March 11, 2010

இறந்தவர்களுக்காக குர் ஆன்,யாசீன் போன்றவைகளை ஓதலாமா?

"மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு ஒன்றும் இல்லை" (அல்குர்ஆன், 053:039)
இந்த வசனத்தை ஆதாரமாகக்கொண்டு இறந்தவர்களுக்காக தர்மம் செய்தால் அந்தப் பலன் இறந்தவரைச் சென்று அடையாது என்ற ஒரு கருத்து மார்க்க அறிஞர்களிடையே இருக்கிறது. எனினும் மரணித்தவரின் சார்பாக வேறொருவர் தர்மம் செய்தால் அதற்கான நன்மை மரணித்தவருக்குக் கிடைக்குமா? என்பதை நபிமொழிகளின் வெளிச்சத்தில் சற்று விரிவாகக் காண்போம்.




"மனிதன் இறந்து விட்டால் அவனுடைய மூன்றுச் செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்று விடுகின்றன. (அவை)
1. நிலையான அறக்கொடை
2.பயன்பெறப்படும் கல்வி
3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை" என்று


அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
"மனிதன் முயற்சித்ததைத் தவிர அவனுக்கு வேறில்லை" என்ற திருக்குர்ஆன் 053:039 வசனத்தின் விளக்கமாகவே இந்த நபிமொழி அமைந்திருக்கிறது.

1, நிலையான அறக்கொடை.
பள்ளிவாசல், கல்விக்கூடம், மருத்துவமனை, மக்கள் தங்குவதற்காக சத்திரம், கிணறு, நிழற்கொடை, தண்ணீர் பந்தல், சுமைதாங்கி இது போன்ற மக்கள் பயன்பெறும் அறக்கொடைகளைச் (வக்ஃப்) செய்தவருக்கு அவர் இறந்த பின்னும் அதற்கான நன்மைகள் அவருக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும்.


2, பயன்பெறும் கல்வி
கல்வி என்பதில் கல்வி நிலையம் சென்று கற்பதும், தொழில் ரீதியாக தனி ஒரு மனிதரிடம் கல்வி கற்பதும் இதில் அடங்கும். இதன் மூலம் கல்விச் சேவைத் தொடர்கிறது. ஒருவர் தான் கற்ற கல்வியைக் கொண்டு நல்ல வழியில் முன்னேற்றம் அடைந்து பயன் பெறுகிறார் என்றால் அந்தக் கல்வியைப் பயிற்றுவித்தவருக்கும் அதில் நன்மை கிடைக்கும்.

3, நல்ல குழந்தைகள்
இறந்தவருக்காக அவரின் நல்ல சந்ததிகள் செய்யும் பிரார்த்தனைகளாலும் அவருக்கு நன்மைகள் சென்றடையும். ஸாலிஹான - நல்லப் பிள்ளைகளாக வளர்ப்பதில் தந்தையின் கல்வி - போதனைகளின் முயற்சி மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
இறந்தவருக்காக சென்றடையும் நன்மைகளில் இந்த மூன்று விஷயங்களிலும் இறப்பதற்கு முன்னர் அவர் செய்த முயற்சிகள் இருப்பதால் 053:039வது இறைவசனத்திற்கு இந்த ஹதீஸ் பொருத்தமாகவே இருக்கிறது. மேலும், இறந்தவர் விட்டுச் சென்றச் சொத்திலிருந்து தர்மம் செய்தால் அத்தர்மத்தின் நன்மையும் அவருக்குக் கிடைக்கும். என கீழ்வரும் நபிமொழிகள் அறிவிக்கின்றன.
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் ''என் தந்தை சொத்துகளை விட்டுவிட்டு இறந்து போனார். அவர் இறுதி விருப்பம் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அவருக்காக நான் தர்மம் செய்தால் அவருக்கு அது பரிகாரம் ஆகுமா?'' என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''ஆம்'' என்றார்கள். (முஸ்லிம்)

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! இறுதி விருப்பங்கள் தெரிவிக்காமலேயே என் தாயார் திடீரென இறந்து விட்டார். அவர் (இறப்பதற்கு முன்பு) பேச முடிந்திருந்தால் தர்மம் செய்(யச் சொல்லியிருந்)திருப்பார் என்று நான் கருதுகிறேன். அவர் சார்பாக நான் தர்மம் செய்தால் அவருக்கு நன்மை உண்டா?'' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ''ஆம்'' என்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

இதிலிருந்து இறந்தவர் விட்டுச் சென்றச் சொத்துக்களிலிருந்து வேறொருவர் தர்மம் முதலான நல்ல காரியங்களைச் செய்தால் அதன் நன்மைகள் அவருக்குச் சென்று சேரும் என்பது விளங்கிக் கொள்ள முடிகிறது.

''நோன்புகள் கடமையான நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவர் சார்பாக அவர் பொறுப்பாளர் நோன்பு நோற்பார்'' என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ''அல்லாஹ்வின் தூதரே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்து விட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா?'' என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ''ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுதற்கு அதிகத் தகுதி படைத்தது'' என்று கூறினார்கள். (புகாரி)


இறந்தவருக்காகப் பாவமன்னிப்புக் கோருவது
அவர்களுக்குப் பின் வந்தோர் ''எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக!... (அல்குர்ஆன், 059:010)

''இறைவா! எங்களில் உயிருடனிருப்பவர்களையும், மரணித்தவர்களையும், இங்கு வந்திருப்போரையும், வராதவர்களையும், சிறுவர்களையும், பெரியவர்களையும், எங்களில் ஆண்களையும், பெண்களையும் மன்னித்து விடுவாயாக!''... என்று நபி(ஸல்) அவர்கள் ஜனஸா தொழுகையில் துஆச் செய்வார்கள். (அபூதாவூத், இப்னுமாஜா திர்மிதீ, நஸயீ)


''இறைவா! இவரை மன்னித்து அருள் புரிவாயாக!'' (முஸ்லிம்)
"இறந்து விட்ட நல்லடியார்கள் மீது இறைவனின் சாந்தி நிலவட்டும்" என ஒவ்வொருத் தொழுகையிலும் பிராத்தனை செய்ய அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கற்றுத்தந்திருக்கிறார்கள்.


எனவே இறந்தவர் சார்பாக தர்மம் செய்யலாம், உணவு வழங்கலாம், நோன்பு நோற்கலாம், அவருக்காக இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரலாம். இஸ்லாத்தில் இதற்கான ஆதாரங்கள் இன்னும் ஏராளம் இருக்கின்றன. ஆனால் இறந்தவர் சார்பாக யாஸீன் சூராவை ஓதலாம் என்றோ, குர்ஆன் ஓதி இறந்தவருக்காக ஹதியா செய்தால் அதன் நன்மைகள் அவரைச் சென்றடையும் என்றோ இஸ்லாம் எங்கும் சொல்லவில்லை!

இறந்தவரின் மையத்துக்கு அருகில் யாஸீன் சூராவை ஓதுங்கள் என்பது போன்று இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதுவது தொடர்பாக வரும் நபிமொழிகள் பலவீனமானவைகளாகும்.

''உங்களில் இறந்தவர் மீது யாஸீன் ஓதுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என மஃகில் பின் யாஸர்(ரலி) அறிவிக்கும் செய்தி அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், ஹாகிம் ஆகிய நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்த ஹதீஸ்களில் அபூ உஸ்மான் என்பவர் தமது தந்தை வழியாக அறிவிக்கிறார். அபூ உஸ்மானும், அவரது தந்தையும் யாரென அறியப்படாதவர்கள் என்பதால் இந்தச் செய்தி பலவீனமடைகிறது.

பைஹகியின் மற்றொரு அறிவிப்பில் மஃகில் பின் யாஸர்(ரலி) வழியாக ஒரு மனிதர் கூறுவதாக அறிவிக்கப்படுகிறது. ஒரு மனிதர் என்றால் யார் என வரலாறு தெரியாததால் அவரது நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடியாது. எனவே இதுவும் நம்பகமானச் செய்தி என்ற தன்மையை இழந்து பலவீனமடைகிறது.
''மரணத்தை நெருங்கியவரின் அருகில் யாஸீன் ஓதினால் அவரது வேதனை இலேசாக்கப்படும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று முஸ்னத் அல்ஃபிர்தவ்ஸ் என்ற நூலில் உள்ள அறிவிப்பில் இடம்பெறும் ஸாலிம் பின் மர்வான் என்பவர் பலவீனமானவர்.

''இறந்தவரின் தலைமாட்டில் அல்ஹம்து சூராவையும், கால்மாட்டில் பகரா அத்தியாயத்தின் கடைசி வசனங்களையும் ஓதுங்கள்'' என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக தப்ரானியின் அல்கபீர் என்ற நூலிலுள்ள அறிவிப்பில் அய்யூப் பின் நஹீக் என்பவரும், யஹ்யா பின் அப்துல்லாஹ் என்பவரும் பலவீனமானவர்கள் என ஹதீஸ் கலை அறிஞர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.

எனவே இறந்தவருக்காக யாஸீன் ஓதுங்கள், குர்ஆன் ஓதுங்கள் என வரும் ஹதீஸ்களெல்லாம் பலமற்றவை. ''நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்'' (புகாரி, முஸ்லிம்) என்ற எச்சிரிக்கையை நினைவில் பதிவு செய்து, இஸ்லாம் ஏவாத எந்தக் காரியத்தையும் செய்வதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும். இறந்தவர்களின் மறுவுலக நன்மைக்காக செய்ய வேண்டியவற்றை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டிய வழியில் செய்வதே சிறப்பு.

உயிருடனிப்பவர் குர்ஆனை ஓதினால் அவருக்கு நன்மை உண்டு!
"குர்ஆன் வசனம் ஓதப்படும் போது அதை செவிதாழ்த்தி கேளுங்கள் நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்".(7 : 204) என்றதன் அடிப்படையில் ஓதுவதை செவிமடுத்தால் செவிமடுப்பவர் அருள் செய்யப்படுவார்.

மரணத்தருவாயில் அல்லது மரணத்திற்கு முன் செவியேற்க்கும் நிலையில் ஒருவர் இருக்கும் போது அவருக்கு அருகில் ஒருவர் திருகுர்ஆனின் வசனங்களை ஓதி அவர் செவியேற்பாராயின் மேற்கண்ட வசனத்தின் அடைப்படையில் நன்மை கிடைக்கலாம். ஆனால், "மரணித்தவரைச் செவியேற்கச் செய்ய உம்மால் கூட இயலாது" என நபி(ஸல்) அவர்களைப் பார்த்து இறைவன் கூறுகிறான்.

மரணித்தவரால் குர்ஆனை ஓதவும் முடியாது, ஓதுவதைக் கேட்கவும் முடியாது. மேலும், "இது நேர் வழிகாட்டும்" என குர்ஆன் பற்றி இறைவன் கூறுகிறான். வழிகாட்டல் என்பது உயிருடன் இருப்பவர்களுக்குத் தான் அவசியம். இறந்தவர்களுக்கல்ல! ஓதப்படுவதைச் செவியேற்கும் நிலையிலேயே இல்லாதவருக்கு, வழிகாட்டல் என்ற வகையில் கூட எவ்வித நன்மையும் இல்லை.

No comments:

Post a Comment