்வதாகும். நபி(ஸல்) அவர்கள் ஜியாரத்தில் ஓதக் கற்றுத் தந்த துஆவும் இதனையே உறுதி செய்கின்றது.

ஆனால் தர்காக்களுக்கு 'ஜியாரத்' செல்பவர்கள் அந்த நோக்கத்தோடு செல்வதில்லை. அங்கு அடக்கமாகி இருக்கும் அவ்லியாவிடம், அல்லாஹ்விடம் கேட்கவேண்டியதை அல்லாஹ்வின் அடியாரான அவ்லியாவிடம் தங்களின் தேவைகளை கேட்கிறார்கள். அவர்களிடம் முறையிடுகிறார்கள். அல்லாஹ்விடம் தங்களுக்காக பரிந்துரை செய்யும்படி சொல்லுவதற்காகவும் செல்கிறார்கள். (அவர்கள் செவியுற மாட்டர்கள் என்பது தனி விஷயம்) இன்னும் அனேக மூட காரியங்களை ஜியாரத் என்ற பெயரில் அரங்கேற்றுகிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறிச் சென்றது பொது கபுரஸ்தான்களுக்குத்தான் 'ஜியாரத்' செய்யும்படி கூறினார்கள். நீங்கள் நினைப்பது போல் இரண்டும் ஒன்றல்ல. ஆகவே பொது கபுரஸ்தானுக்கு செல்வதை ஸுன்னத் என்றும், தர்காக்களுக்குச் செல்வதை ஆகாது என்றும் கூறுகிறோம். அல்லாஹ் மிக அறிந்தவன்.

காதணிகள் அணியக்கூடாது என்று சிலர் கூறுகிறார்களே சரியா?

ஒரு முறை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) ஆவர்களுடன் நீங்கள் பெருநாளில் இருந்துள்ளீர்களா? என்று கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் 'ஆம்' என்று கூறிவிட்டு நபி(ஸல்) அவர்கள் பெருநாளன்று புறப்பட்டு (பெருநாள் தொழுகையை) தொழுதார்கள். பின்னர் குத்பா - பிரசங்கம் செய்தார்கள். ஆனால் பாங்கு, இகாமத், எதுவும் சொல்லவில்லை. பின்னர் பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கு உபதேசம் செய்துவிட்டு அவர்களை ஸதகா தர்மம் செய்யும்படி ஏவினார்கள். அப்போது அப்பெண்கள் தமது காதுகளிலும், கழுத்துகளிலும் உள்ளவற்றைக் குனிந்து கழற்றி பிலால்(ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள். பிறகு அவர்களும் பிலால்(ரலி) அவர்களும் அவர்களின் வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி) புகாரீ, முஸ்லிம்)

புகாரியின் அறிவிப்பில் அப்பெண்கள் தமது காது வாலிகளையும் மோதிரங்களையும் கழற்றி கொடுத்தார்கள் என்பதாக உள்ளது. ஆகவே மேற்காணும் ஸஹீஹான ஹதீஸ்களில் சஹாபா பெண்கள் தமது காதுகளை குத்தி வாலி போட்டிருந்தார்கள் என்பதை அறிகிறோம். இதனை அடிப்படையாகக் கொண்டு காதணிகள் அணிபவர்களை நாம் தடை செய்ய முடியாது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. அல்லாஹ் மிக அறிந்தவன்.

பெண்கள் தங்கள் முகத்தையும் மறைத்தாக வேண்டுமா?

(நபியே!) மூமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அழகையும் (ஆடை ஆபரணம் போன்ற) அலங்காரத்தையும் அதனின்று (சாதரணமாக வெளியில்) தெரியக்கூடியதைத் தவிர வேறு எதையும் வெளிக்காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்பை மறைத்துக் கொள்ள வேண்டும். (அல்குர்ஆன் 24:31)

ஒருமுறை அபூபக்ரு(ரழி) அவர்களின் மகள் அஸ்மா(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடத்தில் தன்மீது ஓர் மெல்லிய ஆடை அணிந்த நிலையில் வந்தார்கள். அப்போது நபி(ஸல்) தமது முகத்தை திருப்பிக்கொண்டு அஸ்மாவே! ஒரு பெண் பருவம் அடைந்துவிட்டால் இதுவும், இதுவும் நீங்குதலாக என்று தமது முகத்தையும், மணிக்கட்டு வரையுள்ள கையையும் சமிக்கை செய்து காட்டி வேறு பகுதிகளைப் பிறர் பர்ப்பது கூடாது என்று கூறினார்கள் (அஸ்மா(ரழி), அபூதாவூத்)

மேற்காணும் வசனத்தையும், ஹதீஸையும் முன்வைத்து ஒரு பெண் தனது முகத்தையும், மணிக்கட்டு வரைத் தனது இரு கைகளையும் தவிர மற்ற பாகங்கள் அனைத்தையும் மறைத்தாக வேண்டும் என்பதை அறிகிறோம். அல்லாஹ் மிக அறிந்தவன்.

நபி(ஸல்) அவர்களின் மீது உள்ள அன்பின் காரணமாக மவ்லூது ஓதாவிட்டாலும் குர்ஆன் ஷரீப் ஓதி ஹதியா செய்து விருந்து கொடுக்கலாமா?

மெளலூது தவறெனில் குர்ஆன் ஓதி ஹதியா செய்வதின் மூலம் அன்பை காட்டலாமா? எனக் கேட்கிறீர்கள். நபி(ஸல்) அவர்கள் மீது அளவு கடந்த அன்பைக் காட்ட அவர்கள் காட்டித் தந்த வழிமுறைதான் நல்லது. தனக்கு குர்ஆன் ஓதி ஹதியா செய்யும்படி அவர்கள் நமக்கு ஏவவில்லை.
நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப்பின் எந்த நபித்தோழரும் குர்ஆன் ஓதி அவர்கள் ஹதியா செய்ததாக ஆதாரமும் அறவேயில்லை. ஆனால் நாம் குர்ஆன் ஓதினால் நாம் ஹதியா செய்யாமலே நமக்குறிய நன்மைகள் குறைக்கபடாமல் நபி(ஸல்) அவர்களுக்கும் நன்மை சென்றடைகிறது.

நபி(ஸல்) அவர்கள் மூலம் நாம் குர்ஆனைப் பெற்றோம். அவர்கள் மூலம் நேர்வழியான இஸ்லாத்தை பெற்றோம். எனவே எந்த ஒரு நன்மையான செயலை வாழையடி வாழையாக செய்ய வைத்தார்களோ, அவர்களுக்கு அந்த நன்மையின் பங்கு சேர்ந்து கொண்டேயிருக்கும். எனவே நாம் குர்ஆன் ஓதினால் அதை ஹதியா செய்யாமலேயே அவர்களுக்கு நன்மை கிட்டும்.

நிச்சயமாக அல்லாஹ்வும், அவனது வானவர்களும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கிறார்கள். (எனவே) விசுவாசிகளே! நீங்களும் அவர்மீது ஸலவாத்துச் சொல்லி சலாமும் பகருங்கள். (அல்குர்ஆன் 33:56)

இந்த வசனத்தில் விசுவாசிகளை அழைத்து நபியின் மீது ஸலவாத்து சொல்ல ஆணையிடுகிறான். நபியின் மீது அதிகமாக ஸலவாத்து சொல்லுவது அவர்மீதுள்ள அளவு கடந்த அன்பை வெளிப்படுத்தும் செயலாகும். நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்தபடிதான் செயல்பட வேண்டும்.

அவர்கள் விலக்கியதை நாமும் விலக்க வேண்டும். இப்படி இஸ்லாத்தின் ஏவல் விலக்கின்படி நிறைவேற்றுவதுதான் நபி(ஸல்) அவர்கள் மீது நாம் காட்டும் அளவற்ற அன்பு ஆகும்.எவ்வித சடங்குகளுமின்றி ஏழை எளியவருக்கு உணவளிப்பதை இஸ்லாம் வரவேற்கிறது. அல்லாஹ் மிக அறிந்தவன்.

திருஷ்டிக்காக அல்லது கைகால் வலி நீங்குவதற்காக ஓது முடிச்ச கருப்புக்கயிற்றை கட்டிக்கொள்ளலாமா?

திருஷ்டிக்காக அல்லது கைகால் வலி நீங்குவதற்காக ஓது முடிச்ச கருப்புக்கயிற்றை கட்டிக்கொள்ள மார்க்கத்தில் அனுமதியில்லை.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அவர்களின் துணைவியார் ஜைனபு(ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ஒரு முறை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அவர்கள் எனது கழுத்தில் ஓர் கயிற்றை கண்டு இது என்ன? என்றார்கள். இது எனக்காக மந்திரித்த கயிறு என்றேன். உடனே அவர்கள் அதைப்பிடித்து அறுத்துவிட்டு, நீங்கள் அப்துல்லாஹ் (வாகிய என்னுடைய) குடும்பத்தார் ஷிர்க்கை விட்டும் வெகு தூரத்திலுள்ளவர்கள். நிச்சயமாக மந்திரமும், திருஷ்டிக்காக மந்திரித்த கயிறும், சூனியம் செய்தல் ஆகியவை அனைத்தும் ஷிர்க்கு என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் என்றார்கள்....(அபூதாவூத்)

மேற்காணும் ஹதீஸிலிருந்து குணத்தை நாடி உடம்பில் கறுப்பு கயிற்றை மந்திரித்து கட்டுவதெல்லாம் இஸ்லாத்திற்கு புறம்பானதாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

அல்லாஹ்வுக்காக ஒரு முஸ்லிமை வெறுத்து ஒதுக்கலாமா?

எவர் அல்லாஹ்வுக்காக நேசித்து, அல்லாஹ்வுக்காக வெறுத்து, அல்லாஹ்வுக்காக கொடுத்து, அல்லாஹ்வுக்காக கொடுக்க மறுத்து விடுகிறாரோ அவர் ஈமானை நிறைவு செய்து விட்டார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூ உமாமா(ரலி), அபூதாவூத், திர்மிதீ

மேற்கானும் ஹதீஸின்படி ஒரு முஸ்லிமை, வெறுப்பதும், அவருக்கு எதுவும் கொடுக்காமல் இருப்பதும் சரி என்பதாக தெரிந்தாலும், தொடர்ந்து இந்த நிலை நீடிப்பதை நபி(ஸல்) அவர்களின் கீழ்காணும் ஹதீஸ் தடை செய்கிறது.

ஒருவர் தனது சகோதரரை மூன்று தினங்களுக்கு அதிகமாக வெறுத்திருப்பது முறையாகாது. இருவரும் சந்தித்துக் கொள்ளும்போது இவரை விட்டு அவரும், அவரை விட்டு இவரும் முகம் திருப்பிக் கொள்கின்றனர். இவ்விருவரில் சிறந்தவர் (மற்றவருக்கு) ஸலாம் கூற முந்துபவரேயாவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ அய்யூபுல் அன்ஸாரி (ரலி), புகாரி, முஸ்லிம் அல்லாஹ் மிக அறிந்தவன்.

மாற்று மதத்தவர்கள் நமக்கு ஸலாம் கூறினால் நாம் பதில் ஸலாம் கூறலாமா?

வேதமுடையோர் உங்களுக்கு சலாம் கூறினால் 'வ அலைக்கும்' என்று கூறுங்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ்(ரலி) அறிவிக்கிறார்கள். இது புகாரியில் இடம்பெற்ற ஹதீஸாகும். இந்த ஹதீஸை வைத்து முஸ்லிமல்லாதர்வர்கள் ஸலாம் கூறினால் 'அலைக்கும்' என்று மட்டுமே கூறவேண்டும் என்கிறார்கள்.
உங்கள் மீது யூதர்கள் ஸலாம் கூறினால் அஸ்ஸாமு அலைக்கும் (உங்கள்மீது அழிவு ஏற்படட்டும்) என்றே கூறுகின்றனர். எனவே நீங்கள் 'அலைக' என்று கூறுங்கள்! என இப்னு உமர்(ரலி) அறிவிக்கும் மற்றொரு ஹதீஸ் புகாரியில் இடம்பெற்றுள்ளது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَى أَهْلِهَا ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அவர்களிடம் அனுமதி பெற்று அவர்களுக்கு சலாம் சொல்லாதவரை பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது கூறப்படுகிறது) (24:27)
யூதர்கள் 'அஸ்ஸாமு அலைக' (உன்மீது அழிவு ஏற்படட்டும்) என்று கூறுகின்றனர். அதனால் நீங்கள் 'அலைக' என்று கூறுங்கள் என என்று நபி(ஸல்) அவர்கள் அதன் காரணத்தை விளக்குகிறார்கள். யூதர்கள் முறையாக சலாம் சொல்லாததினால் தான் நபி(ஸல்) அவர்கள் 'அலைக' என்று கூறும்படி சொன்னார்கள். முஸ்லிம் அல்லாதவர்கள் 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று முறையாக கூறும்போது நாம் "அலைக" என்று கூற வேண்டியதில்லை.

யூதர்களில் ஒரு கூட்டத்தினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'அஸ்ஸாமு அலைக' என்றனர். (அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறாமல்) அவர்கள் கூறுவதை நான் விளங்கிக் கொண்டேன். "அலைக்குமுஸ்ஸாமு வல்லஃனது" (உங்களுக்கு அழிவும் சாபமும் ஏற்படட்டும்) என்று மறுமொழி கூறினேன். இதைக்கேட்ட நபி (ஸல்) அவர்கள் 'ஆயிஷாவே! சற்று பொறு! எல்லா விஷயங்களிலும் அல்லாஹ் பண்பாட்டை (நளினத்தை) விரும்புகின்றான் என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் கூறியதை நீங்கள் கேட்கவில்லையா? என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் " வ அலைக்கும்" (உங்ளுக்கும் அவ்வாறே) என்று கூறிவிட்டேனே என்றார்கள். ஆயிஷா(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரியில் இடம்பெற்றுள்ளது. யூதர்கள் அழிவு உண்டாகட்டும் என்று சொல்லியும் கூட அதேபோல் கூறாமல் நாகரீகமாக 'வ அலைக்கும்' (உங்களுக்கும்) என்று மட்டும் கூறச் சொல்கிறார்கள்.

وَإِذَا حُيِّيْتُم بِتَحِيَّةٍ فَحَيُّواْ بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا அல்லாஹ் தன் திருமறையில் "உங்களுக்கு முகமன் கூறப்பட்டால் அதைவிட அழகாக அல்லது அதற்கு சமமாக நீங்களும் மறுமுகமன் கூறுங்கள்" (4:86) எனவே, முஸ்லிமல்லாதவர்கள் அவர்கள் முறையாக அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறும் போது நாமும் முறையாக பதில் சொல்வதற்கு எந்தத் தடையும் கிடையாது. அல்லாஹ் மிக அறிந்தவன்.

நான் நேர்ச்சை செய்து கொண்டேன் அதனை நான் நிறைவேற்றலாமா?

நேர்ச்சை செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. அவை மார்க்கம் அனுமதித்த வகையில் இருக்க வேண்டும். மார்க்கம் அனுமதிக்காத வழிகளில் நேர்ச்சை செய்திருந்தால் அதை நிறை வேற்றத் தேவையில்லை. இன்னும் செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கு அறிவான். (அல்குர்ஆன்: 2:270)

மர்யமே அவற்றை உண்டு ஆற்று நீரைப் பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் பார்க்க நேரிட்டால் ' மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கிறேன்; ஆதலால் இன்று எந்த மனிதருடனும் பேச மாட்டேன்' என்று கூறுவீராக! (அல்குர்ஆன்: 19:26)

இம்ரானின் மனைவி 'என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ள குழந்தையை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும் நன்கு அறிபவனாகவும் இருக்கின்றாய்' என்று கூறினார். (அல்குர்ஆன்: 3:35)

'நல்லவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள்' (அல்குர்ஆன்: 76:7)
என அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ்வுக்கு வழிபடும் காரியத்தில் ஒருவர் நேர்ந்து கொண்டால் (அதை அவர் நிறைவேற்றி) அவனுக்கு அவர் வழிபடட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் காரியத்தில் ஒருவர் நேர்ச்சை செய்திருந்தால் (அதை நிறைவேற்றி) அவனுக்கு அவர் மாறு செய்ய வேண்டாம்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் புகாரி, திர்மிதீ நஸயீ. அல்லாஹ் மிக அறிந்தவன்.

மரணத்தை ஆசிப்பது தவறு என்று கூறப்படுகிறதே. ஆனால் சில சந்தர்ப்பங்களில் அவ்வாறு ஆசிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறதே என்ன செய்வது?

உங்களில் எவரும் மரணத்தை ஆசிக்க வேண்டாம். நல்லவராயிருப்பினும் அவர் நற்காரியத்தை அதிகம் தேடிக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. தீயவராயிருப்பின் அல்லாஹ்விடம் 'தவ்பா' செய்து அவனது பொருத்தத்தை அடைய ஏதுவிருக்கிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரலி), புகாரி

உங்களில் எவரும் தமக்கு ஏற்பட்டுள்ள கஷ்டத்தின் காரணமாக ஆசிக்க வேண்டாம். அவ்வாறு நிர்ப்பந்த நிலை ஏற்ப்பட்டு கேட்க வேண்டுமாயின் பின்வருமாறு கேட்பாராக! யாஅல்லாஹ்! எனக்கு வாழ்க்கை சிறப்புடையதாயிருக்கும் வரை என்னை வாழச் செய்வாயாக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அனஸ்(ரலி), புகாரி, முஸ்லிம்)

ஆகவே மேற்காணும் ஹதீதுகளின் அடிப்படையில் மரணத்தை ஆசிப்பது தவறு என்பதை அறிகிறோம். ஆகையால் மரணம் வருவதை எதிர்பார்த்துக்கொண்டு அதற்காக முற்கூட்டியே நல்ல அமல்கள் செய்து கொள்வது வரவேற்புக்குரியதாகும்.

தக்வாவின் சிறப்பம்சம் என்ன?

"தக்வா" என்பது பயபக்தி, இறை உணர்வு, பாவ தடுப்பு சக்தி முதலியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளதோர் சிறப்புத் தன்மையாகும். தக்வாவுடன் செய்யப்படும் அமலுக்குத்தான் அல்லாஹ்விடம் அங்கீகாரம் உள்ளது. அல்லாஹ் (அமல்களை) ஏற்றுக் கொள்வதெல்லாம் "தக்வா" பயபக்தி இறை உணர்வு உள்ளவர்களிடமிருந்து தான் (5:27) என்று குர்ஆன் கூறுகிறது.

ஆகவே நாம் செய்யும் ஒவ்வொரு அமலிலும் தக்வா இருந்தாக வேண்டும். இல்லையேல் அதன் பலனை அடையும் வாய்ப்பினை இழக்க நேரிடும்.

ஓர் அடியான் பாவமில்லாதவற்றையும் அவை பாவமாக இருந்து விடுமோ என்று பயந்து அவற்றை விட்டொழிக்கும் வரை "முத்தக்கீன்" பயபக்தியாளர்- இறை உணர்வுமிக்கவர் என்ற உயர் நிலையை தான் அடைந்து கொள்ள முடியாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அத்திய்யத்துஸ்ஸஃதீ(ரழி) திர்மிதீ, இப்னுமாஜ்ஜா)

"தக்வா" ஒருவருடைய உள்ளத்தில் ஏற்பட்டு விட்டால் அவர் சதா காலமும் தான் அல்லாஹ்வின் முன்னிலையில் இருப்பதான உணர்வு அவருக்கு உண்டாகி விடுகிறது. அதன் காரணமாக அவர் தாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் அது பாவமாக இருந்துவிடக் கூடாது என்று மிகவும் எச்சரிக்கையாக இருந்து கொள்வார். அல்லாஹ் மிக அறிந்தவன்.

திருக்குர்ஆனில் உள்ள 114 அத்தியாயங்களின் ஆரம்பத்தில் பிஸ்மில்லாஹ் உள்ளது. 9வது அத்தியாத்தில் மட்டும் பிஸ்மில்லாஹ் இல்லை! ஏதாவது தனிப்பட்ட காரணமுள்ளதா?

நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே குர்ஆன் வசங்கள் இறக்கப்பட்டதும் எழுதி வைத்துக்கொள்ள ஜைதுபின் தாபித், உபைஇப்னுகஃபு (ரலி) போன்ற நபித்தோழர்கள் இருந்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் நபி(ஸல்) அவர்கள் ரமழானில் இஃதிகாஃபில் இருக்கும்போது ஒரு தடவை குர்ஆன் வசனங்களை வரிசையாக ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் ஓதி காட்டியிருக்கிறார்கள்.
ரசூல்(ஸல்) அவர்களின் மரணத்திற்கு முந்திய ரமழானின் இஃதிகாஃபில் இரு தடவைகள் ஓதிகாட்டியிருக்கிறார்கள்.
இச்செய்திகளை அபூஹுரைரா(ரலி), அனஸ்(ரலி) போன்ற நபித்தோழர்கள் அறிவிப்பதாக புகாரி, அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜ்ஜா, அஹ்மத் போன்ற ஹதீஸ் நூல்களில் காணமுடிகின்றது.
அதே ஜைது இப்னு தாபித் (ரலி) அவர்கள் தான் பின் குர்ஆனை முழுமையாக ஒரே நூலாக தொகுக்க அபூபக்கர்(ரலி) நியமித்த குழுவின் தலைமையேற்றியிருக்கிறார்.
நபி(ஸல்) அவர்களின் தலைமை எழுத்தாளராக இருந்த ஜைது(ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் எங்கெல்லாம் பிஸ்மில்லாஹ் கூறி ஆறம்பித்தார்களோ அங்கெல்லாம் பிஸ்மில்லாஹ் எழுதினார்கள்.
9வது அத்தியாத்தை பிஸ்மில்லாஹ் கொண்டு ஓதவில்லை. எனவே அங்கு பிஸ்மில்லாஹ் இடம்பெறவில்லை.எனவே இதன் அடிப்படயில்தான் இன்று வரை எல்லா மொழிகளிலும் அச்சடிக்கப்படும் குர்ஆனிலும் மூல அரபி மொழியிலும் பிஸ்மில்லாஹ் என்ற வாசகம் இடம்பெறவில்லை. இந்த ஒன்றைத் தவிர வேறு எந்த தனிப்பட்ட காரணம் இல்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.

May 8, 2009

ஆரோக்கியமாக வாழ்வதற்குத் தேவையான 52 வழிகள்

நோய்கள் எதுவும் தீண்டாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் தேவையான 52 வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அது ஏன் 52 வழிகள்?

இந்த வழிகளை எல்லாம் ஒரே நேரத்தில் கடைப்பிடிப்பது சிரமமாக இருக்கும் என்று நினைப்பவர்கள் வாரத்திற்கு ஒரு வழி என்று பழக்கப்படுத்திக் கொண்டால் போதும், ஒரு வருடத்தில் இவை எல்லாமே அத்துப்படி ஆகிவிடும். ‘அப்புறம், உங்கள் உடலுக்கும் மனதுக்கும் 100% கியாரண்டி!’ என்கிறார் பாதை வகுத்துத் தந்த ரேகா ஷெட்டி. இனி அந்த வழிகளைப் பின்பற்றி நடப்போமே!

1. ஒவ்வொரு நாளும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

2. சாப்பாட்டில் தவறாது இரண்டு காய்கறிகளாவது இடம் பெறும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சாப்பாட்டுக்குப் பின் ஏதாவது ஒரு பழத்தைச் சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

3. உணவுக்கு முன்பு காய்கறிகளைப் பச்சையாக நறுக்கிப் போட்ட வெஜிடபிள் சாலட் சாப்பிடலாம்.

4. நொறுக்குத்தீனிக்கு நாக்கு பரபரக்கிறதா? ‘ஸ்நாக்ஸ்’ வேண்டாம். அதற்குப் பதில் முளைவிட்ட பட்டாணி, பயிறு வகைகளைச் சாப்பிடலாம்.

5. ஒவ்வொரு வேளை உணவையும் அனுபவித்து உண்ணுங்கள். ரசித்து, ருசித்துச் சாப்பிடுங்கள்.

6. ஃப்ரெஷ் ஆன காய்கறிகளை மட்டுமே பயன்படுத்துங்கள்.

7. சர்க்கரை அம்சம் கொண்ட குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், சாக்லேட்டுகள், மிட்டாய்வகைகள் பக்கம் தலைவைத்துப் படுக்காதீர்கள்.

8. எதையும் சமைத்த உடனேயே சாப்பிடுவது நல்லது. ஃப்ரிட்ஜில் வைத்துச் சூடாக்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

9. உணவில் அவ்வப்போது கீரையைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

10. என்றேனும் ஒருநாள் ‘முழு உண்ணாவிரதம்’ இருங்கள். உணவுக்குப் பதில் காலை, மதியம், மாலை, இரவு காய்கறி சூப், பழரசம் மட்டும் சாப்பிடலாம்.

11. காபி பழக்கத்திற்கு டாடா சொல்லுங்கள். எதையாவது குடிக்கவேண்டும் எனத் தோன்றினால் ஃப்ரெஷ் ஜூஸ் குடிக்கலாம்.

12. பொரித்த உணவுப்பண்டங்கள் உடலுக்குக் கெடுதல். உங்கள் உணவிலிருந்து அவற்றை விலக்கி விடுங்கள்.

13. வாரத்தில் ஏதாவது ஒருநாள் காலை டிபனுக்குப் பதிலாகப் பழங்கள் மட்டுமே சாப்பிடுங்கள். மதியம் வரை வேறு எதுவும் உண்ணாமல் நேராக மதிய உணவு அருந்துங்கள்.

14. ‘டயட்’டில் இருக்கிறோம் என்பதற்காக உணவைத் தியாகம் செய்யாதீர்கள். சாப்பிடாத வேளைகளில் ஃப்ரெஷ் ஆன பழங்கள் அல்லது வெஜிடபிள் ஜூஸ் அருந்தலாம்.

15. காபி, சோடா, கோலா ஆகிய பானங்களை அருந்த வேண்டாம்.

16. நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள் உங்கள் மெனுவில் இடம் பெறட்டும்.

17. உப்பை அளவாகப் பயன்படுத்துங்கள்.

18. குழந்தைகளுடன் குழந்தையாக மாறி விளையாடுங்கள். உங்கள் குழந்தைப் பருவம் நெஞ்சில் நிழலாடுமே! அது அல்லவா ஆனந்தம்?

19. காய்கறிகளை வறுப்பதோ பொரிப்பதோ கூடாது. வேக வைப்பதே சிறந்தது.

20. சமைக்கும்போது உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய், கேரட், தக்காளி ஆகிய காய்கறிகளின் மேற்புறத் தோலை நீக்க வேண்டாம். கழுவி வெறுமனே சுரண்டிப் போட்டால் போதும்.

21. நீங்கள் உண்ணும் உணவில் தேவையான கலோரிகள், புரதச்சத்து ஆகியவை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கேற்றவாறு உங்கள் உணவைத் திட்டமிடுங்கள்.

22. எப்போதும் அவசர அவசரமாக உணவை அள்ளி விழுங்காதீர்கள். மென்று தின்றால்தான் உண்ணும் உணவு செரிக்கும்.

23. தியானமும் பிரார்த்தனையும் மனப்பயிற்சிகள். தினமும் 20 நிமிடங்கள் அதற்காக ஒதுக்கிக் கொள்ளுங்கள்.

24. நீங்கள் உண்ணும் உணவில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியம் தரும் உணவைத் தேர்ந்தெடுங்கள்.

25. மளிகைப் பொருட்கள், காய்கறிகள் என எதுவானாலும் நீங்களே நேரடியாகச் சென்று வாங்குங்கள். உற்றுப் பார்த்து, முகர்ந்து பார்த்து, தொட்டுப் பார்த்து ஒவ்வொன்றையும் வாங்கினால் எந்த நோய்க்கிருமியும் உங்களிடம் வாலாட்ட முடியாது.

26. மனம் வெறுமையாக இருந்தாலோ, களைப்பு ஏற்பட்டாலோ அதனை ஈடுகட்டுவதற்காகச் சிலர் சாக்லேட்களைச் சாப்பிடுவார்கள். ஜாலி மூடில் ஐஸ்க்ரீம், ஸ்நாக்ஸ் என வெளுத்துக் கட்டுவார்கள். இப்படி உங்கள் உணர்வுகளை உணவுடன் முடிச்சு போடாதீர்கள். பின்பு அதுவே ஒரு பழக்கமாகிவிடும். ‘மூடு’ எதுவாக இருந்தாலும் ஜூஸ் மட்டும் அருந்துங்கள்.

27. சினிமா தியேட்டரில் ‘சிப்ஸ்’ கொறிக்கும் பழக்கம் உண்டா உங்களுக்கு? அதற்கு ‘நோ’ சொல்லிவிட்டு ‘பாப்கார்ன்’ கொறியுங்கள்.

28. உணவுவேளையின் போது டைனிங்டேபிளில் அமர்ந்து சாப்பிடுங்கள். சாப்பிடும்போது பேப்பர் படிப்பது, காரசாரமான விவாதங்கள் என்ன வேண்டிக் கிடக்கிறது? முழுக்கவனமும் உணவின் மீதே இருக்கட்டும்.

29. இரவு உணவின்போது ஒட்டுமொத்த குடும்பமும் டி.வி. முன் ஆஜராகி சாப்பாட்டை உள்ளே தள்ளுவது விரும்பத்தக்கதல்ல. அதைவிட குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து கலகலப்பான மனநிலையில் சாப்பிடுங்கள்.

30. சுவாசப்பயிற்சி நுரையீரலுக்கு நல்லது. மூச்சை நன்றாக உள்ளுக்கு இழுத்து, மெதுமெதுவாக விடவும். இதுபோல் தினமும் பலமுறை செய்யுங்கள்.

31. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும். காமெடி சினிமாக்கள் பார்ப்பது, சரமாரியாக ஜோக்குகள் அடிப்பது, உரக்கச் சிரிப்பது, நகைச்சுவை புத்தகங்கள் படிப்பது ஆகியவற்றை உங்கள் இயல்பாக்கிக் கொள்ளுங்கள். தேவன், சாவி, சுஜாதா, சோ, நாகேஷ், கவுண்டமணி, செந்தில், மணிவண்ணன், விவேக்... ஆஹா! நினைத்தாலே ஹி...ஹி...ஹி!

32. மது அருந்தும் ஆசாமியா நீங்கள்? உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

33. இரவில் படுக்கைக்குச் செல்லும்போது மகிழ்ச்சியான மனநிலை தேவை. தூக்கம் கண்களைத் தழுவும்போது அமைதி உங்கள் நெஞ்சில் நிலவட்டும் குட்நைட்! ஸ்வீட் ட்ரீம்ஸ்!

34. மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நினைக்காமல் டான்சிங், ஸ்விம்மிங், ரோலர் ஸ்கேட்டிங் என்று காலில் சக்கரம் கட்டிக் கொள்ளுங்கள்.

35. ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ‘வாக்கிங்’ செல்லுங்கள்.

36. கை, கால்களை நீட்டி மடக்கிச் செய்யும் எளிய உடற்பயிற்சிகளுக்கு என்று காலையில் 10 நிமிடங்கள், மாலையில் 10 நிமிடங்கள் ஒதுக்கிக் கொள்ளுங்கள்.

37. மாடிப்படிகளில் ஏறிச் செல்ல முடிகிறபோது லிஃப்ட், எஸ்கலேட்டர் எல்லாம் எதற்கு? படியேறுவது காலுக்கு வலிமை சேர்க்கும்.

38. தினமும் தியானம் மனதுக்கு நல்லது.

39. ஒருபோதும் மூக்கு முட்ட சாப்பிடாதீர்கள்.

40. ஓய்வெடுப்பது என்பது ஒரு கலை. சும்மா இருப்பது ஓய்வு ஆகாது. உங்கள் உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஓய்வு கொடுங்கள். குறைந்தது 20 நிமிடங்கள் ஓய்வு அவசியம்.

41. காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து குடிப்பது நல்லது.

42. புகை உங்கள் உடலுக்குப் பகை. பழக்கம் இருந்தால் அடியோடு விட்டுவிடுங்கள்.

43. உங்கள் ஆழ்மனத்திற்கு என்று இருக்கும் ஆற்றலைப் பயன்படுத்துங்கள். உங்கள் உடலை 20 நிமிடங்களுக்குத் தளர்த்திவிட்டுக் கொள்ளுங்கள். அந்த ஆரோக்கியமான உடல்நிலையை மனதால் உணருங்கள்.

44. வேலை செய்ய, பொழுதுபோக்க என்று உங்கள் நேரத்தைச் சரியாகப் பகுத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் ‘பேலன்ஸ்’ மிக முக்கியம்.

45. காய்கறிகளை நறுக்குவதற்கு முன் சுத்தமான தண்ணீரில் நன்றாகக் கழுவுங்கள்.

46. நண்பர்களை அடிக்கடி சந்தியுங்கள். வாய்ப்பு இல்லாவிட்டால் டெலிபோனிலாவது பேசுங்கள். தனிமை விலகும், இனிமை கூடும்.

47. இதுவரை செய்யாவிட்டால் என்ன, இன்று முதலாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.

48. பிறரது தவறுகளை மன்னித்துவிடுங்கள். தேவையில்லாத மனபாரம் குறையும்.

49. முன்பின் தெரியாதவராக இருந்தால் என்ன, எல்லோரிடமும் நட்பு பாராட்டுங்கள்.

50. தினமும் குறைந்தது அரைமணி நேரம் குடும்பத்தினருடன் அரட்டை அடியுங்கள்.

51. ஒவ்வொரு நாளும் குறைந்து 15 நிமிடங்களாவது காது குளிர இசையைக் கேளுங்கள்.

52. நல்ல புத்தகம், நல்ல நண்பன். வாரம் ஒரு புத்தகமாவது படியுங்கள்

May 7, 2009

பொருட்டால்

இன்று முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் அதாவது தர்கா, தரீக்கா, மத்ஹபு இவற்றை சரிகண்டு மார்க்கத்திற்கு உட்பட்டதாக ஏற்று நடப்பவர்கள். அவர்கள் அல்குர்ஆன் அல்அஃராஃப் 7:55

இறைக் கட்டளைக்கு நேர்முரணாக தொழுகைகளுக்குப் பின்னரும், மற்றும் தங்களின் கூட்டு செயல்பாடுகளிலும், சப்தமிட்டு (துஆ) பிரார்த்தனையாக இருந்தாலும், கூட்டு(துஆ) பிரார்த்தனையாக இருந்தாலும் அவற்றை முடிக்கும் போது நபி(ஸல்) அவர்களின் பொருட்டால், ஷுஹதாக்களின் பொருட்டால், அவலியாக்களின் பொருட்டால் எங்களின் இந்த துஆவை ஏற்று அருள்புரிவாயாக யா அல்லாஹ் என்று தங்களின் பிரார்த்தனைகளை முடிக்கிறார்கள்.

அவர்களில், அல்லாஹ்விடம் என்ன கேட்பது? இறந்து மண்ணுக்குள் சென்றுவிட்ட அவுலியாக்களிடமே நேரடியாகக் கேடடுப் பெற்றுக் கொள்ளலாம்; பெற்றுக் கொள்ள முடியும் என்ற கொள்கையுடையோரும் உண்டு. இவர்கள் தர்காக்களிலுள்ள கபுருகளுக்கே சுஜுது - சிரம் பணியலாம். அது அல்லாஹ்வுக்கு மாறு செய்வது ஆகாது என்று நம்பும் பரேல்வி (அகீதா) கொள்கை கொண்ட ஆக வழிகெட்ட கூட்டமாகும்.

ஆனால் இந்த பரேல்வி கொள்கை தவறு என்று கூறும் தப்லீஃக், தேவ்பந்தி(அகீதா) கொள்கை உடையோரும் நபிமார்களின், நாதாக்களின் , நல்லடியார்களின் பொருட்டால் கேட்பது மார்க்க முரணான -இறைவனுக்கு இணை வைக்கும் தீய செயல் என்பதை உணராதிருக்கிறார்கள். நேரடியாக அவர்களிடம் கேட்கவில்லையே! அவர்களின் பொருட்டால்(?) மன்னிக்கும்படி, நமது தேவைகளைப் பூர்த்தி செய்து தரும்படி படைத்த அல்லாஹ்விடம் தானே கேட்கிறோம் என்பதே அவர்களின் பதிலாக இருக்கிறது.

மேலும் தங்களின் இந்த இணை வைக்கும் தீய செயலுக்கு ஆதாரமாக அல்குர்ஆன் அல்மாயிதா 5:35 இறைவாக்கைத் திரித்து வளைத்து ஆதாரமாகத் தருகிறார்கள்.

அந்த இறைவாக்கு வருமாறு:
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சி - ஆதரவு வையுங்கள். அவன்பால் நெருங்குவதற்குரிய வழியை (வஸீலா) தேடிக் கொள்ளுங்கள்; அவனுடைய பாதையில் பாடுபடுங்கள்; அதனால் நீங்கள் வெற்றி பெறலாம். (5:35)

அல்லாஹ் இங்கு வஸீலா என்று குறிப்பிட்டிருப்பது அல்லாஹ்வின் நேசத்திற்குரிய நல்லடியார்கள் தாம்; நாம் பாவிகள், அந்த நல்லடியார்களின் பொருட்டால் அல்லாஹ் நம்மை மன்னித்து நமக்கு கிருபை செய்யலாம் என்பது அவர்களின் விளக்கமாகும். இந்த சுய விளக்கம் தவறு என்பதை பனீ இஸ்ராயீல் 17:57 இறைவாக்கைப் படித்துப் பார்ப்பவர்கள் எளிதாக விளங்க முடியும். அது வருமாறு:

(இறைவனையன்றி) இவர்கள் யாரை அழைக்கிறார்களோ அவர்கள், ஏன் அவர்களில் (இறைவனுக்கு) மிகவும் நெருக்கமானவர்கள் கூட தங்களை இறைவன்பால் (கொண்டு செல்ல) நற்கருமங்களையே செய்து கொண்டும், அவனது அருளை எதிர் பார்த்தும், அவனது தண்டனைக்கு அஞ்சியுமே இருக்கின்றனர். நிச்சயமாக உமது இறைவனின் தண்டனை அச்சப்படத் தக்கதாகவே உள்ளது. (17:57)

இந்த இறைவாக்கு அல்லாஹ்வுக்கு மிகமிக நெருக்கமாக இருக்கும் நபிமார்களும், இவர்கள் வாதிடுவது போல் நெருக்கமாக இருக்கும் அவுலியாக்களான நல்லடியார்களும் இறைவனின் அடிமைகளே! அவர்களே அல்லாஹ்வை அஞ்சி தங்களின் நற்கருமங்களைக் கொண்டு அல்லாஹ்வின் மன்னிப்பையும், ஆதரவையும், அருளையும் எதிர்பார்த்திருக்கின்றனர் என்பதை உறுதிப்படுத்துகிறது. அப்படிப்பட்டவர்கள் இவர்களுக்காக எப்படி பரிந்துரை செய்ய முடியும்? நபி இப்றாஹீம்(அலை) அவர்களின் நேரடி வாரிசுகளான குறைஷ்கள் அல்லாஹ் காஃபிர்கள ் நிராகரிப்பாளர்கள் என முத்திரை குத்தி அவர்களை நரகவாசிகள் என தெளிவான அறிவித்துள்ளான்.

அதற்குக் காரணமே அவர்கள் நபிமார்களையும், வலிமார்களையும் தங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரை (வஸீலா) செய்வார்கள் என நம்பி, அவர்களை அழைத்துப் பிரார்த்தித்ததே என்பதை யூனூஸ் 10:18, ஜுமர் 39:3, கஹ்ஃப் 18: 102-106 இறைவாக்குகள் தெள்ளத் தெளிவாக அறிவித்துக் கொண்டிருக்கின்றன. நபி இப்றாஹிம்(அலை) அவர்களின் நேரடி வாரிசுகளுக்கே இந்தக் கதி என்றால், நம் தமிழக முஸ்லிம்கள் குடிகாரர்களையும், பயித்தியங்களையும், கஞ்சா மஸ்தான்களையும், இதற்குக் கீழும் போய் கழுதைகளையும், குதிரைகளையும், கட்டைகளையும் அவுலியாக்களாக்கி, தர்காக்கள் கட்டி அங்கு போய் அவர்களை அழைத்துப் பிராாத்திப்பவர்களின் (வஸீலா) நாளை மறுமையின் நிலை என்னவாகும்? சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

இந்த பொருட்டால் (வஸீலா) என கேட்டு மக்களை வஞ்சிக்கும் புரோகித மவ்லவிகள் அதை நியாயப்படுத்தும் முறை மேலும் பெரியதொரு குற்றத்தைச் செய்ய வைக்கிறது. வஸீலாவை நியாயப்படுத்து முறை வருமாறு:

நாட்டின் பிரதம மந்திரியையோ, முதன் மந்திரியையோ, உயர் அதிகாரிகளையோ நேரடியாகச் சந்தித்து நமது தேவைகளை முறையிட முடியுமா? முடியாது. அவர்களுக்கு வேண்டப்பட்ட மந்திரி, எம்எல்ஏ., எம்.பி., எம்.எல்.சி., போன்றோரின் அறிமுகத்துடன் (வஸீலா) தான் அவர்களைப் போய் சந்திக்க முடியும். அது போல் தான் நாம் அவுலியாக்களின் அறிமுகத்துடன் (வஸீலா) தான் அல்லாஹ்விடம் நம்முடைய தேவைகளை முறையிட முடியும், என மனித அறிவை மயங்கச் செய்யும் காரணத்தைக் கூறுவார்கள் இந்தப் புரோகித மவ்லவிகள்.

சுய சிந்தனையற்ற மக்கு மக்களும் இந்த போலிக் காரணத்தைச் சரி கண்டு அந்த முகல்லிது பின்னால் அணிவகுப்பார்கள். இந்த அவர்களின் சுய விளக்கத்தில் எத்தனைக் கொடூர இணை வைக்கும் மாபாதகங்கள் நிறைந்து காணப்படுகின்றன என்பதை வரிசையாகப் பார்ப்போம். முதல் குற்றம் மாபெரும் வல்லமைமிக்க அல்லாஹ்வை அவனால் படைக்கப்பட்ட பிரதம மந்திரி, முதன் மந்திரி, உயர் அதிகாரி என மனிதர்களோடு ஒப்பிட்டு உதாரணம் கூறி இருப்பது கொடிய குற்றம்; அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் குற்றமாகும்.

இதோ குர்ஆன் கூறுகிறது காது கொடுத்து கேளுங்கள்: “வானங்களிலோ, பூமியிலோ இவர்களுக்காக யாதொன்றையும் அளிக்க சுதந்திரமும், ஆற்றலும் அற்றவற்றையா அல்லாஹ்வை விட்டு விட்டு இவர்கள் அழைக்கிறார்கள். (16:73)

ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன்; ஆனால் நீங்கள் அறியமாட்டீர்கள். (அந்நஹ்ல் 16:74)

இந்த இரண்டு இறைவாக்குகளையும் கவனமாகப் படித்து விளங்குகிறவர்கள் அன்று நபி(ஸல்) காலத்தில் தாருந்நத்வா மவ்லவிகள் அல்லாஹ்வைப் பற்றி எப்படிப்பட்ட அறிவீனமான உதாரணத்தைக் கூறி அன்றைய குறைஷ்களை ஏமாற்றி வஞ்சித்தார்களோ, அதே அறிவீனமான, இணை வைக்கும் உதாரணத்தையே இன்றைய முகல்லிது மவ்லவிகள் கூறி முஸ்லிம்களை வஞ்சித்துச் சுரண்டுகிறார்கள் என்பதை எளிதாக விளங்க முடியும்.
இந்த உதாரணத்தின் மூலம் இந்த முகல்லிது மவ்லவிகள் சர்வ வல்லமை மிக்க அல்லாஹ்வை எந்த அளவு இழிவுபடுத்தி கேவலப்படுத்துகிறார்கள். (நவூதுபில்லாஹ்) என்று வரிசையாகப் பார்ப்போம்.

அவர்கள் கூறும் 1. பிரதம மந்திரி, முதன் மந்திரி, 2. இடைப்பட்ட மந்திரி, எம்.எல்.ஏ. எம்.பி.எம். எல்.சி., 3. தேவைகள் நிமித்தம் இவர்களிடம் செல்பவர்கள் என்ற இந்த மூன்று நிலையிலும் இடம் பெற்றுள்ளவர்கள் மனிதர்களே! இங்கு தேவை உடைய மனிதன் தன்னைப் பற்றி அறிந்திருக்கும் அளவுக்கு இடையில் வரும் மந்திரி, எம்.எல்.எ., எம்.பி., எம்.எல்.சி., அறிந்திருக்கும் அளவுக்கு பிரதம மந்திரி, முதன்மந்திரி, உயர் அதிகாரி அறிய மாட்டார். அறியும் வாய்ப்பும் இல்லை. இங்கு அந்த தேவையுடைய மனிதன் நல்லவனா? கெட்டவனா? யோக்கியனா? அயோக்கியனா போன்ற விவரங்கள், அவனறிந்த அளவு இடையில் வருபவர்களுக்குத் தெரியாது. இடையில் வருகிறவர்கள் அறிந்த அளவுக்கு பிரதமமந்திரி, முதன்மந்திரிக்குத் தெரியாது.
இங்கு தேவையுடைய மனிதனைப் பற்றிய உண்மை விபரம் மேலே போக போக இறங்கு வரிசையில் செல்கிறது. எனவே இந்த இந்த அறிவீனமான உதாரணத்தின் மூலம் முறையிடும் மனிதனைப் பற்றிய உண்மைத் தகவல்கள் அவனறிந்த அளவுக்கு அல்லாஹ்வுக்குத் தெரியாது. எனவே உலகில் பிரதம மந்திரியை அல்லது முதன் மந்திரியை அவரது அறியாமையைப் பயன்படுத்தி, அவரை ஏமாற்றிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ள முடியும் என்று கூறும் இந்த முகல்லிது மவ்லவிகள் எவ்வளவு பெரிய வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பது புரிகிறதா?
அவர்கள் நினைப்பதற்கு நேர் மாறாக, இங்கு அல்லாஹ் , சம்பந்தப்பட்ட மனிதனைப்பற்றி அந்த மனிதனே அறிந்துள்ளதற்கும் மேலதிகமாகவே அறிந்தவனாக இருக்கிறான். அந்த மனிதனுக்கோ தான் இதுவரை செய்துள்ள நல்லது, கெட்டது மட்டுமே தெரியும். ஆனால் முக்காலமும் அறிந்த இறைவனோ அந்த மனிதன் இறப்பதற்கிடையில் செய்யவிருக்கும் நல்லது, கெட்டது அனைத்தையும் முற்றிலும் அற்ப அறிவையுடைய பிரதமந்திரி, முதன் மந்திரி இவர்களோடு, முழுமையான அறிவையுடைய இறைவனை ஒப்பிட்டுப் பேசும் முகல்லிது தர்கா, தரீக்கா தப்லீஃக், தேவ்பந்த் மவ்லவிகள் எந்த அளவு வழிகேடர்களாகவும், மக்களை வழிகெடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை சிறிது சுய சிந்தனையுடையவனும் விளங்கிக் கொள்ள முடியும்.

நபிமார்களை , நாதாக்களை , அவுலியாக்களை, பொருட்டாகக் கொண்டு உதவி தேடுவதற்கு இந்த முகல்லிது மவ்லவிகள் கூறும் இரண்டாவது காரணம் வருமாறு:
சாதாரண மக்களாகிய நாமெல்லாம் பாவங்களிலேயே மூழ்கி இருக்கும் பெரும் பாவிகள்; நாம் அல்லாஹ்வை நேரடியாக நெருங்கமுடியாது. நபிமார்கள், நாதாக்கள், அவுலியாக்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அல்லாஹ்வின் அன்பை அதிகமாகப் பெற்றவர்கள். எனவே அவர்களின் பொருட்டால் கேட்கும்போது அல்லாஹ் அவர்களுக்காக வேணும் மனமிறங்கி நமது தேவையைப் பூர்த்தி செய்து கொடுப்பான் என்பதாகும். அதாவது பாவத்தில் மூழ்கி இருக்கும் மக்கள் மீது அல்லாஹ்வை விட அவனது நல்லடியார்கள் அதிகமான அன்பும் அக்கறையும் உடையவர்கள் என்ற குருட்டு நம்பிக்கையை மக்களின் உள்ளங்களில் விதைக்கிறார்கள் இந்த முகல்லிது மவ்லவிகள்.

அல்லாஹ் படைத்த மனிதன்மீது அல்லாஹ்வை விட அவனது அவுலியாக்களுக்கு அதிக அன்பு இருக்கிறது என்று எண்ணுவதை விட மாபெரும் குற்றம் வேறு ஒன்று இருக்க முடியுமா? அல்லாஹ் ஜுமர் 39:53-ல் என்ன கூறுகிறான் என்று பாருங்கள்.

என் அடியார்களே! எவரும் வரம்பு மீறி தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய அருளில் அவர் நம்பிக்கை இழக்க வேண்டாம்; நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன் என்று நீர் கூறுவீராக. (39:53)

மேலும் ஃகாஃப் 50:16 என்ன கூறுகிறது என்று பாருங்கள். மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும் (அவன்) பிடரி நரம்பை விட நாம் அவனுக்ககு சமீபமாகவே இருக்கிறோம். (50:16)

பெற்ற தாய் தனது குழந்தையிடம் அன்பு செலுத்துவதை விட பல மடங்கு அல்லாஹ் தான் படைத்த மனிதனிடம் அதிகம் அன்பு காட்டுகிறவனாக இருக்கிறான். அந்த அன்புக்கு ஈடாக வேறு எவருடைய அன்பும் இருக்க முடியாது.

தொழுகையின் ஒவ்வொரு ரகாஅத்திலும் உன்னிடமே உதவி தேடுகிறோம் என்று உறுதி அளிக்கிறோம்.

இது அல்லாமல் அல்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் “எனக்கே அடிபணியுங்கள். என்னிடமே கேளுங்கள்” என்று கூறுகிறான். இந்த அளவு தெள்ளத் தெளிவாக நெற்றிப் பொட்டில் அடிப்பது போல், தனக்கும் அடியானுக்கும் இடையில் எந்தப் பரிந்துரையாளரோ, இடைத்தரகரோ இல்லாமல், உங்கள் தேவைகளை நேரடியாக என்னிடமே கேளுங்கள் என்று
அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ் அல்ஃபுர்கான் 25:30-ல் கூறி இருப்பதுபோல் இந்த குர்ஆனின் இந்த அனைத்து உபதேசங்களையும் புறக்கணித்து விட்டு பொருட்டு என்ற பெயரால் இடைத்தரகர்களை அழைப்பவர்கள் யாராக இருக்க முடியும்? அப்படிப்பட்டவர்களின் முடிவு? அதையும் அல்லாஹ் 25:27,28,29-ல் நேரடியாகக் கூறி எச்சரித்துள்ளான். அவை வருமாறு.

“அந்நாளில் அநியாயக்காரன் தன்னிருகைகளையும் கடித்துக் கொண்டு “அத்தூதருடன் நானும் (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா? எனக் கூறுவான்” (25:27)

“எனக்கு வந்த கேடே! (என்னை வழி கெடுத்) ஒருவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாதிருக்க வேண்டாமா?” (25:28)

“நிச்சயமாக, என்னிடம் நல்லுபதேசம் (குர்ஆன்) வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழி கெடுத்தானே! மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான்” (என்று புலம்புவான்) (25:29)

என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கி விட்டார்கள்” என்று (நம்) தூதர் கூறுவார். (25:30)

இவ்வளவு தெள்ளத் தெளிவாக அல்லாஹ் அல்குர்ஆனில் நேரடியாக எச்சரித்திருந்தும், இவை அனைத்தையும் புறக்கணித்து விட்டு மவ்லவிகளின் தப்பான சுய விளக்கங்களைக் கேட்டு அதன்படி நடப்பவர்களை நாளை மறுமையில் போய்ச் சேரும் இடம் எதுவோ?
ஆக அல்லாஹ்வைவிட அவுலியாக்கள் தான் மனிதர்களிடம் அதிக அன்பு, கருணை காட்டுகிறவர்கள் என்று முஸ்லிம்களை நம்பச் செய்து அவுலியாக்கள் பரிந்துரையாளர்களாக ஆக்குகிறவர்கள் - பொருட்டால் கேட்பவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பது புரிகிறதா?
இந்தப் புரோகிதர்கள் தங்களின் தொழிலை தக்க வைத்துக் கொள்ள இன்னொரு தந்திரத்தையும் கையாள்கிறார்கள். அல்லாஹ் மார்க்கக் கடமைகளை மிகமிக எளிதாக, சுமையற்றதாக ஆக்கி இருப்பதாக குர்ஆனில் பல இடங்களில் கூறி இருக்கிறான். (பார்க்க 2:159, 4:28, 16:89, 19:97, 22:78, 25:33, 44:58, 54: 17,22,32,40, 80: 20) இப்படித் தெள்ளத் தெளிவாக எளிதாக்கப்பட்ட மார்க்கக் கடமைகளை, பிக்ஹின் பெயரால் மிகவும் கடினமாக ஆக்கி இருக்கிறார்கள். எனவே பெரும்பாலான முஸ்லிம்கள் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற கடமைகள் நிறைவேற்றுவதற்குக் கடினமானவை என நினைத்துக் கொண்டு அவற்றை விடடு விரண்டோடுகின்றனர். அதன் காரணமாக அவர்கள் தாங்கள் பெரும்பாவிகளாக இருப்பதாக தாழ்வு மனப்பான்மை கொள்கின்றனர். அல்லாஹ் தங்கள் பாவங்களை மன்னிக்க மாட்டான் என நினைக்கின்றனர். உலகில் குற்றங்கள் செய்பவர்கள் குறுக்கு வழியில் அக்குற்றங்களிலிருந்து விடுபட முயல்வது போல், இந்த முஸ்லிம்களும் குறுக்கு வழியில் இந்தப் புரோகித மவ்லவிகளிடம் போய் தஞ்சமடைகின்றனர். அவர்கள் இவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி, “பொருட்டால்” என்ற பெயரால் இடைத்தரகர்களைப் புகுந்து கொண்டு அவர்களிடம் தவறான வழிகளில் கொள்ளையடிப்பதோடு, அவர்களை நரகில் தள்ளுகின்றனர்.

நபிமார்களை, நாதாக்களை, அவுலியாக்களை பொருட்டாகக் கொண்டு கேட்பதற்கு, பிரதம மந்திரி, முதன்மந்திரி போன்ற மனிதர்களை அல்லாஹ்வோடு ஒப்பிட்டு உதாரணம் கூறுவதன் மூலம் அல்லாஹ்மீது இன்னொரு மாபெரும் பழியையும் சுமத்துகிறார்கள். அது வருமாறு:
பிரதம மந்திரியாகட்டும், முதன் மந்திரியாகட்டும் அவர்களும் மனிதன் என்ற நிலையில் தேவை உடையவர்கள் என்பதில் சிறிது சந்தேகமில்லை. அவர்கள் மந்திரி, எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி., போன்றோரின் பரிந்துரையை ஏற்று அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுகிறார்கள். அந்த கோரிக்கைகளில் அவர்களுக்கு முழுமையான உடன்பாடு இல்லை என்றாலும் அவற்றை நிறைவேற்றிக் கொடுக்கும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். காரணம் இந்த மந்திரி, எம்.பி., எம்.எல்.ஏ., எம். எல். சி., போன்றோரின் தயவு இல்லாமல் இவர்கள் அந்த பிரதம மந்திரி, முதன் மந்திரி பதவிகளில் நிலைத்து இருக்க முடியாது. அவர்களின் தயவு - உதவி அவசியம் இவர்களுக்கு இன்றியமையாததாக இருக்கிறது; எனவே பரிந்துரையை ஏற்கிறார்கள்.
இதுபோல் அதிகாரிகளுக்கு பணம், மனைவிமார்களின் தேவை இருப்பதால் அந்த மனைவிமார்களின் பரிந்துரையை ஏற்கும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதுபோல் அல்லாஹ்வுக்கு நபிமார்களின், நாதாக்களின், அவுலியாக்களின் தயவு - உதவி தேவை என இந்த முகல்லிது மவ்லவிகள் நம்புகிறார்களா? அப்படி நம்பினால் அவர்கள் ஈமான்-நம்பிக்கை உடையவர்களாக இருக்க முடியுமா? அவர்கள் இறைநேசர்களா? அல்லது இறைவனுக்குப் பகைவர்களா? சொல்லுங்கள்!

அல்லாஹ் எவ்வித தேவையுமற்றவன் என்று அல்குர்ஆனின் எத்தனை இடங்களில் அடித்துக் கூறுகிறான். எவரது பரிந்துரைக்கும் கட்டுப்பட்டவன் இல்லை அல்லாஹ் என்று அல்குர்ஆன் தெளிவாகக் கூறவில்லையா? (பார்க்க. பகரா 2:255, இக்லாஸ் 112:2) இந்த நிலையில் அல்லாஹ் நபிமார்களின், நாதாக்களின், அவுலியாக்களின் பரிந்துரைகளை எதிர்பாக்கிறான் என்று இந்த முகல்லிது தர்கா, தரீக்கா, தப்லீஃக், தேவ்பந்த் மவ்லவிகள் கூறுகிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பெரிய வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பது புரிகிறதா?

இந்தப் பொருட்டால் என்பது எவ்வளவு பெரிய குற்றம், இறைவனை இழிவுபடுத்தும் (நவூதுபில்லாஹ்) ஷிர்க்கான குற்றம் என்பதை உரிய அல்குர்ஆன் எச்சரிக்கைகளைக் கொண்டு தெளிவுபடுத்திய பின்னராவது, தவ்பா செய்துவிட்டு இந்தப் புரோகிதர்கள் மீள்வார்கள் என நினைக்கிறீர்களா? அது ஒரு போதும் நடக்காது. காரணம் அதைவிட்டு மீண்டுவிட்டால் அவர்களின் பிழைப்பு என்னாவது? வாழ்க்கைக்கு வேறு வழி என்ன? எனவே வேறு வாழ்வு ஆதாரம் கிடைக்காத நிலையில் அந்தப் புரோகிதத் தொழிலை விட்டு வெளியேறும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லவே இல்லை.

எனவே முஸ்லிம் பொது மக்கள்தான் சிந்தித்துச் சுதாரிக்க வேண்டும். தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசை இவர்களிடம் தாரை வார்த்துவிட்டு, அதல்லாமல் பெரும் பாவத்தையும் சுமந்து கொண்டு நரகம் புக வேண்டுமா? இது முஸ்லிம்களுக்குத் தேவையா? என சிந்தித்து விளங்கி அல்குர்ஆனின் மேலே எடுத்து எழுதியுள்ள படித்துணர்ந்து இந்த “பொருட்டால்” என்ற புருடாவை விட்டு தெளபா செய்து மீள வேண்டும். அல்லாஹ் அருள்புரிவானக.