May 29, 2009

பட்டதாரிகள் முதல் பாமரர்கள் வரை

மனிதரில் எவரும் தன்னை அறிவற்றவர் என்று ஒப்புக் கொள்வதில்லை. அறிவு வளர வளரத்தான் தன்னுள் எந்த அளவு அறியாமை குடி கொண்டுள்ளது என்பது புலப்படும். விண்ணையும் மண்ணையும் தன்னையும் படைத்து போஷித்துப் பரிபாலித்து வரும் இணை துணையற்ற ஒரே ஒரு இறைவன் இருக்கிறான் என்பதை பகுத்தறிய முடியாதவர்கள் தங்களை அறிவு ஜீவிகள் என்று அலட்டிக் கொள்வதில் அர்த்தமில்லை. அதே போல் அந்த இறைவனை ஒப்புக்கொண்ட பின்னர் அவனது தனித்தன்மைகளை, தெய்வாம்சங்களை இறந்து போன மனிதப் புனிதர்களுக்கும் மற்றும் படைப்பினங்களுக்கும் கொடுத்து மரியாதை செய்பவர்களும் அறிவாளிகளாக இருக்க முடியாது.


இறைத்தன்மைகளை இறைவனது படைப்பினக்களுக்குக் கொடுத்து மரியாதை செய்வது, ஒரு மனைவி தனது கணவனது ஸ்தானத்தில் மற்றொரு ஆடவனை வைத்து மதித்து நடந்தால் அவளது கணவன் அவள் மீது எந்த அளவு ஆத்திரப்படுவானோ அவளை மன்னிக்க மாட்டானோ அதைப்போல் பல ஆயிரம் மடங்கு இறைவன் கோபப்படுகிறான். அப்படிப்பட்டவர்களை மன்னிக்கவே மாட்டான் என்பதை சாதாரண அறிவு படைத்தவர்களும் விளங்க முடியும். ஆனாலும் ஷைத்தானின் பிடியில் சிக்கி இப்படிப்பட்ட காரியங்களில் மூழ்கி இருப்பவர்களே இவ்வுலகில் பெரும்பான்மையினராகக் காணப்படுகின்றனர். அவர்களே தங்களைப் பெரும் அறிவு ஜீவிகளாக எண்ணிக் கொள்கின்றனர்.


இந்த அறியாமை அறிவாளிகளிடமும் புறையோடிப் போயிருப்பதுதான் வேதனையான விஷயம். தெள்ளத் தெளிவான அல்குர்ஆனையும், இரவுப் பகலைப் போன்று வெளிச்சமுடைய நபி (ஸல்) அவர்களின் நடைமுறைகளையும் கொண்டுள்ள முஸ்லிம்களில் பெருந்தொகையினர் இறந்து போனவர்களை அடக்கம் செய்து கபுருகளைக் கட்டிக்கொண்டு ஊரெல்லாம் உண்டாக்கிக் கொண்டு 18:102 இறைவாக்கிற்கு முரணாக இறை அடியார்களை தங்கள் பாதுகாவலர்களாக்கி அவர்களிடம் போய் பரிந்துரைக்காக முறையிடும் அவலத்தைப் பார்க்கிறோம்.

அத்தியாயம் 18:102 லிருந்து 106 வரையிலுள்ள இறைவாக்குகளை உற்று நோட்டமிட்டால், அல்லாஹ் மன்னிக்காத மாபெரும் இணைவைக்கும் குற்றத்தை அவர்கள் செய்து வருவது புலப்படும். ஆயினும் அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள முல்லாக்களின் தவறான வழிகாட்டலில் இந்த வசனங்கள் காஃபிர்களுக்கு இறங்கியது என்று கூறுகிறார்கள். முஸ்லிம் என்று தன்னைக் கூறிக்கொண்ட நபி இபுறாஹீம் (அலை) அவர்களின் நேரடி வாரிசுகளான மக்கத்து குறைஷ்கள் இறைவனது அவுலியாக்களைத் தங்களின் பாதுகாவலர்களாக, அதாவது தங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரைப்பவர்களாக (பார்க்க 10:18) அல்லாஹ்வை நெருங்கச் செய்பவர்களாக (பார்க்க 39:3) எடுத்துக்கொண்ட காரணத்தால் அவர்கள் ஒரு நபியுடைய சந்ததிகளாக இருந்தும் காஃபிர்களாக ஆனார்கள் என்ற உண்மையை அறியத் தவறி விடுகிறார்கள். இவர்களும் தங்களை அறிவு ஜீவிகள் என்றே இறுமாந்திருக்கிறார்கள்.


இந்த அறியாமையிலிருந்து விடுபட்டுள்ள முஸ்லிம்களில் பலர் மத்ஹபு மயக்கத்திலும் தரீக்கா மோகத்திலும் மூழ்கி இருக்கிறார்கள். இவையும் அல்லாஹ்வின் தனித்தன்மைக்கும் அவனது நேரடி கட்டளைக்கும் மாறு செய்வதே (பார்க்க 2:170, 7:3, 33:36,66,67,68) என்பதை உணர முடியாதவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். இவர்களும் தங்களை அறிவு ஜீவிகள் என்றே கூறிக்கொள்கிறார்கள்.


இவற்றை விட்டு விடுபட்டவர்களில் பலர் குர்ஆன், ஹதீஸ் படி நடக்கிறோம் என்று பல பிரிவுகளாகவும் பல இயக்கங்களாகவும் பிரிந்து செயல்படுகிறார்கள். மேலும் பலர் குர்ஆன் ஹதீஸ் பார்த்து விளங்குகிறவர்கள் தவ்ஹீத் ஆலிம் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும், என்னதான் நாம் விளங்கினாலும் அரபி படித்த மவ்லவியை சார்ந்திருப்பதே மேலானது, சாலச் சிறந்தது என்ற மயக்கத்திலேயே இருக்கின்றனர் படித்த பட்டதாரிகளிலிருந்து பாமரகள் வரை.


இப்படி ஒவ்வொருவரும் தாங்கள் தான் அறிவாளிகள் என்ற மெலெண்ணத்தில் அறியாமையிலும், வழிகேட்டிலும் மேலும் மேலும் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். இந்த ஷைத்தானின் சூழ்ச்சிகள் அனைத்தையும் விட்டு விடுபட்டு தூய்மையான எண்ணத்தோடு சமுதாய மறுமலர்ச்சி ஏற்படவேண்டும் என்ற ஆர்வ துடிப்பு மிக்கவர்கள் சத்தியத்தை தெளிவாக உணர்ந்தாலும், அந்த சத்தியம் மக்கள் மன்றத்தில் எடுபடாத காரணத்தால் மனம் குன்றி எதிர் நீச்சல் போடுவதில் சோர்வடைந்து மக்கள் மனப்பான்மைக்கு ஏற்றவாறு சிறிதாவது வளைந்து கொடுத்தால் தான் பிரச்சார பணி புரிய முடியும் என்று எண்ணுகின்றனர்.


தன்னைப் படைத்த இறைவனைத் தனது எஜமானனாக ஏற்று அவனது கட்டளைகளை அப்படியே ஏற்று 33:36 இறைவாக்கில் சொல்லியிருப்பது போல் அதிலிருந்து அனுவத்தனையும் பிசகாது அப்படியே குர்ஆன், ஆதாரப்பூர்வமான ஹதீஸ் வழியொட்டி நடப்பவனே உண்மையான அறிவு ஜீவியாகும்

No comments:

Post a Comment