February 11, 2009

பிரார்த்தனை

உங்களில் ஒருவர் பிரார்த்தனைச் செய்யும்போது கேட்பதை உறுதியாகக் கேட்கட்டும். யாஅல்லாஹ்! நீ நாடினால் கொடு என திண்ணமாக அவர் சொல்லவேண்டாம். ஏனெனில், அவனை நிர்ப்பந்திக்கச் செய்பவர் யாரும் இல்லை என அல்லாஹ்வின்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:புகாரீ, முஸ்லிம்

தற்பெருமை

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரி (ரலி) நான் அண்ணல் நபி அவர்கள் கூறக் கேட்டேன்: “இறை நம்பிக்கையாளனின் வேட்டி (கீழங்கி, கால்சட்டை) அவனது கெண்டைக்காலில் பாதிவரை இருக்கும். அதனைவிடக் கீழேயும் கணுக்கால்களுக்கு மேலேயும் இருந்தால் அதனால் பாவம் ஏதுமில்லை. இன்னும் அதனைவிடக் கீழே இருப்பது நரகத்திற்குரியதாகும். (அதாவது அது பாவகரமான ஒரு செயல்) இதனை (இந்தக் கடைசி வாக்கியத்தை மக்களுக்கு இதன் முக்கியத்துவமும் தெளிவாகிவிடட்டும் என்பதற்காக) அண்ணலார் மூன்று முறை கூறினார்கள். பிறகு “அகந்தையுணர்வினால் தன் கீழங்கியைப் பூமியில் இழுத்தவண்ணம் நடக்கும் மனிதனை இறைவன் மறுமை நாளில் ஏறிட்டும் பார்க்கமாட்டான் ”என்று அண்ணலார் கூறினார்கள். (அபூதாவூத்)

மருத்துவம்

மருத்துவம் செய்யுங்கள்! ஏனெனில் மரணம் என்ற நோயைத் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் அல்லாஹ் மருந்தை உருவாக்கியுள்ளான் என்று நபி கூறினார்கள். அறிவிப்பவர்: உஸாமா இப்னு ஷரீக் (ரலி)நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா, ஹாகிம்

நற்குணம்

"நற்குணம் வளர்ச்சியாகும், துற்குணம் அழிவாகும், உபகாரம் ஆயுளை அதிகப்படுத்தும், தர்மம் தீய மரணத்தைத் தடுக்கும்.'' (முஸ்னத் அஹ்மத்)

நட்பு

எவனுடைய கையில் என் உயி இருக்கிறதோ அவன் மீது ஆணையாக, நீங்கள் நம்பிக்கை கொள்ளாதவரையில் சுவனபதி செல்ல இயலாது. உங்களில் ஒருவர் மற்றவரை நேசிக்காதவரை நம்பிக்கையாளராகவும் இயலாது. எனவே நான் உங்களுக்கு கூறுகிறேன். அதனை நீங்கள் மேகொண்டால் ஒருவர் மற்றவருக்கு நீங்கள் நேசமுள்ளவராக ஆகிவிடுவீர்கள். அதாவது, உங்களுக்கிடையில் ஸலாம் கூறுவதை பழக்கத்தில் கொண்டுவாருங்கள் என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ

எனக்காக நட்புக்கொண்டவர்கள் எங்கே? இன்று நான் அவர்களுக்கு என்னுடைய நிழலில் இடமளிப்பேன். இன்று என்னுடைய நிழலைத்தவிர வேறு நிழல் கிடையாது என்று மறுமை நாளில் இறைவன் கூறுவான் என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்: முஸ்லிம் முஅத்தா

எனக்காக நட்பு கொள்பவர்கள் மீதும் எனக்காக (மார்க்க உரையாடல்) அமர்பவர்கள் மீதும் எனக்காக ஒருவர் மற்றவரைச் சந்திக்கச் செல்பவர்கள் மீதும் எனக்காககச் செலவழிப்பவர்கள் மீதும் என் அன்பு கடமையாகிவிட்டது. என்று இறைவன் கூறியதாக நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: அபூ இத்ரீஸில் கவ்லான் முஆது (ரலி) முலம் அறிந்து நூல்:முஅத்தா

அல்லாஹ்வுக்காக நட்புக்கொள்வதும் அல்லாஹ்வுக்காக சினமுறுவதும் (நம்பிக்கையாளரின்) மேலான செயல்களாகும் என நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: அபூசர் (ரலி) நூல்: அபூதாவூத்

அல்லாஹ்வுடைய அடியார்களில் சிலர் நபிமார்களும் அல்ல, தியாகிகளூம் அல்ல. மறுமை நாளில் இறைவனிடம் அவர்களுக்குள்ள பதவிகளைக் கண்டு நபிமார்களும், தியாகிகளும் பொறாமைக் கொள்வர். என்று நபி கூறினர். (அப்பொழுது) அவர்கள் யார்? என்று எங்களுக்கு அறிவியுங்கள் என்று தோழர்கள் கேட்டனர். (அதற்கு) நபி அல்லாஹ்வின் பொருத்தத்திற்காகவே தங்களிடையே நட்புக்கொள்வர். அவர்களுக்கிடையில் உறவின் முறையும் இருக்காது. பணத்திற்காகவும் அவர்கள் நட்புக் கொள்ள மாட்டார்கள். இறைவன்மீது ஆணையாக அவர்களின் முகம் ஒளிர்ந்து கொண்டிருக்கும். அவர்கள் இறை வழியில் செல்வார்கள். மக்கள் அச்சமுறும் பொழுதும், துக்கிக்கும் பொழுதும் அவர்கள் அச்சமுறவும் மாட்டார்கள். துக்கிக்கவும் மாட்டார்கள். ".(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்." என்ற 10:62 வது வசனத்தை ஓதினர். அறிவிப்பவர்: உமர்(ரலி) நூல்: அபூதாவூத்

உங்களில் ஒருவர் தம் சகோதரர்மீது அன்பு கொண்டால், தாம் அவர்மீது அன்பு கொண்டிருப்பதாக அவரிடம் அறிவித்து விடவும். என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மிக்தாம் இப்னு மஃதீகர்பு (ரலி) நூல்: அபூதாவூத், திர்மிதீ


மறுமை நாளில் இறைவன் ஜின்களையும் மனிதர்களையும் நோக்கி)

يَا مَعْشَرَ الْجِنِّ وَالإِنسِ أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنكُمْ يَقُصُّونَ عَلَيْكُمْ آيَاتِي وَيُنذِرُونَكُمْ لِقَاء يَوْمِكُمْ هَـذَا قَالُواْ شَهِدْنَا عَلَى أَنفُسِنَا وَغَرَّتْهُمُ الْحَيَاةُ الدُّنْيَا وَشَهِدُواْ عَلَى أَنفُسِهِمْ أَنَّهُمْ كَانُواْ كَافِرِينَ
மறுமை நாளில் இறைவன் ஜின்களையும் மனிதர்களையும் நோக்கி) "ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தாரே! உங்களுக்கு என் வசனங்களை (அறிவித்து) ஓதிக்காட்டவும், இந்த நாளில் (ஏற்படப்போகும்) சந்திப்பைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையா?" (என்று கேட்பான்), அதற்கு அவர்கள், "நாங்களே எங்கள் (பாவத்தின்) மீது சாட்சி கூறுகிறோம்" என்று கூறுவார்கள்; இதற்குக்காரணம் உலக வாழ்க்கை அவர்களை மயக்கிவிட்டது - அவர்கள் காஃபிர்களாக இருந்ததாக அவர்கள் தங்களுக்கு எதிராகவே சாட்சி கூறுவார்கள். (அல்குர்ஆன் 6:130)

February 10, 2009

மார்க்கத்தைப் பற்றிப் பிடிப்பவர்கள் உறுதியும் துணிவும் நிறைந்த பண்பு நலன்கள் பெற்றிருப்பர்!

அறியாமை நிறைந்த சமுதாயங்களில் மக்கள் உறுதி வாய்ந்தவர்களாகக் காணப்பட்டாலும் அவர்கள் குறிப்பிட்ட வரம்பிற்கு உட்பட்டவர்கள் தாம். சில சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்களின் பலகீனத்தை எதிர்த்துச் செயல்பட முடியாது. மிகவும் கண்டிப்பான கொள்கைகளை கடைப்பிடிப்பவர் என அறியப்பட்டவரும் கூட தன்னுடைய நலன்கள் கேள்விக்குறிக்கு ஆளாகும் போது தன்னுடைய விதிகளை மீறி விடுவார். நிர்ப்பந்தம் ஏற்படும் போது, தொல்லைகள் எழும்போது, இடர்ப்பாடு அல்லது நோய்க்கு ஆளாகும் போது அல்லது கண்டிக்க அக்கம்பக்கத்தில் யாருமில்லை என்று உணரும் போது எந்த விதியையும் கடைப்பிடிப்பதில்லை. எந்த வரையரையையும் கையாளுவதில்லை. தங்கள் கொள்கைகளை மீறாமலிருக்கவோ அல்லது தங்களின் விருப்பங்களை விட்டுக் கொடுக்கவோ தகுந்த காரணம் இல்லாதப் போது கவர்ச்சி மிக்க பிரேரணைகளை ஏற்றுக் கொள்வார்கள்.
ஆனாலும் முன்னர் குறிப்பிட்டதுப் போல் ஒருவர் இதுப்போன்று ஒரு தவறை முன்பு இழைத்திருக்கிறாரா அல்லவா என்பது முக்கியமன்று. மார்க்க நெறிமுறைகளைக் கவனத்தில் கொள்ளாதவருக்கு தன்னுடைய தன்னல ஆர்வங்களுக்கு முன்னுரிமை வழங்குவதைத் தடுக்க தகுந்த காரணம் இல்லை என்பது தான் முக்கியம். இறையச்சம் இல்லாத போது, இத்தகைய மனிதனுக்கு தன்னுடைய மனதிட்பத்திற்கு உகந்து நடக்கும் திராணி இல்லாமல் போகும்.
இஸ்லாமிய ஒழக்க நெறிகளை உணர்ந்த அறியும் ஆற்றல் படைத்த ஒருவரின் நிலை வேறு விதமாக இருக்கும். தான் உண்மை என நம்புவதை நடைமுறைப்படுத்தியாக வேண்டும் என்ற தீர்மானத்தை முறியடிக்க எதனாலும் முடியாது. இந்தத் தீர்மானத்திற்கு முக்கிய காரணம் அவனுக்குள்ள ஆழ்ந்த இறையச்சமே. இறைவன் யாவற்றையும் காண்கிறான், செவியுறுகிறான், இதயத்தில் மறைந்துள்ள அனைத்தையும் அறிவான் எனும் உண்மையை உணர்ந்துள்ளான்; மேலும் தான் எப்போதும் இறைவனின் முன்னிலையிலேயே இறை நம்பிக்கை உடைய ஒருவனிடம் தனிமனிதச் சிறப்பியல்பும் மனதிட்பமும் காணப் பெறும்; இறைவன் விதித்துள்ள வரையறைகளைப் பேணி நடப்பான். இறைவனுக்கு அதிருப்தியளிக்கும் எதையும் எப்பொழுதும் செய்யவே மாட்டான். வாழ்க்கையில் என்ன நேர்ந்தாலும் சரி, எப்பொழுதும் இறைவனின் நினைவு மாறாமல் இருக்கவே நாடுவான்; அதில் சோர்வடைய மாட்டான். இது குர்ஆனில் கீழ்வருமாறு கூறப்படுகிறது.

காலையிலும் மாலையிலும் அவனை(இறைவனை) துதி செய்துக் கொண்டும், வணிகப் பறிமாற்றத்தில் இறைவனை நினைவு கூர்வதிலும், தொழுகையை நிறைவேற்றுவதிலும், ஜகாத் வழங்குவதிலும் உறுதியாக நின்று, உள்ளங்களும் பார்வைகளும் நிலைகுலையும் நாளைப் பற்றிப் பயந்தவர்களாக அவர்கள் செய்த நன்மைகளுக்கு அவற்றை விடச் சிறந்த கூலியை, இறைவன் தன் அருளால் அதிகமாகவே வழங்குவான் என்று நம்பி வாழும் பலர் இருக்கின்றனர். இறைவன் தான் நாடியவருக்கு கணக்கின்றி வழங்குவான். (24:36, 37,38)
இஸ்லாமிய ஒழுக்க நெறி தன்னல வேட்கையை நீக்கும்
மார்க்கக் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்காதவர்கள் தங்களைப் பற்றி மட்டுமே கவலை கொள்வதில் வியப்பில்லை. அவர்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் தத்துவங்கள் கோருபவற்றில் இதுவும் ஒன்று என்பது உண்மை. தியாகம் செய்ய முன் வருதல், இரக்கம், நல்லொழுக்கம் ஆகிய பண்புகள் எல்லாம் மார்க்கம் வலியுறுத்துபவை; மார்க்கமே அவற்றை நெஞ்சார விரும்பக் கோருகிறது. வாழ்ந்து மரணமடைந்த பின் மறுமையில் தங்களுடைய செயல்பாடுகளுக்குக் கணக்குக் கொடுத்தாக வேண்டும் என்று நம்பும் இறை நம்பிக்கையாளர் தாம் குர்ஆன் அறிவுறுத்தும் ஒழுக்க நெறிகளை முற்றிலும் நடைமுறைப்படுத்துவார்கள். இறை நம்பிக்கையற்றவர் இத்தகைய நற்பண்புகள் உடையவராகத் திகழ்வார் என எதிர்ப்பார்க்க வியலாது. மேலும் இறைநம்பிக்கையற்றவர் “தன்னலம் மிக்க இத்தகைய மக்கள் அங்கே காணப்படுகிறார்கள்; நான் நிச்சயமாக அவர்களில் ஒருவன் அல்லன்” என்று சொல்வது முற்றிலும் தவறாகும். மார்க்க நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காதவர்க்கு தன்னலம் பேணுவதைத் தவிர வேறு வழியில்லை. வேறு பல ஒழுக்கக் கேடுகளைத் தூண்டும் மனப்பான்மைக்கு எது காரணமோ அதுவே தான் இதற்கும் காரணம் ஆகும். அவற்றில் சில: மறுமையில் நம்பிக்கையின்மை; இவ்வுலகில் இழைக்கப்படும் ஒவ்வொரு தீய செயலும் மறுமையில் தண்டனை பெற்றுத்தரும் என்பதை நம்பாதது, இறையச்சம் இன்மை.

மார்க்கப் பண்புகளை பேணி வாழாதவர்கள் தன்னலம் ஒன்றிலே அக்கறைக் கொண்ட மற்றவர்களைப் பற்றி கவலைக் கொள்ளாமல் வாழ்வதற்கு இது தான் காரணம். இவர்களுடைய வாழ்க்கையின் முக்கிய நோக்கம், செல்வம் குவிப்பது, தொழில் அபிவிருத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, ஆகியவைத் தாம். உற்றார் உறவினரின் தேவைகளை நிறைவேற்ற உதவுவது, வறியவர்களுக்கும் முதியவர்களுக்கும் உதவுவது, சமுதாய நலனுக்காகத் தன்னால் இயன்றதை வழங்குவது ஆகியவை எல்லாம் பொதுவாக அவர்கள் மனதில் வெகு அபூர்வமாகவே உதிக்கும். இறை நம்பிக்கையற்றவரின் இப்புவி வாழ்க்கையை பற்றிய கணிப்பில், தியாகம் புரிவது அல்லது நல்ல செயல்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் எனும் எண்ணங்களெல்லாம் இடம் பெறாததே இதற்கு காரணம். அவர்களை சூழ வாழும் மக்களிடமும் இதற்கு மாற்றமான மனப்பான்மையையும் செயல்பாட்டையும் காணவியலாது. ஒட்டுமொத்த சமுதாயமே இந்த முறையில் தான் செயல்படுகிறது. சமுதாயத்தில் அனைவருமே இதே மனப்பான்மை உடையவராகத் திகழ்வது அவர்களின் மனசாட்சிக்கு ஊக்கம் அளிக்கிறது.
சுருக்கத்தில், மார்க்கக் கொள்கைகளும், நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்படாத சமுதாயத்தில் தன்னல வேட்கை தவிர்க்க முடியாதது. ஒவ்வொரு வரும் எவ்வித விதிவிலக்குமின்றி தன்னலம் உடையவர்களாகவே திகழ்வார்கள்.
எதையும் உருவாக்க முடியாத, தான் எனும் அக நிலையில் (நஃப்ஸ்), இத்தகைய தன்னல வேட்கையை நுழைய செய்து இறைவன் மனிதனைச் சோதிக்கின்றான். மனிதனின் இந்த வேட்கையைப் பற்றி இறைவன் குர்ஆனில் கீழ் வருமாறு கூறுகிறான்:
ஒவ்வொரு மனிதனும் தன்னல வேட்கைக்கு ஆளாகி விடுகிறான். நீங்கள் நன்மை செய்து இறைவனுக்கு அஞ்சி நடந்தால் இறைவன் நீங்கள் செய்வதை தெரிந்துக் கொள்வான். (41:128)
தன்னலம் பாராட்டும் மக்கள் பொதுவாகத் தாங்கள் உறுதிக் கொண்டவற்றை, அவை அற்பமானவையாக இருப்பினும் சரியானவை என்றே வலியுறுத்துவார்கள். தன்னலமுடைய ஒருவன் களைத்திருக்கும் போதும் அமர்ந்து களைப்பாற நினைக்கும் போதும், பக்கத்தில் சோர்ந்து நிற்கும் ஒரு முதியவர் அல்லது நோயாளியைக் கண்டு கொள்வதே இல்லை. மற்றவர்களைப் பற்றிக் கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்காமல் ஒவ்வொன்றிலும் மிகச் சிறந்ததையே அடைய விரும்புவான். தன்னுடைய வசதிக்காக மற்றவர்க்குத் தொல்லை ஊட்டுவதால் எவ்விதச் சலனமும் அவன் மனதில் ஏற்படுவதில்லை. தான் அலுவலில் ஈடுபடும் போது அமைதியை நாடும் அவன், பிறர் பணிபுரியும் போது அவர்களைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. அவனுடைய தன்னல வெறி பல்வேறு வழிகளில் குடும்ப வாழ்க்கையிலும் அலுவலகத்திலும் வெளிப்படும்.
இறை நம்பிக்கையற்ற சமுதாயங்களில் கூட, நற்செயல்களுக்குப் பெயர் போன சிலர் காணப் பெறுவர். தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் தாராள மனப்பான்மையுடன் நடந்துக் கொள்வார்கள். இறைவனின் திருப்தியைப் பெறுவதில்லை. இதற்கு காரணம், பண்பாளர் என்று பிறரால் மதிக்கப்பட வேண்டும் என்பதே; இதன் நோக்கம் புகழ்பட வேண்டும், பாராட்டும் நற்பெயரும் மக்களிடமிருந்து பெற வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம். இவர்கள் ஏழைகளுக்கு என ஒதுக்குவது அவர்களின் வருமானத்தோடு ஒப்பிடும் போது மிக அற்பமானதே.
இலட்சியவாதிகள் பொறுப்பேற்கவும் தலைமை தாங்கவும் விழைவார்கள். இதிலும் இவர்களின் நோக்கம் இறைவனின் திருப்தியைப் பெறுவதோ மக்களுக்கு சேவை புரிவதோ அன்று. செல்வாக்கும் புகழும் பெற்று சமதாயத்தில் தகைமை (அந்தஸ்து) மிக்கவர்களாக உயர வேண்டும் எனும் தங்களின் ஆசாபாசங்களை நிறைவேற்றவே உழைக்கிறார்கள். தங்களுடைய ஆர்வம் பாதிக்கப்படும் போது அவர்களின் உண்மை வடிவம் வெளிப்படும்.
மார்க்கப் பண்புகள் பின்பற்றப்படாத சமுதாயங்களில், தாராள மனப்பான்மையுடையவர்களாகக் கருதப்படுவார்கள், தியாகம் செய்யும் இறை நம்பிக்கையாளர்களோடு ஒப்பிடப்படும் போது தன்னல வாதிகளாகவே கணிக்கப் பெறுவர். இறை நம்பிக்கையாளர்கள் “தன்னலத் தியாகம்” எனும் தத்துவத்தை புரிந்துக் கொண்ட விதத்திற்கும் பாராதூரமான வேறுபாடு உள்ளது. உண்மையான இறை நம்பிக்கையாளர்கள், எப்பொழுதும் தங்களின் தேவையை விட மற்றவரின் தேவைக்கே முக்கியத்துவம் நல்குவார்கள். தங்களின் சகோதரர்களுக்கும் சகோதரரிகளுக்கும் தங்கள் மனப்பூர்வமாக நலனையே நாடுவார்கள். குர்ஆன் வலியுறுத்தும் ஒழுக்கத்தையே இது பிரதிவலிக்கிறது.
இறைவன் மீதுள்ள அன்பின் காரணமாக அவர்கள் ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் சிறைவாசிகளுக்கும் உணவளிப்பார்கள். (76:8)
இத்தகைய ஒழுக்க உணர்வால், இறை நம்பிக்கையாளர்கள் ஒடுக்கப்படும் ஆண்கள், பெண்கள் குழந்தைகளுக்காக இறைவனுடையப் பாதையில் போராடுவார்கள். (4:75)
தங்களுடைய நலனையும் தேவைகளையும் மட்டுமே நினைத்துக் கொண்டிருக்காமல் இறை நம்பிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுப்பேற்று பொது நன்மையை நாடுவார்கள்.
என்னுடைய உயிர் யாருடைய கையில் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, ஒரு மணிதன் தான் தனக்காக விரும்புவதை தன் சகோதரனுக்கும் விரும்பாதவரை இறை நம்பிக்கைக் கொண்டவனாக மாட்டான். என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரீ, முஸ்லிம்)
மார்க்கப் பண்புகள் மேலோங்கி நிற்கும் போது, சமுதாய உறவுகள் தியாகத்தின் அடிப்படையில் அமையும். இதனால் பல பிரச்சனைகள் மறைந்து விடும்.
மூலம் : ஹாரூன் யஹ்யா