May 12, 2009

ஜியாரத் நபி(ஸல்) அவர்களின் சுன்னத் என்கிறார்கள். தர்காக்களுக்கு 'ஜியாரத்' செல்வது கூடாது என்கிறார்கள். இது முன்னுக்கு பின் முரணாக இருக்கிறதே?

இதனை மேலோட்டமாக பார்க்கும்போது முரணாகத் தெரியும். சிந்தித்து விளங்கிக் கொண்டால் முரண்பாடு தீர்ந்துவிடும். நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த 'ஜியாரத்' நல்லவர்கள், கெட்டவர்கள் என்ற பாகுபாடின்றி இறந்தவர்களை அடக்கம் செய்யப்பட்டிருக்கும் பொது கபுரஸ்தான்களுக்கு சென்று அதன் மூலம் நாமும் மரணிப்பவர்களே என்ற எண்ணத்தையும், மறுமையின் சிந்தனையுயும் உண்டாக்கிக் கொள்வதாகும். நபி(ஸல்) அவர்கள் ஜியாரத்தில் ஓதக் கற்றுத் தந்த துஆவும் இதனையே உறுதி செய்கின்றது.

ஆனால் தர்காக்களுக்கு 'ஜியாரத்' செல்பவர்கள் அந்த நோக்கத்தோடு செல்வதில்லை. அங்கு அடக்கமாகி இருக்கும் அவ்லியாவிடம், அல்லாஹ்விடம் கேட்கவேண்டியதை அல்லாஹ்வின் அடியாரான அவ்லியாவிடம் தங்களின் தேவைகளை கேட்கிறார்கள். அவர்களிடம் முறையிடுகிறார்கள். அல்லாஹ்விடம் தங்களுக்காக பரிந்துரை செய்யும்படி சொல்லுவதற்காகவும் செல்கிறார்கள். (அவர்கள் செவியுற மாட்டர்கள் என்பது தனி விஷயம்) இன்னும் அனேக மூட காரியங்களை ஜியாரத் என்ற பெயரில் அரங்கேற்றுகிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறிச் சென்றது பொது கபுரஸ்தான்களுக்குத்தான் 'ஜியாரத்' செய்யும்படி கூறினார்கள். நீங்கள் நினைப்பது போல் இரண்டும் ஒன்றல்ல. ஆகவே பொது கபுரஸ்தானுக்கு செல்வதை ஸுன்னத் என்றும், தர்காக்களுக்குச் செல்வதை ஆகாது என்றும் கூறுகிறோம். அல்லாஹ் மிக அறிந்தவன்.

No comments:

Post a Comment