January 29, 2010

இறைவனுக்குமா இடைத்தரகர்

முஸ்லிம்களில் இன்று பலர் தர்ஹாவிற்கு சென்று அங்கு இறந்து போன அவ்லியாக்களிடம் நேரடியாக தங்களுடைய தேவையை கேட்பதும், நேர்ச்சைகள் செய்வதும் அவர்களுக்காக விழா எடுப்பதும் அதற்கு ஆலிம்கள் எனப்படுவோர் இணைவைக்கும் இச்செயலை கண்டிக்காமல் அதனைக் கண்டும் காணாதது போல் இருப்பதும் மிக வேதனையானது.

நபி (ஸல்) கூறினார்கள்,"யஹுதிகளையும், நஸாராக்களையும் அல்லாஹ் சபித்துள்ளான். அவர்கள் தங்களது நபிமார்களுடைய கபுருகளை வணக்கஸ்தலமாக்கி விட்டனர்." (புகாரி) நபிமார்களுடைய சமாதிகளையும், வலிமார்களுடைய சமாதிகளையும் கெளரவிக்கும் விஷயத்தில் எல்லை மீறி அவர்களிடம் நம் தேவைகளை துவா செய்தால், அதனால் சமுதாயத்தில் 'ஷிர்க்' என்னும் மாபாதகம் நடந்தேரும். மேலும் அல்லாஹ்வின் கோபத்துக்கும், சாபத்துக்கும் உள்ளாக நேரிடும் என்பதை உணர்த்தவே மேற்கண்ட ஹதீஸ் அறிவுறுத்துகிறது.

மற்றும் ஒரு ஹதீஸ் "அறிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு முன்பிருந்தோர் அவர்களது நபிமார்களுடைய அவர்களிடையே வாழ்ந்த நல்லடியார்களுடைய அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கினார்கள். ஆனால் நீங்கள் சமாதிகளை வணங்குமிடமாக்காதீர்கள். நிச்சயமாக நான் அதை விளக்கியுள்ளேன். இவ்வாறு கபுருள்ள இடங்களில் இறைவனை தொழவும் கூட நபி(ஸல்) அவர்கள் தடை செய்த நிலையில் உன்னத சமுதாயமென திருமறையால் புகழப்பட்ட முஸ்லிம்கள் இன்று தங்களது தேவைகளை தங்களது இறைவனிடம் கேட்க வேண்டுமென்பதை மறந்து தம்மைப் போன்ற சிருஷ்டிகளின் கல்லறைகளில் மண்டியிட்டு முறையீடு செய்வது பற்றி என்னென்று சொல்வது? அது அநாகரிகமில்லையா? அது இறைவனுக்கு இணை வைக்கும் 'ஷிர்க்' ஆகுமா இல்லையா? என்பதை முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.

என்னுடைய அடக்கஸ்தலத்தை நீங்கள் உற்சவ ஸ்தலமாக்கி விடாதீர்கள். (நஸயீ) என்று இவ்வாறு கூறியிருக்கிறார்கள் என்றால், இன்று நமது சமுதாயத்தினரிடையே உள்ள பலர் அவுலியாக்களின் சமாதிகளிலும், தர்காக்களிலும் நடத்துகின்ற பேய் கூத்துகளுக்கு ஏதாகிலும் அர்த்தமுண்டா?

திருமறையில் "முஷ்ரிக்குகள்" எனக் கூறப்பட்டவர்கள் ஏகத்துவத்தில் இணை வைப்பவர்களே. சூறே பாத்திஹாவில் இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தஈன் (உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம். என்று அல்லாஹ் சொல்லித் தருகிறான். நிராகரிப்பதற்குச் சமமாகும் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான். பெரும்பாலான முஸ்லிம்கள் இதர சமுதாயத்தினரைப் போலவே தங்கள் தேவைகளை வேண்டுதல்களை அவுலியாக்களின் சமாதிகளை நாடிச் சென்று சிரம் குனிந்து குறைபாடுகளை முறையிடுகின்றனர். இவர்களது முறையீடுகளை அந்த நல்லடியார்கள் செவியுருகிறார்களா? என்றால், அல்லாஹ் கூறுகிறான், (நபியே) நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும்படிச் செய்ய முடியாது. (27:80)

பிரார்த்தனை அல்லது தேவைகளை முறையீடு செய்வது என்பதும் வணக்கமேயாகும். சிபாரிசு செய்யத் தகுதி பெற்றவர்கள் எனக் கருதி மறைந்த பெரியார்களின் விக்கிரங்களை அன்றைய அரபியர்கள் வணங்கியும், பிரார்த்தித்தும் வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் "பிரார்த்தனை வணக்கத்தின் மூளை" (அனஸ்(ரலி),திர்மிதீ. "பிரார்த்தனை என்பதே வணக்கம்தான்" (நூமானுபின் பஷீர்(ரலி), அஹ்மத், திர்மிதீ) மேலும் அல்லாஹ் திருமறையில் கூறுகிறான், என்னையே பிரார்த்தியுங்கள் நான் உங்களுக்கு பதிலலிக்கிறேன். (40:60)

"நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கிறீர்களோ, அவர்களூம் உங்களைப் போன்ற அடிமைகளே. (7:194)

எவர் அவனையன்றி அழைக்கிறார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தரமாட்டார்கள்.(13:14)

அல்லாஹ்விடம் மட்டும் தான் உதவி தேடவேண்டும், அவனிடம் மட்டும் தான் பிரார்த்தனை செய்யவேண்டும் எனவும் அல்லாஹ் திருமறையில் தெளிவுபட கூறுகிறான். மேலும் திருமறை கூறுகிறது.

இந்நிராகரிப்போர் நம்மை விட்டு விட்டு நம்முடைய அடியாளர்களை தங்களுக்கு உதவியாளர்களாக எடுத்துக் கொள்ளலாமென்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? (18:102) என்று இறைவன் கேட்கிறான். சிலர் இந்த வசனம் விக்ரகங்களை வணங்கும் காபிர்களுக்கு இறங்கியது ஆகையால் முஸ்லிம்களுக்கு பொருந்தாது என தங்களது அறியாமையை வெளிப்படுத்துகின்றனர். இறைவன் இவ்வசனத்தில் நம்முடைய அடியார்கள் என்று குறிப்பிடுவதே மறைந்த மகான்களைத்தான் குறிக்கின்றது என்பதை உணரலாம்.

இப்படிப்பட்ட வசனங்கள் மூலமாக குர்ஆனில் அல்லாஹ் இட்ட கட்டளைக்கு நபி (ஸல்) அவர்கள் எப்படி விளக்கம் கொடுத்தார்களோ அப்படி நடக்க வேண்டும். அல்லாஹ்வோ, நம்முடைய நபியோ "வலிமார்களின் தர்காக்களுக்கு சென்று உங்கள் தேவைகளை கேளுங்கள் அவர்கள் கொடுப்பார்கள்" என்று எங்கேயும் சொல்லவில்லை. ஆனால் வாதத்துக்காக சிலர் குர்ஆனுக்கு தங்கள் இஷ்டம்போல் விளக்கம் கொடுத்து மக்களை வழிகெடுக்கிறார்கள்.

மேற்கூறிய விளக்கங்களிலிருந்து அல்லாஹ் அல்லாத இறந்து போன அவ்லியாக்களிடம் தங்களுடைய தேவைகளுக்காக வேண்டுகோள் வைப்பது இஸ்லாத்திற்கு முற்றிலும் முரண்பட்ட செயல். முஸ்லிம்களை வழிகேட்டின்பால் கொண்டு சென்று மன்னிக்கப்படாத குற்றத்திற்கு ஆளாக நேரிட்டு நரகத்திற்கே இட்டுச் செல்லும் என்பதை நினைவில் கொள்வோமாக!

thanks to read islam.net

No comments:

Post a Comment