May 12, 2009

நபி(ஸல்) அவர்களின் மீது உள்ள அன்பின் காரணமாக மவ்லூது ஓதாவிட்டாலும் குர்ஆன் ஷரீப் ஓதி ஹதியா செய்து விருந்து கொடுக்கலாமா?

மெளலூது தவறெனில் குர்ஆன் ஓதி ஹதியா செய்வதின் மூலம் அன்பை காட்டலாமா? எனக் கேட்கிறீர்கள். நபி(ஸல்) அவர்கள் மீது அளவு கடந்த அன்பைக் காட்ட அவர்கள் காட்டித் தந்த வழிமுறைதான் நல்லது. தனக்கு குர்ஆன் ஓதி ஹதியா செய்யும்படி அவர்கள் நமக்கு ஏவவில்லை.
நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப்பின் எந்த நபித்தோழரும் குர்ஆன் ஓதி அவர்கள் ஹதியா செய்ததாக ஆதாரமும் அறவேயில்லை. ஆனால் நாம் குர்ஆன் ஓதினால் நாம் ஹதியா செய்யாமலே நமக்குறிய நன்மைகள் குறைக்கபடாமல் நபி(ஸல்) அவர்களுக்கும் நன்மை சென்றடைகிறது.

நபி(ஸல்) அவர்கள் மூலம் நாம் குர்ஆனைப் பெற்றோம். அவர்கள் மூலம் நேர்வழியான இஸ்லாத்தை பெற்றோம். எனவே எந்த ஒரு நன்மையான செயலை வாழையடி வாழையாக செய்ய வைத்தார்களோ, அவர்களுக்கு அந்த நன்மையின் பங்கு சேர்ந்து கொண்டேயிருக்கும். எனவே நாம் குர்ஆன் ஓதினால் அதை ஹதியா செய்யாமலேயே அவர்களுக்கு நன்மை கிட்டும்.

நிச்சயமாக அல்லாஹ்வும், அவனது வானவர்களும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கிறார்கள். (எனவே) விசுவாசிகளே! நீங்களும் அவர்மீது ஸலவாத்துச் சொல்லி சலாமும் பகருங்கள். (அல்குர்ஆன் 33:56)

இந்த வசனத்தில் விசுவாசிகளை அழைத்து நபியின் மீது ஸலவாத்து சொல்ல ஆணையிடுகிறான். நபியின் மீது அதிகமாக ஸலவாத்து சொல்லுவது அவர்மீதுள்ள அளவு கடந்த அன்பை வெளிப்படுத்தும் செயலாகும். நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்தபடிதான் செயல்பட வேண்டும்.

அவர்கள் விலக்கியதை நாமும் விலக்க வேண்டும். இப்படி இஸ்லாத்தின் ஏவல் விலக்கின்படி நிறைவேற்றுவதுதான் நபி(ஸல்) அவர்கள் மீது நாம் காட்டும் அளவற்ற அன்பு ஆகும்.எவ்வித சடங்குகளுமின்றி ஏழை எளியவருக்கு உணவளிப்பதை இஸ்லாம் வரவேற்கிறது. அல்லாஹ் மிக அறிந்தவன்.

No comments:

Post a Comment