July 10, 2009

துவாவுடைய ஒழுக்கங்கள்

1.அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதற்குமுன்
1. பிரார்த்தனை செய்வதற்கு முன் அல்லாஹ்ப் போற்றிப் புகழவேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறவேண்டும். அது ஏனெனில், நிச்சயமாக நீர் அல்லாஹ்விடம் அவனுடைய அருட்கொடைகளை, கருணைகளை, பாவமன்னிப்பை கேட்கப்போகிறீர். எனவே, அல்லாஹ்வுடைய தகுதிக்கேற்றவாறு எதிலே புகழ்வார்த்தையும், மேன்மைப்படுத்திப் பேசுதலும் இருக்குமோ அத்தகைய ஒரு முன்னுரையை நீர் முதலில் அவனுக்காக முற்படுத்துவதே இவ்விடத்தில் பொருத்தமான ஒரு செயலாக இருக்கும்.

இதற்குச் சான்றாக பின்வரும் நபிமொழியைப் பாருங்கள்!

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்ந்திருந்தபோது, ஓர் ஆடவர் அந்நேரம் வந்தார். தொழுது முடித்தார். பின்னர், யாஅல்லாஹ்! எனக்கு நீ பாவம் பொருத்தருள்வாயாக! எனக்கு நீ அருள் செய்திடுவாயாக! என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தொழுது முடித்தவரே! நீர் அவசரப்பட்டுவிட்டீர்! நீர் தொழுது முடித்தால் அல்லாஹ் அவனுக்குத் தகுந்தவைகளைக் கொண்டு புகழ்வீராக! பின்னர் என்மீது ஸலவாத்துக் கூறுவீராக! பின்னர் அவனிடம் பிரார்த்திப்பீராக!

அறிவிப்பாளர் கூறுகிறார்:

பின்னர் அவரை அடுத்து ஒரு ஆடவர் தொழுது முடித்தார். அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்தைக் கூறினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவரிடம், தொழுது முடித்தவரே! துஆச் செய்வீராக! (ஒரு சமயம் உம்முடைய துஆ அங்கீகரிக்கப்பட்டு) நீர் பதிலளிக்கப்படலாம் என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: ஃபுளாலத் பின் உபைத் ரளியல்லா அன்ஹு, நூல்: திர்மிதீ

2. அல்லாஹ்ப்பற்றி நல்லெண்ணம் கொள்ளுதல்

உயர்வானவனாகிய அல்லாஹ்,
(البقرة ) وَإِذا سَأَلَكَ عِبَادِيْ عَنِّي فَإِنِّيْ قَرِيْبٌ أُجِيْبُ دّعْوَةَ الدَّاعِى إِذَا دَعَانِ

மேலும் , (நபியே!) என்னுடைய அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால், நிச்சயமாக நான் சமீபத்தில் இருக்கிறேன் (என கூறுவீராக!). அழைப்பாளனின் அழைப்பிற்கு அவன் என்னை அழைக்கும்போது நான் பதிலளிக்கிறேன் என்று கூறினான். (அல்பகறா:186)

எனவே, அல்லாஹ் நம்மிலிருந்து மிகச் சமீபமாக இருக்கிறான். அவனுடைய அறிவு, எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் அவன் சூழ்ந்து அறிதல், அவனுடைய பாதுகாப்பு ஆகியவற்றால் அவன் நம்மோடு இருக்கிறான் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கவேண்டும்

திட்டமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், துஆவை ஏற்றுக்கொள்ளுதல் என்ற விஷயத்தை அல்லாஹ்விடம் நாம் ஒப்படைத்து விடவேண்டும் எனவும், நாம் துஆச் செய்து கேட்ட நம்முடைய எண்ணம் நிறைவேறும் என்பதில் நாம் உறுதியாக இருக்கவேண்டும் எனவும் நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.

அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

(உங்களுடைய பிரார்த்தனை அல்லாஹ்வால்) ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை உறுதி கொண்டவர்களாக அல்லாஹ் அழைத்துப் பிரார்த்தனை புரியுங்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ

நிச்சயமாக அல்லாஹ், அவனுடைய விசாலமான தயாளத்தனத்தாலும், பேருபகாரத்தின் சிறப்பாலும் உங்களை எப்போது பிரார்த்தனைச் செய்பவரிடமிருந்து பேராதரவும் பிரார்த்தனையில் தூய்மையான எண்ணமும் ஏற்பட்டுவிடுமோ வெறுங்கையோடு திருப்பமாட்டான் என்பதை உறுதியாக நம்பிக்கைக் கொள்ளுங்கள். ஏனெனில், பிரார்த்தனை புரிபவர் (அல்லாஹ் நமது துஆவை ஏற்பான் என்ற) அவருடைய பேராதரவில் உறுதிகொண்டவராக இல்லையென்றால் அவருடைய துஆவும் தூய்மையானதாக அமையாது.

3. நமது பாவங்களை ஒப்புவித்தல்

இந்தச் செயலே அல்லாஹ்வுக்குரிய நமது அடிமைத்தனத்தை நிரூபணம் செய்வதில் முழுமையானதாகும்.
அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் உன்னையன்றி வேறு (யாரும், எதுவும்) இல்லை. நிச்சயமாக நான் எனக்கே அநீதி இழைத்துவிட்டேன். எனவே, என் பாவங்களை எனக்கு நீ பொருத்தருள்வாயாக! என்று ஒரு அடியான் கூறும்போது, அவனைப்பற்றி பெருமிதங்கொள்கிறான். என்னுடைய அடியான் நிச்சயமாக அவனுக்கு ஒரு இரட்சகன் இருக்கிறான், அவன்தான் பாவங்களை பொருத்தருள்வான். (பாவிகளுக்கு) தண்டனை வழங்கிடுவான் என்பதை அறிந்து கொண்டான் என்று (அல்லாஹ் வாகிய) அவன் கூறுகிறான். அறிவிப்பாளர்: அலீ பின் அபீதாலிப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்:ஹாகிம்

4. கேட்பதில் உறுதி

உங்களில் ஒருவர் பிரார்த்தனைச் செய்யும்போது கேட்பதை உறுதியாகக் கேட்கட்டும். யாஅல்லாஹ்! நீ நாடினால் கொடு என திண்ணமாக அவர் சொல்லவேண்டாம். ஏனெனில், அவனை நிர்ப்பந்திக்கச் செய்பவர் யாரும் இல்லை என அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்:புகாரீ, முஸ்லிம்

கேட்பதில் உறுதி என்பதன் நோக்கமாவது, தேடிப் பெறுவதில் நிரந்தரமாக நிலைத்து சளைக்காமல் பிடிவாதமாக மன்றாடிக் கேட்பது, அல்லாஹ்விடம் மிகக் கடுமையாக தெண்டித்துக் கேட்குதலைக் குறிப்பதாகும்.

5. பிரார்த்தனையில் கடுமை

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்குரிய ஒரு போர்வை திருடப்பட்டுவிட்டது. அதைத் திருடியவருக்கெதிராக துஆச் செய்பவர்களாக இருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், (திருடியதால் அவருக்குண்டான பாவத்தை அவருக்குக் கேட்பதில்) அவர் விஷயத்தில் மென்மையைக் கையாளவேண்டாம் என்று கூறினார்கள். (நூல்:அபூதாவூது)

6. ஒன்றை மூன்று முறை கேட்டு துஆச் செய்தல்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தமது தொழுகையை முடித்துக் கொண்ட போது, தனது தொணியை உயர்த்தி பின்னர் (பகைவர்களான) அவர்களுக்குக் கேடாக பிரார்த் தனை செய்தார்கள். அவர்கள் எதையும் பிரார்த்தனைச் செய்பவர்களாக இருந்தால் மூன்று முறை துஆச் செய்வார்கள். யாஅல்லாஹ்! குரைஷியரை நீ பிடித்துக்கொள்! யாஅல்லாஹ்! குரைஷியரை நீ பிடித்துக்கொள்! யாஅல்லாஹ்! குரைஷியரை நீ பிடித்துக்கொள்! என பின்னர் கூறினார்கள் என்று இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடைய அறிவிப்பில் முஸ்லிமில் வந்துள்ள நீளமான ஹதீஸில் நபிவழியில் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

7. 'ஜவாமிஉ' (சுருக்கமான வார்த்தையில் விசாலமான அர்த்தங்களைக் கொண்டுள்ள) துஆக்களைக் கூறி பிரார்த்தனைப் புரிதல்

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆக்களில் நிறைய பொருளை தரும் சுருக்கமான வார்த்தைகளை விரும்புபவர்களாகவும் அதுவல்லாத வார்த்தைகளை கூறாது விட்டு விடுபவர்களாகவும் இருந்தனர். நூல்: ஸன்னன் அபீதாவூது, அஹ்மது

இதுமாதிரியான பிரார்த்தனைகளில் உள்ளதே ஃபர்வா பின் நவ்ஃபல் அவர்கள் அறிவிப்பில் வந்துள்ள ஒன்று.

நான் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதைக்கொண்டு துஆச் செய்பவர்களாக இருந்தார்களோ அப்படியான ஒரு துஆவைப்பற்றி நான் கேட்டேன்.

اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا عمِلْتُ وَشَرِّ مَالَمْ أَعْمَلْ

அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக மின் ஷர்ரி மா அமில்த்து, வ ஷர்ரி மாலம் அஃமல் என்று துஆச்செய்பவர்களாக இருந்தார்கள் என்று கூறினார்கள். (பொருள்: யாஅல்லாஹ்! நான் செய்து விட்டவற்றின் தீங்கிலிருந்தும் மற்றும் நான் செய் யாதவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் காவல் தேடுகிறேன்) நூல்: முஸ்லிம், அபூதாவூது


اَللَّهُمَّ اغْفِرْ لِيْ خَطِيئَتِيْ وَجَهْلِيْ وَإِسْرَافِيْ فِي أِمْرِيْ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ اَللَّهُمَّ اغْفِرْ لِيْ جِدِّيْ وَهَزْلِيْ وَخَطَئِيْ وَعَمْدِيْ وَكُلُّ ذَلِكَ عِنْدِيْ ، اَللَّهُمَّ اغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ وَ أَنْتَ عَلى كُلِّ شَيئٍ قَدِيْرٌ
அல்லாஹும்மக் ஃபிர்லீ கதீஅதீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபீ ஃபீ அம்ரீ, வமா அன்த்த அஃலமு பி?ி மின்னீ, அல்லாஹும்மக் ஃபிர்லீ ஜித்தீ வ?ஜ்லீ, வ கதஈ, வ அம்தீ, வ குல்லு தாலிக இன்தீ, அல்லாஹும்மக் ஃபிர்லீ மா கத்தம்த்து, வமா அக்கர்த்து, வமா அஸ்ரர்த்து, வமா அஃலன்த்து, வமா அன்த்த அஃலமு பிஹி மின்னீ அன்த்தல் முகத்திமு, வஅன்த்தல் முஅக்கிரு, வ அன்த்த அலா குல்லி ஷையின் கதீர் என இந்த துஆவைக் கூறி பிரார்த்தனை புரிபவர்களாக நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்தார்கள் என அபூமூஸப் அல் அஷ்அரீ - ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்லிம்

(பொருள்: யாஅல்லாஹ்! என்னுடைய தவறை, எனது அறியாமையை, எனது காரியத்தில் வீண்விரயத்தை, என்னைவிட நீ அறிந்திருக்கும் ஒன்றை எனக்கு நீ பொருத்தருள்வாயாக!

யாஅல்லாஹ்! என்னுடைய முயற்சி(யால் ஏற்பட்டதை), என்னுடைய சோர்வு, என்னுடைய தவறு, வேண்டுமென்றே தெரிந்து என்னால் செய்யப்பட்டது, என்னிடமுள்ள அவை ஒவ்வொன் றையும் நீ எனக்கு பொருத்தருள்வாயாக!

யாஅல்லாஹ்! நான் முற்படுத்தியவற்றை, நான் பிற்படுத்தியவற்றை, நான் மறைத்தவற்றை, நான் பகிரங்கப்படுத்தியவற்றை, நான் விரயம் செய்தவற்றை, என்னை விட நீ எதை மிக அறிந்திருக்கின் றாயோ அந்த ஒன்றை நீ எனக்கு பொருத்தருள்வாயாக! நீதான் (நன்மைகளைச் செய்ய) முற்படுத்தி வைப்பவன், நீயே (தீயவற்றைச் செய்யாது காத்து) பிற்படுத்திவைப்பவன், நீயே ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுள்ளவன்.)

8. பிரார்த்தனை புரிபவர் தனக்காக முதலில் கேட்பார்
உயர்வானவனின் கூற்றில் வந்துள்ளவற்றைப் போன்று
:-رَبَّـنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُونَا
بِالْإِيْمَانِ

எங்களுடைய இரட்சகனே! எங்களுக்கும், ஈமான் கொண்டு எங்களை முந்திவிட்டார்களே அத்தகையோரான எங்களுடைய சகோதரர்களுக்கும் நீ பொருத்தருள்வாயாக! அல்ஹஷ்ரு: 10

இன்னும் அவனுடைய கூற்று:
-قَالَ رَبِّ اغْفِرْ لِيْ وَلِأَخِيْ وَأَدْخِلْنَا فِيْ رَحْمَتِكَ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِيْنَ

எனது இரட்சகா! எனக்கும் என்னுடைய சகோதரருக்கும் நீ பொருத்தருள்வாயாக! மேலும், எங்களை உன்னுடைய ரஹ்மத்தில் நுழைவிக்கச் செய்திடுவாயாக! என்று (நபி மூஸப்) அவர்கள் கூறினார்கள். அல் அஃராஃப்:151

இன்னும், அவனுடைய கூற்று:

- رَبَّنَا اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ

எங்கள் இரட்சகா! எனக்கும், என்னுடைய பெற்றோர்களுக்கும், விசுவாசிகளுக்கும் கேள்வி கணக்கு நிலைபெறும் நாளில் பொருத்தருள்வாயாக! இப்றாஹீீம்:41

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யாரை யாவது நினைவுகூர்ந்து, அவருக்காக பிரார்த்தனை புரிவார்களானால் தனக்காக அதை முதலில் கேட்டு ஆரம்பிப்பார்கள். (திர்மிதீ)

எனினும், இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கட்டாயமான வழக்கமாக இருந்ததில்லை. ஏனெனில், சில சமயங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடுத்தவருக்கு துஆச் செய்து கேட்டதை தனக்கு கேட்காமல் துஆச் செய்திருப்பதும் சரியான வழியில் வந்துள்ளது (நபி இப்றாஹீீம் அவர்களின் துணைவியர்) ஹாஜர் விஷயத்தில், 'இஸ்மாயீலின் தாயாருக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக! ஜம்ஜம் (நில்நில்)என்று சொல்வதை விட்டிருப்பார்களானால் (ஜம்ஜம் ஊற்றான) அது பெருக்கெடுத்து ஓடிவிடும் ஒரு பெரும் ஊற்றாக ஆகியிருக்கும் என்று கூறியது போன்று!

9. துஆச் செய்ய விரும்பத்தக்க நேரங்களில் துஆச் செய்ய முயற்சிப்பது
அவ்வாறான நேரங்களில் உள்ளதே நடு இரவு, பாங்கு மற்றும் இகாமத்துக்கு இடையேயான நேரம், ஸஜ்தாவில், (போருக்கு) அழைக்குமிடத்தில், போர் சமயத்தில், ஜும்ஆ தினத்தின் அசருக்குப்பின், அரஃபா நாள், மழை பொழியும் நேரம், ரமளானின் கடைசி பத்து நாட்கள்.

No comments:

Post a Comment